Wednesday, April 29, 2020

ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் - நெசனூர்

இன்றைய கோபுர தரிசனம் கோடி புண்ணியம் பாவ விமோசனம் மிகவும் பழமையான ஆலயம் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமையப்பெற்றது
ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் - நெசனூர் அழைத்துச் செல்வதில் பெருமிதம் கொள்கிறேன்..

ஓம் சிவாய நமஹ...

இறையருளைப் பெற இப்பிறவி தப்பின் இனி எப்பிறவி வாய்க்குமோ என்பர் சான்றோர்..

இத்தல ஆதிபுரீஸ்வரர் பத்மதளநாயகி சமேதராய் அருள் சுரந்தருளும் காட்சி ஒன்றே போதும் இப்பிறவியிலேயே நாம் பிறவாத பேரின்ப நிலையை அடைய...

ஆதிபுரி,எயினனூர்,சந்தானபுரி,
எய்தனூர்,ஆதிபுரம் என்றெல்லாம் இருந்த இவ்வூர் தற்சமயம் மருவி நெசனூர் என்றழைக்கப்படுகிறது.

சிவபெருமான் ஆதிபுரீஸ்வரராகவும், உமையாள் பத்மதளநாயகியாகவும் காட்சி அளிக்கிறார். மேலும் ஸ்ரீ வைகுண்டப்பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணப்பெருமாளாக எழுந்தருளியுள்ளார்.

மகாவிஷ்ணு பிரயோகச்சக்கரம் கொண்டுள்ளார்..இது மற்ற ஆலய சக்கர அமைப்பிலிருந்து மாறுபட்டுள்ளது.

கருவறை விமானத்தில் சப்த ரிஷிகளும், (காசியின் சிறப்பு ) ப்ரம்மன் தியான நிலையில் உள்ளதும் அபூர்வ காட்சியாகும்..

துர்க்கை சிங்கத்தின் மீது சாய்ந்தபடி,மகிஷத்தின் மேல் நின்ற கோலத்தில் வயது முதிர்ந்த திரிபங்கமாக (3 வளைவுகள் உள்ளதாக) நான்கு கரங்களுடன் உள்ளது வேறு எங்கும் காணப்படாதது.

 நவதீர்த்தங்கள் (ப்ரம்ம தீர்த்தம்,வாலிதீர்த்தம்,பத்மதீர்த்தம்,ஞானதீர்த்தம்,சோமதீர்த்தம்,சூரிய தீர்த்தம்,வாயு தீர்த்தம்,சக்கிரி தீர்த்தம்,இருடி தீர்த்தம) இருந்த இத்திருத்தலத்தில் தற்போது ஒரு தீர்த்தக்கிணறு மட்டுமே (ப்ரம்ம) இளநீர் போன்ற நீரினை சுரந்து கொண்டுள்ளது.  இப்படி ஒரு தீர்த்த சிறப்பு இராமேஸ்வரத்திலும் இருப்பதாக ஊர் மக்கள் கூறுகிறார்கள். இந்த ப்ரம்ம தீர்த்தத்தில் திருமஞ்சனம் கொண்டு அரண்முடிக்கு அபிஷேகம் செய்து நைவேத்தியங்களை விதிப்படி செய்வித்து வணங்கினால் 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் என்று வரலாறு உரைக்கிறது.

மேலும், ப்ரம்ம லிங்கம்,மாலவன் லிங்கம்,கருட லிங்கம்,பாண்டவ லிங்கம் என 4 வகை லிங்கவழிபாடு இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.

63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதிநாதருக்கு இச்சிவனார் முக்தி அளித்தாக இத்தல வரலாறு கூறுகிறது..

ப்ரம்ம தேவன் சாப விமோசனம் பெற்ற ஸ்தலமாகவும்,சூரிய பகவான் தோஷம்நீங்கப்பட்ட ஸ்தலமாகவும், கல்வியா? செல்வமா? என்ற வாதம் நடைபெற்ற ஸ்தலமாகவும், திருஞானசம்பந்தர் ஞானமண்டபம் இயற்றி சில காலம் தங்கியிருந்து ஞானதீர்த்தம் அமைத்த ஸ்தலமாகவும் 3-ம் குலோத்துங்கனின் கல்வெட்டுகள் புகழ்கின்றன..

பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறியுள்ள எயினனூரின் பெருமையைப் பாருங்கள்..

வண்டரை பூஞ்சோலை வயல் 
மருத்தண் பனை சூழ்ந்து
எத்திசையும் ஏறிய சீர்
எயின்மூதூர் எயினனூர்

வழித்தடம் :கடலூர் மாவட்டத்தில் நெல்லிக்குப்பத்திலிருந்து 4 கி.மீ. கடலூரிலிருந்து 7 கி.மீ.

வரலாற்று ஐதீக சிறப்புமிக்க தல வரலாறு கொண்டவை...


#பங்குனிஉத்திரம் #காவடிபூஜை கொடைவிழா

இத்தலத்தில் எழுந்தருளியுள்ள #ஸ்ரீபாலசுப்ரமணிய முருகன்சாமி க்கு பங்குனி உத்திரம் முன்னிட்டு காவடி பூஜை திருவிழா கடந்த 50 ஆண்டுகள் மேலாக நடைபெற்று வருகிறது...

 காலை 7:30 மணியளவில் கெடிலம் ஆற்றில் காவடி புறப்பாடு , சுந்தரர்பாடி வழியாக எய்தனூர் அனைத்து வீதியுலா உடன் கோயிலை வந்தடையும்...

இந்த சிவத்திரு தலத்தில் ஈஸ்வர லிங்கம் ஆனது #இலங்கை_இராவணன் ஆல் பிரதிஷ்டை செய்யப்பட்டது...

#இராமாயணக்காலத்திற்கு முன் மிகப்பழமைவாய்ந்த கோவில் ஆகும்...

#சோழர்_மன்னர்களால் கோவில் கட்டப்பட்டது...

63 நாயன்மார்களில் ஒருவரான #ஏனாதிநாத_நாயன்மார் அவர்கள் பிறந்து, வாழ்ந்து முக்தி பெற்ற தலமாகும்.

இத்தலம் காசிக்கு நிகரான சிவதலமாகும்... ஏனெனில்
#ஆதிபுரீசுவரர் ஆன சிவனும், #இலஷ்மி_நாராயணன் ஆன விஷ்ணுவும்,#பிரம்மலிங்கமும் ஒருங்கே உள்ள கோவில் தலமாகும்...

#சப்தரிஷிகள் கொண்ட விமானம் உள்ளவை ஆகும்..

இந்த சிவ தலத்தி்னை சுற்றி #நவத்தீர்த்த_கிணறுகள் கொண்டவை ஆகும்...

மேலும் பல வரலாற்று ஐதீக தகவல்கள் உண்டு...

இங்குள்ள விஷ்னுவும், துர்கை அம்மனும் சாந்த நிலையில் அல்லாமல் பிரயோக சக்கரம் ஏந்தியிருப்பார்கள்...

பிரயோக சக்கரம் எய்ததனால் #எயினனூர் என்றும்,  #எய்தனூர் என்றும் பெயர் காரணம் ஆகும்.

ஆதிசிவன் எருந்தருளியுள்ளதால் ஆதிபுரம் என்றும் பூர்வீக வரலாறு பெயர்கள் உண்டு.தற்கால பேச்சு வழக்கில் நெசனூர் என்று மருவியுள்ளது.

பக்தர்கள் அனைவரும் பங்குனி உத்திரம் காவடி பூஜை யில் கலந்து கொண்டு இறைவன் அருள் பெறுங்கள்...

நன்றி 
எய்தனூர் கிராமவாசிகள்,
நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம்

No comments:

Post a Comment