Friday, April 24, 2020

பகவான் என்றும் தம் அடியார்களை கைவிட மாட்டார்.

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"ஏதோ...... ஓர்உருக்கொண்டு...."


ஒரு திவ்யதேச திருத்தலம்.......

"அம்மா...... நாளைக்கு பணம் கட்டனும்.... கடைசித் தேதி.... 400 ரூபா வேணும்.... அடுத்த வாரம் .... ஸ்கூல் கலை  நிகழ்ச்சிக்கும்மா....." என்றாள் கமலவல்லி....

"சரி .... கண்ணு.... பார்க்கிறேன்.... " என்றாள் அவளின் தாய் அமிர்தம்....

(காவிரிக்கரையில் பகவான் அருள்பாலிக்கும்.... திவ்யதேசதக் கோயில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.... ஒரு சிறிய குடிலில் வசிக்கிறார்கள்.... குடிலின் முன்புறம் உள்ள சிறிய இடத்தில் ஓர் சிறிய நந்தவனம்)

"அவர் இருந்திருந்தா..... இந்நேரம் எப்படியோ வல்லிக்கு பணம் கொடுத்திருப்பார்..... என்று மனதில் நினைத்த வண்ணம்.... சரி.... சரி..... தயிர் சோறும்.... மாவடுவும் டிபன் பாக்ஸ் - ல போட்டு வைச்சிருக்கேன்.... எடுத்துட்டு ஸ்கூலுக்கு கிளம்புநேரமாச்சு.... நாளைக்குப் பார்க்கிறேன்.... " என்றாள் அமிர்தம்....

தன் புத்தகக் கூடையில் டிபன் பாக்ஸை எடுத்து வைத்துக் கொண்டு.... அவ்வூரில் உள்ள நடுநிலைப் பள்ளி நோக்கி.... விரைந்தாள் வல்லி.....

திருக்கோயில் வளாகம்.....

கோயிலில் பணிபுரிந்து வந்த அமிர்தம்..... தன்னுடன் கைங்கர்யம் செய்யும் சக ஊழியை செண்பகத்தைப் பார்த்தவுடன் சற்றே ஆறுதலாக......

"ஏக்கா..... ஒரு 400 ரூபா இருக்குமா....... இந்த மாச சம்பளம் வாங்கித் தர்றேன்..... வல்லிக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும்...." என்றாள் அமிர்தம் கையில் உள்ள துடைப்பத்தால்..... கோயில் வளாகத்தை பெருக்கிக் கொண்டே.....

"நேத்தைக்குத் தான்..... கன்னுக்குட்டி (பசு மாட்டுக் கன்று) வாங்கணும்னு கையில் இருந்த பணம் முழுசும் அவர் வாங்கிட்டாரு.... இப்ப கையிலே ஒண்ணும் இல்லே அமிர்தம்......" என்றாள் செண்பகம்....

"சரிக்கா.... என்ன பண்றது.... பகவான் விட்ட வழி.... எப்படியோ இந்தப் புள்ளையர.... கரை சேர்க்கணும்...." என்றாள் அமிர்தம்....

நடுநிலைப் பள்ளியில்...... மாலை நேரம்......

ஆறாம் வகுப்பறை.... மாலை நேரத்தின் சூரிய ஒளிக்கீற்று... கூரையின் ஒரு துவாரம் வழியே வந்துவகுப்பில் அமர்ந்திருந்த..... கமலவல்லியின் மீது விழவே.... சற்று நகர்ந்து..... இன்றைய நாளின் கடைசி வகுப்பான அறிவியல் பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தாள்.....

வகுப்புக்கள் நிறைவடையும் தருவாயில்......" வல்லி.... நீ தான் கலைநிகழ்ச்சிக்கு முன் வரிசையில்..... முதலாவதாக நாட்டியம் ஆடப் போகிறாய்..... உடைக்களுக்கான பணம்.... நாளை கொண்டு வந்து விடு...." என்றார் அறிவியல் ஆசிரியை....

"சரிங்க மேடம்....." என்றாள் கவலை தோய்ந்த முகத்துடன் வல்லி.....

வகுப்புக்கள் முடிந்து..... தன் குடிலைநோக்கி நடந்தாள் வல்லி.....

சிறிய நந்தவனம்.... திருத்துழாய்ச் செடிகள்.... அரளி..... முல்லை.... மல்லிகை..... செண்பகச் செடிகளுக்கு.... தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.... வல்லியின்தாய்.... தன் கோயில் கைங்கர்யங்கள் முடித்துவிட்டு.... தன் குடிலுக்கு திரும்பிய அமிர்தம்.....

"அம்மா....... " என்று அழைத்த வண்ணம் ஓடி வந்தாள் வல்லி.... குடிலுக்கு அருகே வந்ததும்....வேகத்தை கூட்டிய வல்லி......

"வா.... வல்லி..... கொஞ்சம் சுண்டல் வேக வைத்து  வச்சிருக்கேன்..... சாப்பிட்டுட்டு..... இந்த திருத்துழாய் மாலைகளை எடுத்துட்டுப்போ.. கண்ணு...... கோயில் நடை திறக்கும் நேரமாச்சு..... நான் போய்.... உம் மாமா கிட்டே கேட்டுப் பார்க்க்றேன்..... நாளைக்கு உனக்கு பணம் கட்டனுமே.... " என்றாள் அமிர்தம்....

பின்னர்....கை.... கால்களை அலம்பிக் கொண்டு.... சிறிது குங்கும் நெற்றியில் இட்டுக் கொண்டு.... சுண்டலை சாப்பிட்ட பின்.... திருத்துழாய் மாலைகளை எடுத்துக் கொண்டு.... கோயிலின் வாயில் அருகே காத்திருந்தாள் வல்லி......

நேரம் ஆகிக்கொண்டிருந்தது....... பக்தர்கள் யாரும் வரவில்லை..... கோயிலின் உள்ளே அர்ச்சகர் மற்றும் ஓரிருவர் மட்டுமே இருந்தனர்.....வாடிய மலராய் அவள் திருமுகம்.....பக்தர்கள் யாராவது வருவார்களாக.... என்று பார்த்த வண்ணம் அவள் கண்கள்.....

இத்தருணத்தில்.....

புழுதி பறக்க.... வேகமாக வந்தது... ஓர் விலையுயர்ந்த கார்..... கோயிலின் வாயில் அருகே வந்து நின்றது.....

நெற்றியில் திருமண்.... அவர் தோற்றம் ஓர் செல்வந்தர் என்று காட்டியது..... தம் குடும்பத்தார்கள் உடன் காரை விட்டு இறங்கினார்.....

" வாங்க.... வாங்க.... கோயில் நடை சாத்துற நேரமாச்சு....." என்று தம் குடும்பத்தாரை வேகப்படுத்தி அழைத்த வண்ணம்....கோயிலின் வாசல் அருகே வந்த அவர்.....

"உள்ளே... எத்தனை ஸ்வாமித் திருமேனிகள் இருக்கு....?" என்றாள் வல்லியை நோக்கி....

"ஐந்து ஐயா....." என்றாள் வள்ளி

"அப்படியென்றால்.... அந்த ஐந்து மாலைகளையும் அப்படியே கொடு..." என்று வாங்கிப் பெற்றுக்கொண்டு 500 ரூபாய் தாள் ஒன்றை கொடுத்தார் வல்லியிடம்.....

"ஸ்வாமி... என்னிடம் 100 ரூபாய் போக மீதி சில்லறை இல்லீங்க...." என்றாள்....

"சரி..... ஸ்வாமி தரிசனம் செய்து விட்டு வந்து .... அப்புறம் வாங்கிக்கேறன்....." என்று சொல்லிவிட்டு வேகமாக கோயிலுக்குள் விரைந்தார்.... தம் குடும்பத்தினருடன்....

வல்லிசில்லறை வாங்குவதற்காக... ஊரில் உள்ள ஒரே மளிகைக்கடை நோக்கி விரைந்தாள்.....

"ஐயா.... ஒரு 500 ரூபாய்க்கு சில்லறை வேண்டும்... மாலைகளை வாங்கிட்டாங்க.... என்னிடம் சில்லறை இல்லை'.... " என்றாள்...

"அட..... புள்ள... இப்பத்தான் டவுனுக்கு மளிகைச் சாமான்கள் வாங்க.... இருந்த எல்லா சில்லறையும் கொடுத்துட்டேனே.... " என்றார்....

பின்னர் வருத்தமாக கோயில் வளாகம் திரும்பினாள்.... வல்லி

பகவானின் திவ்ய தரிசனம் கிடைக்கப்பெற்ற மகிழ்ச்சியில்... செல்வந்தர் தம் குடும்பத்தினருடன் திரும்பி வந்தார்கள் வெளியே செல்ல.....

"ஐயா..... சில்லறை எங்கும் கிடைக்கவில்லை.... நீங்களே கொடுங்கள்" என்று 500 ரூபாய் தாளை திருப்பி நீட்டினாள் வல்லி.....

ஏழைச்சிறுமி வல்லியின் தேஜஸ்சுடன் கூடிய திருமுகத்தைப் பார்த்தவுடன்...

"எங்கம்மா.... படிக்கிற.... எந்த வகுப்பு...? தினமும் இக் கைங்கர்யம் செய்கிறாயா...? என்று விசாரித்தார்....

வல்லி அவர் கேட்ட கேள்விகளுக்கான பதிலளித்தாள்.....

பிறகு.... என்ன நினைத்தாரோ......"சரிம்மா..... என்னிடம் சில்லறை இல்லை..... உன் படிப்பு செலவுக்கு நீயே வைத்துக் கொள்" என்று சொல்லிவிட்டு வேகமாக விரைந்தார்.... தன் காரைநோக்கி....

அந்த 500 ரூபாய் நோட்டை.... உள்ளங்கையில் வைத்தவண்ணம்.... கண்ணீர் மல்க.... பகவானை நோக்கி கைகூப்பித் தொழுதாள் வல்லி.....

"மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு, அன்று தொட்டு மையாந்து....

இவள் நுழையும் சிந்தையள் அன்னைமீர்.... தொழும் அத்திசை உற்று நோக்கியே.... "

( திருவாய்மொழி - 6.5.5 -பாசுரவரிகள்)

இச்சிறுகதை பகவான் என்றும் தம் அடியார்களை கைவிட மாட்டார்.... எந்த நிலையிலும்.... ஏதேனும் ஓர் உருவில் வந்து அருள்பாலித்து இன்னல்களை தீர்ப்பார்... என்பது திண்ணம்....

"உய்ய ஒரே வழி உடையவர் திருவடி"

"எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

அடியேன்

வகுளாபரணராமாநுஜதாசன்🙏🙏🙏

No comments:

Post a Comment