"" டாக்டர் பட்டம் வாங்க உதவிய மகாபெரியவா!""
ஒரு சமயம் மகான் ஸ்ரீமடத்தில் இருந்தபோது, அவரை தரிசிக்க வந்த பக்தர் கூட்டத்தில் இளைஞன் ஒருவனும் இருந்தான்.
அவன் மனதில் ஏதோ ஒரு சந்தேகம் ஒளிந்திருப்பது, அவனது முகத்திலேயே தெளிவாகத் தெரிந்தது. இருந்தாலும், தன் முறை வந்தபோது அவன் எதுவும் சொல்லாமல் மகானை நமஸ்காரம் செய்துவிட்டு எழுந்தான். அவன் வாட்டத்தை அறிந்தவர் போல், "நீ இப்போ என்ன செஞ்சுண்டு இருக்கே?" என்று, வாத்சல்யத்துடன் கேட்டார், மகான்.
"சுவாமி, டாக்டர் பட்டம் வாங்குவதற்காக, நம்ம பாரத தேசத்துக்கே தனிப் பெருமையான பரத சாஸ்திரம் (பரத நாட்டியம்) பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை தயார் பண்ணிக் கொண்டிருக்கிறேன்" சொன்னவன் கொஞ்சம் நிறுத்திவிட்டு, "என்னோட ஆராய்ச்சியை முடிக்க இயலாதபடி சில சிக்கல்கள். அதை யாரிடம் கேட்பது என்று தெரியாமல்தான், உங்களிடம் வந்தேன்!" தழுதழுத்தான்.
"அப்படியா...என்ன சிக்கல் உனக்கு?" அறிந்தும் அறியாதவராய்க் கேட்டார், மகான்.
"பரதக் கலை எப்போது எப்படி ஆரம்பித்தது? எப்படி வளர்ந்தது என்பதையெல்லாம் இலக்கியம், இசை, சிற்பங்கள், கல்வெட்டுகள், இப்படி ஏதாவது ஒரு வகையில் வரலாற்றின் அடிப்படையில் மேற்கோள் காட்டவேண்டும். இல்லாவிட்டால் என் ஆராய்ச்சிக் கட்டுரை பயனளிக்காமல் போய்விடும்!".
இளைஞன் சொன்னதைக் காதில் வாங்காதவர் போல், "நீ சிதம்பரம் போயிருக்கியோ?" கேட்டார் பெரியவர்.
"பலமுறை போயிருக்கிறேன் பெரியவா!" சொன்னான் இளைஞன்.
"அங்கே நடராஜரை மட்டும் பார்த்திருக்கிறாயா? இல்லை சிவகாமி அன்னை சன்னதிக்கும் போயிருக்கிறாயா?" கேட்டார் மகான்.
இளைஞன், நெளிந்தான். "மன்னிக்கணும் எப்போதும் ஏதாவது ஒரு அர்ஜன்ட் வேலை இருக்கும். அவசர அவசரமாக நடராஜரை மட்டும் கும்பிட்டுவிட்டு வந்துவிடுவேன்!".
பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவன் கையில் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார்.
தான் சுவாமியை மட்டும் பார்த்துவிட்டு, அம்பாளைக் கும்பிடாமல் வருவதாகச் சொன்னது பெரியவாளுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. அதனால்தான் பரத சாஸ்திரம் குறித்த தன்னுடைய சந்தேகத்துக்கு பதில் எதுவும் சொல்லவில்லை என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் வருத்தத்துடனே புறப்பட்டான் அந்த இளைஞன்.
மேலும் சில நாட்களாகியும் அவன் தேடலுக்கு எங்கும் விடை கிடைக்கவில்லை. அதனால், மறுபடியும் மகானிடமே வர நினைத்தான். அதற்கு முன், சிதம்பரம் சென்று சுவாமியையும் அம்பாளையும் தரிசித்துவிட்டுச் செல்லலாம் என்று தீர்மானித்து அங்கே சென்றான்.
நடராஜரை வணங்கிவிட்டு சிவகாமி அம்பாளின் சன்னதிக்குச் சென்றபோது அவனுக்கு ஒரு விஷயம் பளீரிட்டது. அங்கிருந்த மண்டபச் சிற்ப வேலைப்பாடுகள் தான். எதை அவன் தேடிக் கொண்டிருந்தானோ அதற்கான சான்றுகள். அதுவும் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவை!
"பலமுறை இங்கே வந்தபோதும், இங்கு வந்து பார்க்காமல் எங்கெங்கோ முட்டாள்தனமாகத் தேடிக் கொண்டிருந்திருக்கிறேன்! அதை உணர்த்தத்தான் மகான், "சிவகாமியம்பாளை தரிசித்திருக்கிறாயா? என்று கேட்டிருக்கிறார். அப்போதும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கிறேன்". மனம் சிலிர்க்க, உடல் நடுங்க அத்தனையையும் குறிப்பெடுத்துக் கொண்டான்.
மளமளவென்று ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி முடித்து அனுப்பிவிட்டு, காஞ்சிபுரம் வந்து மகானைப் பணிந்தான்.
"என்ன, டாக்டர் பட்டம் கிடைச்சுடுத்தா?" புன்னகை தவழக் கேட்டு ஆசிர்வதித்தார் மகான். அவரிடம் அவன் ஆசிபெற்ற தினத்திலேயே அவனது ஆராய்ச்சிக் கட்டுரை ஏற்கப்பட்டு, டாக்டர் பட்டம் உறுதியானதற்கான கடிதமும் வந்து சேர்ந்ததுதான் மற்ற எல்லாவற்றையும் விட மகத்தான அற்புதம்.
No comments:
Post a Comment