🌹மந்த்ராலயம்🌹
முதலில் MTR பற்றி சொல்லி விடலாம்.
மந்த்ராலயம் எப்போது வந்தாலும், கோவில் வாசலில் இருக்கும் MTR எனப்படும் Mantralaya Tiffin Room -ல் தான் சாப்பிடுவது வழக்கம். காரணம் தரம் நிரந்தரம். டிபன் மட்டும் தான். Morning 6.30-12 Noon. Evening 4.30-10.
பக்தர்களுக்கு மதிய உணவு பிருந்தாவனத்தில்,தீர்த்த பிரசாதமாக வழங்குவதால், MTR-ல் மதிய உணவு கிடையாது. இட்லி, வடா, ரவா உப்புமா மற்றும் தோசை வகைகள் கிடைக்கும். உட்கார்ந்து சாப்பிட வசதியில்லை. டோக்கன் வாங்கி கொண்டு, கவுண்டரில் கொடுத்து, டிபன் வாங்கி கொண்டு, அங்கு போடப்பட்டு இருக்கும் மர பெஞ்சில் வைத்து நின்று கொண்டுதான் சாப்பிடவேண்டும். சாப்பிடுகிறார்கள்.
உங்களுக்கு ரவா உப்புமா பிடிக்காதா? MTR-ல் ஒரு பிளேட் சாப்பிட்டு பாருங்கள். பின்பு, உப்புமா தான் சாப்பிடுவீர்கள்.
இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு MTR ஒரு வரப்பிரசாதம். விலையிலும் சரி. தரத்திலும் சரி. MTR புராணம் போதும். தரிசனம் போகலாமா?
மந்திராலயம் கோவில் வரலாறு:
"மாஞ்சாலம்" என்று அழைக்கப்பட்ட மந்திராலயம் என்பது, ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில், துங்கபத்ரா ஆற்றின் கரையில் நிறுவப்பட்ட நகரம்.
க்ருத யுகத்தில், பக்த பிரகலாதனாக குருஜீ பிறந்த போது, இங்கு யாகம் நடத்தியதால், இது யாகபூமி என்றும் அழைக்கப்படுகிறது.
மேலும், த்வாபர யுகத்தில், இந்த யாகபூமியில் வாழ்ந்து வந்த அனுசில்வனோடு, அர்ஜூனன் இங்கு யுத்தம் செய்தபோது, அர்ஜூனனால் அனுசில்வனை வெல்ல முடியவில்லை. கிருஷ்ணர் இதை புரிந்து கொண்டு, தன் யுக்தியால், அனுசில்வனை இந்த இடத்தில் இருந்து, அப்புறப்படுத்திய பிறகே, அர்ஜுனன் அவனை வென்றதாக வரலாறு.
அதாவது, இந்த யாகபூமியில் இருப்பவருக்கு, தோல்வியே இல்லை என்பதை, இதன்மூலம் கிருஷ்ணர் உலகத்திற்கு உணர்த்தினார்.
தவிர, இந்த பிரதேசத்தை ஆட்சி செய்த மாஞ்சாலி அம்மன் என்ற தேவதையிடம், ஸ்ரீ குரு இந்த இடம்வேண்டி தவம் இருந்தார். மாஞ்சால அம்மனும் மனமிறங்கி, இடம் கொடுத்து ஆசிர்வதிக்க, அங்கு உருவானது தான் மந்திராலயம் எனும் பிருந்தாவனம்.
ஸ்ரீ குரு ராகவேந்திர சுவாமியால் கட்டப்பட்ட பிருந்தாவனத்தின் காரணமாக, இந்த நகரம், மக்களிடத்தில் மிகவும் பிரபலமானது. ஸ்ரீகுரு ஒரு புனித மனிதர். ஸ்ரீ மாதவச்சார்யாவை, தங்கள் குருவாக கருதி, மாத்வ புனிதர்களின் பிரிவை, ஸ்ரீகுரு பின்பற்றினார்.
குருராகவேந்திரர், பிருந்தாவனத்திற்குள் நுழைந்தபோது, தான் 700 ஆண்டுகள் அந்த இடத்தில் தொடர்ந்து வசிக்க போவதாக, அறிவித்தார் என்று இன்றும் நம்பப்படுகிறது.
மேலும், மாஞ்சால தேவதையான மாஞ்சால அம்மனுக்கும், தன் பிருந்தாவனம் பக்கத்திலேயே கோவில் எழுப்பி, மாதாவை வணங்கிய பிறகே, தன்னை வணங்க வரவேண்டும் என்று அன்பு கட்டளை பிறப்பித்தார்.
இப்பவும், துங்கபத்ரா நதியில் நீராடி விட்டு, முதலில் மஞ்சமாதாவை வணங்கிய பிறகே, ஸ்ரீ குருவை பார்க்க பக்தர்கள் வருகிறார்கள்.
சரி. கோவிலுக்குள் போகலாமா?
கோவில் நுழைவுவாயிலில் நுழைந்து, நீண்ட பாதையில் நடந்து வந்தால், கோவில் முன்வாசலை அடையலாம்.
பாதையின் இருபுறமும் கோவிலுக்கு சொந்தமான தங்கும் மாளிகைகளும், கோவில் நிர்வாக அலுவலகங்களும், பிரசாத வினியோக ஸ்டாலும், மற்ற கடைகளும் இருக்கிறது.
முதலில், ஸ்ரீ குரு ராகவேந்திரரின் பளிங்கினால் செய்யப்பட்ட திருஉருவம் வரவேற்கிறது. அதை தாண்டி, பக்கத்தில் இருக்கும் மஞ்சமாதாவை சென்று வணங்கினோம். அருள்தோய்ந்த முகத்துடன், தன்னை வணங்க வரும் அத்தனை பக்தர்களையும் ஆசிர்வதித்து, அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறாள் மாதா.
மாதாவை பார்த்துவிட்டு, பிரமாண்டமான கோவிலின் உள்ளே சென்றால், சதுர வடிவிலான பெரிய பிரகாரம். அதை தாண்டி சென்றால், செக்யூரிட்டியுடன் கூடிய நுழைவு வாசல். ஆனால் எந்த கெடுபிடியும் கிடையாது.
அமைதியாக க்யூவில் நின்று உள்ளே சென்றால், சிறிது தூரத்தில், இடதுபுறம் ஸ்ரீ குரு ராகவேந்திரரின் பிருந்தாவனம் இருக்கிறது. மிக அருகில் இருந்தே தரிசனம். பிருந்தாவனத்திற்கு நேர் எதிரே, ஸ்ரீ ஆஞ்சநேயரின் சன்னதி.
ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிகள் ஸ்ரீ குரு ராகவேந்திரரை நோக்கி, வணங்கி கொண்டு இருப்பது போல் தோற்றம்.
கூட்டம் இல்லை என்றால், நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நின்று, தரிசனம் செய்யலாம். ஒரு குறிப்பிட்ட தொகையை தேவஸ்தான அலுவலகத்தில் செலுத்தினால், உங்களை சிறப்பு தரிசனத்திற்கு அனுமதிக்கிறார்கள். உள்ளே பிருந்தாவனத்திற்கு மிக அருகில் நின்று தரிசனம். தம்பதியினராக சென்றால், உங்களை ஸ்ரீ குருவிற்கு தீப ஆராதனை செய்யவும் அனுமதிக்கிறார்கள்.
தரிசனம் முடித்து, வெளியில் வந்தோம். அருமையான பிரகாரம். இங்கு 3 நாட்கள் விரதம் இருந்து, பிரகாரத்தை மடியோடு 108 சுற்றுக்கள் சுற்றி, வழிபடுவது மிகவும் பிரசித்தி பெற்றது.
நீங்கள் வைக்கும் அனைத்து பிரார்த்தனைகளும், வேண்டுதல்களும், மாதவின் ஆசியோடு ஸ்ரீ குரு, தடைகள் இன்றி நிறைவேற்றி வைக்கிறார் என்பது, இங்கு வரும் பக்தர்களின் பரிபூரண நம்பிக்கை.
பிரகாரத்தின் சன்னிதானம் எதிரே இரண்டு தேக்கிலான பெரிய பல்லக்குகளும், மிகப்பெரிய வெள்ளி கவசத்துடன் ஒரு யானையும் இருக்கிறது. மாலையில் இந்த யானையின் மேல் இருக்கும் பல்லக்கில், ஸ்ரீ குருவை வைத்து, மற்ற இரண்டு பல்லக்குகளோடு, மூன்றுமுறை பிரகாரத்தை சுற்றி, பல்லக்கு சேவை விமரிசையாக நடைபெறுகிறது.
அன்று மதியம் நடக்கும் தீர்த்த பிரசாதம்(அன்னதானம்) சாப்பிடும் பாக்கியமும், மாலையில் நடந்த
பல்லக்கு சேவையும் பார்ப்பவர்களை பரவசப்படுத்துகிறது.
பரிமளா பிரசாதம்:
கோவிலில் பரிமள பிரசாதம் எனப்படும் பர்பி போன்ற பிரசாதம் மிகவும் பிரசித்தம். இதை விற்பதற்கு தனியாக பிரசாத கவுன்டர்கள் கோவில் பிரகாரத்திலும், காவலுக்கு வெளியேயும் இருக்கிறது.
துங்காநதி தீரம்:
மாலையில் துங்கபத்ரா நதி தீரத்திற்கு சென்றோம். சிருங்கேரிக்கு தெற்கே, உள்ள மலைகளில் இருந்து துங்கா என்ற பெயருடன் நதியாக உருவாகி, வழியே பத்ரா என்னும் மற்றொரு நதியை தன்னுடன் இணைத்து கொண்டு, இங்கு துங்கபத்ரா என்ற பெயரில் விஸ்தாரமாக ஓடிக்கொண்டு இருக்கிறாள். அவள் அழகை அப்படியே வார்த்தைகளால் வடிக்க வேண்டும் என்றால், இங்கு கம்பன் தான் வரவேண்டும்.
மந்திராலயத்தை திவ்யமாக தரிசிக்க ஒரு நாள் நிச்சயம் போதாது. மூன்று நாட்கள் அவசியம் வேண்டும்.
சரி. இத்துடன் இதை முடித்துகொண்டு, மற்ற கோவில்களை பற்றி பிறகு பார்க்கலாம்.
அதுவரை கொஞ்சம் பரிமள பிரசாதம் சாப்பிட்டுவிட்டு, இளைப்பாரலாம்.
படித்ததற்கு நன்றி. 🌹
No comments:
Post a Comment