ஆடி அமாவாசைக்கு ஸ்பெஷல்
எளிய தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 8
கோத்திரம் சொல்லித் தர்ப்பணம் இடுதல்.
போகர் : ''சிலர் தர்ப்பணம் இடும்போது கோத்திரத்தைக குறிப்பிடுகின்றனரே குருதேவா!"
ஸ்ரீஅகஸ்தியர் : "கோத்திரத்தினைக் குறிப்பிட்டு தர்ப்பணம் அளிப்பதும் சிறப்புடையதே. கோத்திரம் என்றால் 64 வகையான கோத்திராதிபதிகள் உண்டு. கௌதமர், பாரத்வாஜர், ஆங்கிரஸர் என்றவாறாக 64 முக்கியமான ரிஷிகளின் வழித்தோன்றல்களே இன்று உலகெங்கும் பல நாடுகளில் பல மதங்களைச் சார்ந்து உலக மக்களாக வாழ்கின்றனர். கோத்ர ரிஷிகள் ஜாதி, மத. இன, மொழி பேதமின்றி யாவருக்கும் உண்டு! அவரவர் குடும்ப சம்பிரதாயத்திற்கேற்ப கோத்திரம் மாறுபடும்.''
போகர்: ''கோத்திரம் அறியாதோர் கதி... ஐயனே!"
ஸ்ரீஅகஸ்தியர் : "கோத்திரம் அறிய சற்குருவை நாட வேண்டும். அனைத்தும் அறிந்தவர் சற்குரு ஒருவரே! சற்குரு கிட்டும்வரை சிவ கோத்திரம். விஷ்ணு கோத்திரம் போன்ற ஒன்றை அவரவர் குல வழக்கத்திற்கேற்ப வைத்துக் கொள்வதும் ஏற்புடையதே."
போகர் :'அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற விசேஷ தினங்களில் தர்ப்பணம் செய்வதன் காரணம் என்ன? குருதேவா!"
ஸ்ரீஅகஸ்தியர் (சிரித்தபடியே) : "அறியாமையால் நீ கேட்பதால் இந்தக் கேள்வியே தவறு! உண்மையில் தர்ப்பணம் என்பது மனிதனின் நித்ய பூஜைகளில் முக்கிய இடம் பெற்றுள்ளது. அமாவாசையில் மட்டும் செய்வதன்று, காலப்போக்கில் மக்களின் அலட்சியப் போக்கின் காரணமாக 'அமாவாசைக்கு அமாவாசை' என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.''
ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் காலையில் தன் மூதாதையர்களை நன்றியுடன் நினைவு கூர்ந்து தர்ப்பணமிட வேண்டும். அதுமட்டுமன்றி அமாவாசை, மாதப் பிறப்பு, சூரிய, சந்திர கிரகணங்கள், ஒவ்வொரு மாதமும் வருகின்ற மூதாதையரின் திதி போன்ற நாட்களில் கட்டாயமாக பித்ரு தர்ப்பணம் செய்தே ஆக வேண்டும்.
போகர் : "பித்ரு தர்ப்பணங்களைப் புனித நதி தீரங்களில் செய்வதன் காரணம் என்ன? குருதேவா!"
ஸ்ரீஅகஸ்தியர் : "இறந்த மூதாதையர்களிலும் மிக உயர்ந்த ஆன்மீக நிலை கொண்டோரே பித்ருக்கள் என்னும் உயர்ந்த நிலையை எய்துகின்றனர். புனிதமான, ஒளிமயமான, சூட்சும தேகம் உடைய அவர்கள் பூலோகத்திற்கு வரும்போது புண்ய சக்தி, தெய்வ சக்தி மிகுந்த இடங்களில்தான் தங்க முடியும். அத்தகைய இடங்கள்தாம் கோயில் தலங்கள், அரசு, ஆல், வேம்பு போன்ற புனித விருட்சங்கள், சமுத்திரம், புனித நதி தீரங்கள் போன்றவை. எனவேதான் இத்தகைய இடங்களில் தர்ப்பணமிடுதல் பித்ருக்களுடைய ஆசிகளை அபரிமிதமாகப் பெற்றுத் தரும்."
அகால மரணமடைந்தவர் ஆன்மா சாந்தியடைய இராமேஸ்வரத்தில் தில ஹோமம் பண்ணுங்க!
தில ஹோமம் என்பது கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப்படும் ஹோமம். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி அடையவும் செய்யப்படுகிறது.
இறந்தபின் ப்ரேதத்தை எரித்து அதன் அஸ்தியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு ப்ரேதத்திற்க்கு சரியான முறையில் அந்திம கிரியை எனும் ப்ரேத ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்யப்படவில்லையோ அந்த ஆன்மா அஸ்தி எனும் எலும்பை சுற்றி வரும்.
விபத்துகளில் மரணம் நேரும்போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய தகுதியற்ற நிலையே அடைந்துவிடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்ஸ்காரங்கள் செய்யப்படுவதில்லை. அந்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாக சுற்றிவருகின்றன.
மரித்தவர்களுக்கு முறையாக கர்மாக்கள் செய்யாமல் இருத்தல், செய்த கர்மாக்களும் (நியமனங்களை கடைபிடிக்காததால் ஏற்பட்ட) தோஷத்துடன் இருத்தல், விபத்தினால் மரித்தவர்களுக்கு கர்மாக்களால் (தக்க பரிஹாரம் செய்யாததால்) த்ருப்தி ஏற்படாமல் பித்ருக்களாக மாற இயலாமல் தவித்தல்,வருஷா வருஷம் முறையாக ச்ராத்தம் செய்யாமல் இருத்தல், செய்யும் ச்ராத்தத்தை முறை தவறி செய்தல் போன்ற செயல்களால் ஏற்படும் பித்ரு தோஷம் ஆகியவை இந்த தில ஹோமத்தால் விலகும்.
இறந்தவர்களுக்கும் எள்ளுக்கும் உள்ள தொடர்பு:
சூரியனை ஆத்ம காரகன் எனவும் குருவை ஜீவ காரகன் எனவும் ஜோதிடம் போற்றுகிறது. ஆனால் இந்த உடலுக்கு (எலும்போடு சேர்ந்த கட்டுமானம்) சனைஸ்வரன் எனும் சனி பகவானையே காரகனாக கூறுகிறது. எனவே சனீஸ்வர பகவானின் தான்யமான எள்ளை பித்ரு ஸ்ரார்த கர்மங்களுக்கும் வாகனமான காகத்தை பித்ரு ரூபமாகவும் பார்க்கிறது நமது வேதங்கள்.
கருப்பு எள்
எள்ளை மகாவிஷ்ணுவின் வியர்வையிலிருந்து தோன்றியதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே அதனை பித்ருக்களுக்கான கர்மங்களுக்கு பயன்படுத்த பரிந்துரைக்கிறது நமது வேதம். எள்ளில் 95% கால்ஷியம் நிறைந்திருப்பதாக அறிவியல் கூறுகிறது.
சனீஸ்வர பகவான்
ப்ரேதத்தின் கடைசி நிலை அஸ்தி எனும் எலும்பாகும். எலும்பின் காரகர் சனைஸ்வர பகவானாவார். எலும்பில் இருக்கும் சுண்ணாம்பு சத்து எனும் கால்ஷியத்திற்கும் காரகர் சனைஸ்வர பகவானாவார்.
எள்ளின் காரகரும் சனைஸ்வர பகவானாவர். எனவே ப்ரேத சம்ஸ்காரம் செய்து அஸ்தி விஸர்ஜனம் செய்ய இயலாமல் போகும்போது தில ஹோமம் செய்வது அந்த தோஷத்தை போக்குகிறது.
பித்ரு தோஷம்
பித்ரு தோஷத்தால் ஏற்படும் குழந்தையின்மை, அல்லது குழந்தை உருவாகாது இருத்தல், கர்ப்பம் தங்காது இருத்தல், பிறந்த குழந்தை மரித்தல் போன்ற தோஷங்கள் ஏற்படலாம். இப்படிப்பட்ட தோஷங்களைப் போக்கவும் தில ஹோமம் செய்யப்பட வேண்டும். மற்ற ஹோமங்களைப் போலல்லாமல் மரித்தவர்களுக்கு ஸம்ஸ்காரம் செய்வதைப்போல் இறந்தவர்களை வெள்ளியாலான பிரதிமையில் ப்ரேத ஸ்வரூபியாக "ஆயாது பிதர:" என கூறி ஆவாஹனம் செய்து, செய்யப்பட வேண்டிய இந்த தில ஹோமத்தை தாங்கள் வசிக்கும் வீட்டில் செய்ய கூடாது.
ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், பவானி, ஸ்ரீரங்க பட்டினம் போன்ற புண்ணிய க்ஷேத்ரங்களில் பஜனை மடம் போன்ற பொதுவான இடங்களில் செய்யவேண்டும்.
ஹோமத்தின் இறுதியில், இறந்த முன்னோர்களை பிரேத ஸ்வரூபத்திலிருந்து விடுபட்டு பித்ருக்களுடன் ஒன்றாக சேர்ப்பிக்கும் விதமாக பித்ரு ப்ரதிமைகளை ஸமுத்ரத்திலோ அல்லது கடலில் கலக்கும் புண்ணிய நதிகளிலோ கரைத்துவிட்டு ஸ்னானம் செய்ய வேண்டும், இதனால் பித்ரு தோஷம் விலகி, காலத்தில் குழந்தைகள் பிறந்து, தீர்காயுஸ்ஸுடன் வாழ்வார்கள்.
கிருஷ்ண பக்ஷம் சனிக்கிழமை அமாவாஸை பரணி நக்ஷத்ரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் திலஹோமத்துக்குச் சிறந்தவை. ஆனாலும் இப்படிப்பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது, யாருக்குத் தேவையோ அவர்கள்தான் தில ஹோமத்தைச் செய்ய வேண்டும்.
தில ஹோமம் செய்ய வேண்டியத் தேவை உள்ளதா? என்பதை தக்க நபரிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஜாதகம் மூலம் பித்ரு தோஷம் இருப்பதை உறுதி செய்த பின்னரே தில ஹோமம் செய்ய வேண்டும்.
ஜோதிட ரீதியாக தில ஹோமம் யார் செய்ய வேண்டும்?
1. ஜோதிட ரீதியாக பித்ரு தோஷத்தை சூரியன் மற்றும் சந்திரனோடு ராகு கேது சேர்க்கை, 1-5-9 ஆகிய வீடுகளில் ராகு மற்றும் கேது நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை குறிக்கும்.
2. ஜெனன ஜாதகத்திலோ அல்லது ப்ரசன்ன ஜாதகத்திலோ மாந்தி இருக்கும் நிலையை வைத்து ப்ரேத தோஷத்தை அறியமுடியும். மேலும் மாந்தி எந்த கிரகத்தோடு சேர்க்கை பெற்றிருக்கிறதோ அந்த கிரக சம்மந்த உறவினால் ப்ரேத தோஷம் ஏற்பட்டிருப்பதை அறியமுடியும்.
3. ஜன்ம லக்னத்திலிருந்து புத்ர ஸ்தானத்தில் (ஐந்தாமிடத்தில்) சனி இருந்தாலோ அல்லது ஐந்தாமிடத்துக்கு சனி பார்வை இருந்தாலோ, புத்ர காரகனான குருவுக்கு சனியின் சேர்க்கை - பார்வை - இருந்தாலோ குழந்தை பாக்யம் இருக்காது.அல்லது குழந்தைகள் தங்காது, இது பித்ரு தோஷத்தால் ஏற்படுகிறது என்பதால் இப்படிப்பட்ட பித்ரு தோஷத்துக்கு தில ஹோமம் செய்வது சிறந்ததாகும்.
4. தில ஹோமம் செய்து பித்ரு தோஷம் விலகிய பின்னர் அமாவாஸை போன்ற நாட்களில் தர்ப்பணமும் பெற்றோருக்கு வருஷா வருஷம் ச்ராத்தம் ஆகியவற்றையும் முறையாகச் செய்ய வேண்டும், அப்போதுதான் செய்த தில ஹோமம் முழுமையான பலனைத் தரும்.
5. சிலர் தில ஹோமம் செய்த பிறகு ஒழிவு பார்த்தல் எனும் வழக்கப்படி தோஷம் நீங்கியதாக விட்டுவிடுவர். ஒழிவு பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ப்ரேதம் முக்தி அடைந்ததை மட்டுமே அறியமுடியும்.
முழுமையாக தோஷம் நீங்கும்
பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பனம், ஸ்ரார்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
தர்ப்பண மகிமை தொடரும்..
ஓம் குருவே சரணம்
No comments:
Post a Comment