திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் தேதியூர் பிரத்யட்சபரமேச்வரர் சிவன்கோயில்
நாச்சியார் கோயிலில் இருந்து திருவீழிமிழலை செல்லும் சாலையில் பதினைந்து கிமி தொலைவில் உள்ளது எரவாஞ்சேரி எனப்படும் தேதியூர். இறையவன்சேரி என்பது எரவாஞ்சேரி ஆகவும், தேர்தகையூர் என்பது தேதியூர் ஆகவும் மாறியுள்ளது.
வாத்திமா இன மக்கள் வாழும் 18 கிராமத்தில் சிறப்புமிக்க கிராமமாக திகழ்வது “தேதியூர்” கிராமம் ஆகும்.
தேதியூர் என்றாலே “தேதியூர் ஸ்ரீப்ரம்ம ஸ்ரீ சுப்ரமண்ய சாஸ்த்திரிகள்” பெயர்தான் ஞாபகத்திற்கு வரும். அவரை பற்றிய சிறு குறிப்பு பின்னர் பார்க்கலாம். ‘புரம் பஞ்சகம், ஊர் பஞ்சகம், குடிவித்யம் கொண்டான், படி, காடு, தை, துறை, மூலை என முடியும் பதினெட்டு வாத்யம கிராமம்’ என்ற பாடல் உண்டு.
புரம் என முடியும் ஊர்கள் ஐந்து. ஆனதாண்டவபுரம், திப்பிராஜபுரம், கோனேரிராஜபுரம், விஷ்ணுபுரம், சேங்காலிபுரம், ஊர் என முடியும் ஊர் ஐந்து, தேதியூர், கூந்தலூர், மொழையூர், சித்தன்வாழூர், பாலூர், குடி என முடியும் ஊர் இரண்டு, செம்மங்குடி, தூத்துக்குடி கொண்டான் என்பது முடிகொண்டான், படி என்பது மாப்படி, காடு என்பது அரசவனங்காடு, தை என்பது மாந்தை, துறை என்பது மரத்துறை. மூலை என்பது தட்டாத்திமூலை. இப்படி 18 வாத்யம கிராமங்கள். ஆனால் தற்சமயம் வாத்யம கிராமங்களில் வடமாள், பிரஹசரணம் தவிர அனைத்து இன மக்களும் வசித்து வருகிறார்கள்
தேதியூருக்குத் தெற்கே திருமலைராஜன் ஆறும் வடக்கே அரசலாறும் உள்ளன. ராவணன் – ஜடாயு இருவருக்கும் நடந்த யுத்தத்தில் ஜடாயு படுகாயம் அடைகிறார். ராவணன் தேரை ஜடாயு தகைத்ததால் (தடுத்தல்) தேர்தகையூர் என்று பெயர் பெற்று பிறகு தேதியூர் ஆனது.
யுத்தத்தில் களைத்த சமயம் ராவணனுக்கு தாகம் எடுக்க அங்குள்ள குளத்தில் நீர் அருந்த சென்ற சமயம் ஜடாயுவால் தாக்கப்பட்ட ராவணனுடைய ரதம் குளத்தில் இறங்கி விட ராவணன் எவ்வளவு முயன்றும் அதை வெளியில் கொண்டு வர முடியாமல் இங்கேயே விட்டு சென்று விட்டதாகவும் ஆகாயமார்க்கமாக இலங்கை சென்றதாகவும் தெரிய வருகிறது. இன்றும் ராவணன் ரதம் குளத்தில் இருப்பதாக ஐதீகம். அதனால் இந்த குளத்திற்கு “ராவண தீர்த்தம்” என்ற பெயர் பெற்றது.
ரதரோதனபுரம் என்பது தேதியூரின் புராணகாலப் பெயர். ஸ்ரீ பிரும்மாண்ட புராணத்தில் இத்திருத்தலம் பற்றிய பெருமைகள் காணப்படுகின்றன.
ஸ்ரீவாஞ்சியத்துக்கு வடக்கேயும், கோனேரிராஜபுரத்துக்குத் தெற்கிலும் உள்ளது தேதியூர். இங்கு மூன்று சிவன் கோவில்களும், இரண்டு பெருமாள் கோவில்களும் இருக்கின்றன. இவற்றில் பெரிய கோவில், ஸ்ரீ பிரத்யட்ச பரமேச்வரரும், ஸ்ரீ சுந்தரகனகாம்பிகையும் உறையும் ஆலயமாகும். இது ஊருக்கு தென்கிழக்கில் உள்ளது.
நாற்பது வருடங்களின் முன் ஊரை சுற்றி நான்குபுறமும் வயல்வெளியும், ஆற்றங்கரையும், கோயில்களும், குளங்களும் கொண்டு அழகுற அமைந்த இடம். ஆனால் இன்று வேலை நிமித்தம் காரணமாக இங்கு வசித்து வந்தவர்களில் பலர் வெளியூர்களிலும், வெளிநாட்டிற்கும் சென்று விட்டதால் கிராமத்தில் இருந்த வீடுகள் மார்க்கத்தின் கைகளுக்கு சென்றுவிட பிரதான சாலைகள் மற்றும் கோயில் சுற்றி உள்ள இடங்கள் சென்று பார்ப்பதற்கே பயப்படும் அளவிற்கு உள்ளது.
ஆனால் இங்கு உள்ள சிலராலும், வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்தவர்களாலும் சில நற்பணி மன்றம் மூலமாகவும் அனைத்து கோயில்களும் மிகவும் நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. எனினும் பக்தர்கள் எனும் நாம் அடிக்கடி சென்று வந்தால் தான் அவ்வூரில் வசிக்கும் இந்துக்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியத்தையும் கொடுக்கும்.
சிவன் கோயில்கள் மூன்று
1.சுந்தர கனகாம்பிகா சமேத பிரத்யக்ஷ பரமேஸ்வரர் கோயில்,
2.மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயில்,
3.திரிலோக சுந்தரி சமேத சுந்தரேஸ்வரர் கோயில் ஆகும்.
இவை தவிர வரதராஜ பெருமாள் கோயில், கருகமாணிக்கம் பெருமாள் கோயில், வரசித்தி விநாயகர் கோயில் ஆகியவையும் உள்ளன.
முதலில் பிரத்யக்ஷ பரமேஸ்வரர் கோயில் பற்றி பார்ப்போம்.
ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் யுத்தம் நடந்த சமயம் பரமேஸ்வரன் பிரத்யக்க்ஷமாக காட்சி கொடுத்த ஸ்தலம் அதனால் “பிரத்யக்க்ஷ பரமேஸ்வரர்” என்று பெயர் காரணமாக அமைந்தது. இங்குள்ள பைரவர் மிகவும் சக்திவாய்ந்ததாகும். பல குடும்பங்களுக்கு இந்த கோயில் குல தெய்வ கோயிலாக அமைந்துள்ளது. இங்குள்ள பைரவர் உள் சுற்றில் அமைந்துள்ளது சிறப்பு என உவேசா கூறுகிறார். அதாவது இறைவன் இறைவியை சுற்றும்போது பைரவரையும் சேர்த்து சுற்றும்படி உள்ளது.
மேற்கு நோக்கிய திருக்கோயில். இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கும் திருத்தலம் ஆகும். இறைவன் இறைவி இருவரையும் இணைக்கும் முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்திக்கு தனி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த தேதியூர் தலத்தின் தல விருட்சமாக உள்ளது வெற்றிலைக்கொடி அதனை உ.வே சாமிநாதய்யர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு பைரவர் சிறப்பு மிக்க தெய்வமாக உள்ளார். அவரின் அருகில் சிறிய சனி பகவான் உள்ளது சிறப்பு. தட்சணாமூர்த்தியின் எதிரில் ஒரு நந்தி உள்ளது. சண்டேசர் பெரிய அளவில் உள்ளார். கோயில் வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது. இருக்கும் மூன்று சிவன் கோயில்களையும் ஒரே குருக்கள் பூஜை செய்வதாக அறிகிறேன், அதனால் செல்லும் முன்னர் அவருக்கு ஓர் அழைப்பு தந்து செல்வீர்களேயானால் தடையின்றி தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும்.
திரு.சந்திரசேகர குருக்கள்- 94446 71906
#வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்.
No comments:
Post a Comment