சமையல் குறிப்புகள்*
*காரசாரமான தக்காளி சட்னி*
தினமும் என்னடா டிபனுக்கு சட்னி செய்வது? என்று யோசிப்பவர்களுக்கும், சட்னி அரைக்க சோம்பேறித்தனப் படுபவர்களுக்கும் இந்த மாதிரி ஒரு இன்ஸ்டண்ட் தக்காளி சட்னி செய்தால் வேலையும், நேரமும் மிச்சமாகும்.
வீட்டில் இருக்கும் குறைந்த பொருட்களை வைத்தே நொடியில் அசத்தலான சுவையில் செய்யக் கூடிய இந்த சட்னி ரெசிபி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
*தக்காளி சட்னி அரைக்க தேவையான பொருட்கள்:*
தக்காளி – 4,
பூண்டு – 8 பற்கள்,
காய்ந்த மிளகாய் – 6,
உப்பு – தேவையான அளவு,
*தாளிக்க:*
கடுகு – அரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.
*செய்முறை விளக்கம்:*
தக்காளி சட்னி செய்வதற்கு முதலில் நான்கு பெரிய தக்காளி பழங்களை பழுத்ததாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை நன்கு சுத்தம் செய்து காம்பு பகுதியை நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பூண்டு பற்களை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். மிளகாயை காம்பு நீக்கி கொள்ளுங்கள். இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டும். இதற்கு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோலுரித்து வைத்துள்ள பூண்டு பற்கள், காம்பு நீக்கிய காய்ந்த மிளகாய் உங்களுக்கு காரத்திற்கு ஏற்ப கூட குறைய சேர்த்துக் கொள்ளுங்கள். வெட்டிய தக்காளி பழங்களையும் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். -
சட்னியை அரைப்பதற்கு முன்பு உப்பு சேர்க்க வேண்டாம். இப்போது அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நீங்கள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயை விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை நன்கு சுத்தம் செய்து கழுவி உருவி தாளித்துக் கொள்ளுங்கள். தாளிப்பு அடங்கியதும் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு எந்த அளவிற்கு சட்னி தேவையோ, அந்த அளவிற்கு நீங்கள் கொஞ்சமாக நீர் சேர்த்து இப்பொழுது தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து பச்சை வாசம் எல்லாம் நீங்கி, சட்னி கெட்டியாக திரண்டு சுண்டியதும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவுதாங்க, ரொம்பவே சூப்பராக இருக்கக் கூடிய இந்த இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி குறைந்த பொருட்களை வைத்து ரொம்பவே சுவையான முறையில் தயாராகி விட்டது.
இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க, எவ்வளவு இட்லி கொடுத்தாலும் உள்ள போய்கிட்டே இருக்கும். அந்த அளவிற்கு ருசி அபாரமாக இருக்கும்.
🌺🌺🌺🌷🌷🌺🌺🌺
இந்த சட்னி க்கு கடலெண்ணெய் நல்லெண்ண ய் தேங்காய் எண்ணெய் தலா ஒரு தேக்கரண்டி சுட வைத்து ஊற்றினால் மனமும் சுவையும் அள்ளும்
இதை விட ஈஸியா இட்லிக்கு side dish ஒண்ணு இருக்கு.
தனி மிளகாய் தூள், 2 பல் நசுக்கிய பூண்டு, சிறிது கரைத்த பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து சிறிது நல்லெண்ணை/தேங்காய் எண்ணையை கடாயில் சூடு படுத்தி கலந்து உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment