🙏🏼துவார பாலகர்கள் யார் ?
சிவன் கோயில், பெருமாள் கோயில், அம்பாள் கோயில்களின் முகப்பில் துவார பாலகர்கள் வீற்றிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆலயத்தின் உள்ளே பிரவேசிப்பதற்கு முன்பாக, துவார பாலகர்களை வணங்கிவிட்டுச் செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.
சிவன், பெருமாள் கோயில்களில் துவார பாலகர்கள் என்றும் அம்மன் கோயில்களின் முகப்பில் இருப்பவர்களை துவார பாலகிகள் என்றும் புராணங்களில் குறிப்புகள் உள்ளன.
சிவன் கோயில்களில் இருக்கும் துவார பாலகர்களின் பெயர் சண்டன், பிரசண்டன்.
மாகா விஷ்ணுவின் ஆலயங்களில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்கள் ஜயன், விஜயன்.
இவர்கள் ஒரு சாபத்தினால் மூன்று ஜென்மங்கள் அசுரர்களாகவே பிறந்தவர்கள். அதன் பின் துவார பாலகர்களாக திருமாலுக்குச் சேவை செய்துவருபவர்கள்.
அம்மன் கோயிலின் வாயிலில் காக்கும் துவார பாலகிகளின் பெயர், ஹரபத்ரா, சுபத்ரா.
கோயிலின் முகப்பில் இடம்பெற்றிருக்கும் துவார பாலகர்களின் சிலை இரண்டு விதங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒன்று, சங்கு, சக்கர, கதாயுதத்துடன் ஆயுத பாணிகளாக துவார பாலகர்கள் காட்சி தருவார்கள்.
இன்னொன்று, நிராயுதபாணியாக, தன்னுடைய ஆட்காட்டி விரலை உயர்த்தியபடி ஒரு துவார பாலகர் நிற்பார். இறைவன் ஒருவனே என்பதுதான் இதன் தத்துவம்.
இன்னொரு பாலகர், தன்னுடைய கையை விரித்தபடி இருப்பார். இறைவனைத் தவிர வேறெதுவுமில்லை என்பதே இதன் தத்துவம்.
கோயில்களின் வகைகள்
ஆலயங்களில் உள்ள இறை வடிவங்களில் பல வகைகள் உள்ளன. சுயம்பு, தைவீகம், ஆர்ஷம், மானுஷம், ஆசுரம் என ஐந்து வகைகள் உண்டு.
சுயம்பு
தாமாகவே தோன்றிய திருவுருவங்கள்.
தைவீகம்
பிரம்மாதி தேவர்களால் உருவாக்கப்பட்டவை.
ஆர்ஷம்
சித்தர்களாலும், ரிஷிகளாலும் ஏற்படுத்தப்பட்டவை.
மானுஷம்
அடியார்களாலும், பக்தர்களாலும், மன்னர்களாலும் பிரதிஷ்டை செய்யப்பட்டவை.
ஆசுரம்
அசுரர்களால் அமைக்கப்பட்டவை.
கும்பாபிசேக_வகைகள்
ஆவர்த்தம்
ஓரிடத்தில் புதிதாக கோவில் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்பட்டு மூர்த்திகளுக்கு கும்பாபிசேகம் செய்யப்படுவதை, ஆவர்த்தம் என்பர்.
அனாவர்த்தம்
அனாவர்த்தம் என்பது வெகு காலமாக கோவில்களில் பூஜைகளில்லாமலோ, கோயில் சேதமடைந்து வழிபாடு நின்று போயிருந்தாலோ, புதிதாக அதை நிர்மாணம் செய்து மூர்த்திகளுக்கு கும்பாபிசேகம் செய்வதை அனாவர்த்தம் என்பர்.
புனராவர்த்தம்
கர்ப்பகிரகம், விமானம் போன்றவை பழுதாகியிருந்தால், அவற்றைப் புதுப்பித்து அஷ்ட பந்தனம் இல்லாவிட்டால், அதை சாத்தித் திரும்ப மூலஸ்தானத்தில் அந்த மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வதை புனராவர்த்தம் என்பர்.
கோவில் அமைய வேண்டிய இடங்கள்
1. செளமிய மற்றும் போக மூர்த்திகளின் ஆலயங்கள் கிராமங்கள், நகரங்களுக்குள் அமைக்கப்படலாம். உக்கிர மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படும் ஆலயங்கள் மக்கள் குடியிருக்கும் ஊர்களின் மத்தியில் அமைக்க ஆகமங்கள் அனுமதிக்கவில்லை. இவை ஊரின் எல்லையிலேயே அமைக்கப்படும்.
2. யோக மூர்த்திகளுக்கான ஆலயங்கள் ஊருக்குத் தொலைவில் உள்ள காடுகள் சூழ்ந்துள்ள மலை உச்சியில் அமைக்கப்பட வேண்டும்.
3. மாரியம்மன் கோவில் ஊரில் வடகிழக்கு, மேற்கு திசைகளில் அமைந்திருக்கும்.
4. சிவன் கோவில் நகரின் ஈசான (வடகிழக்கு) மூலையில் அமைக்க வேண்டும். தென்கிழக்கு மூலையில் உள்ள அக்னி பாகத்திலும் அமைக்கலாம் என காமிகா ஆகமம் கூறுகிறது. சிவலிங்கங்கள் கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். சிவனின் பார்வை ஊரின் குடியிருப்பை நோக்கி இருக்கக் கூடாது. சில இடங்களில் சிவன் மேற்கு நோக்கி அபூர்வமாக அமைந்திருக்கும்..
No comments:
Post a Comment