Sunday, April 5, 2020

அப்புசாமி in குவாரன்டைன்.

அப்புசாமி in குவாரன்டைன்.

அப்புசாமி இதை எதிர்பார்க்கவே இல்லை. இரண்டாவது தும்மல் போடும் போதே தாத்தாவை அறைக்குள் தள்ளி பூட்டி விட்டாள்.

“ஏய் கெய்வி! இன்னா தெனாவெட்டு உன்க்கு. என்னையே உள்ளே தள்றியா? உன்னை என்ன செய்யறேன் பார்” என்று பாதி கெஞ்சலும் பாதி கோபமுமாக தாத்தா கதறினார்.

“டோன்ட் ஷவுட் லைக் ஸ்கூல் சில்ட்ரென். ஊரெல்லாம் கொரோனா வருது. உங்களுக்கு நீட் ஹேபிட்ஸ்சே கிடையாது. அடிக்கடி காஃப் வேற. நாலு நாள் உள்ளயே இருங்க. நான் போய் எங்க பா.மு.க மெம்பர் பாகீரதியைக் கூட்டிண்டு வரேன்” என்றாள் சீதாப் பாட்டி. தாத்தாவுக்கு நிலை கொள்ளலை. ரசகுண்டுவும், பீமாராவும் இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள். மூவருமாக சேர்ந்து ஒரு மலையாளப் படத்திற்குப் போவதாகப் பேச்சு. எப்பிடியாவது கிழவியின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு போய் விட வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்தார்கள். இப்போது என்னடான்னா தாத்தா குவாரன்டைன்.

சரியா ஒன்பது மணிக்கெல்லாம் ரசகுண்டு வந்து விட்டான். “தாத்தா என்ன இது? ரூமுக்குள்ள என்ன செய்றீங்க?” என்று கேலியாக கேட்டான். “டேய் படவா. பல்லைப் பேத்துபுடுவேன். கதவை தொறந்து விடுடா” ன்னு அடித்தொண்டையில் உறுமினார் தாத்தா.

வெகு வேலையாக பீமராவும் உடனே வந்து விட்டான். “ஏனு தாத்தா இது? ஏனு ஆயித்து?”

“ஆயிமில்ல, பேயுமில்ல. ரூமை தொறந்து விடுங்கடா. கெய்வி வரதுக்குள்ள எஸ்கேப் ஆயிடலாம்”என்று கதறினார்.

“ஏனு இதி? சாபி இல்லா?” என்று மறுபடியும் அப்பாவியாக பீமாராவ் கேட்டு வைக்க, வெடித்தே விட்டார் தாத்தா.

“டேய் ராவு, இல்லா. இல்லா. போறுமா. எருமை மாடு மாதிரி உடம்பை எதுக்கு வச்சிண்டிருக்கே!? ஒரு முட்டு முட்டுடா கதவு தொறந்துக்கும்”

எனினும் கதவை அவ்வளவு சீக்கிரமாக உடைக்க முடியவில்லை. சோர்ந்து போன தாத்தா, சீதா பாட்டியை வெறுப்பேத்த ஒரு ஐடியா போட்டார்.  “டே! ரசம். ரெண்டு நாளாச்சிடா. அந்த பாழாப் போன பொடியைக் கொஞ்சம் கண்ல காட்டேன்”

அவனும் தாத்தா பாவம்னு கொஞ்சம் பொடியை அவர் உள்ளங்கையில வச்சான். அப்பிடியே கொரானவுக்கே மருந்து கண்டு பிடிச்சிட்ட மாதிரி எகிறி குதிச்சார் அப்புசாமி தாத்தா. மூக்கு புடைத்துக் கொள்ள அப்படியே சர்ர்ர்ர்னு ஒரு இழுப்பு இழுத்தார். ஆஹா, ஆனந்தானுபவம்தான். பொடி உடனே வேலையை ஆரம்பித்தது. ஹச் ஹச்னு அப்பிடியே அடுக்கிக் கொண்டே போனார். கண்கள் கலங்கி விட்டன. சரியான நேரத்துல வெளியே போன சீதாப் பாட்டி, படுபாவி பாகீரதியோட வந்தே வந்து விட்டாள். வாசலுக்கு வரும் போதே தாத்தா வெளுத்து வாங்கிக் கொண்டு இருந்தார்.

உடனே சீதாப் பாட்டி ஜாக்கிரதையாக மாஸ்க் எடுத்து மூக்கையும், வாயையும் மூடிக் கொண்டு, கைக்கு கிளவுசும் மாட்டிக் கொண்டாள். ரசகுண்டும், பீமாராவும் எப்படியாவது வெளியே ஓடி விட சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

“ஓ! காட். ஷ்யுரா இது கொரானா வைரசேதான். இப்பிடி காஃப் வருதே. பாகீரதி. ஃப்ளீஸ் அட்டெண்ட் ஹிம் இம்மீடியட்லி”

“இட்லியும் வேணாம், தோசையும் வேணாம் போடி” என்று நடனம் ஆட ஆரம்பித்தார் அப்புசாமி. “கொரானா, கொரானா நீ கத்த வைக்கும் தேனா! நெஞ்சுக்குள்ளே இன்பம் கொரானா” ன்னு அப்பிடியே ஒரு மேடைப் பாடகனைப் போல பாடவும் ஆரம்பித்தார்.

“ரப்பிஷ். ஸ்டாப் தட் நான்சென்ஸ். டாக்டர் வந்திருக்கா. கம்னு கையைக் காட்டுங்கோ”என்று மிரட்டினாள் சீதாப் பாட்டி. சிங்கத்தின் குகைக்குள் போவதைப் போல மெல்ல பயந்து கொண்டே நடந்தாள் பாகீரதி. தாத்தாவின் பாட்டு நிற்கவே இல்லை. “கொரானா ஐ லவ் யூ கொரானா; பிலீவ் மீ ஐ லைக் யூ கொரானா” ன்னு இன்னொரு புதுப் பாட்டையும் சேர்த்துண்டார்.

அப்புசாமி பயத்துல்தான் பாடறார்னு பீமாராவ் நினைச்சிண்டான். “தாத்தா அஞ்ச பேடா, அஞ்ச பேடா”என்று அழுதபடியே தாத்தாவை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயற்சித்தான். பாட்டியின் நெருப்புப் பார்வையிலிருந்து எப்படி தப்பிப்பது என்பதே அவன் எண்ணமாக இருந்தது.

“போடா பீமா. அச்சம் என்பது மடமையடா” என்று பாடிக் கொண்டே கையை பாகீரதிக்குக் காண்பித்தார் அப்புசாமி. அவளும் ஒரு சிரிஞ்சில் அவரது இரத்த மாதிரியை எடுத்துக் கொண்டாள்.

“வொய்  ஆர் யு ஹியர் அட் திஸ் டைம்?” என்று பார்வையாலேயே, ரசகுண்டுவையும், பீமாராவையும் எரித்தாள் சீதாப் பாட்டி. “பாட்டி, வந்து, அது வந்து….” என்று இழுத்தான் ரசம்.

“டே இந்த கெழவிகிட்ட பயம் என்னடா? தைரியமா சொல்லு. சீதே நாங்க ஒரு மலையாளப் படம் போகலாம்னுதான் பிளான் பண்ணிண்டிருக்கோம்” என்று ரகசியத்தைப் போட்டு உடைத்தார் தாத்தா. தலையில் அடித்துக் கொண்டாள் சீதாப் பாட்டி.

“ஓகே. ஓகே. அந்த பிளட் டெஸ்ட் ரிசல்ட் வர வரைக்கும் உங்களுக்குக் குவாரன்டைன்தான். சமத்தா பால் குடிச்கிட்டு படுங்க” என்று தாத்தாவை தாஜா பண்ணினாள் சீதாப் பாட்டி.
“டே பீமா! கெய்வியை நம்பாதே. பால்ல மயக்க மருந்து கலந்திருப்போ. அந்த பால் எங்கடா இருக்கு? ஹால்லயா?”என்றார் தாத்தா. பீமாராவ் கொஞ்சம் குழம்பினான். “அவுது தாத்தா”என்று பொதுவாகச் சொல்லி வைத்தான்.

“டே ரசம், பாலுக்குக் கன்னடத்துல என்னடா?” என்று தவித்தார் அப்புசாமி.

“ஹாலு”என்றான் பீமாராவ். “ஐயோ அப்பிடியா, அப்ப ஹாலுக்கு என்ன?”என்றார். பீமாராவ் விழித்தான். “வந்து…..வந்து ஹாலுக்கு ஹால்தான்”என்றான்.

“அடப் பாவி. இந்த ஹால்ல இருக்க பாலை எடுத்து அந்த ஹால்ல வைன்னு கன்னடத்துல எப்பிடிடா சொல்லுவே?”விடாமல் கேட்டார் தாத்தா.

பீமாராவ் கொஞ்சம் யோசிச்சான். பிறகு, “ஈ ஹால்ல இருவத்திரவ ஹாலுன ……”என்று வார்த்தைகளைத் தேட ஆரம்பித்தான்.

“ஆல் ஆஃப் யூ கெட் லாஸ்ட்” என்று உறுமினாள் சீதாப் பாட்டி.
விட்டால் போதும் என்று ரசமும், ராவும் பறந்தார்கள். அப்புசாமி நிறுத்தாமல் தும்மல் போட்டுக் கொண்டே இருந்தார். சீதா பாட்டியின் பயம் அவருக்குத் தேனாக இனித்தது.

1 comment:

  1. அதெப்படி , ஜ ரா ஸுந்தரேசன் ஸ்டைல் அப்படியே அச்சா வந்திருக்கு . அப்புசாமியின் வீராப்பும் விறைப்பும் சீதாப்பாட்டிக்கிட்டே ஒண்ணும் ஜம்பம் சாயாது. கரோனா பீதியிலிருப்போர்க்கு நல்ல ரிலாக்ஸ் தரும் பதிவு . நன்றியும் பாராட்டும்  

    ReplyDelete