ஸ்ரீ:
ஸ்ரீ மதேராமானுஜாயநம:
தஸாவதாரம்
ஸ்ரீவராகவதாரம்
பகுதி 03
ஸ்ரீமுஷ்ணம்
விருத்தாசலம் அருகே ஸ்ரீமுஷ்ணம் திருத்தலத்தில் ஒரு முகமதிய பக்தரின் ராஜபிளவை நோயை பன்றியின் வடிவில் குத்தி அகற்றி, அவரைக் காப்பாற்றிய வராஹ மூர்த்தியை தரிசிக்கலாம். அத்தலத்தில் பிரசாதமாக வழங்கப்படும் முஸ்தாபி சூரணம் எனப்படும் கோரைக்கிழங்கு, சர்க்கரை, ஏலக்காய் மற்றும் பல மூலிகைகளால் தயாரிக்கப்படும் பிரசாதம் நோய்களை நீக்கவல்லது. பூவராஹ சுவாமி முதன்மையான விக்ரஹமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தன் இடுப்பில் இருக்கும் சங்கு மற்றும் சக்கரத்தை தன் இரு கைகளால் மறைத்த வண்ணம், திருமேனி மேற்கு திசையை நோக்கியும், முகம் தெற்கு திசையை நோக்கியும், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இத்தல வராஹர் இரு கைகளையும் இடுப்பில் வைத்து அழகிய வடிவில் அருட்காட்சியளிக்கிறார். இங்கு யக்ஞ வராஹர் உற்சவ மூர்த்தியாகவும், தாயார் அம்புஜ வல்லியாகவும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இத்தல தாயாரின் தோழிகளாக சப்த கன்னியர்கள் இத்தலத்தில் அருள்கின்றனர். பூவராக சுவாமி திருக்கோயிலின் முகப்பானது கம்பீரமான எழில்மிகு ராஜகோபுரத்தின் அமைப்பை கொண்டது. கோயிலில் இருக்கும் மூல விக்ரஹத்தை தரிசிக்கும் முன் ஸ்ரீ நிவாச பெருமாளையும் அடிவாரத்தில் அவர் திருவடிகளையும் தரிசித்து செல்ல வேண்டும். கோயிலின் தென் கிழக்கு திசையில் அசுவத்த மரமும், நித்ய புஷ்கரிணியும் அமைந்துள்ளது. மிகவும் முக்கியமான எட்டு சுயம்பு ஷேத்திரத்தில் ஸ்ரீ முஷ்ணமும் ஒன்றாகும்.
அவை ஸ்ரீரங்கம், ஸ்ரீ முஷ்ணம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகும். இக்கோயிலில் முதன்மையான விக்ரஹத்திற்கு மேல் பாவன விமானம் அமையப் பெற்றுள்ளது. வராஹ பெருமாள் ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வெடுத்த போது அவர் உடல் வியர்வையே நித்ய புஷ்கரணி என்னும் புனித தீர்த்தமாக மாறிவிட்டது. ஹிரண்யாக்ஷனை வதம் செய்த பின்னர், பகவான் வராஹரின் கண்களில் இருந்து விழுந்த ஒரு துளி ஆனந்த கண்ணீரானது அசுவத்த மரமாக உருவெடுத்தது. இக் கோயிலில் சக்ர தீர்த்தம், அக்னி தீர்த்தம்,வேணு தீர்த்தம், மிருத்யுஞ்ஜய தீர்த்தம் என பல தீர்த்தங்கள் விசேஷமாக காணப்படுகின்றன. சென்னை, விருத்தாசலம், சோழத்தரம் (சென்னை- கும்பகோணம் நெடுஞ்சாலை) பஸ் வசதி உள்ளது.
திருவிடவெந்தை
சென்னை மகாபலிபுரம் அருகே திருவிடவெந்தையில் திருமகளை தன் இடது மடியில் அமர்த்தி அருளும் வராஹ மூர்த்தியைக் காணலாம். இவர் நித்யகல்யாணப் பெருமாள் என்று வணங்கப்படுகிறார். இத்தலத்தில் யானைத்தந்தத்தால் ஆன தொட்டில் உள்ளது. திருமண வரம் வேண்டி கன்னியரும், காளையரும் இவ்வராஹப் பெருமாள் ஆலயத்தை மலர் மாலையோடு வலம் வந்தால் அவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நிச்சயமாகிறது. அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன் மிகுந்த நீதிமானாக அரசுபுரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்துக்கு வந்து வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது.
இத்தலத்துக்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தியை மணம் புரிந்து அருளினாராம் பெருமாள். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கம் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இவ்வுலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளியதாக விவரிக்கிறது தலபுராணம். தினம் ஒரு கல்யாணம் என்பதால் பெருமாளுக்கு (உற்ஸவர்) நித்ய கல்யாணப் பெருமாள் என்று திருநாமம்; அவரின் இடப் பக்கத்தில் அருளும் நாச்சியாருக்கு அகிலவல்லி நாச்சியார் என்று திருப்பெயர். கோயிலில் தனிச் சந்நதி கொண்டிருக்கும் தாயார் கோமளவல்லித் தாயார் என்ற திருப்பெயருடன் அருள்புரிகிறார். ‘திரு’ வை (லட்சுமியை) தன் இடபாகத்தில், பெருமாள் கொண்டுள்ளதால் திருஇடஎந்தை என்று பெயர் பெற்று, அதுவே மருவி இத்தலத்தின் பெயர் திருவிடவெந்தை என்றானது என்கிறார்கள்.
கிழக்குக் கடற்கரை சாலையில் சென்னையில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது திருவிடந்தை. 108 வைணவ திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம் திருமணப் பரிகார திருத்தலமாகத் திகழ்கிறது. திருமங்கையாழ்வாரால் பாடப் பெற்றது. அசுர வம்சத்தில் உதித்த பலி மன்னன் மிகுந்த நீதிமானாக அரசுபுரிந்து வந்தான். இவன், மாலி, மால்யவன், சுமாலி ஆகிய மூன்று அசுரர்களுக்காக தேவர்களுடன் போரிட்டு வென்றான். இதனால் ஏற்பட்ட தோஷம் நீங்க, இத்தலத்துக்கு வந்து வராக தீர்த்தக்கரையில் தவமிருந்து, ஆதிவராக மூர்த்தியின் தரிசனமும் திருவருளும் கிடைக்கப் பெற்றதாக தலபுராணம் சொல்கிறது. இத்தலத்துக்கு வந்து தவமியற்றிய காலவ மகரிஷியின் பிரார்த்தனையை ஏற்று, பிரம்மச்சாரியாக வந்து அவருடைய 360 புதல்வியரையும் தினம் ஒருத்தியை மணம் புரிந்து அருளினாராம் பெருமாள். கடைசி நாளன்று அவர்கள் அனைவரையும் ஒரே பெண்ணாக்கி தன் இடப்பக்கம் தொடையில் அமர்த்தி, தம் தேவி மூலமாக இவ்வுலகுக்கு எம்பெருமான் சரம ஸ்லோகத்தை அருளியதாக விவரிக்கிறது தலபுராணம்.
இங்குள்ள தீர்த்தங்களும் விசேஷமானவை. சித்திரை மாதத்தில் கல்யாண தீர்த்தத்தில் நீராடி, பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும். மார்கழியில் ரங்க நாதர் தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் நினைத்தது நடக்கும். மாசி மாதம் வராக தீர்த்தத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிட்டும். இது, ஆதிவராகப் பெருமாள், பலி மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்கு. இங்கு ஆதிசேஷன் தம்பதி சமேதராக ஆதிவராகரின் திருவடியை தாங்கி சேவை செய்கிறார். ஆகவே, இப்பெருமாளை தரிசித்து வழிபடுபவர்களுக்கு ராகு, கேது தோஷங்கள் நீங்கி, கல்யாண வரம் கைகூடும். உற்சவர் நித்ய கல்யாணப் பெருமாள், கோமளவல்லித் தாயார் இருவருக்கும் இயற்கையிலே தாடையில் திருஷ்டிப் பொட்டு இருப்பதால், இங்கு வந்து மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீவராகவதாரம் தொடரும் ....
சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*
No comments:
Post a Comment