Wednesday, April 29, 2020

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

சுஜாதா திசை கண்டேன் வான் கண்டேன் என்ற நாவலில் நாளை உலகம் அழியப் போகிறது ... மக்கள் என்ன செய்தார்கள் என்று நகைச்சுவையாக எழுதியிருப்பார் சில வரிகள்.... 

”பக்தி காசெட்டுகளுக்கு அடித்துக் கொண்டார்கள். ஸ்தோத்திரப் புத்தகங்கள் காணாமல் போயின. விஞ்ஞானப் புத்தகங்கள் கொளுத்தப்பட்டன.  தாலிக்கு நேரமின்றி சும்மா ஒரு முத்தம் போதும், திருமணம் ஓவர் என்றார்கள். வங்கிகளில் யாரும் பணம் எடுக்க வரவில்லை. பிச்சைக்காரர்கள் நூறு ரூபாய் நோட்டுகளால் காது குடைந்தார்கள். ஐநூறு ரூபாய் காந்தி படம் போட்ட நோட்டுகளை மாடுகள் மென்றன...”

எனக்கு நேற்று நடந்த சம்பவம்.

“வாக்கிங் முடித்துக்கொண்டு வரும் போது கொஞ்சம் கறிவேப்பிலை வேண்டும்” என்ற நேயர் விருப்பத்தை நிறைவேற்ற என் பிளாட்டில் இருக்கும் கடைக்குச் சென்றேன்.  ஒரே கோயிலில் பல தெய்வங்கள் இருக்கும் அமெரிக்கக் கோயில் போல், இந்த கடையில் எல்லாம் கிடைக்கும் . பொதுவாகச் சனிக்கிழமை தூங்கிக்கொண்டு இருப்பார்கள் ஆனால் வழக்கத்துக்கு மாறாக நாளை உலகம் அழியப் போகிறது என்று எல்லாவற்றையும் முகமூடி அணிந்து கொள்ளை அடித்துக்கொண்டு இருந்தார்கள். 

கறிவேப்பிலை இருக்கும் பகுதிக்குச் சென்றபோது வயதானவர் அதை மறைத்துக்கொண்டு இருந்தார். வழி விடுங்கள் என்பதை  ‘எஸ் க்யூஸ் மீ’ என்றேன். 
“சார் ஐ ஆம் ஸ்டாண்டிங் இன் தி க்யூ” என்ற போது அதிர்ச்சியாக இருந்தது. கடை முழுக்க கூட்டம் இல்லை, க்யூ. 
அவர் கால் இடுக்கில் கையை விட்டு ‘buzz wire' விளயாட்டு மாதிரி  கறிவேப்பிலையை இழுத்து கவர்ந்துகொண்டு அவர்பின் நின்றேன். 
அவர் யாருடனோ தொலைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தார் 
“அச்சா... அச்சா... ஜனதா கஃர்ப்யூ... நாளைக்குத் தேவையானவற்றை வாங்கக் கடைக்கு வந்தேன்...” சப்டைட்டிலுடன் பார்க்கும் ஹிந்தி படம்போலப் புரிந்தது. 
அவர் என்ன என்ன வாங்கியுள்ளார் என்று அவர் கூடையில் பார்த்தேன்.  
(இது கற்பனை இல்லை )

இரண்டு பிரட் பாக்கெட், அமூல் பட்டர் ( சால்டட் ), கிசான் மிஸ்ட் ஃபுரூட் ஜாம் 
எம்.டி.ஆர் ரவா இட்லி, அதே  பிராண்ட் புளியோகரை மிக்ஸ் ( 500 கிராம் ) 
இரண்டு பாக்கெட் குட் லைப்  நந்தினி மில்க் ( டெட்டரா பாக்கெட் ) 
மில்கீ மிஸ்ட்  ஃப்ரூட் யோகர்ட்  ( பெரிய டப்பா ) - ஆறு 
வலை பையில் இருக்கும் எலுமிச்சை பழம் பாக்கெட் ஒரு கொத்து. 
பாலக் - பெரிய கட்டு இரண்டு. 
பெரிய சைஸ் செட் தயிர் - 2 
ஹல்திராம்ஸ் நொருக்கு பச்சை-மஞ்சள் கலர் பாக்கெட் - 1, சிகப்பு, மஞ்சள் பாக்கெட் - 1 
புதிதாக கல்யாணம் ஆனவர்கள் செய்யும் சப்பாதி மாதிரி இருக்கும் காக்கரா ஒரு பாக்கெட் ( பெரிது, மேத்தி வாசனையுடன் ) 
ஆரஞ்சு பழம் 6, ஆப்பிள், கருப்பு, பச்சை திராட்சை, வாழைப்பழம் ( ஏலக்கி )
ஐ.டி தோசை மாவு 2 கிலோ பாக்கெட் (கொஞ்சமாக உப்பு சேர்க்கப்பட்டது)
ஐந்து பிஸ்லேரி 1 லிட் தண்ணீர் பாட்டில் 
அமூல் ’பட்டர் மில்க்’  - 10 
ஒரு தேங்காய் 
கிரீன் டீ 
கொத்தமல்லி கொத்து 
கோதுமை ( 1 கிலோ, ஆசிர்வாத் செலக்ட்  ) 
பிஸ்கெட் - பார்லேஜி ( கோல்ட் ), ஜிம்.ஜாம் - 1 
பன்னீர் - ஒரு பாக்கெட் 
சிப்ஸ். 
டிராப்பிகானா ஜூஸ் பெரிய டப்பா - 2 
டூத் பேஸ்ட் 1, பிரஷ் - 5 

க்யூவில் நிற்கும் சமயம் இதை எல்லாம் வைத்து நாளை மோடி அறிவித்துள்ள ‘‘ஜனதா ஊரடங்கு’’ என்று கூறப்படும் ‘‘மக்கள் ஊரடங்கு’’  அன்று அவர்கள் இல்லத்தில் என்ன மாதிரி மெனு என்று யோசித்தேன் மேலே உள்ள பட்டியலில் சரி பார்த்துக்கொள்ளவும். 

பிரட் பட்டர் ஜாம் , கூட ரவா இட்லி கொத்த மல்லி சட்னி 
கூடவே தண்ணீர்.  கிரீன் டீ ( உடலுக்கு நல்லது  ! ) 
டிவி பார்த்துக்கொண்டு ஹல்திராம்ஸ் ஸ்நாக்ஸ் 
புளியோதரை, தயிர் சாதம் சிப்ஸ் ( வீட்டில் ஊறுகாய் இருக்கும் என்று நினைக்கிறேன் ) 
பழம், பட்டர் மில்க், ஜூஸ் 
பிறகு கொஞ்சம் டிவி, மொபைல் முடிந்தால் கொஞ்சம் தூக்கம். 
ஸ்நாக்ஸ், டீ.
தோசை, தேங்காய் சட்னி, காக்கரா, பிஸ்கெட் 
மீண்டும் தண்ணீர், ஃப்ரூட் யோகர்ட்  
சப்பாத்தி, பாலக் பன்னீர்  
சூடான பால்..

”சார் நெக்ஸ்ட்” 
தழையை சொருகிக்கொண்டு இருக்கும் ’பிரேக் டவுன்’ வண்டி மாதிரி நின்றேன். 
“சில்லறையா இருந்தாக் கொடுங்க..சார்”
நெக்ஸ்ட்  

- சுஜாதா தேசிகன்
22-03-2020 https://www.facebook.com/100001300285466/posts/2800962903290358?sfns=mo

No comments:

Post a Comment