Wednesday, April 29, 2020

ஸ்ரீராமநாமாவின்மகிமை

#ஸ்ரீராமநாமாவின்மகிமை

ராம நாமா எழுதும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும்..

எனக்கும் பள்ளிப் பருவத்திலேயே என் பெற்றோரால் இந்தப் பழக்கம் ஏற்பட்டது..

என் அப்பா தீவிர பரமாச்சார்யாள் பக்தர்..பெரியவா எந்த ஊரில் இருந்தாலும் சென்று பார்த்துவிடுவார்..அடிக்கடி காஞ்சி மடமும் சென்று வருவார்..

பெரியவாளை அருகில் நின்று தரிசனம் செய்யும் பாக்கியம் என் அப்பாவால் எனக்கும் கிடைத்திருக்கிறது..

அதைப் பற்றி வேறொரு பதிவில் போடுகிறேன்... 

ஒருமுறை என் அப்பா ஸ்ரீமடத்திற்குச் சென்றிருந்த போது ராம நாமா  நோட்டுக் கொடுத்திருக்கிறார்கள்..

அப்பா அகத்திற்கு வந்ததும் எங்களிடம் கொடுத்து எழுதச் சொன்னார்..

ஒரு லட்சம் நாமா எழுதியதும் கொண்டு தரச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் சொன்னார்..

நானும் காலேஜ் முடித்து விட்டு டைப்ரைட்டிங் சென்று கொண்டிருந்தேன்.. 

ஒரு நாளைக்கு ஒரு பக்கம் என்று எழுத ஆரம்பித்தேன்..ஒரு நோட்டில் இருபத்தைந்தாயிரம் நாமாக்கள் எழுதலாம்...

இப்படியாக எழுதிக் கொண்டிருந்தேன்..கல்யாணம் நிச்சயமானது..கரெக்டாக அந்த சமயத்தில் ஒரு லட்சம் நாமாக்கள்..அதாவது நாலு நோட்டு எழுதி முடித்து விட்டேன்..

கல்யாணப் பத்திரிக்கை ரெடியானதும் முதலில் குலதெய்வங்கள் பெயரை பத்திரிக்கையில் எழுதி விட்டு அடுத்து காஞ்சி மடத்துக்கு எழுதி விடுவது இன்றளவும் எங்கள் வழக்கம்..அது போல அப்பாவும் எழுதி வைத்தார்..

பிறகு நேரில் சென்று பத்திரிக்கையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு..ராம நாமா நோட்டையும் கொடுத்து விட்டு வந்தோம்..நல்ல தரிசனம்..ஆசீர்வாதம் கிடைத்தது..

கல்யாண நாளும் நெருங்கியது..
முதல் நாள் காலை மண்டபத்துக்கு வந்தாச்சு..

அப்போதெல்லாம் காண்ட்ராக்ட் கிடையாது..சாமான் வாங்கிப் போட்டு செய்வது தான்..எல்லோரும் ஒருத்தருக்கொருத்தர் உதவி செய்வார்கள்..மடி சமயல் வேறு தனியே நடக்கும்..அதனால் ஆத்துக்குப்  போவோரும் வருவோருமாக இருக்கும்..

காலை விரதம் முடிந்தது..மாலை மாப்பிள்ளை அழைப்பு..நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது..

அப்போது என் பெரியப்பா பையன் வந்து உனக்கு ஒரு சர்ப்ரைஸ் கிப்ட் கிடச்சிருக்கு ஜெயந்தி என்றார்..

எனக்கு ஒன்றும் புரியவில்லை..என்ன என்றேன்..என் கையில் சிறிய பீங்கானில் ஆன ஆஞ்சநேயர் பொம்மையைக் கொடுத்தார்..மண்டி போட்டு குனிந்து வணங்குவது போல் இருப்பார்..

ஏது இது என்றேன்..
ராம நாமா நீ ஒரு லட்சம் எழுதினியே..அதுக்கு ஸ்ரீ மடத்துல இருந்து இத உனக்கு அன்பளிப்பாக் கொடுத்திருக்கா..இன்று காலை post ல் வந்தது என்றார்..

எனக்குப் பேசத் தோன்றவில்லை..சிலிர்த்து விட்டது..

அதுவும் கல்யாண சமயத்தில் என் கையில் பெரியவாளிடமிருந்து கிடைத்த ஸ்ரீராம தூதரின் உருவம்...

அந்த தருணத்தை விவரிக்க இயலாது...இதோ எழுதும் போதே சிலிர்க்கிறது..

மறுநாள் முஹூர்த்த நேரத்தில்  ஒன்பது கஜ அரக்கு வண்ண நூல் புடவை,ஒன்பது அஞ்சு வேஷ்டி,பவுன் மற்றும் வெள்ளிக் காசுகள் மற்றும் பிராசாதங்களுடன் காஞ்சி மடத்திலிருந்து ஒருவர் வந்து ஆசீர்வாதங்கள் செய்து அளித்துச் சென்றார்..🙏🙏

ராம நாமத்தின் மகிமையையும் பெரியவாளின் அனுக்ரஹத்தையும்  ஒரு சேர உணர்ந்த அந்த நாட்கள்.....🙏🙏

இன்றும் எங்கள் கொலுவில் ஸ்ரீராமதூதர் அலங்கரித்து வருகிறார்..

ஜெய் ஸ்ரீராம்🙏🙏

ராம ராம ராம ராம🙏🙏

ஜய ஜய சங்கர.. .ஹர ஹர சங்கர🙏🙏

No comments:

Post a Comment