Thursday, August 4, 2022

தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 11

 ஆடி அமாவாசை ஸ்பெஷல்

எளிய தர்ப்பண பூஜை முறைகள். பகுதி - 11  

பெற்றோர் உயிரோடு இருந்தால்...

போகர் : ''தற்கால மக்களிடையே 'தாய், தந்தையர் இருக்கும்போது பிள்ளைகள் எள்ளைத் தொடக் கூடாது; தர்ப்பணம் செய்யக் கூடாது' என்று ஓர் கருத்து நிலவுகிறது. அது சரியா? குருதேவா!"

ஸ்ரீஅகஸ்தியர் : 'அது மிகவும் தவறான கருத்து. பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போதே பிரம்மச்சாரிகள் செய்ய வேண்டிய நித்ய பூஜைகளில் ஒன்றான பிரம்ம யக்ஞத்தில் தேவ, ரிஷி தர்ப்பண மந்திரங்கள் உண்டே! ஏன், தினசரி சந்தியா வந்தனத்திலும் யம வந்தனம், நவகிரஹ தர்ப்பண மந்திரங்கள் உள்ளனவே!" 

தற்காலத்தில் பெரியவர்களே சந்தியா வந்தனம், பிரம்ம யக்ஞம் போன்ற நித்திய கர்மங்களைச் செய்யாததால் அவர்களுக்கே மந்திரங்கள், சம்பிரதாயங்கள் எல்லாம் தெரியாமல் போய் விட்டது. தந்தைமார்களே இன்னமும் வருடக்கணக்காகப் புத்தகத்தைப் பார்த்து பூஜை செய்கின்ற அவல நிலைதானே எங்கும் உள்ளது! தாங்களும் எதையும் சரிவர கற்றுக் கொள்ளாமல், தன்

சந்ததியினரையும் நற்காரியங்களில் ஈடுபடுத்தாமல் இருக்கும் இவர்கள் என்றுதான் உண்மையை உணர்ந்து உள்ளம் திருந்தி வாழ முயற்சிப்பார்களோ?

புலிப்பாணி : "பெற்றோர்கள் உயிரோடு இருக்கையில் பிள்ளைகள் யாருக்குத் தர்ப்பணம் அளிப்பது? ஐயனே!"

ஸ்ரீஅகஸ்தியர் : "இவ்வாறு கேட்டால்தானே அறிவு விருத்தியாகும்! அறியாமை விலகும்!"

ஒரு இறந்த ஜீவனுக்கு யார் வேண்டு மானாலும் பித்ரு தர்ப்பணம் செய்யலாம். ஆனால் அவரவர் வழித் தோன்றல்கள் அந்தத் தர்ப்பணங்களைச் செய்தால் பரிபூரணமாக இருக்கும். இறந்தவர்களும் தங்களது வம்சாவழியினர் செய்யும் தர்ப்பண பூஜை முறைகளையே மிகவும் விருப்பத்துடன் ஏற்கின்றனர். அவ்வாறு இறந்தவரின் வம்சத்தினர் யாரும் செய்யவில்லை என்றால் அவர்கள் சார்பாக மற்றவர்கள் தர்ப்பண பூஜைகளைச் செய்யலாம்.

உதாரணமாக, ஒரு கல்லூரி மாணவனோ அல்லது அலுவலக ஊழியரோ இறந்து விட்டார் என வைத்துக் கொள்வோம். இறந்தவருடைய குடும்பத்தில் தர்ப்பண செய்யும் வழக்கம் இல்லாவிடிலோ அல்லது அவரது குடும்பத்தினர் தர்ப்பண பூஜைகளைச் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றாலோ, இறந்தவர்க்கு வேண்டிய நண்பர்களோ, சக ஊழியர்களோ கொடுக்கலாம். இதில் தவறேதும் இல்லை. தர்ப்பணம்

போகர் : ''பலர் ஒன்றுகூடிச் செய்யும் கூட்டுத் தர்ப்பண முறைகள் ஏதேனும் உண்டா? ஐயனே!"

ஸ்ரீஅகஸ்தியர் : "நிச்சயம் உண்டு. தனிப்பட்ட பூஜை, ஹோமத்தைவிட பலர் ஒன்றாகச் சேர்ந்து செய்யும் கூட்டு வழிபாடு. கூட்டு நாம் சங்கீர்த்தனம் போன்ற வற்றுக்குப் பன்மடங்கு பலன் உண்டு. 

ரயில், பஸ் விபத்து, பூகம்பம், புயல், வெள்ளம் போன்றவற்றில் இறப்போரின் ஆத்ம சாந்திக்காகப் பலர் ஒன்றுகூடி கூட்டுத் தர்ப்பண பூஜைகளைச் செய்வது மிகவும் சிறப்பானது. தற்காலத்தில் கூட்டுப் பிரார்த்தனை பிரபலமடைந்து விளங்குவதைப்போல், எதிர்காலத்தில் கூட்டுத் தர்ப்பண முறையும் பிரசித்தி பெறும்.

🥀🌺 ஆடி அமாவாசை🥀🌺...

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு 

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்கிறது திருக்குறள். 

ஒரு மனிதன் தன் வாழ்வில் ஐந்து பேரைக் காக்க வேண்டும்.  தென்புலத்தார், தெய்வம், விருந்தினன், உறவினர்கள் மற்றும் தன் குடும்பம் ஆகிய  ஐவரையும் காக்க வேண்டிய கடமை ஒரு மனிதனைச் சேர்கிறது. 

இந்த ஐவரில் முதலாவதாகத்திருவள்ளுவர் குறிப்பிடுவது தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களையே.

முன்னோர்கள் வழிபாடு செய்து அவர்களின் ஆசி பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகள்!

தர்ப்பண மகிமை தொடரும்..

ஓம் குருவே சரணம்

No comments:

Post a Comment