நாகாத்தம்மனுக்கு நாகாபரணம் சாத்து"
பெரியவாள் தலையில் கிரீடம் போல் வைத்துக் கொள்ள ஆசைப்பட்ட அன்பர் கொடுத்த நாகாபரணத்தை கோயிலுக்கு கொடுத்த பெரியவா.
நாகாபரணத்தை பெற்றுக் கொள்ள வந்தது, பூஜாரியா, அல்லது அவன் பூஜை செய்யும் தேவதையா?
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
செப்பில் செய்து, வெள்ளி முலாம் பூசப்பட்ட நாகாபரணத்துடன் வந்தார் ஓர் அன்பர்.
புஜங்க பூஷணனாயிற்றே, பரமேசுவரன்? அது போல.பெரியவாள் அந்த நாகா பரணத்தைத் தலையில்,கிரீடம் போல் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது பக்தரின் ஆசை. பெரியவாளிடம், பிரார்த்தித்துக் கொண்டார்
பெரியவாள், நாகாபரணத்தைக் கையில் எடுத்து அழகு பார்த்தார்கள்.
பக்தருக்கு நெஞ்சு துடித்தது. இதோ, இதோ.. தலை கிட்டே கொண்டு போகிறார்கள்... தலையில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஆனந்தமாய் தரிசனம். பெரியவாள், நாகாபரணத்தைக் கீழே வைத்து விட்டார்கள்.
சிறிது நேரம் சென்றதும், ஒரு பூஜாரி வந்தான்.
"எந்தக் கோயில்?"----பெரியவா.
"நாகாத்தம்மன் கோயில், சாமி!"------பூஜாரி
"தினமும் பூஜை பண்றியா?"-----பெரியவா.
"ஆமாங்க"---பூஜாரி.
"ஜனங்கள் வராளோ?"-----பெரியவா.
"செவ்வாய்,வெள்ளி,ஞாயிறு கூட்டம் வரும்!"----பூஜாரி.
பெரியவாள் நாகாபரணத்தைச் சுட்டிக் காட்டினார்கள்.
"இது என்ன தெரியுமோ?"---பெரியவா.
பூஜாரி, தலையைச் சொறிந்து கொண்டான்.
"அம்மன்,தலைமேல இருக்கிற அஞ்சு தலை பாம்பு மாதிரி இருக்கு"--- பூஜாரி.
"ஆமாம்! நாகாபரணம்னு பேரு, உன் நாகாத்தம்மனுக்குச் சாத்து"-- பெரியவா.
நாகாபரணத்தை, அவனிடம் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவாள்.
திகைத்து நின்ற அவனுக்கு, உடம்பெல்லாம் மகிழ்ச்சி. பெரியவாளுக்கும் சந்தோஷம். நாகாபரணம் கொண்டு வந்த அன்பரிடம், "எல்லாம் ஈசுவரார்ப்பணம்" என்றார்கள் பெரியவா.
நாகாபரணத்தைப் பெற்றுக் கொள்ள வந்தது, பூஜாரியா,அல்ல்து அவன் பூஜை செய்யும் தேவதையா?
பெரியவாள், நிச்சலனமாய் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கினார்கள்.
Jaya Jaya shankara hare hare shankara
No comments:
Post a Comment