கம்ப இராமாயணம் போல் நாலாயிர திவ்விய பிரபந்தமும் இலக்கிய தேன் கலந்த பக்தி அனுபவம்.ஆழ்வார்கள் பாடலில் விரவிக்கிடக்கும் இராமாயணக்கதையை தொகுத்தால்......ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்னும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுர வரிகளைக் கொண்டு வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆசார்யர் தொகுத்த இராமாயணம் ஒன்று இருக்கிறது. அது பாசுரப்படி இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இராமாயணத்தைப் பாடினால் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்த பயனும் இராமாயணம் பாடிய பயனும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த இனிய இராமாயணத்தை இங்கே இராமநவமி புண்ணிய தினமான இன்று இடுவதற்கு எம்பெருமானின் திருவருள் அமைந்தது என் பாக்கியம்.
*

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க
கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப
சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்
- பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் -
*
எம்பெருமான் திருவுளம் இருந்தால் இந்தப் பாசுரப்படி இராமாயணத்துக்கு விளக்கத்தை வருங்காலத்தில் எழுதுகிறேன். ஏதேனும் சொற்களுக்கு ஆங்காங்கே பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள்.
No comments:
Post a Comment