Sunday, April 5, 2020

ஊர் எனப்படுவது உறையூர் !

ஊர் எனப்படுவது உறையூர் !

கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு. 

இந்த ஊர் தான் சோழர்களின் தலைநகரமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். வேறு என்ன பெருமை என்று தெரியாது ஆனால் இந்த ஊருக்கு ஒரு மகிமை இருக்கு. 

இங்கே அவதரித்தவர்கள் எல்லாம் நம்பெருமாளிடம் மோகித்துள்ளார்கள்.  திருப்பாணாழ்வார் இங்கே அவதரித்தவர். ’அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே' என்று அரங்கனிடம் மோகித்து அவரிடம் சென்றார். 
பிள்ளை உறங்காவில்லி தாஸர், உடையவர் அவரை அரங்கன் முன் நிறுத்த அதன் பிறகு அவருடைய கதை உங்களுக்கு தெரியும். இவரும் உறையூரில் பிறந்தவர். உறையூர் நாச்சியாரும் நம்பெருமாளிடம் மோகித்தவர் தான். 

ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் ஆண்டாளின் கோயில் என்பது போல உறையூர் என்றால் அது நாச்சியார் கோயில். இந்தக்  கோயில் அடியேனுக்கு மிகுந்த அபிமான ஸ்தலம். ஸ்ரீரங்கம் பெருமாளைச் சேவிக்கும் முன் முதலில் நாச்சியாரை சேவித்திவிட்டு தான் ஸ்ரீரங்கம் செல்வேன். ஸ்ரீவைஷ்ணவர்கள் எதையும் வேண்டிக்கொள்ளக் கூடாது என்றாலும், கமலவல்லி தாயாரிடம் ஒன்றை மட்டும் எப்போதும் வேண்டிக்கொள்வேன் அது “நம்பெருமாள் சேவை கிடைக்க வேண்டும்”. உறையூர் நாச்சியார் சிபாரிசில் எப்போதும் நம்பெருமாள் ‘நம்ம பையன்’ என்று நன்றாகச் சேவை சாதிப்பார். 

உறையூர் ஸ்தல வரலாறுபற்றி விரிவாக எதிலும் இல்லை.  அதை விரிவாக ஸ்ரீ. உ.வே மதுரை பேராசிரியர் அரங்கராஜன் ஸ்வாமிகளிடம் கேட்டிருக்கிறேன் ( பிறகு ஒரு சமயம் அதை எழுத்தில் கொண்டு வருகிறேன்). 

வருடத்தில் ஒரு நாள் நம்பெருமாள் உறையூர் எழுந்தருளுவார். நாச்சியார் பங்குனி ஆயில்யம். நம்பெருமாள் கமலவல்லி தாயாருடன் சேர்த்தி கண்டருள்வார்

இந்த வருடம் ஊரடங்கு அமலில் இருப்பதால்(கலாப காலத்துக்குப் பிறகு ) சேர்த்தி நடைபெறவில்லை ( பெருமாளின் மாலை மரியாதை தாயாருக்குச் செல்கிறது ). இது நமக்கு வருத்தமான விஷயம் தான். பெருமாளின் நியமனம் அப்படி இருக்க நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அடுத்த வருடம் நல்லபடியாக எல்லோரும் ஒற்றுமையுடன் நம்பெருமாள் அதை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்று தாயார், நம்பெருமாளை வேண்டிக்கொள்வதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை 

இன்றைய நன்னாளில் உறையூர் கமலவல்லி தாயார் வைபவம் இங்கே சுருக்கமாக :

நிசுளாபுரியில் தர்ம வர்மாவின் வம்சத்தில் நந்த சோழன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்குக் குழந்தை இல்லை. ஸ்ரீரங்க நாயகி தாயாரிடம் பிராத்தித்தான். ஒருநாள் தாமரை ஓடையில் தாமரைப்பூவில் ஒரு சிசுவாக ஒரு பெண் குழந்தை இருக்க அந்த அரசன் அந்தக் குழந்தையை தன் இல்லத்துக்குக் கொண்டு வந்து கமலவல்லி என்று பெயர் வைத்து வளர்த்து வந்தான். கமலவல்லி வளர்ந்து பெரியவளாய் தன் தோழிகளுடன் விளையாடும்போது ஒருநாள் அங்கே நம்பெருமாள் குதிரையின் மீது ஜீயபுத்த்துக்கு வேட்டைக்கு எழுந்தருளினார்.  அப்போது கமலவல்லிக்கு அதிசுந்திரராய் திருவரங்க நாதர் சேவை சாதிக்கக் கமலவல்லி அவரிடம் மோகித்து மனதைப் பறிகொடுக்கிறாள். 

அரசனும் கமலவல்லி பித்துப் பிடித்தது போல இருக்கும் நிலை கண்டு விசாரிக்க,  கமலவல்லி தன்னை அழகியமணவாளனுக்கு  விவாகம் செய்துகொடுக்க வேண்டும் என்று தன் விருப்பத்தைக் கூறுகிறாள்.  அரசனும் மந்திரிகளுடன் ஆலோசித்து விவாகத்துக்கு வேண்டியவற்றைத் தங்கத்தாலான அண்டாக்களில் பொருட்களை நிரப்பிக் கமலவல்லியுடன் கோயிலுக்கு வந்து போது கமலவல்லி திருமணத்தூணுக்குள்ளே புகுந்து பெருமாளுடன் சேர்ந்துவிடுகிறாள். 

இதைக் கண்ட அரசன் அதிசயத்து, தம்முடைய பட்டணமான உறையூரிலும் தம்முடைய குமாரத்தியையும் அழாகியமணவாளப் பெருமாளையும் பிரதிஷ்டை செய்து கோபுரம், மண்டபங்களைக் கட்டி வைத்து ஆனந்தப்பட்டான். 
( இந்தச் சரித்திரம் உத்தம நம்பி திருமலாசாரியரால் எழுதப்பட்டது)

என் அபிமான தாயாருக்கு உறையூரில் சேர்த்தி இல்லை என்று சும்மா இருந்துவிட முடியுமா ? எங்கள் அகத்தில் இன்று நம்பெருமாள் சேர்த்தி கண்டருளினார் ( பார்க்கப் படம் ) 

கமலவல்லி நாச்சியார் வைபவம் பற்றிக் கேட்டவுடன்  நண்பர் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ வாசு அவர்களும், ஸ்ரீரங்கம் ஸ்ரீ கேசவன் அவர்களும் உடனே எனக்கு வேண்டியற்றை அனுப்பினார்கள். அவர்களுக்கு நன்றி. 

- சுஜாதா தேசிகன்
3-4-2020
பங்குனி ஆயில்யம் உறையூர் நாச்சியார் திருநட்சத்திரம் 
கமலவல்லி நாச்சியார் நம்பெருமாள் சேர்த்தி சேவைஃப் https://www.facebook.com/100001300285466/posts/2827309137322401?sfns=mo

No comments:

Post a Comment