Wednesday, August 3, 2022

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 9

 ஆடி அமாவாசை ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 9

வீடுகளில் தர்ப்பணம் செய்யலாமா ?

போகர் : ''அப்படியெனில் வீடுகளில் தர்ப்பண பூஜையினை நிகழ்த்துவது தவறா? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : "இயன்றவரையில் புனிதமான தலங்களில் தர்ப்பண பூஜையினை நிகழ்த்துவதே உத்தமம். இல்லங்களில் பொதுவாக பிதருக்கள் தங்குவதில்லை. காரணம் அவர்களது ஜோதி ஸ்வரூப தேகம் தங்குமளவிற்குப் புனிதமான சூழ்நிலை இல்லங்களில் இருப்பதில்லை."

பித்ருக்கள் தங்குவதற்கான தெய்வீகச் சூழ்நிலைகளை அமைத்துத் தரும் முயற்சியாகவே, புனித தினங்களில் வீடுகளைக் கழுவிக் கோலமிடுதல், வீடு முழுவதும் அடர்த்தியான சாம்பிராணி தூபப் புகை இடுதல். தெய்வப் படங்களைத் துடைத்து மஞ்சள். சந்தனம், குங்குமம் இடுதல் போன்றவை விதிக்கப்பட்டுள்ளன. அமாவாசையன்று பூஜையில் யானைத் தந்தம், தந்தத்திலான பொருட்கள், சந்தனக் கல். சந்தனக் கட்டை, ருத்ராட்சம், ஸ்படிகம், மஞ்சள், துளசி, மஞ்சள் பூசிய தேங்காய் ஆகியவற்றைச் சுத்தம் செய்து வைத்தால் அவற்றில் பித்ருக்கள் எழுந்தருளி ஆசீர்வதிக்கின்றனர்.

புலிப்பாணி : ''தர்ப்பண பூஜைகளை நிகழ்த்த விசேஷ ஸ்தலங்களை அறிய விழைகிறோம். குருவே!''

ஸ்ரீஅகஸ்தியர்: "தர்ப்பண பூஜை மட்டுமல்ல, என் சீடனே! எந்த ஓர் நற்காரியம் செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு ஏற்ற முதலிடம் திருஅண்ணாமலையே! திருஅண்ணாமலையில் செய்யப்படும் தான தர்மங்கள். ஹோமம், யாகம், பூஜைகள், தர்ப்பணம் போன்ற எந்த நற்காரியங்களுக்கும் ஆயிரம் மடங்கு பலன் உண்டு."

தவிர இராமேஸ்வரம், தனுஷ்கோடி, கும்பகோணம் சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர், திருவள்ளுவர் வீரராகவ சுவாமி திருக்கோயில், ஸ்ரீ சூரிய நாராயண ஸ்வாமி எழுந்தருளியுள்ள தலங்கள், சூரியனார் கோயில் போன்று கிரகங்களுக்குத் தனிச் சன்னதி உள்ள கோயில்கள், வட இந்தியாவில் வாரணாசி, கயா போன்ற ஸ்தலங்களிலும் கங்கை, காவேரி போன்ற புனித நதி தீரங்களிலும் மஹான்கள், யோகியரின் ஜீவ சமாதிகளிலும் தர்ப்பண பூஜையை நிகழ்த்துவது அரிய பலன்களைப் பெற்றுத் தரும்.

போகர் : ''தர்ப்பணத்தின் வகைகளை அறிய ஆவலாக உள்ளோம். குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : தர்ப்பணம் என்றால் 'இறந்தவர்களுக்கு மட்டும் அளிப்பது' என்று சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். தர்ப்பணம் என்றால் 'திருப்தி அளிப்பது' என்று பொருள். பித்ரு தர்ப்பணம் தவிர தேவ தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம், பிரம்ம தர்ப்பணம் என்றவாறு பல வகைகள் உண்டு."

பித்ருக்களுக்குச் செய்யும் தர்ப்பணத்தில் வலது உள்ளங்கை ஓரத்தில் கட்டை விரல், ஆள்காட்டி விரலுக்கிடையே கலந்த நீரை வார்த்துத் எள் தர்ப்பணமிடல் வேண்டும். கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தத்தினைச் சேர்த்தல் சிறப்பானது.

உத்தம ஆன்மீக நிலையடைந்த ரிஷிகள், ஞானிகள், யோகிகள் போன்றோர்க்கு கங்கை, காவிரி போன்ற புண்ணிய தீர்த்தம் கலந்த நீரால் அல்லது துளசி தீர்த்தத்தால் (துளசி சேர்ந்த நீர்) வலது கை சுண்டு விரல் வழியாக அர்க்யம் விட வேண்டும். இது ரிஷி தர்ப்பணமாகும்.

தேவர்களுக்கு கங்கை, காவிரி போன்ற புண்ய நதி சேர்ந்த நீரை வலது கையின் ஐந்து விரல்கள் வழியாக அர்க்யமாக விட வேண்டும். இது தேவ தர்ப்பண முறை.

தர்ப்பண மகிமை தொடரும்..

ஓம் குருவே சரணம் 🙇

ஶ்ரீ அகஸ்திய விஜயம் 🙏

ஸ்ரீ - ல - ஸ்ரீ வேங்கடராம சித்தர்.

ஆடி அமாவாஸ்யை பித்ரு சிரார்த்தம்

நம் உடல் வேறு ஆன்மா வேறு. இந்த ஆத்மா பல பல ஜென்மங்களை, கணக்கிலடங்கா ஜென்மங்களை எடுத்துள்ளது. இந்த ஜென்மங்கள் ஆத்மாக்களின் கர்மங்களை கழிக்கவே. அது புண்ணியமாக இருப்பினும், பாபமாக இருப்பினும், தேகம் இல்லையெனில், இந்த ஆத்மாவினால் கர்மங்களைக் கழிக்க இயலாது. 

இந்தப்பிறவிகளில் மானுஷ்ய பிறவி என்பது, பரப்ரஹ்மம் அனுக்ரஹித்த ஒரு அரிய வாய்ப்பு. இதை வைத்துக்கொண்டு இதுவரை பலகோடி ஜென்மங்களாக சேர்த்துக் கர்மங்களை ஒரேயடியாக கழித்து, மீண்டும் பிறவா நிலையை அடையலாம். 

இவ்வாறு கர்மங்களைக் கழிக்க பல நித்ய நைமித்திக அனுஷ்டானங்களை சாஸ்திரம் அவரவர் வர்ணத்திற்கேற்ப விதிக்கிறது. இதில் பித்ரு சிரார்த்தமும் ஒன்று. 

பித்ரு சிரார்த்தத்தை செய்யாவிட்டால், சாஸ்திரம் விதித்ததை செயாததினால் பாபம் சேரும். செய்தால், பாபம் சேராது, புண்ணியமும் சேராது.

ஆனால், பித்ரு சிரார்த்தம் செய்தால் அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று தவறான பிரச்சாரம் செய்கின்றனர். குறிப்பாக ஜோதிடர்கள், பித்ரு சிரார்த்தம் செய்தால் உங்கள் குடும்பம் செழிக்கும், நினைத்தது நடக்கும், வீடு வாசல் வாங்குவர், வேலை கிடைக்கும், சம்பள உயர்வு கிடைக்கும் என்று பல ப்ரயோஜனங்களை சொல்கின்றனர். இது போன்ற சாமான்ய பலன்களுக்காகவா வேதங்கள் இதை விதிக்கும்? மேலும், சாமான்ய பலனை எதிர்பார்த்து செய்தால், கர்மங்கள் சேராதா? "இது சாஸ்திரம் விதித்துள்ளது ...அதனால் செய்கிறேன். பரப்ரஹ்ம முக உல்லாசத்திற்காக செய்கிறேன்" எனும் எண்ணத்தோடுதானே செய்ய வேண்டும் ?

செய்யும் எந்த நித்ய நைமித்திக கர்மங்களுக்கும் பலனை எண்ணத்தில் கொண்டால், கர்மங்கள் மேலும் சேரும். இதனால், நாம் ஜென்மம் எடுத்ததன் பயனே வீணாகி, ஆத்மா மேலும் கர்மங்களை சேர்த்து நாசமடைந்து மீண்டும் பிறவிகளை எடுத்துவிடும். 

சனாதன தர்மிக்கு இந்த ஆழ்ந்த விஷயங்களை உணர்ந்து, சாமான்ய, இவ்வுலக வாழ்க்கைக்கு தேவையான காம்யமான பலன்களை வேண்டுவதைத் தவிர்த்து, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக்கொண்டு மனதை பரப்ரஹ்மத்திடம் வைத்து உய்வதே லக்ஷணம் ! 

பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வுடலால் அனுபவிக்கும் எல்லாமே தேக யாத்திரை. தேக யாத்திரை கர்மாதீனம் (கர்மங்களின் ஆதீனம்)!  கர்மவினைப் பயன்  அதைப்பற்றி சிந்திப்பதாலோ, கவலைப்படுவதாலோ, சந்தோஷப் படுவதினாலோ ஒரு ப்ரயோஜனமும் இல்லை.

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

No comments:

Post a Comment