வேலைக்காரி காலைவாறி..?
----------------------------------------------
வீட்டு வேலை முடிந்து கிளம்பிய துணை தேவதையிடம் சொன்னாள் எஜமானியம்மா சரஸ்வதி :
''அபிராமி , இந்த மாசத்தோட நாங்க வீட்டை காலி பண்ணிடறோம். இன்னிக்கு 26 ஆம் தேதியில்லையா? 31 அன்னிக்கு போயிடுவோம். கடைசி ரெண்டு நாள் நிறைய வேலை இருக்கும். வந்துடு... எக்ஸ்டிரா பைசா தந்துடறேன்...எனக்கு தேவைப்படாத நிறைய சாமான்லாம் இருக்கும் .எடுத்துகிட்டு போயிடு''
அபிராமி யோசித்தாள். ' இந்த அம்மா ஒரு கஞ்சூஸ்..மூணு வருஷமா வேலை செய்யறேன். சம்பளமும் உயர்த்தலை.. தீபாவளி பொங்கலுக்கு சீப்பா ஒரு புடவை எடுத்துக் கொடுக்கறதோட சரி.... இவங்க கடைசி ரெண்டு நாளும் பெண்டு எடுத்துடுவாங்க.... நல்லா வேலை வாங்கிட்டு பிசாத்தா தரப்போற தொகையும் இவங்க விட்டுட்டு போற தட்டுமுட்டு சாமானும் யாருக்கு வேணும்?'
' அம்மா, நல்ல வேளை நானே சொல்லணும்னு நினைச்சேன்...29 ஆம் தேதி நானு குடும்பத்தோடு சொந்த ஊரு கோவில் விழாவுக்கு போகணும். அதனால வரமுடியாதும்மா. ஆனா என் தோழி அஞ்சலையை அனுப்பிவைக்கிறேன். ..சரியா? என் சம்பளத்தை நாளைக்கே குடுத்துடுங்க...செலவுக்காகும்.''
மறு நாள் பிரிஜ், வாஷிங்க் மெஷின், பீரோ, கிரைன்டர், டைனிங்க் டேபிள், ஃபர்னிச்சர் எலலாம் பேக்கிங்க் செய்ய ஆட்கள் வந்திருந்தார்கள்.
" ஹூம் இதெல்லாம் போயிடுச்சுன்னா, பாக்கி என்ன பெரிசா சாமான் மிச்சம் இருக்கும் ? அதை எல்லாம் அஞ்சலையே எடுத்துக்கட்டும். ''
எதிர் சாரியில் குடியிருக்கும் தோழி, அஞ்சலியிடம் விஷயத்தை சொன்னாள். அவள் ஆர்வத்துடன் ஒத்துக் கொண்டாள். அவளுக்கு யார் என்ன கொடுத்தாலும் சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வாள். அந்த அளவு அப்பாவி....
31 ஆம் தேதி....
அஞ்சலையின் வீட்டு வாசலில் பெரிய வேன் வந்து நின்றது.
உள்ளேயிருந்து பிரிஜ், பீரோ, கட்டில், வாஷிங்க் மெஷின் என்று பல வீட்டு உபயோகப் பொருட்கள் பாக்கிங் செய்யப்பட்ட நிலையில் இறங்கின...
உடனே அவளைப் போய் பார்த்தாள் அபி...
'' என்னடி இதெல்லாம், லாட்டரி அடிச்சதா இல்லை நீ கொள்ளை அடிச்சியா?''
'' கேக்க மாட்டே? எல்லாம் அந்தம்மா எனக்கே கொடுத்துட்டாங்க....''
'' அந்த கஞ்சப் பிசுனாறியா இதையெல்லாம் கொடுத்தாங்க ? நம்பறா மாதிரி இல்லையே''
'' சாமி சத்தியமா...அவங்க மும்பாய் போறாங்க இல்லையா...அங்கே கம்பெனிகாரங்க இந்த மாதிரி பொருட்களோடு சகல வசதிகள் கொண்ட ஒரு ஃபிளாட் தராங்களாம். இந்த பொருட்களை எடுத்துகிட்டு போனா வைக்கக் கூட இடமில்லையாம். இது நேத்திக்குதான் அவங்களுக்கே தெரிய வந்ததாம்.....பொருட்கள் கொஞ்சம் பழசானதுதானே .. அதனாலே நீயே எடுத்துக்கோன்னு சொல்லிட்டாங்க...வித்தா குறைந்தது ஒரு பத்தாயிரம் தேறாதா?. அது தவிர நிறைய பட்டுப் புடவையெல்லாம் கூட தந்துட்டாங்க...ரொம்ப தாங்க்ஸ்டி.'
வெறுத்துப் போனாள் அபி....
No comments:
Post a Comment