Saturday, April 25, 2020

கால் கிலோ கத்தரிக்காயும் . . .நானும்

கால் கிலோ கத்தரிக்காயும்  . . .நானும் 

"என்னங்க... டிபன் என்ன பண்ணட்டும்?"

"பரவாயில்லையே, ஆப்ஷன் வெச்சிருக்கியா?"

"ம் . . . .ஆப்ஷன் வேணுமோ. . .? ரெண்டே ஆப்ஷன் தான் பண்ணவா? வேண்டாமா?

என்னோட காலை இப்படி ஆரம்பிக்கும்போதே இன்னைக்கு 'உனக்கு இருக்குடா ' என பட்சி சொன்னது.

* * * *

காலை 10 மணி. . . .

மொபைல் நோண்டிக்கொண்டு இருந்தவனுக்கு முன்னால் நான்கு கத்தரிக்காயை கொண்டு வந்து  வைத்தாள். 

"என்ன சுபா? கட் பண்ணனுமா?"

"அதெல்லாம் நாங்க பாத்துக்குவோம், இது நேத்து நீங்க வாங்கிட்டு வந்ததுல இருந்த பூச்சி காய்"

"அதெ எதுக்கு என்கிட்டே காட்டறே . . .? கலந்து வந்திருச்சு, குப்பையிலே போடு"

"என்னது? குப்பையிலே போடவா? போயி குடுத்துட்டு வேற வாங்கிட்டு வாங்க"

"சுபா, இது உனக்கே நியாயமா இருக்கா, நேத்து வாங்கின காயை இன்னைக்கு மாத்திட்டு வர சொல்றே, கடைக்காரன் மறந்தே 

போயிருப்பான்"

"முருகன் கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற கடையிலதான வாங்குனீங்க?"

"ஆமாம்"

"ஒன்னும் பிரச்னை இல்லை, நான் ஒரு வாரம் கழிச்சுக்கூட மாத்திஇருக்கேன். முடியாதுன்னு சொன்னா மாவு மிஷின் இருக்கிற 

பில்டிங் னு சொல்லுங்க, மாத்தி குடுப்பான்"

சங்கடத்தோடு வண்டி சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். . . போகும்போது யோசித்தேன் . . . 

"4 கத்தரிக்காயை எப்படி ரிட்டர்ன் குடுக்க? பேசாம காசு குடுத்து கால் கிலோ வாங்கிட்டு வந்துட வேண்டியது தான் "

"வாங்க சார் என்றார் கடைக்காரர் 

"கால் கிலோ கத்தரிக்காய் குடுங்க"

"வேற?"

"அது மட்டும் போதும்"

* * * *

வாங்கி விட்டு சட்டை பாக்கெட்டில் கை விட்டால் 'காலி. "பணம் கொண்டு வர மறந்தே போனேனே. . .இப்ப என்ன செய்ய?"

நான் முழிப்பதை பார்த்து அவரே கேட்டார், "என்ன சார் காசு கொண்டு வரலியா?"

"ஆமாம், அவசரத்துல எடுக்க மறந்துட்டேன்,  பக்கத்துலதான் வீடு. மறுபடி வரும்போது குடுத்திடறேன்,  தப்பா நினைச்சுக்காதீங்க . . .

"ஒண்ணும் பிரச்னையில்லை சார்" கடைக்காரர் சொன்னதும் பெரிய நிம்மதி.

* * * *

கேட்டை திறக்கும்போதே வெளியே வந்த சுபா, "என்னங்க. . . ரேஷன் கடையில கூட்டம் இருக்கா?"

"பாக்கவே இல்லையே"

"ஒண்ணுத்துக்கும் லாயக்கு இல்லை,  வர்ற வழிதானே, பாக்க மாட்டீங்களா?"

"இந்தா கத்தரிக்காயை பிடி, ரேஷன் கடைக்கு போய் பார்த்துட்டு வந்துடறேன் "

"இருங்க . . . ரேஷன் கார்டை பிடிங்க,  பை வண்டிலேயே இருக்கு . . .போங்க" என்றாள் 

"காசு?" -நான் 

"நியூஸ் பார்க்கறது இல்லையா? இப்போ ஃபிரீதான்"

* * * *

ரேஷன் கடையிலிருந்து அம்மாவிடம் கார்டு கொடுக்கும்போது சுபா விடமிருந்து போன் . . . 

"என்னங்க, இந்த மாசம் அரிசி வேண்டாம், அதுக்கு பதிலா சர்க்கரை 4 கிலோ கேளுங்க . . "

"ரூல்ஸ் படி நமக்கு 2 கிலோ தானே . . .4 கிலோ எப்படி கேக்க?"

"புத்ரசிகாமணி நீங்க கேக்க மாட்டீங்க எனக்கு தெரியும், போனை அவங்க கிட்ட குடுங்க நான் பேசறேன் , , , "

"மேடம், என் வொய்ப் பேசணுமாம்" என மொபைலை கொடுத்தேன் 

" சரி மேடம், அரிசி 2 கிலோ தரேன் . . . ஆனா இப்போ ஃபிரீ ங்கறதாலே 4 கிலோ சக்கரை தர முடியாது. . .  3 கிலோ தரேன் . . . " 

மொபைலை திருப்பி கொடுத்தபடியே ரேஷன் கடை அம்மா சொன்னார்,"மேடம் கிட்டே பேசிட்டேன் . . உங்க வீட்டு நாய்க்கு 

ரேஷன் அரிசி சோறுதான் போடுவாங்களாம் . . அரிசி 2 கிலோ வாங்கிக்கோங்க . . .  சக்கரை 3 கிலோ தரேன் . . .இந்தாங்க பருப்பு, 

ஆயில் பாக்கெட் "

சுபாவின் சாமர்த்தியத்தை நினைத்து வியந்த படி வீடு வந்தேன்.

* * * *

வந்து உட்கார்ந்து ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது, குக்கரும் கையுமாக கிச்சனிலிருந்து வேகமாக வெளியில் வந்த சுபா, 

என் முன்னாலிருந்த டீபாயின் மேல் குக்கரை வைத்தாள்.

" தொறந்து பாருங்க"

"ஏன், என்ன ஆச்சு?" என்றபடியே குக்கர் மூடியை திறந்தேன்.

ஒன்றும் புரியவில்லை . . . . மறுபடி சுபாவை பார்த்தேன், "என்னாச்சு?"

"சாதத்தை பாருங்க, குழைஞ்சு போச்சு"

"பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்"

"அதெப்படி, நேத்து வாங்கும்போது நீங்களும் தான இருந்தீங்க, என்ன சொன்னான்?"

"என்ன சொன்னான்?" புரியாமல் பார்த்தேன் . . . 

"எல்லாம் மறந்து போச்சு, இந்த லட்சணத்துல ஆபீஸ்ல மேனேஜர் ! என்ன வேலை பாக்குறீங்கன்னு ஒரு நாள் வந்து பாக்கணும், 

எந்திரிங்க, அந்த மிச்ச அரிசியை எடுத்துக்கிட்டு கிளம்புங்க"

"ஐயோ, மறுபடியுமா" மனம் பதக் கென்றது

"நானும் வரேன், கிளம்புங்க"

அரிசி மூட்டையை முன்னால் வைத்து விட்டு உட்கார்ந்து திரும்பி பார்த்தேன் . . . .குக்கரோடு உட்கார்ந்திருந்தாள்.

" குக்கர் எதுக்கு?"

"பேசாம வண்டியை ஓட்டுங்க, எனக்கு தெரியும்"

"கடையில் என்ன ரகளை ஆகப் போகுதோ, பயந்தபடி வண்டியை ஓட்டினேன் 

கடையில் நுழைந்ததும், குக்கரை 'லொட்டென' காஷியர் முன் வைத்தாள்.

"என்ன ஆச்சு மேடம் ?" என்றார் அவர்

"சார், நீங்களே பாருங்க, நேத்து சூப்பரா இருக்கும்னு சொல்லி குடுத்த அரிசி, சத்தம் வடிச்சா கஞ்சியாட்டமா இருக்கு "

அவர் இதுமாதிரி நிறைய பேரை பார்த்திருப்பார் போல . . .  பொறுமையாக பதில் சொன்னார்.

"ஸாரி மேடம்। நல்லா இருக்கும்னு தான் குடுத்தேன் . . .  கோவப் படாதீங்க, மாற்றித் தரேன், " என்று சொல்லி விட்டு 

கடைப்பயனைக் கூப்பிட்டு மாற்றி தர சொன்னார்।"

வீடு திரும்பினோம் . . . . .வழியெங்கும் ஒரே அர்ச்சனை எனக்கு . . .  "பார்த்தீங்களா, நித்தம் நித்தம் எவ்வளவு பிரச்னை எனக்கு.

நீங்க பாட்டுக்கு ஆபீஸ் போய் காலை ஆட்டிகிட்டு உக்கர்ந்துக்கிறீங்க. . . ஒவ்வொரு நாளும் எத்தனை கஷ்டம் நான் பட 

வேண்டி இருக்கு . . .என்னைக்காவது நினைச்ச பாக்கறீங்களா ?"

நல்ல வேளை வீடு வந்ததால் தப்பித்தேன்.

* * * *

மதியம் சாப்பிடும்போது தான் கத்தரிக்காய்க்கு கடன் சொல்லி வந்தது ஞாபகம் வந்தது. சாப்பிட்ட வுடன் சட்டையை 

மாட்டிக் கொண்டு கிளம்பின்னேன். 

"ஐயா எங்க கிளம்பிட்டிங்க . . . காலைல இருந்து வெளில சுத்திகிட்டு தானே இருக்கீங்க, " என்றாள் கிண்டல் தொனிக்க.

"இல்ல சுபா, சுரேஷ் க்கு ஆபீஸ் அக்கவுண்ட்ஸ் ல ஒரு டவுட் கேட்டான், போன் ல புரியாது, நேர்ல வரேன்னு சொன்னேன். . . 

 10 நிமிஷத்துல வந்துடறேன்" என்று விட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நேராக காய்கறி கடைக்கு வந்தேன்.

* * * *

என்னைப் பார்த்ததும் சிரித்தவாறே, "என்ன சார், இப்பதான் அம்மாவுக்கு போன் போட்டேன், அதுக்குள்ளே வந்துட்டீங்க," என்றார்

"என் ஒய்ப் க்கு போன் போட்டீங்களா ? எதுக்கு?"

" அது ஒண்ணும் இல்லை சார், பாலக் கீரை வந்தா அம்மா சொல்ல சொல்லி இருந்தாங்க, இப்பதான் வந்தது. . .  அதுக்குதான் 

போன் போட்டேன், அப்படியே நீங்க காலைல கால் கிலோ கத்தரிக்காய் வாங்கினது அக்கவுண்ட்ல எழுதிக்கவான்னு கேட்டேன், 

சார் வந்ததும் அனுப்பறேன்னு சொன்னாங்க . . .  2 நிமிஷம் கூட ஆகலை வந்துட்டீங்க . . ."

"அடப்பாவி போட்டு குடுத்திட்டியா ?" என்றபடி தலையை பிடித்துக்கொண்டு அங்கிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன்.

"என்ன சார், என்ன ஆச்சு? வேர்த்திருக்கு . . . .லோ சுகரா?" அவன் பேசியது எதுவும் காதில் விழவில்லை.

No comments:

Post a Comment