Friday, April 24, 2020

“மூகபஞ்சசதி

பெரியவா சரணம். 

1957-ல் ஸ்ரீமஹாபெரியவாளுக்குச் செய்வித்த கனகாபிஷேகம்… 

சீரிலங்கைத் திருநாட்டில் 1957-ம் வருடம் வெளிவந்த ஆத்மஜோதி எனும் இதழிலே வெளிவந்த செய்தி இது. 

இங்கே அந்த இதழின் பக்கங்களைப் பகிர்வதோடு அதனில் அச்சிட்டிருப்பதையே இந்தப் பகிர்விலே பகிர்கின்றேன்.

சங்கரம் போற்றி.

****************

பொன்னேடுகளில் பொறிக்கப்படவேண்டிய ஆவணித் திங்கள் 21-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று (06.09.1957) காஞ்சிபுரத்தில் மேற்படி வைபவம் வெகு விமரிசையாக நடந்தேறியது.  ஸ்வர்ணாபிஷேகக் காட்சியைக் கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல இடங்களிலுமிருந்து வந்தனர். 

ரமணீய அலங்காரத்துடன் விசேஷமாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்திற்கு ஸ்ரீபரமாசார்யாள் அவர்கள் பிற்பகல் 1 மணி சுமாருக்கு எழுந்தருளினார்கள்.  அன்று காலை செய்விக்கப்பட்ட ருத ஏகாதசினியின் 11 கடங்களில் உள்ள தீர்த்தத்தை, இளைய பட்டம் ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள், ஸ்ரீபரமாசார்யார் அவர்களுக்கு அபிஷேகம் செய்தார்கள்.  பின்பு இரு மகனீயர்களுக்கும் ஸ்வர்ணாபிஷேகக் கமிட்டியின் சார்பில் “ராவ் ஸாஹிப்” ஸ்ரீ ஆர். மகாலிங்கம் அய்யர் பொன்னாடைகளைச் சார்த்தினார்.  வெட்டி வேரில் வெகு நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருந்தவைகளைச் சிரசிலும், உடம்பிலும் தரித்துக் கொண்டார்கள்.  அனேக பக்தர்கள் மலர் மாலைகளைச் சூட்டினார்கள்.  ஸ்ரீபரமாசார்யாள் அவர்களுக்கு ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள், ஸ்வர்ணகாசுகளைப் புஷ்பத்துடன் சேர்த்து, ருத்ரத்ருசதீ, ஸஹஸ்ர நாம அர்ச்சனைகளைச் செய்தார்கள்.  அர்ச்சனைகள் நடந்த சந்தர்ப்பத்திலும், இன்னும் சிலசமயங்களிலும், நான்கு பக்கங்களிலுமுள்ள ஜனங்கள் நன்றாகத் தரிசிக்கும் வண்ணம், நான்கு பக்கங்களிலும் திரும்புவது தெரியாமல் அடிக்கடி திரும்பிக் காட்சி அளித்தார்கள்.  அர்ச்சனை முடிந்து தீபாராதனை ஆனதும், ஸ்ரீபரமாசார்யால் அவர்கள் சில வார்த்தைகளைப் பேசினார்கள். 

அதன் சாரம்:-  “இந்தக் காஞ்சிபுரம் ஓர் உயர்ந்த க்ஷேத்திரம்.  மத்தியில் ஸ்ரீகாமாக்ஷி அம்மன் இருந்து கொண்டு லோக சேமத்தைச் செய்து வருகிறாள்.  மூகன் என்ற ஊமையனுக்கு அம்பிகை அனுக்ரஹம் புரிந்திருக்கிறாள்.  அனுக்ரஹம் ஏற்பட்டதும், அந்த மூகன் ஓர் பிரபல கவிஞன் ஆகிவிட்டான்.  அவன் இயற்றியுள்ள கவிகளில் சிரேஷ்டமானது “மூகபஞ்சசதி” என்ற கிரந்தம்.  (அதன் முதல் ஸ்லோகத்தை எடுத்து விளக்கும்பொழுது அவர்களும், மகாஜனங்களும் மெய்மறந்த நிலையில் இருந்தார்கள்). 

ஸ்ரீபகவத்பாதாள் ஓர் ஏழை வீட்டில் உணவு யாசித்தார்கள்.  அந்த வீட்டு கிருஹணி அது சமயம் கைவசம் இருந்த நெல்லிக்கனியை மனமுவந்து அளித்தாள்.  அவள் ஏழ்மை நிலையிலும், பக்தியைக் கண்டு வியந்து ஸ்ரீலட்சுமி தேவியைப் பிரார்த்திக்க, ஸ்வர்ண நெல்லிக் கனிகள் வருஷித்தன. அவள் வறுமை நீங்கிற்று. 

ஓர் தனிகர், ஓர் ஏழைக்கு விலையுயர்ந்த வஸ்திரத்தை அன்பளிப்பாகக் கொடுப்பதாக வைத்துக் கொள்வோம்.  அந்த அன்பளிப்பைப் பரம்பரையாக வைத்திருப்பது வழக்கம்.  அதுபோல் என்னுடைய பராத்பர குரு அவர்கள் அணிந்து கொண்டிருந்த ஸாதராவை என்னுடைய பமகுருவும், குருவும் அணிந்து வந்தார்கள்.  அந்த ஸாதராவை நான் இப்போது அணிந்து கொண்டிருக்கிறேன்.  இந்த ஸாதராவை பராத்பர குரு அணிந்திருந்த சமயத்தில், தஞ்சையில் அது சமயம் ஆண்ட ஸரபோஜீ மன்னர், அவர்களுக்குக் கனகாபிஷேகம் செய்வித்தார்.  இதைத் தரித்து கொண்டாலே கனகம் வர்ஷிக்கும்.  (இது சமயம் அவர்கள் சரீரத்திலிருந்து அனீக பொற்காசுகள் உதிர்ந்தன). 

வயதான கிழவர் என்னிடம் வந்து, கனகாபிஷேகம் செய்ய மகாசனங்கள் ஆசைப்படுவதாகவும் தானும் மிக்க ஆவலுடன் இருப்பதாகவும் சொன்னார்.  என்னைப் பிரார்த்தித்த சமயம் அவர் கண் பார்வை சரியில்லை.  இந்தக் காலத்தில் இது அவசியமில்லை என்று கருதி விருப்பமில்லாமலேயே, “உங்களுக்கு கண் தெரியும்போது உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம்” என்று சொன்னேன்.  பிறகு அவர் கண் சிகிச்சை செய்து கொண்டார்.  கண் பார்வை வந்துவிட்டது.  கண் தெரிந்ததும் அவர் என்னிடம் வந்து பிரார்த்தித்தார்.  நான் ஒப்புக் கொள்வதைத் தவிர்க்க முடியாமல் இன்று அவர் பிரார்த்தனை நிறைவேறியது.  எல்லோரும் இன்புற்று வாழ்க!” 

***************

கிடைத்ததோர் பொக்கிஷத்தை அனைவருக்கும் பகிர்வதிலே மஹா ஆனந்தம் கொள்கிறேன். அனேகம் பேர்களும் 1957ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 6-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காஞ்சிபுரத்திலே நம் மஹாபெரியவாளுக்கு நடைபெற்ற கனகாபிஷேகத்திலே இப்பொழுது கலந்து கொண்டு இன்புற்ற மகிழ்வைத் தரும் இந்த பதிவு அவர் அருளாலே அவர் தாள் வணங்கிட கிடைக்கப் பெற்றது. 

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம். 

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை. 

நமஸ்காரங்களுடன் 
சாணு புத்திரன்.

No comments:

Post a Comment