Saturday, April 25, 2020

திரட்டுப் பால்

"மடியா செஞ்சிருக்கேன் திரட்டுப் பால்,நாலு நாள் வெச்சுக்கலாம், கெட்டுப் போகாது!-ஓர் அம்மணி.

பக்க்த்தில் குடிசைக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு பூரா கொடுத்து விட்டு காலி பாத்திரத்தைக் கொண்டு வா--பெரியவா 

பூரண திருப்தியுடன் ஆனந்தப்பட்ட பெரியவா



கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
தொகுப்பு-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன். 

அந்தக் கிராமத்தில் பெரியவா தங்கியிருந்த இடத்துக்கு அருகில் குடிசை வீடுகள். சாயங்கால வேளைகளில், குடிசைக் குழந்தைகள்  கும்மாளமிட்டுக் கொண்டு விளையாடுவதையும், சண்டை போடுவதையும், கூச்சல் - கூப்பாடுகளையும் பெரியவா மனமகிழ்ச்சியுடன் ரசிப்பார்கள். (அப்போதெல்லாம், அந்தக் குழந்தைகளுடன்  சேர்ந்து நாமும் விளையாட மாட்டோமா? - என்ற ஒரு பாவம் - வேட்கை - பெரியவா  கண்களில் ஜொலிக்கும்)

அப்படி, குழந்தைகள் விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்த தருணத்தில், ஒரு பாத்திரம் நிறைய திரட்டுப் பால் கொண்டுவந்து, பெரியவாளுக்கு முன் வைத்து நமஸ்காரம் செய்தாள்,ஓர் அம்மணி.

"என்னது?... பாலைக் குறுக்கிக் கொண்டு வந்திருக்கியோ?.."- இது பெரியவா.

"ஆமாம்.."- இது அம்மணி.

"தித்திப்பா இருக்குமோ?" -பெரியவா

"இருக்கும்.."-அம்மணி

"வாசனை?"-பெரியவா

அம்மையார் பதில் சொல்வதற்குள், "அதான் மூக்கைத் துளைக்கிறதே!" என்று பாராட்டினார்கள்.

"மடியா செஞ்சிருக்கேன்... கெட்டுப் போகாது...நாலு நாள் வெச்சுக்கலாம்..தினம், கொஞ்சம் பெரியவா.."--இது அம்மணி.

பெரியவா, அந்த அம்மாளின் சொற்களைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. ஆனால், ஓர் ஆர்வத்துடன்,

" நீ என்ன பண்றே,?.. இந்தப் பாத்திரத்தை எடுத்துண்டு போய், அங்கே விளையாடிக் கொண்டிருக்கிற குழந்தைகளுக்குக் கொடுத்துக் காலிப் பாத்திரத்தை கொண்டு வரே என்ன? எனக்கு, அடுத்த தடவை பண்ணிண்டு வா..."-இது பெரியவா.

க்ஷீரஸாகர சாயீ, மோஹினி தேவியாக அமிர்த விநியோகம் செய்ததைப் போல, அத்தனை திரட்டுப் பாலையும், குழந்தைகளுக்குக் கொடுத்து விட்டாள் அந்த அம்மாள்.

பரிபூரண திருப்தியுடன், குழந்தைகள் திரட்டுப் பால் சாப்பிடுவதை கனிவோடு பார்த்து ஆனந்தப்பட்டார்கள் பெரியவா.

No comments:

Post a Comment