Wednesday, August 31, 2022

கதம்ப சுண்டல்

 _*விநாயகர் சதுர்த்திக்கு கதம்ப சுண்டல் செய்யலாம் வாங்க...*_

அதிக ஊட்டச்சத்துகொண்ட இந்தக் கதம்ப சுண்டலைச் செய்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவோம். இதனை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

🍱 *தேவையான பொருட்கள்:* 

மொச்சை, காராமணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, சிவப்பு ராஜ்மா - தலா 100 கிராம்
காய்ந்த மிளகாய் - 6
தேங்காய்த் துருவல்தேவைக்கேற்ப
கறிவேப்பிலை தேவைக்கேற்ப
கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப

🍴 *செய்முறை* 

பயறுகளை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

 வாணலியில் எண்ணெய்விட்டு காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்கவும். 

இதில் வேகவைத்த சுண்டலைச் சேர்த்துக் கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். 

இந்த கதம்ப சுண்டல் விநாயகருக்கு மிகவும் பிடிக்கும், வருடா வருடம் கொழுக்கட்டை செய்வது போல சுண்டலையும் விநாயகர் சதுர்த்திக்கு செய்வது வழக்கம்..


Viji

🌷🌷

நெல்லிக்காய்

 #பொது

.இன்னிக்கு எங்க வீட்டுல கறிகாய்களோட நெல்லிக்காயும் வந்துச்சு

.என்பாட்டி நெல்லிக்காயில் விதம் விதமா புதுசு புதுசா ஊறுகாய் போடுவார்கள்…..

.அதோட நெல்லிக்காயை காய வச்சு (அது பேரு நெல்லி முள்ளி) அதாட ‘வேம்பாளம்பட்டை ,கறிவேப்பிலை,மருதாணி போட்டு தேங்கா எண்ணைல காய்ச்சி தினம் தலைக்கு தடவி இழைய இ ழைய வாரி பின்னுவாங்க…. தலை முடி முழங்காலை தொடும்…

.இப்ப கூட என் வயசுக்கு முழு நரை இல்லை( நான் ‘டை’ அடிப்பதில்லை) ஒரளவு முடியும்நீளமா இருக்கு…நன்றி பாட்டி……

.நெல்லிக்காயின் அருமை பலருக்கு தெரிந்திருக்கலாம்…..

.கிணற்று நீர் உப்பா இருந்தா நெல்லிக்கா மரத்தோட ஒரு கட்டைய போட்டு வச்சா நல்ல நீரா மாறுமாம்……

.சின்ன வயசுல நெல்லிக்காய தின்னுட்டு உடனே தண்ணி குடிச்சா இனிக்கும் ங்கறதுக்காக மொண்டு மொண்டு குடிப்போம்…..

.ஆம்லா( அமலா இல்லை) அற்புதமான கனி….

.கடையெழு வள்ளல்களில் ஒருவரான குறுநில மன்னரான அதியமானுக்கு, தனக்கு கிடைத்த சாகா வரம் தரும் நெல்லிக்கனியை, ஔவையார் பரிசிலாகத் தந்து “கோன் உயர குடி உயரும்” என்ற தத்துவத்திற்கு வித்திட்டார். அதியமான், அந்நெல்லிக்கனியைத் தான் உண்பதை விட, ஔவையார் உட்கொண்டால் தமிழுக்கு மிக்க பயன் விளையும் என்று அவருக்கு கொடுத்ததாக இலக்கியத்தில் உள்ளது

நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் எடையானது குறையும்.

நெல்லிக்காய் ஜூஸில் சிறிது தேன் கலந்து, தினமும் இரண்டு முறை குடித்து வந்தால், ஆஸ்துமா குணமாகிவிடும்.

நெல்லிக்காய் குடலியக்கத்தை சீராக வைக்கும். எனவே இதனை தினமும் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்துவிடலாம்.

நல்ல நெல்லிக்காய் சாற்றில் தேன் சேர்த்து குடிக்கும் போது, இரத்தமானது சுத்தமாகும். இதனால் நன்கு சுறுசுறுப்போடு உடல் ஆரோக்கியமாக இருக்கும்

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். அத்தகைய எரிச்சலைப் போக்குவதற்கு, தினமும் இரண்டு முறை நெல்லிக்காய் ஜூஸ் குடிக்க வேண்டும்.

கோடை காலத்தில் உடலானது அதிக வெப்பமாக இருக்கும். எனவே அத்தகைய உடல் வெப்பத்தை தணிப்பதற்கு நெல்லிக்காய் ஜூஸ் சிறந்ததாக இருக்கும்

முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும்.

உடலில் இரத்தம் குறைவினால் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்க, தினமும் நெல்லிக்காய் சாற்றை குடித்தால், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகமாகி, ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

இதயம் பலவீனமாக இருப்பவர்கள், தினமும் நெல்லிக்காய் சாற்றை அளவாக குடித்து வந்தால், இதயத்தில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்யலாம்

.. குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் நெல்லிக்காயை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். இதை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும். அத்தகைய சூழ்நிலையில், நோயாளிக்கு பிரச்சனை அதிகரிக்கலாம்.

சர்க்கரை அளவு குறைவாக உள்ளவர்களுக்கு, நெல்லிக்காயை அதிகமாக உட்கொள்வது தீங்கு விளைவிக்கும். நெல்லிக்காய் சாப்பிடுவது சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது, எனவே இது இரத்தச் சர்க்கரைக் குறைவின் அபாயத்தை அதிகரிக்கும்.

நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி நிறைந்திருப்பதால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி குளிர்கால தொற்றுகள் அண்டாமல் தடுக்கிறது. மேலும் நுரையீரல் பிரச்னைகளை சீராக்கி சுவாச பாதை சீராக இயங்க உதவுகிறது.

திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால் வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம் உள்ளது. அதாவது ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது.

நெல்லிக்காயை துவையலாகவும் உண்ணலாம் …ஆனா அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு தானே…அளவோட எடுத்துக்கிட்டா அவ்வளவு நல்லது

.

.

திருநெடுங்கலம் சிவன் கோயில்

 திருநெடுங்கலம் சிவன் கோயில் :-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவில், துவாக்குடிக்கு அருகில் உள்ளது திருநெடுங்களம். இங்கே ஈசனின் திருநாமம் & திருநெடுங்களநாதர். அம்பாள் & ஒப்பிலாநாயகி என்கிற ஸ்ரீமங்களாம்பிகை.

ஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பாடப்பட்ட அற்புதமான தலம். அகத்திய முனிவர் வழிபட்ட திருத்தலம். 

இங்கே உள்ள முருகப்பெருமானை, அருணகிரிநாதர் திருப்புகழ் பாடி வணங்கிப் போற்றியிருக்கிறார்.

 திருமணத் தடை நீக்கும் தலம். தீராத நோயையும் தீர்க்கும் தலமும் கூட!

இங்கே, சப்தகன்னியரில் ஒருவரான ஸ்ரீவாராஹி அம்மனுக்கு வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமையில், ராகுகாலவேளையில் சிறப்பு வழிபாடு உண்டு. விரலி மஞ்சள் எடுத்து வந்து, இங்கே உள்ள உரலில் இடித்து, அரைத்து, அபிஷேகம் செய்தால், தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். தோஷங்கள் அனைத்தும் விலகும்.

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை, மேலும் பௌர்ணமி தினம். இதையொட்டி சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமிக்கு மாதுளைச் சாறு அபிஷேகப் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள்.

Tuesday, August 30, 2022

கரும்பாயிரம் பிள்ளையார் கோவில்

 #தினம்_ஒரு_கோவில்_3

கரும்பாயிரம் பிள்ளையார் கோவில், கும்பகோணம்.

மத்யமர் fbல் பத்மா ராகவன் எழுதியது 

நாளை பிள்ளையார் சதுர்த்தி. அவரவர்களுக்கு பூஜை, வழிபாடு, விருந்தினர் வருகை, கோவிலுக்குச் செல்லுதல் போன்ற பலவகை வேலைகள் இருக்கும். எனக்கும் அப்படியே. பதிவிடவோ, பதிவுகளை நிதானமாகப் படிக்கவோ நேரம் கிடைப்பது சற்று கஷ்டமே. இதை மனதில் கொண்டு நாளைய பதிவை இன்றே பதிவிடுகிறேன்.

பிள்ளையார் சதுர்த்தி தினத்திற்கு பொருத்தமாக இன்று நாம் பார்க்கப்போகும் கோவில் கரும்பாயிரம் பிள்ளையார் கோவில்.

கோவில் நகரமாம் கும்பகோணத்தில், ப்ரசித்திபெற்ற ஶ்ரீகும்பேஸ்வரர் கோவில் திருமஞ்சன வீதியில் அமைந்துள்ளது இக்கோவில். எல்லா க்கோவில்களுக்கும் முன்னதாக உருவான மிகப் பழமையான கோவில்.

உள்ளே இருக்கும் மூர்த்தி மிக சக்தி வாய்ந்தவர். வரப்ரசாதி. நாங்கள் சிறுவயதில் பரீட்சைக்குச் செல்லுமுன் அவரை வேண்டிக் கொண்டு செல்வோம். பரீட்சை சுலபமாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை. கோவிலினுள் எல்லா கடவுளர்களின் சன்னதிகளும் இருக்கும்.

சிறுவயதில் பாட்டி ஒரு கதை சொல்வார். ஒரு ஏழை, பசிதாளாமல் கரும்புத் தோட்டத்திலிருந்துஒரு கரும்பை எடூத்துத் தின்றுவிட்டானாம். தோட்டத்தின் சொந்தக்காரர் கொடுத்த புகாரின் பேரில் அரசர், அந்த ஏழையை ஆயிரம் கரும்புகளுடன் ஒரு அறையில்  அடைத்து, காலை விடிவதற்குள் அனைத்தையும் தின்று முடிப்பதுதான் அவனுக்குத் தான் தரும் தண்டனை..என தீர்ப்பளித்தாராம்.

செய்வதறியாது திகைத்த அந்த ஏழை, விநாயகரை வேண்டினானாம். அவர் இந்த ஏழை மேல் இரக்கப்பட்டு யானை உருவில் வந்து, இரவோடு இரவாக அனைத்தையும் தின்று, அந்த பக்தனைக் காப்பாற்றினாராம். அன்றுமுதல் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப்பட்டாராம்.  ஆகையால் அவரை மனமார வேண்டினால் அவர் அருள் கிடைக்கும் என்ற பாட்டி கொடுத்த அறிவுரைதான்  எங்கள் நம்பிக்கையின் அஸ்திவாரம்.

ஆனால் பெரியவர்களானதும் அந்தக்கதை பொய். பாட்டியின் சொந்த சரக்கு என்றறிந்து, உண்மை பெயர்க்காரணத்தை தெரிந்துகொண்டோம். இதோ உங்களுக்காக.

ஆதி காலத்தில் அரக்கன் பூமியை பாதாளத்தில் ஒளித்து வைத்ததும், ஶ்ரீமகாவிஷ்ணு, வராஹ அவதாரம் எடுத்து மீட்டதும் நாமறிந்த கதை. இந்தக் கும்பகோணம் வராஹ க்ஷேத்ரம் என அழைக்கப்பட்டதாம். மகாவிஷ்ணு பாதாளத்துக்குள் நுழையுமுன் களி மண்ணால் பிள்ளையார் செய்து வழிபட்டு, குளக்கரையில் ப்ரதிஷ்டை செய்து சென்றாராம்.  அந்தக் குளமே வராஹ தீர்த்தம். இன்றும் உள்ளது. இந்தப் பிள்ளையார்தான் மகாவிஷ்ணு செய்த ஆதிகாலப் பிள்ளையார். இக்கோவிலருகில் வராஹப்பெருமாள் கோவிலும் உள்ளது. 

முதலில் வராஹ கணபதி என அழைக்கப் பட்ட இவர், கரும்பாயிரம் பிள்ளையாராக அழைக்க, அதற்கும் காரணம் உள்ளது.

கரும்புத்தோட்டக்காரர் ஒருவர், ஆயிரம் கரும்புகளை வண்டியில் ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் வேடத்தில் தனக்கொரு கரும்பு கேட்டாராம். மகா கஞ்சப்ரபுவான வண்டிக்காரன் தர மறுத்ததும், வண்டியிலிருந்த ஒரு கரும்பை பையன் இழுத்தானாம். கோவம் கொண்ட வண்டிக் காரன் பையனை அடிக்கத் துரத்திக் கொண்டு ஓடியபோது, அந்தப் பையன் அங்கிருந்த பிள்ளையார்  கோவிலுள் நுழைந்து மறைந்துவிட்டான். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

கோபத்துடன் வண்டியை ஓட்டிக்கொண்டு மார்க்கெட்டுக்கு வந்தால், வண்டியில் இருந்த  கரும்பெல்லாம் சக்கையாக, வெறும் நாணலாக மாறி இருந்ததாம்.

பலவித புலம்பல்களுக்குப்பின் தன் தவறை சுட்டிக்காட்ட,  பிள்ளையார் தான் இந்த விளையாட்டு விளையாடியிருக்கிறார் எனப் புரிந்து கொண்டு, கோவிலுக்கு வந்து மன்னிப்புக்கேட்டானாம். கடவுளும் மனமிறங்கி, கரும்புகளுக்கு இனிப்பை வழங்கினாராம். அன்று முதல் அவர் கரும்பாயிரம் பிள்ளையார் என அழைக்கப் படுகிறார்.

இக்கோவிலில் ஆகம விதிகளின்படி மூன்று வேளையும் சிறப்பாக பூஜைகள் நடக்கின்றன. சங்கட ஹர சதுர்த்தி, பிள்ளையார் சதுர்த்தி சமயங்களில் ப்ரமாதமான பூஜை நடக்கும். பொங்கல் சமயத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த கரும்புகளை முதலில் விநாயகப் பெருமானுக்கு படைப்பது வழக்கம். கோவிலில்  அக்கரும்புகளைக்கொண்டு பந்தல் அமைப்பர். ஆனால் அவ்வளவு நாள் அந்த ஊரில் இருந்தும் நான் ஒருமுறைகூட கரும்புப் பந்தலை பார்த்ததில்லை.

இவரை வணங்கும் பக்தர்களுக்கு அவர்கள் குறைகளைத் தீர்த்து, வாழ்வில் இனிப்பை வழங்கும் வள்ளல் இந்தப் பிள்ளையார்.

பிள்ளையார் சதுர்த்தி நன்நாளில் நாம் அனைவரும் அவரை வழிபட்டு நம் வாழ்வை கரும்புபோல் இனிக்கச்செய்வோம்.

ஓம் கணபதியே நம:

PC. Google.

ஶ்ரீ பூமிதேவி சமேத ஶ்ரீ ஒப்பிலியப்பன் கோவில்

 பொது.

#தினம்_ஒரு_கோவில்_1

மத்யமார் fbல் பத்மா ராகவன் எழுதியது 


கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருநாகேஸ்வரத்தில் அமைந்துள்ள ஶ்ரீ பூமிதேவி சமேத ஶ்ரீ ஒப்பிலியப்பன் கோவில் பற்றி எனக்குத் தெரிந்தவை.

ஶ்ரீ மன் நாராயணனிடம் கோபம் கொண்ட ஶ்ரீ மகாலெட்சுமி (கடவுளர்களுக்குள் கோபமெல்லாம் கிடையாது. பல தத்துவங்களை மனிதர்களுக்கு உணர்த்த அவர்கள் போடும் நாடகம். வாயால் சொல்வதைவிட செய்தே காட்டும் எந்த விஷயமும் டக் என்று மனதில் ஒட்டுமல்லவா) இந்த பூலோகத்தில் அவதரித்தாள். ஒரு துளசி வனத்தில் மார்க்கண்டேய மகரிஷியின் கரங்களில் குழந்தையாய் கிடைத்தாள்.

முனிவரும், குழந்தை பூமியிலிருந்து கிடைத்ததால் பூமா தேவி என ப்பெயரிட்டு மிக மிக செல்லமாக, செல்வமாக வளர்த்துவந்தார். அவருக்கு மகாலெட்சுமிதான் தனக்கு மகளாகக் கிடைத்திருக்கிறாள் என்றெல்லாம் தெரியாது.

மகா லெட்சுமி தன்னைப்பிரிந்ததைப் பொறுக்க முடியாமல் பகவான் பூலோகத்துக்குத் தேடிவந்தார். மகாலெட்சுமி பூமாதேவியாக மார்க்கண்டேயரிடம் வளர்வதை அறிந்து, தன் விளையாட்டை ஆரம்பித்தார். 

தன்னை ஒரு வயோதிகன் போல் மாற்றிக்கொண்டு, ரிஷியின் ஆஸ்ரமத்தை அடைந்தார்.

யாரோ சுத்தமான ஆச்சாரமான வைணவப் பெருந்தகையைக் கண்டதும் மார்க்கண்டேயர்சந்தோஷத்துடன் பலவிதமான கைங்கர்யம் உபசாரம் அனைத்தும் அவருக்கு சமர்ப்பித்தார். நன்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டபின் பகவான் அவரிடம், "நீங்கள் எனக்கு இவ்வளவு உபசாரங்கள் செய்து மகிழ்வித்தீர்கள். இன்னும் ஒன்று பாக்கி இருக்கிறது" என்றதும்

"என்ன வென்று சொல்லுங்கள். என் ஆஸ்ரமத்துக்கு வந்தவர் யாரும் குறையுடன் திரும்பக்கூடாது" என வினவினார் ரிஷி.

"மாட்டேன், மறுதளிக்கமாட்டேன் என வாக்குறுதி கொடுங்கள்" என பகவான் கேட்கவும்,

"அபச்சாரம். அந்த மாதிரி ஒரு நாளும் இங்கு நடக்காது" என வாக்குக்கொடுத்தார் ரிஷி.

"அது வேறு ஒன்றுமில்லை. என்னை உமது மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ள வேண்டும்"

கேட்டதும் துள்ளிக்குதித்து, "என்னது. என்ன ஆசை உமக்கு? அபத்தமாக இருக்கிறதே. உமது வயசென்ன? அந்தக்குழந்தையை மணம் செய்ய ஆசைப்படுகிறீர்களே. என்ன நியாயம்"என்று எகிறிக்குதித்தார் ரிஷி.

"அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் ஆசைப்பட்டுவிட்டேன். நீரும் வாக்குக் கொடுத்துவிட்டீர். ஏற்பாடுகள் நடக்கட்டும்" என தன் வாதத்தில் உறுதியாக இருந்தார் பகவான்.

"ஐயோ இந்தக்கொடுமையை எங்கு போய் சொல்வேன். பச்சிளம் குழந்தையை இந்த வயோதிகனுக்கு கன்னிகாதானம் செய்விப்பதா? ,மாபாதகச்செயல்லவா? இந்த வயோதிகனுக்கு வந்த ஆசையைப் பார். போனால் போகிறது. ஏதோ நாடோடி. தேசாந்திரம் வந்தவர். என நினைத்து உபசரித்தால் இப்படி அடாவடித்தனம் செய்கிறாரே" எனப் புலம்பிக் கொட்டினார்.

"யோவ் தாத்தா. அவளுக்கு சமயல் செய்யக்கூடத்தெரியாது. சமயலில் ருசி கூட்ட உப்பு சேர்க்கணும் என்று கூடத் தெரியாதுப்பா. அவளை மணந்தால் நீ வாழ்நாள் பூரா பட்டிணிதான்" என்று பயமுறுத்தினார்.

பகவானா விடுவார். அவர் பிடிவாதம் சிறு குழந்தையின் பிடிவாதம்போல் அதிகரிக்கிறது. திண்ணையில் நீட்டமாகச்சயனித்து, "அவ்வளவுதானே. எப்படிச்சமைத்தாலும் சாப்பிடறேன். ஏன். இன்றுமுதல் அவளுக்காக என் சாப்பாட்டில் உப்பே சேர்த்துக்கொள்ளமாட்டேன். எனக்கு எப்படியாவது உங்க பெண்ணை மண முடித்துக் கொடுங்கள். அவள் இல்லையென்றால் என் உயிர் என் வசம் இருக்காது" என சத்யாக்ரகம் செய்தார்.

செய்வதறியாது திகைக்கிறார் ரிஷி. "அய்யோ. ஆராயாமல் வாக்குக் கொடுத்து விட்டேனே. இந்த வயோதிகருக்கும் என் பெண்ணுக்கும் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லையே. ஶ்ரீ மன் நாராயணா. இதற்கொரு தீர்மானத்தை எனக்கு சொல்லமாட்டாயா" என்று பூஜை அறையில் பகவான் சிலைமுன் அமர்ந்து கண்ணீர் விட்டார்..

பகவான்தான் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி திண்ணையில் கிடக்கிறாரே.

கடைசியில் வேறு வழியில்லாமல், கண்ணீர் பெருக, தன் செல்ல மகளுக்குத்தானளித்த வாக்கே சத்ருவானதை நினைத்து மனம் வெந்து, கன்னிகாதானம் செய்துதர ஏற்பாடுகள் செய்கிறார். கல்யாண பட்சணங்கள்,சமையல் எதிலும் உப்பு சேர்க்க வேண்டாம் என மாப்பிள்ளை ஆணை இடுகிறார். "எனக்கு வேறு மலர் மாலைகள் வேண்டாம். எனக்கு வரப்போகும் மனைவி துளசி வனத்தில் கிடைத்தவள். துளசி மணத்துடன் இருப்பவள். அவளுக்கு மரியாதை தரும் விதமாக,  என் மார்பில் அந்தத் துளசிதான் மாலையாக இருக்கணும். நான் எப்போதும் அந்த மணத்தை நுகர்ந்தபடி இருக்கணும்" என்று மாப்பிள்ளை சொன்னதைக்கேட்ட ரிஷி, "சரியான பைத்தியக்காரன் போல இருக்கு" எனத்தலையில் அடித்து, அவர் கேட்டவாறே அனைத்தும் செய்து முடித்தார்.

திருமண விருந்தைஅனைவருக்கும் பரிமாறும்போது, மாப்பிள்ளையின் ஆணையை எடுத்துச்சொல்லி, உப்பில்லா விருந்து அளிப்பதற்காக மன்னிப்பை வேண்டினார்.

 சாப்பிட்டவர்களுக்கோ அது உப்பில்லாததாகவே தோணலை. தேவாமிர்தமாக ருசித்தது. அனைவரும் வியப்புடன் உண்டு முடித்தனர்.

அடுத்து பெண்ணை, அவள் கணவருடன் அனுப்பிவைக்கும் நேரம். "என் பெண் அறியாக்குழந்தை. அவள் ஏதேனும் தவறுசெய்தால் தண்டிக்காமல் மன்னித்து விடுங்கள்' என்று வேண்டிய ரிஷியிடம்,  "மார்க்கண்டேயரே. எங்களை நன்கு பாருங்கள். இன்னுமா நாங்கள் யார் என்பது புரியவில்லை" ஏன்றதும் கண்களை மறைத்த கண்ணீரைத்துடைத்துப் பார்க்கிறார்ர்.

 "ஆகாகா. சங்கு சக்ர தாரியாக, துளசி மணம் கமழ, பக்கத்தில் மகா லெட்சுமியை அணைத்தபடி அவர் வணங்கும் ஶ்ரீ மன் நாராயணன் அல்லவா காட்சி தருகிறார். அப்படியானால் பகவானே என் மாப்பிள்ளையா? உலகுக்கே தாயானவள் எனக்கு மகளாக வந்தாளா? என்ன மடமை. தெரியாமல் இருந்துவிட்டேனே. எத்தனை ஜன்ம புண்ணியம் எனக்கு பகவானும் தாயாரும் பெண் மாப்பிள்ளையாகக் கிடைக்க? இதை உணராமல் இருந்து விட்டேனே"

 மார்க்கண்டேயரின் தவிப்பும் புலம்பலும் ஓயவில்லை . கண்ணீர் பெருக்கெடுக்கிறது. கட்டுப்படுத்த முடியவில்லை.

"எங்களுக்கே மணம் செய்துவைத்த பாக்யசாலியான உமக்கு வேண்டும் வரத்தைக்கேளுங்கள்..தரத்தயாராக இருக்கிறோம்" என்ற பகவானிடம்

"கன்னிகாதானக்கோலத்துடன் நீங்கள் இருவரும் (அதே வயதான ஆண், சிறு பெண் வடிவில்) இங்கு நிரந்தரமாக இருந்து அருள் புரியணும். உங்களுக்கருகில், உங்களை விட்டகலாமல் நானும் இங்கு உங்களுடன் இருக்கணும். இங்கு வந்து, உங்களுக்குப்பிடித்தமான துளசிமாலை சார்த்தி, உங்களை வழிபடுவோருக்கு சகல சௌபாக்யங்களையும் அருளணும். உன்னை சேவிக்கும் திருமணமாகதவர்களுக்குத் திருமணம் கைகூட அருளணும். பிணக்கு, மனஸ்தாபம் உள்ள தம்பதியர் உன்னை வணங்கினால், அவர்கள் பிணக்கு நீங்கி என்றென்றும் ஒற்றுமையாக இருக்க வாழ்த்தணும். எப்போதும் உப்பில்லாத நைவேத்யத்தையே ஏற்கணும். ஆது உண்பவர்களுக்கு அமிர்தமாக இருக்கணும். இதுவே பூலோக சொர்க்கமாக இருக்க அருள் புரியணும்"

மார்க்கண்டேய மகரிஷி கேட்டுக்கொண்ட அனைத்தையும் இன்றளவும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் ஶ்ரீஒப்பிலியப்பனான ஶ்ரீமன் நாராயணன். யாருக்கும் உவமைப் படுத்தமுடியாதஒப்புயர்வற்றவராதலால் ஒப்பில்லா அப்பன், ஒப்பிலியப்பன் எனவும், உப்பை நீக்கியதால் ஶ்ரீஉப்பில்லா (உப்பிலி) யப்பன் எனவும் பக்தர்களால் செல்லமாக அழைக்கப் படுகிறார்.

ஶ்ரீ ஆண்டாள் சரித்திரத்தில், பகவானிடம் கொண்ட காதல் விளக்கப்படுகிறது. ஆனால் இங்கு பகவான் திருமகளிடம் கொண்ட காதல் வெளிப்படுகிறது. எல்லாமே பகவான் நடத்தும் லீலை எனினும், கணவன் மனைவிக்குள் ஒற்றுமை, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல், மனைவிக்கு மதிப்பளித்தல் போன்றவற்றை உலகுக்கு எடுத்துறைக்கவே இப்படி நாடகம் ஆடியிருக்கிறார் பகவான்.

அப்புசாமியும், மிஸ்ஸிங் வைரங்களும்

 மீள் பதிவு சில மாற்றங்களுடன்.

THE CASE OF THE MISSING DIAMONDS

(அப்புசாமியும், மிஸ்ஸிங் வைரங்களும்)

(TP கண்ணன்)

என் பெருமதிப்புக்குரிய எழுத்தாள ஜாம்பவான்கள் தேவன், பாக்யம் ராமசாமி, சுஜாதா ஆகியவர்களை மானசீகமாக வணங்கி, மன்னிப்புக்கோரி தொடர்கிறேன்.

------

பாட்டிமார்கள் முன்னேற்ற கழகத் தலைவி பார்வதி சுப்ரமணியம் புது மெம்பர் ஒருவரை கழகத்தில் இண்டக்ட் செய்து கொண்டிருந்தாள்.

“லெட்’ஸ் புட் அவர் ஹண்ட்ஸ் டுகெதர் டு வெல்கம் மிஸஸ் வேம்பு சாம்பமூர்த்தி”.

பலத்த கரகோஷத்துக்கு இடையே சீதாப்பாட்டி பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். “ஹூ இஸ்  திஸ் வேம்பு சாம்பமூர்த்தி?”

மீட்டிங் முடிந்ததும் நேரிலேயே கேட்டு விட்டாள்.

“மிஸஸ் சாம்பமூர்த்தி, ஐயம் சீதாலக்ஷ்மி அப்புசாமி. பாஸ்ட் பிரெஸிடெண்ட் ஆஃப் பாமுக. நீங்கள் ஒய்ஃப் ஆஃப் மிஸ்டர் சாம்பமூர்த்தி, டிடெக்டிவ் எக்ஸ்ட்ரார்டினெய்ர்தானே?”

“என்னை வேம்புனே கூப்பிடுங்கோ, மாமி. அவருக்கும் சாம்புனு கூப்பிட்டாதான் பிடிக்கும். துப்பறியும் சாம்புனா லோகம் பூரா தெரியும். 

“அஃப் கோர்ஸ். நானும் அவரைப் பத்தி ரொம்ப கேள்விப் பட்டிருக்கேன். அவர் இங்க வரலையா?”

காற்றோட்டமாக ஜன்னலோரம் ஒரு நாற்காலில் உட்கார்ந்து மூக்கை தடவிக்கொடுத்தவாறு வெளியில் எதையோ சுவாரஸ்யமாக  பார்த்துக் கொண்டிருந்த சாம்புவுக்கு, “குட் ஈவினிங் மிஸ்டர் சாம்பமூர்த்தி” என்று சீதாப்பாட்டி விஷ் பண்ணியது கேட்டாலும் அது தனக்குத்தான் என்று புரியவில்லை.

“சொன்னேனோல்யோ, அவரை சாம்புன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்” என்ற வேம்புவின் குரல் அவரை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வைத்தது.

எதிரில் வெகு அருகில் பூர்ணசந்திரன் அளவுக்கு குங்குமப் பொட்டுடன் மரியாதை கலந்த புன்சிரிப்புடன் லேசாக மஞ்சள் பூசிய ஒரு முகம் குனிந்து தன்னை உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பது புலப்பட இரண்டாம் முறையாக திடுக்கிட்டாலும், சமாளித்துக் கொண்டு “ஹி ஹி, நான்தான் சாம்பு” என்றார்.

“நான் பாமுகவின் பாஸ்ட் பிரசிடெண்ட். சீதாலக்ஷ்மி அப்புசாமி."

“ரொம்ப சந்தோஷம். உங்க ஆத்துக்காரர் என்ன பண்ணிண்டிருக்கார்” என்று சாம்பு கேட்ட அடுத்த வினாடி ஜன்னல் வழியாக விர்ர்ர்ரென்று சுழன்று வந்த ஆறு அங்குல நீளம் ஒரு அங்குல விட்டம் கொண்ட ஒரு அன்ஐடெண்டிஃபைடு ஃப்ளையிங் ஆப்ஜெக்ட் சாம்புவின் முன் நெற்றியைத் தாக்க அப்படியே கீழே சரிந்தார். 

“உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்....”  என்று மேடை மைக்கில் யாரோ பாடிக்கொண்டிருந்தார்கள்.

தன்னை தாக்கியது எது என்று தெரியாமல், “ஆலந்தூர் ஜமீந்தார் குடும்ப வைரநெக்லெஸ் திருட்டு கேஸ்ல நாம் பிடித்துக் கொடுத்த ரௌடி குமார் சுட்டிருப்பானோ. டேய் சாம்பு, ஒரே மாசத்துல உன் கதையை முடிக்கிறேன் பாரு என்று  கத்திக்கொண்டே போலீஸ் வேன்ல ஏறினானே. இல்லை, அந்த பாம்பே தாதா பெரிய துப்பாக்கியை நெத்திப் பொட்டில் வைத்து “அப் கியா ஹோகா காலியா” என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டு “அப் கோலி காவ்” என்று துப்பாக்கியின் விசையை அழுத்தினானே - நல்லவேளையாக துப்பாக்கி வெடிக்கவில்லையோ, அப்போது நாம் தப்பித்தோமோ - அவனாக இருக்குமோ?” சாம்புவின் துப்பறியும் மூளை அதிவேகமாக இயங்கி பல கோணங்களிலும் ஆராய்ந்து மிரட்ட, சாம்பு பயத்தில் உறைந்தார்.

“என்ன ஆச்சுன்னா உங்களுக்கு” என்று வேம்பு அலறிக்கொண்டு ஒடி வந்தாள். அவளும், மற்றவர்களுமாக சேர்ந்து சாம்புவை தூக்கி நாற்காலியில் அமர வைத்தனர்.

அதற்குள் ஜன்னல் வழியாக UFO வந்த திசையில் பார்த்த சீதாப்பாட்டி அங்கு “ஓடுறா ரங்கா, எஸ்கே...ப், மாட்ச் அபன்டண்டு” என்று கத்திக் கொண்டு கையில் கிட்டிக்கோலுடன் அப்புசாமி  அவர் சகாக்களுடன், கிரிக்கெட் மாட்சின்போது திடீரென்று  கனமழை பொழிய பெவிலியனுக்கு ஓடும் கிரிக்கெட் வீரர்களைப் போல், ஒடுவதைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டாள். வெளியில் கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்த அப்புசாமி அடித்த கிட்டிப்புள்தான் சாம்புவின் தலையை பதம் பார்த்தது என்பது சீதாப்பாட்டிக்கு புரிந்தது. நல்லவேளை, வேறு யாரும் பார்க்க வில்லை.

சாம்புவின் தலையில் அடி பட்ட இடத்தை தொட்டு, "இங்கேயான்னா பட்டது" என்று கேட்டு பரபரவென்று தேய்த்து விட்டாள் வேம்பு. அடி பட்ட வலியைவிட வேம்பு தேய்க்கும் வலி பொறுக்க மாட்டாமல் சாம்பு அலற "ஐயோ பாவம், நன்னா அடி பட்டு டுத்துபோல இருக்கு. தேச்சுவிடலைனா வீங்கிடும்" என்றவாறு வேம்பு இன்னும் பலமாக தேய்க்க, சாம்பு இன்னும் பலமாக அலறினார். 

ஒருவழியாக ஃபர்ஸ்ட் எய்டு முடிந்து, நடந்தால் தலை சுத்துகிறதா என்று செக் செய்ய நினைத்த சாம்பு எழுந்து ஒரு அடி எடுத்து வைக்க அடுத்த நொடி ரோலர் ஸ்கேட்டில் காலை வைத்ததுபோல் சர்ர்ர்ரென்று இரண்டு அடி சறுக்கி சுவரைப் பிடித்து சமாளித்து நின்றார். அவர் தலையை தாக்கிய கிட்டிப்புள் இப்போது அவர் காலடியில் சுழன்று கொண்டிருந்தது. அதில் காலை வைத்ததின் விளைவு என்று புரிந்து அதை எடுத்துப் பார்த்தார். அது சாதாரண கிட்டிப்புள் போல் இல்லாமல் கிரிக்கெட் பெயில்களில் ஒன்று போல் இருந்தது. ஒரு பக்கம் லேசாக விரிசல் விட்டிருந்தது. சாம்பு ஏதோ ஒரு நினைப்பில் அந்த விரிசலை நகத்தால் நெம்ப அது இரண்டாக உடைந்து சரசரவென்று தரையில் ஏதோ கொட்டியது. அத்தனையும் வைரக்கற்கள்!

புப்ஃபே வரிசையில் கையில் தட்டுடன் நின்று கொண்டு தன் முறை வருவதற்குள் பன்னீர் பட்டர் மசாலா சப்ஜி காலியாகிவிடும்போல இருக்கிறதே என்ற கவலையில் ஆழ்ந்திருந்த மிஸஸ் கல்பனா சாப்ரியாவின் பாம்புச்செவியில் வைரக்கற்கள் விழும் சப்தம் தேனாகப் பாய்ந்தது. அவள் கணவர் சாப்ரியா தினமும் மேஜையில் வைரக்கற்களைக் கொட்டி சரி பார்க்கும்போது கேட்டு பழக்கப்பட்ட அதே சப்தம். சப்தம் வந்த திசையை நோக்கி ஓடி, சாம்புவின் காலடியில் டால் அடித்துக் கொண்டிருந்த வைரங்களைப் பார்த்து "மில்கயா, மில்கயா" என்று உணர்ச்சிவயப்பட்டு கத்தினாள்.

அதே சமயம் "எல்லாரும் நகருங்க. ஒருத்தரும் தொடாதீங்க அதை" என்று அதிகார தோரணையில் ஒரு குரல் கேட்டது. குரலுக்கு சொந்தக்காரர் சற்று முன் வரை வெளியில் சக்கரவண்டியில் இளநீர் விற்றுக் கொண்டே ஜன்னல் வழியாக உள்ளே ஒரு கண் வைத்துக் கொண்டிருந்த  போலீஸ்காரர். அழுக்கு சட்டையும்,லுங்கியுமாக போலீஸ் ஹேர்கட்டுடன், காலில் தடிமனான காக்கி சாக்ஸ், பிரவுன் பூட்ஸ் சகிதம் மாறுவேடத்தில் ஒருவருக்கும் தெரியாது என்ற நினைப்பில் வேவு பார்த்துக் கொண்டிருந்தார்!

"வாட் இஸ் ஹேப்பனிங் ஹியர்?" என்று கேட்டுக்கொண்டே வந்த சீதாப்பாட்டியைப் பார்த்து, என்ன தோணிற்றோ என்னவோ, போலீஸ்காரர் விவரிக்க ஆரம்பித்தார்.

"இந்த அம்மாவோட கணவர் சாப்ரியாஜி சிடியிலேயே பெரிய வைர வியாபாரி. அவர் தன் கடையிலிருந்து வைரங்கள் காணாம போயிட்டதாக கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதை இன்வெஸ்டிகேட் பண்ணும்போது தெரிந்தது வடநாட்டிலிருந்து வந்த ஒரு கொள்ளை கும்பல்தான் இதை திருடியிருப்பது. அதுதான் இது."

"எல்லாம் சரி. சாப்ரியா வைரத்துக்கும் அப்புசாமி கிட்டிப்புள்ளுக்கும் என்ன சம்பந்தம். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடறாமாதிரி இருக்கே?"

"சொல்றேன். கொஞ்சம் நீளமாக இருக்கும். பொறுமையா கேளுங்க. (இது வாசகர்களுக்கும்தான். இத்தனை நேரம் பொறுமையாக படித்து விட்டீர்கள். இன்னும் கொஞ்சம்தான் - க).

போலீஸ்காரர் தொடர்ந்தார். "கொள்ளைக் கூட்டத்துக்கு  ஸ்போர்ட்ஸ் உபகரணங்கள் பண்ணும் ஒரு  கம்பெனியுடன் டை அப் இருந்தது. அந்த கம்பெனி கிரிக்கெட் பெயில்களுக்குள் ஹாலோவாக  பண்ணி அதற்குள் வைரத்தை அடைத்து இந்த கொள்ளைகூட்டத்துடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு கடத்திக் கொண்டிருந்தது. அந்த பெயில்களில் ஒன்றுதான் விக்கெட் செட் வாங்கப் போன ஒரு லீக் கிரிக்கெட் கேப்டனிடம் தவறுதலாக விற்கப்பட்டது. அவர் அதை எடுத்துக்கொண்டு ஸ்கூட்டரில் கிளம்பியவுடன்தான் திருட்டுககும்பலுக்கு தங்கள் தவறு புரிந்து, கேப்டனை துரத்திச் செல்லும் வழியில் எங்களிடம் சிக்கினார்கள்.

"லாக்கப்பில் அடைத்து லாடம் கட்ட இந்த விவரங்களை கொட்டினார்கள்.. நாங்கள் அவசர அவசரமாக கிரிக்கெட் கிரவுண்டை அடைவதற்குள் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. கிரவுண்டின் நடுவில் லட்சக்கணக்கான மதிப்புள்ள விக்கெட்டைப் பார்த்து பந்தை வீசிக்கொண்டிருந்தார்கள். ஆட்டம் முடிந்தவுடன் வாங்கிக் கொள்ளலாம் என்று நாங்களும் பெயிலிலிருந்து கண்களை அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தோம். 

"மேட்ச் முடிந்தது. அப்போதுதான் நாங்கள் சற்றும் எதிர் பார்க்காத சம்பவம் நிகழ்ந்தது. பேட்ஸ்மென் சிக்ஸர் அடித்து மேட்சை ஜெயிக்க, வின்னிங் டீம் கூட்டமாக மைதானத்துக்குள் ஓடியது. அதில் சிலர் ஸ்டம்ப்களைப் பிடுங்கி சென்றார்கள். அந்த விளையாட்டு வீரர்கள் கூட்டத்துடன் நம் அப்புசாமி தாத்தாவும் கலந்து கண் இமைக்கும் நேரத்துக்குள் ஒரு ஸ்டம்ப்பையும், பெயிலையும் பிடுங்கிக் கொண்டு மைதானத்தை விட்டு ஓடிவிட்டார். அதற்குள்  வைரம் இருப்பது  அவருக்கு தெரியாது. அவரிடமிருந்த கிட்டிப்புள் இரண்டு நாட்கள் முன்தான் விளையாடும்போது உடைந்து விட்டதாம். அதற்கு இதுதான் சரியான ரீப்ளேஸ்மென்ட் என்று தோன்ற எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.

"அவரைக் கேட்டால் நிச்சயம் கிட்டிப்புள்ளை தரமாட்டார். அரெஸ்ட் செய்தால் சீதாப்பாட்டியை சமாளிக்க முடியாது. அதனால் மாறுவேடத்தில் சரியான சந்தர்ப்பத்துக்காக இளநீர் விற்பவர்போல் காத்துக் கொண்டிருந்தபோதுதான் சாம்பு சாரைப் பார்த்தேன். ஏதோ பராக்கு பார்ப்பதுபோல் அப்புசாமியையும், பெயிலையும் பார்த்துக் கொண்டே இருந்தார். உடனே எனக்கு புரிந்து விட்டது. சாம்பு சார் இந்த கேசை கையில் எடுத்துக் கொண்டு விட்டார். இனிமேல் நமக்கு கவலை இல்லை என்று இங்கு ஹாலில் நடப்பதைப் பார்க்க ஆரம்பித்தேன். அப்போதுதான் என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று ஒருவருக்கும் புரியா வண்ணம் சாம்பு சார் எப்படியோ அந்த பெயில் ஜன்னல் வழியாக வந்து தன் காலடியில் விழ வைத்தார். அவர் துப்பு துலக்குகிறாரா, மேஜிக் பண்ணுகிறாரா என்றே புரியவில்லை. பிறகு அவருக்கும் இதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று நம்மை நம்ப வைக்க தலையில் அடி பட்டதுபோலவும், மயங்கி விழுந்தது போலவும் நாடகமாடி வைரத்தை வெளியே கொண்டு வந்து விட்டார். 

"சாம்பு சார், பெரிய்ய ஆளு சார் நீங்க" என்று முடித்தார்.

"கன்க்ராட்ஸ் மிஸ்டர் சாம்பு. யூ ஆர் எ ஜீனியஸ்" என்று சீதாப்பாட்டியும் மற்ற பா.மு.க. மெம்பர்களும் அவர் கையைப் பிடித்துக் குலுக்க "ஹி, ஹி நான் ஒண்ணுமே பண்ணலை" என்ற சாம்புவை "இந்த தன்னடக்கம்தான் சார் உங்ககிட்ட எங்களுக்கு பிடித்தது" என்றார் போலீஸ்காரர்.

வெளியே புதர் மறைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த அப்புசாமி "டேய் ரசகுண்டு, சாம்பு நம்மை பிடிக்க போலீஸை வரவழைச்சிட்டார்டா. எடு ஓட்டம்" என்று தன் சகாக்களுடன் ஓட ஆரம்பித்தார்.

-------

என்னதான் சாம்பு நிரபராதி என்று போலீஸ் சொல்லிவிட்டாலும் சாம்புவுக்கு என்னவோ அப்புசாமிமேல்தான் சந்தேகம். இது சீதாப்பாட்டிக்கு தெரியவந்ததும் உடனடியாக லாயர் கணேஷின் உதவியை நாட கணேஷின் சேம்பருக்கு சென்று, அவர் அங்கு இல்லாததால் வஸந்திடம் விவரம் சொல்லிவிட்டு திரும்பினாள்.

மறுநாள் கணேஷும், வஸந்தும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

"நேத்து மிஸஸ் சீதாலக்ஷ்மி அப்புசாமி வந்தாங்க. அவங்க கேஸ் ரொம்ப இன்டெரெஸ்டிங் பாஸ். அவங்க என்ன சொன்னாங்கன்னா....:

"இழுக்காம என்ன சொன்னாங்க என்கிறத மட்டும் சொல்லு, வஸந்த்."

"அவங்க, ஹாய் வஸந்த். கணேஷ் இன்னும் வரலை போல இருக்கு. நல்லதா போச்சு. எனக்கு உங்ககிட்டதான் பேசணும். நீங்கதான் அவரை மாதிரி குறுக்க குறுக்க கேள்வி கேக்காம கிளயன்ட் சொல்லறத பொறுமையா கேட்டு கரெக்டா ஆக்‌ஷன் எடுப்பீங்க. உங்களை மாதிரி இன்டெலிஜென்ட் லாயர்...."

"போறும். விஷயத்துக்கு வா."

"விஷயம் இதுதான் பாஸ். இவர்களோட ஹஸ்பண்ட் அப்புசாமி சாரை நம்ம துப்பறியும் சாம்பு இல்ல, அவர், ஒரு டைமண்ட் கொள்ளை கேஸுல பொய்யா இம்ப்ளிகேட் பண்ண முயற்சிக்கிறாராம். காரணம் அப்புசாமி கிட்டிபுள்ளால இவர் தலையை குறி வைச்சு அடிச்சிட்டாராம்.   கிரிக்கெட் கிரவுண்டிலிருந்து அப்புசாமி டயமண்ட் இருந்த பெயிலை எடுத்துண்டு ஓடினதால, இவருக்கும் அந்த கொள்ளை கூட்டத்துக்கும் தொடர்பு இருக்கிறதா சொல்லறாராம்."

"அப்போ IPC 209..."

"இது பெர்ஜூரி இல்லை. 

கோர்ட்ல சொல்லலை. பொய்யா குற்றம் சாட்டி நடவடிக்கை எடுக்க சொல்றார். அதனால IPC 211-தான். 

"சட்ட பூர்வமாகவும் நியாய பூர்வமாகவும், எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒருவர் மீது குற்றம் புரிந்ததாகப் பொய்யான குற்றச் சாட்டைத் தொடர்வதும் குற்றமாகும்னு சொல்லுது இல்லையா 211. 

"எதுவா இருந்தாலும் ஐயாவுக்கு ரெண்டு வருஷம் ஜெயில் களி நிச்சயம்., பாஸ்."

"சரி, சரி...கோர்டு கீர்டுன்னு போக வேண்டாம். பாவம், அந்த அம்மாவுக்கு அனாவசிய செலவு. நீ அந்த சாம்புவை பார்த்து...."

"அதனால்தானே பாஸ், பாட்டிஆன்டி உங்ககிட்ட சொல்லாம என்னைப் பார்த்து....சரி...வேண்டாம்...பண்ணிடலாம், பாஸ்."

----

அடுத்த முப்பதாவது நிமிஷம் வஸந்த் சாம்பு வீட்டு வாசலில் ஆஜர். 

"நமஸ்காரம், சாம்பு சார். எங்கேயோ அவசரமா கிளம்பறா மாதிரி இருக்கு?

"ஒண்ணுமில்ல. பக்கத்துல நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன்ல ஒரு வேலை. ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்து, FIR போட சொல்லணும். இந்த அப்புசாமி இருக்கார் இல்ல, அவருக்கும் ஒரு கொள்ளைக்கூட்டத்துக்கும்...."

"அப்போ நான் கேள்விப் பட்டது கரெக்ட்தான். அப்புசாமிக்கும் அந்த கொள்ளைக்கூட்டத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருக்கு."

"நிச்சயமாவா?"

"நிச்சயமாவாவா...சார், அந்த கொள்ளைக்கூட்டத்து தலைவன் போலீஸ்ல மாட்டிண்டதுனால அப்புசாமிதான் இப்போ அடுத்த தலைவராம்."

"அப்படியா, பார்க்க பேக்கு மாதிரி இருந்துண்டு..."

"நீங்ககூடத்தான் பார்க்க...அதை விடுங்க...  இப்படி இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்லது. ஒருத்தரும் சந்தேகப் பட மாட்டாங்க."

"அப்போ கம்ப்ளைன்ட் கொடுத்துடட்டுமா?"

"தாராளமா. ஆனா அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு. அடுத்த தலைவரானவுடனே அவர் போட்ட முதல் கையெழுத்து உங்களை தூக்கறதுக்குதானாம். நீங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போற வழியிலேயே உங்களை போட்டுத் தள்ள பிளான் போட்டிருக்காங்க."

"ஐய்யய்யோ..."

"அதோ பாருங்க, - உடனே பார்க்காதீங்க, மெதுவா திரும்பி பாருங்க -  அந்த பெட்டிக்கடைக்கு முன்னாடி பீடி குடிச்சிண்டு நிக்கிறானே, அவன்தான் உங்க மூவ்மென்டை வாட்ச் பண்ணி அப்பப்போ அப்புசாமிக்கு ரிபோர்ட் பண்ணிண்டிருக்கான். எங்களுக்கு ரகசிய தகவல் வந்திருக்கு. போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரே நாலு பேர் கத்தி கபடாவோட உங்களுக்காக மறைந்திருந்து வெயிட் பண்ணிண்டிருக்காங்க."

"ஐய்யோ, இப்ப என்ன பண்ணறது. வேம்பு வேற வீட்டுல இல்லை. ஊருல அவ அம்மா வீட்டுக்குப் போயிருக்கா."

"ரொம்ப நல்லதா போச்சு. பீடிக்காரன் பார்க்காதபோது சடார்னு என் கார்ல ஏறி பின் சீட்டுக்கு கீழே படுத்துண்டுடுங்க. நான் எக்மோர் ஸ்டேஷன்ல ரயில் ஏத்தி விட்டுடறேன். உங்க மாமியார் வீட்டுல போய் பதுங்கிண்டு எஞ்ஜாய் பண்ணுங்க. ஒரு மாசமோ, ரெண்டு மாசமோ கழிச்சு கேஸ் அமுங்கினவுடனே வரலாம். அப்புசாமியை மறந்துடுங்க."

-----

கணேஷின் சேம்பர். சீதாப்பாட்டி வருகிறாள்.

"குட் மார்னிங் மிஸ்டர் கணேஷ். நேத்து ஓரு கேஸ் விஷயமா வந்திருந்தேன். நீங்க வேற எதையோ சீரியசா திங்க் பண்ணிண்டிருந்தீங்கன்னு நினைக்கிறேன். வஸந்த்கிட்ட  பேச சொல்லிட்டீங்க. அவர் கேட்டுண்ட மாதிரியே இல்லை. ரொம்ப இர்ரெஸ்பான்சிபிளா பிஹேவ் பண்ணிண்டிருந்தார். அதனால இன்னிக்கி உங்களை எப்படியாவது பார்த்து சொல்லிடணும்னு வந்தேன்."

"கவலை படாதீங்க, பெரியம்மா. கேஸ் க்ளோஸ்டு. வஸந்த் முடிச்சிட்டான்."

Disclaimer:

The above work (three chapters) is an attempt to create a literary work based on well known characters of eminent Tamil writers. While the plot/ idea for the story is based on famous works of authors like Mr. Devan, Mr. Baggiyam Ramaswamy and Mr. Sujatha/ Rangarajan, the story as such is an original work and is intended for private circulation only without any commercial gain and without an intention to violate the ownership/ IP rights of such authors or subsequent owners, if any.

13 வகையான கொழுக்கட்டை

பகிர்வு*🌹......𝕄𝕒𝕝𝕝𝕚𝕜𝕒......🌹_

*வீட்டில் செய்ய 13 வகையான கொழுக்கட்டை ரெசிப்பீஸ்  விநாயகர் சதுர்த்திக்கு வித்தியாசமாகச் செய்து அசத்த வெரைட்டியான கொழுக்கட்டை ரெசிப்பீஸ் இங்கே உங்களுக்காக...*

பால்கோவா மோதகம்
தேவையானவை:

பால் - ஒரு லிட்டர்
சர்க்கரை - 80 கிராம்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - சிறிதளவு
மோதக மோல்டு - தேவையான அளவு.

பால்கோவா மோதகம்பால்கோவா மோதகம்
செய்முறை:

கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். பாதியாகச் சுண்டி வந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறவும். இரண்டும் ஒன்றாகச் சேர்ந்து பால்கோவா பதம் வந்தவுடன் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியவுடன், கட்டிகள் இல்லாமல் நன்றாகப் பிசைந்துகொள்ளவும். மோதக மோல்டில் (அச்சு) நெய்யைத் தடவி, பால்கோவாவை வைத்து மூடி, திறந்தால், பால்கோவா மோதகம் ரெடி.

குறிப்பு:

இந்த மோதகத்தை பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாளே செய்து வைக்கலாம். நான்கு முதல் ஐந்து நாள்கள் வரை கெடாமல் நன்றாக இருக்கும்

கஜூர் மோதகம்
தேவையானவை:

பேரீச்சம்பழம் - 20
முந்திரி - 20
பாதாம் - 20
பிஸ்தா - 20
நெய் - அரை டீஸ்பூன்.

கஜூர் மோதகம்கஜூர் மோதகம்
செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து, நெய் விட்டு சூடானதும் முந்திரி, பாதாம், பிஸ்தாவைச் சேர்த்து லேசாக வறுத்து ஆறவைக்கவும். பிறகு மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து, தனியாக எடுத்து வைக்கவும். பேரீச்சம்பழத்தின் கொட்டையை நீக்கிவிட்டு, சதைப்பகுதியை மட்டும் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பேரீச்சம்பழ விழுது, அரைத்த பருப்புக் கலவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து பிசைந்துகொள்ளவும். மோதக அச்சில் சிறிது நெய்யைத் தடவி பிசைந்து வைத்திருக்கும் கலவையை வைத்து மூடியெடுத்தால், ரிச்சான கஜூர் மோதகம் ரெடி.

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை
தேவையானவை:

ஓட்ஸ் - அரை கப்
பால் - ஒரு கப்
நாட்டுச்சர்க்கரை - 4 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
பாதாம் - 4
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - சிறிதளவு.

ஓட்ஸ் பால் கொழுக்கட்டை
செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அரைத்த ஓட்ஸ் மாவுடன் சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். கொதிக்கும்போது உருட்டி வைத்துள்ள ஓட்ஸ் உருண்டைகளைச் சேர்த்து வேகவிடவும். ஓட்ஸ் உருண்டைகள் நன்கு வெந்தவுடன் நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்க்கவும். பாலில் நாட்டுச் சர்க்கரை கரைந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும். பாதாமை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, ஓட்ஸ் பால் கொழுக்கட்டை மேல் தூவிப் பரிமாறவும்.

குறிப்பு:

ஓட்ஸ் மாவை உருண்டைகளாக உருட்டும்போது, கையில் மாவு ஒட்டிக்கொண்டால், சிறிது நெய்யைத் தடவிக்கொண்டு உருட்டவும்.

செர்ரி ஃபிரைடு மோதகம்
தேவையானவை:

கோதுமை மாவு - ஒரு கப்
தண்ணீர் - சிறிதளவு
உப்பு - ஒரு சிட்டிகை

பூரணத்துக்கு:

ஸ்வீட் கோவா - 100 கிராம்
செர்ரிப்பழம் - 10
பாதாம் பருப்பு - 6
டூட்டி ஃப்ரூட்டி - 2 டேபிள்ஸ்பூன்

பொரிக்க:

எண்ணெய் - தேவையான அளவு.

செர்ரி ஃப்ரைட் மோதகம்
செய்முறை:

வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவைச் சேர்த்து அத்துடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். பாதாம், செர்ரிப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஸ்வீட் கோவாவுடன் நறுக்கிய செர்ரிப் பழம், பாதாம் பருப்பு, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிசைந்த கோதுமை மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக்கி, சப்பாத்தி பதத்துக்குத் தேய்த்துக் கொள்ளவும். பிறகு, தேய்த்த வற்றின் நடுவே சிறிய கிண்ணத்தை வைத்து அழுத்தி, வட்டமான மாவுப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அந்த வட்டத்தின் நடுவே, ரெடி செய்து வைத்துள்ள செர்ரி மற்றும் நட்ஸ் பூரணத்தை வைத்து, கையாலேயே மோதகம் போல செய்யவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் விட்டு சூடானதும், ரெடி செய்து வைத்துள்ள மோதகங்களைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
தேவையானவை:

ரவை - ஒரு கப்
சர்க்கரை - முக்கால் கப்
துருவிய தேங்காய் - அரை கப்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
தண்ணீர் - ஒரு கப்.

ரவை ஸ்வீட் கொழுக்கட்டை
செய்முறை:

ரவையை வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும். வறுத்த ரவையுடன் சர்க்கரை, உப்பு சேர்த்துக் கிளறவும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்துக் கொதிக்க விடவும். பிறகு, இறக்கி ரவை பாத்திரத்தில் ஊற்றி ஒரு மூடியால் மூடி வேகவிடவும். அது வேகும் வரை அப்படியே மூடிவைக்கவும். சர்க்கரை கரைந்து ரவையுடன் சேர்ந்து ரவை கால் பாகம் வெந்திருக்கும். இத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். ஆறியவுடன் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்

கோதுமை ரவைக் கொழுக்கட்டை
தேவையானவை:

கோதுமை ரவை - ஒரு கப்
தண்ணீர் - 3 கப்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
கறிவேப்பிலை - 10
கடலைப்பருப்பு - 1/2 டீஸ்பூன்.

கோதுமை ரவைக் கொழுக்கட்டை
செய்முறை:

கடலைப்பருப்பை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றைச் சேர்த்து தாளிக்கவும். பிறகு 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இத்துடன் கோதுமை ரவை, ஊற வைத்த கடலைப்பருப்பு, கடைசியாகத் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி பாத்திரத்தை ஒரு மூடியால் மூடி வேகவிடவும். கலவை நன்கு வெந்தவுடன் ஆற விட்டு, உருண்டை பிடிக்கவும். பிறகு, ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

குறிப்பு:

ஊறவைத்த கடலைப்பருப்பை, கோதுமை ரவையைச் சேர்க்கும் போது சேர்த்து வேகவிடவும்.

ராகி அம்மணிக் கொழுக்கட்டை
தேவையானவை:

ராகி மாவு - அரை கப்
தண்ணீர் - அரை கப்
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

எண்னெய் - 2 டீஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு.

ராகி அம்மணிக் கொழுக்கட்டை
செய்முறை:

வாணலியை அடுப்பில் வைத்து ராகி மாவைச் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அரை கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு, வறுத்து வைத்துள்ள மாவில் ஊற்றி, உப்பு சேர்த்துப் பிசைந்துகொள்ளவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் வேகவைத்த ராகி அம்மணிக் கொழுக்கட்டை, தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

குறிப்பு:

சர்க்கரை, தேங்காய்த்துருவல் சேர்த்து, இனிப்பு அம்மணிக் கொழுக்கட்டையும் செய்யலாம்.

கம்பு அவல் காரக் கொழுக்கட்டை
தேவையானவை:

கம்பு அவல் - ஒரு கப்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 10
கடுகு - சிறிதளவு
உளுத்தம்பருப்பு - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

கம்பு அவல் காரக் கொழுக்கட்டை
செய்முறை:

கம்பு அவலை கழுவி, அரை மணி நேரம் வெந்நீரில் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தாளித்தவற்றை ஊறிய கம்பு அவலில் சேர்த்து உப்பு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பிசைந்த அவலை கொழுக்கட்டை களாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுக்கவும்.

வரகு பிள்ளையார்பட்டி மோதகம்
தேவையானவை:

வரகு - கால் கப்
பாசிப்பருப்பு - கால் கப்
வெல்லம் - ஒரு கப்
துருவிய தேங்காய் - கால் கப்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 2
தண்ணீர் - 3 கப்.

வரகு பிள்ளையார்பட்டி மோதகம்
செய்முறை:

வரகு, பாசிப்பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக (ரவை பதத்துக்கு) அரைத்துக் கொள்ளவும். அரைத்த ரவையுடன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து தீயைக் குறைத்து வேகவிடவும். இல்லாவிட்டால் அடிப்பிடித்துவிடும். இடையிடையே கிளறி விடவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி வெந்த ரவையில் ஊற்றிக் கிளறவும். கடைசியாக ஏலக்காய், தேங்காய்த்துருவல், நெய் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும். ஆறியவுடன் உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேகவைக்கவும்.

குறிப்பு:

ரவை வேகும்போது, தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை சுடவைத்து ஊற்றவும்.

அவல் மோதகம்
தேவையானவை:

கெட்டி அவல் - ஒரு கப்
பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள், தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.

அவல் மோதகம்
செய்முறை:

அவலைச் சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வெல்லத்தூளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டுக் கெட்டியாகும்போது இறக்கி வடிகட்டவும். அவலைத் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் தண்ணீர் இல்லாமல் வடியவிடவும். பாத்திரத்தில் அவலுடன் பாசிப்பருப்பு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லக் கரைசலைச் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசையவும். பிறகு கையில் சிறிதளவு நெய் தடவிக் கொண்டு, மாவைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். உருண்டைகளை 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

விரும்பினால் சிறிதளவு சுக்குத்தூள் சேர்க்கலாம். சரியாக உருட்ட வரவில்லை என்றால் மேலும் சிறிதளவு ஊறவைக்காத அவலைச் சேர்த்துப் பிசையலாம்.

வெஜிடபிள் மோதகம்
தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - ஒரு கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெந்நீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய

எண்ணெய் - 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, சீரகம், கடுகு - தலா கால் டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
துருவிய கேரட், முட்டைகோஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பாசிப்பருப்பு - 3 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

வெஜிடபிள் மோதகம்
செய்முறை:

பச்சை மிளகாயுடன் கறிவேப்பிலை சேர்த்து நைஸாக இடிக்கவும். பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இடித்த பச்சை மிளகாய் - கறிவேப்பிலை, கேரட், முட்டைகோஸ் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். பிறகு ஊறவைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி மூடி வேகவிடவும். காய்கறிகள் நன்றாக வெந்தவுடன் தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். இடியாப்ப மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரைச் சேர்த்துப் பிசையவும். மாவை எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி, பூரி அளவுக்குக் கையால் தட்டவும். ஒரு பூரியின் மீது சிறிதளவு பூரணத்தை வைத்து, மேலே மற்றொரு பூரியால் மூடி ஓரங்களை ஒட்டவும். குக்கி கட்டரால் ஓரங்களை விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும். இதை ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

பலாப்பழ மோதகம்
தேவையானவை:

இடியாப்ப மாவு (அ) அரிசி மாவு - அரை கப்
உப்பு - 2 சிட்டிகை
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

கொட்டை நீக்கிய பலாச்சுளை - 3 (துருவவும்)
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
வெல்லத்தூள் - கால் கப்
நெய் - ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

பலாப்பழ மோதகம்
செய்முறை:

தண்ணீரை நன்கு கொதிக்க வைக்கவும். இடியாப்ப மாவு (அ) அரிசி மாவுடன் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்றாகப் பிசையவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி தேங்காய்த் துருவல், பலாப்பழத் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துச் சுருள கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக்கவும். பிசைந்து வைத்துள்ள மாவை மோதக அச்சில் வைத்து அழுத்தவும். அதன் நடுவில் பலாப்பழப் பூரணத்தை வைத்து மாவால் மூடவும் (மோதகத்தை நன்றாக மூடவில்லையென்றால் வேகும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பிறகு, மோதகங்களை இட்லிப் பாத்திரத்தில் வைத்து ஆவியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு:

பலாச்சுளையைத் துருவுவதற்குப் பதிலாக மிக்ஸியில் பல்ஸ் மோடில் (Pulse mode) ஒரு நிமிடம் விட்டுவிட்டு அரைத்துத் தூளாக்கிக்கொள்ளலாம். பலாச்சுளை நன்கு பழுத்திருந்தால் பொடியாக நறுக்கியும் சேர்க்கலாம்.

பேக்டு மோதகம்
தேவையானவை:

மைதா மாவு - ஒரு கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - 2 சிட்டிகை
நெய் - தேவையான அளவு

பூரணம் செய்ய:

பாதாம், முந்திரி - தலா 10 (சிறிய துண்டுகளாக்கவும்)
உலர் தேங்காய்த் துருவல் (டெசிகேட்டடு கோகனட்) - 6 டீஸ்பூன்
பிரவுன் சுகர் - 3 டேபிள்ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

பேக்டு மோதகம்
செய்முறை:

மைதா மாவுடன் 2 டீஸ்பூன் உருக்கிய நெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். அதனுடன் தண்ணீரைச் சிறிது சிறிதாகச் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். பூரணம் செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கவும். மோதக மோல்டில் சிறிதளவு நெய் தடவி தேவையான அளவு மைதா மாவை வைத்து அழுத்தவும். அதன் நடுவே சிறிதளவு பூரணம் வைத்து, மைதா மாவால் சிறிய தட்டு போல் செய்து நன்றாக அழுத்தி மூடவும் (சரியாக மூடவில்லையென்றால் பேக் செய்யும்போது பூரணம் வெளியே வந்துவிடும்). பேக்கிங் ட்ரேயில் சிறிதளவு நெய் தடவி மோதகங்களை இடைவெளிவிட்டு அடுக்கவும். இதை 180 டிகிரி செல்ஷியஸில் 10 நிமிடங்கள் ப்ரீஹீட் செய்த மைக்ரோவேவ் அவனில் வைத்து 20 முதல் 25 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்ததும் சூடாக இருக்கும்போதே அதன் மீது சிறிதளவு நெய் தடவவும்.

* இது 10 நாள்கள் வரை நன்றாக இருக்கும்

*பகிர்வு*

⫷⫸⫷⫸🅜🅐🅛🅛🅘🅚🅐⫷⫸⫷⫸

மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி

 மணிமூர்த்தீஸ்வரம்*உச்சிஷ்ட கணபதி*

தாமிரபரணி ஆற்றங்கரையில் எழுந்தருளியிருக்கிறது மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம். இத்திருக்கோயில், சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இப்புராதனத் திருக்கோயிலில், விநாயகர் தன்னுடைய முப்பத்திரண்டு திருத்தோற்றங்களில் எட்டாவது வடிவமாக போற்றப்படுகின்ற உச்சிஷ்ட கணபதியாக அவதரித்து அருள்பாலித்துவருகிறார்.

ஜீவநதியான தாமிரபரணி கரையில் ஆசியாவிலேயே ராஜகோபுரத்துடன் எட்டு நிலை மண்டபங்கள், மூன்று பிராகாரங்கள், கொடிமரத்துடன் கூடிய சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் மூலவராக விநாயகர் எழுந்தருளியுள்ள தனித்திருக்கோயில் இது.

#ஹேரண்ட_மகரிஷி

கலியுகத்தில் விநாயகரைப் பற்றிப் போதிக்க முக்தல மகரிஷியைத் தென்நாட்டுக்கு அனுப்பிய சீடர்களில் ஒருவராகிய ஹேரண்ட மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெருமையும் இத்திருத்தல மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு உண்டு. இங்கு அவர், கருவறையில் அம்பாளை மடியில் தாங்கிக் காட்சி தருகிறார். மும்மூர்த்திகளை விட முதன்மை யான கடவுளாக விநாயகப் பெருமான் விளங்குவதால், அவரது மடியில் வீற்றிருக்கும் ‘நீலவாணி' அம்பாளும் முப்பெரும் தேவியரின் அம்சமாகக் கருதப்படுகிறார்.

கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல்

திருமணத் தடை நீங்குவதற்கும், தம்பதியரிடையே மன ஒற்றுமை ஏற்படுவதற்கும் பக்தர்கள் இவரை நம்பிக்கையுடன் வழிபடுகின்றனர். செல்வம் பெருகுவதற்குக் கொழுக்கட்டையையும், குழந்தை வரத்திற்குச் சர்க்கரைப் பொங்கலையும், நோய்கள் தீர்வதற்குக் கரும்புச் சாற்றையும் இங்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

முற்காலத்தில் பாண்டிய மன்னர்கள் முதல் நாயக்க மன்னர்கள் வரையிலும், அதன் பின்பு நகரத்தார்களும் வணங்கி அருள் பெற்ற இத்திருத்தலத்திற்கு அருகில் பைரவ தீர்த்தக் குளம் உள்ளது. இதில் புனித நீராடி உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. வருடந்தோறும் சித்திரை மாதத்தின் முதல் தினத்தன்று சூரிய ஒளி உச்சிஷ்ட கணபதியின் மீது பரவும் அதிசய நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது. அந்நாளில் சூரிய பகவான் விநாயகரை வணங்குவதாகச் சொல்லப்படுகிறது.

மூர்த்தி, தலம், தீர்த்தம், வரலாறு ஆகியவற்றால் சிறந்து விளங்கும் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கண்பதி திருத்தலம் வாழ்வில் ஒரு முறை கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய தலம்.

விநாயகர் சதுர்த்தித் திருநாளை முன்னிட்டு, அன்றைய தினம் உச்சிஷ்ட கணபதிக்கு விசேஷ அபிஷேகங்களும், சிறப்பு தீபராதனைகளும் நடைபெறுகின்றன. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

உச்சிஷ்ட கணபதியை வணங்க உள்ளம் மகிழும்.🙏🌹

Monday, August 29, 2022

திரு வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில்

 திருநாராயணபுரம்  திரு வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில்:-  திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ளது தொட்டியம் என்னும் ஊர்.இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது திருநாராயணபுரம். இங்கே அழகிய கோயிலில் இருந்தபடி உலகையே ரக்ஷித்து வருகிறார் ஸ்ரீவேதநாராயணப் பெருமாள். தாயாரின் திருப்பெயர்: ஸ்ரீவேதநாயகி. பெருமாள், தாயார் இருவரும் ஞானம் வழங்கி அருளும் அற்புதத் தலம் இது.

காவிரியின் வடகரையில் உள்ளது இந்தத் தலம். ஸ்ரீகம்பத்தடி அனுமன், ஸ்ரீகருடாழ்வார் ஆகியோரைத் தரிசித்தபடி உள்ளே செல்ல... அழகு கொஞ்சும் திருமுகத்துடன் திகழும் ஸ்ரீவேத நாராயணரைத் தரிசித்துக் கொண்டே இருக்கலாம். சிவபெருமானுக்குரிய வில்வ மரத்தைக் காணலாம். அந்த மரத்தடியில் பெருமாளின் திருவடிகள்; அருகில் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தனிச்சந்நிதியில் இருப்பதும் சிறப்பு. 

நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்ம தேவருக்கு வேத உபதேசம் செய்கிறார் ஸ்ரீதிருமால் என்பது ஐதீகம்.   பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் ஸ்ரீபூதேவியும் இருக்க கீழே பிரகலாதன் மூன்று வயதுக் குழந்தை வடிவில் காக்ஷி தருவது மிகவும் அழகு.

ஒரு சமயம் மகாபலிச் சக்கரவர்த்தி மைசூரை நோக்கிப் படையெடுத்துச் சென்றார். வழியில் மண்மேடாக இருந்த இடத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய பெருமாள், 'இங்கே பூமிக்கு அடியில் இருக்கும் என்னை மேலே எழுந்தருளச் செய்து, கோயில் எழுப்பு. இனி, உனக்கு ஜயம்தான்!’ என அருளினார். அதில் நெக்குருகிப் போன மன்னர், விடிந்ததும் பெருமாளின் திரு விக்கிரகத்தைப் பூமியில் இருந்து எடுத்து, பிரதிஷ்டை செய்து ஆலயம் அமைத்து வழிபட்டுச் சென்றார். அதுமட்டுமின்றி, அங்கே ஒரு கிராமத்தை உருவாக்கி, அதற்குத் "திருநாராயணபுரம்" என்று பெயர் சூட்டி, கிராமத்தையும் நிலங்களையும் தானமாக அளித்துவிட்டுச் சென்றார்; பிறகு மைசூரை வென்றார் என்கிறது ஸ்தல புராணம்.

பிரகலாதனைக் காப்பதற்காகவும், இரணியனை வதம் செய்வதற்காகவும் திருமால் ஸ்ரீநரசிம்ம அவதாரம் எடுத்தார் என்பதை நாம் அறிவோம். பிறகு பிரகலாதன், 'பெருமாளே! தங்களை சாந்த ரூபமாகத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவேண்டும்’ என வேண்டி நிற்க 'திருநாராயணபுரத்துக்கு வா!’ என்று அழைத்தார் திருமால். அதன்படி, இங்கே சாந்த ஸ்வரூப மூர்த்தியாக இருந்து, தன்னை நாடி வரும் அன்பர்களுக்கெல்லாம் அருள் வழங்கி வருகிறார் ஸ்ரீவேதநாராயண பெருமாள் என்கிறது ஸ்தல புராணம்.

ஸ்ரீபிரம்மாவின் கர்வத்தை ஒடுக்குவதற்காக, இங்கே ஸ்ரீவேத நாராயணராக இருந்து ஸ்ரீபிரம்மாவுக்கு வேத ஞானம் செய்தருளினார். ஸ்ரீவேத நாராயண பெருமாள், குரு ஸ்தானத்தில் இருந்தும் புதனுக்கு அதிபதியாக இருந்தும் அருள்பாலிக்கும் தலம் என்பதால், இங்கு வந்து வேண்டிக்கொண்டால், கல்வியும் ஞானமும் கைகூடும் என்கின்றனர், பக்தர்கள். கம்பத்தடியான் சந்நிதியில் நின்று சத்தியம் செய்யும் வழக்கம் இங்கு உண்டு.


27 அகல் தீபமேற்றி, நம் ஜாதகத்தைப் பெருமாளின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும். ஐந்து நெய்விளக்கேற்றி, வெண்தாமரை மலரால் அர்ச்சித்து வழிபட, தொழில் விருத்தியாகும்; வியாபாரம் செழிக்கும்.

கல்வி ஞானம் வேண்டுவோர், ஐந்து நெய் தீபமேற்றி, புத்தகம் மற்றும் பேனாவை ஸ்ரீவேதநாராயணரின் திருவடியில் வைத்து அர்ச்சித்து வழிபட்டால், கல்வி மேம்படும்; ஞானம் சிறக்கும்; தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது உறுதி என பக்தர்கள் பூரிப்புடன் தெரிவிக்கின்றனர். நமக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது இப்பெருமாளை தரிசித்து அருள்பெற அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

நா.சுவாமிநாதன், ‌எண்-25, அக்ரஹாரம், தேப்பெருமாநல்லூர் அஞ்சல் -612 204, ‌ கும்பகோணம்.

உத்திரகோசமங்கை

  வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய ஸ்தலம்..!

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.

ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி,

காசியில் இறந்தால் முக்தி.

அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள். இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.

ஆர் அறிவார் 
எங்கள் அண்ணல் பெருமையை
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.

உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

இங்கு மூன்று மூர்த்தங்கள்

மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை , தீர்த்தமும் இங்கே பச்சை,

விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது….

மகா பாரதப் போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது.

 (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. 

அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

அதற்கும் முந்தியது இராமாயணக் காலம்

இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர்.

உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. 

இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.

 அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள் மேலும் ராவணன்– மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம்.

 மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப் படுகிறது.

இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது.

 இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. 

ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். 

அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம்.

அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…இங்கே தான்...

இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில்தான கடல் இருந்தது. 

இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்க்கம் போய்விட்டது

இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.

அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி…இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன்.

 அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். 

பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம்.

 கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது.

இதுதான் கோவில் உருவான வரலாறு.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. 

வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. 

மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…

அதுதான் தாழம் பூ.

நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,

பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,

பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான்.

 இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.

நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.

 அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். 

மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். 

அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும். ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம்.களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். 

எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது.அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.

பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இத்தலத்திற்கு எப்படி செல்வது....

மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாத புரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப் புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது.

 கோயில் வரை வாகனங்கள் செல்லும்.

ஓம் நமச்சிவாய..

ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயம்.

 Astrolagy temple என்று அறியப்படுகின்ற ஸ்ரீ வித்யாசங்கரர் ஆலயம்.

உ.எண்.303.

கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து 100 கி.மி. தூரத்தில் அமைந்துள்ள தலம் சிருங்கேரி. அழகிய மலைகள் சுற்றிலும் அரண் செய்ய, புனித நதி துங்கபத்திரா குளுமையைத் தர, எழில்மிகு கோலத்துடன், ஆன்மீகச் சிறப்புடன் விளங்கி வருகிறது இவ்வாலயம். 

சுற்றிலும் உள்ள மலை ரிஷ்யசிருங்க பர்வதம் என்று அழைக்கப்படுகிறது. அத்வைத வேதாந்த தத்துவத்தைத் தென்னாட்டில் ஸ்தாபிக்க ஓர் மடத்தை நிறுவ விரும்பினார் ஸ்ரீ ஆதிசங்கரர். அதற்காகத் தகுந்த இடம் தேடி அவர் பாத யாத்திரை வரும்போது சிருங்கேரியில் ஓர் அற்புதக் காட்சியைக் கண்டார். கொளுத்தும் வெயிலில் நிறைமாத கர்ப்பிணியான தவளை ஒன்று பிரசவ வேதனையால் துடித்தபோது, ஒரு நல்ல பாம்பு படமெடுத்து தவளைக்கு நிழல் கொடுத்தது. ஒன்றுக்கொன்று பகையான அவை தம் பகையை மறந்து ஒன்றன்மீது ஒன்று அன்பு செலுத்தும் காட்சியைக் கண்ட அவர், அதுவே தாம் மடம் நிறுவத் தகுந்த இடம் என்று தீர்மானித்தார்.

சங்கரர் தன் 32 வருட வாழ்நாளில் சுமார் 12 வருடம் சிருங்கேரியில் தங்கி, சாரதாம்பாள் கோவிலையும், மடத்தையும் அமைத்து, அத்வைத வேதாந்தம், உபநிஷதத்தின் உண்மைப் பொருள் விளக்கம் எல்லாம் செய்தார். தமது சீடர்கள் மூலம் அவ்வுண்மைகள் எல்லா இடத்துக்கும் பரப்பினார்.

சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம் செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளாள்.

சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார்.

சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு செனறு தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.

சிற்பக்கலைச் சிறப்பு வாய்ந்த வித்யாசங்கரர் கோவில், மலைக் குன்றுகளும் நிலமும் நீர்வளமும் அமைதியான சூழ்நிலையை உண்டாக்கும்.

ஸ்ரீ வித்யாசங்கர கோவில் - 600 வருடம் பழமையான  கலைவேலைப்பாடு கொண்ட கோவில் - ஸ்ரீசக்கர வடிவில் இருக்கிறது . உள்ளே லிங்க வடிவில் ஸ்ரீ வித்யா சங்கரர் - உள்ளே அழகிய தூண்கள் இருக்கின்றன.

வித்யா சங்கரர் கோயிலின் அமைப்பு திராவிட ஹொய்சள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது. இதன் நீள்வட்ட வடிவமும், சிகர விமானத்தின் அமைப்பும் தனித்துவம் மிக்கவை. சுற்றுச் சுவர்களில் சிவன், விஷ்ணு, தேவி மற்றும் பல தெய்வ மூர்த்தங்களின் அழகிய திருவுருவங்கள் உள்ளன. 

கோயிலுக்குள் மகாமண்டபத்தில் பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும் பன்னிரண்டு தூண்கள் உள்ளன.

 ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய ராசியைக் குறிக்கும் தூண் மீது சூரிய ஒளி நேரடியாக விழுமாறு நேர்த்தியாக இத்தூண்கள் அமைக்கப் பட்டுள்ளன. 

ராசி சக்கரத்தின் சின்னங்களான 12 ரூபங்களுள்ள (Zodiac signs) 12 சப்தஸ்வங்களால் ஆலய மண்டபம் சுற்றப்பட்டிருக்கிறது 

12 மாத கால அளவில் ஒவ்வொரு துணிலும் சூரியகிரகணங்கள் விழுகின்ற அமைப்பில் மிக அற்புதமாக இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது..

இந்த மாதிரி இடங்களை நம் சுற்றுலாத் துறை கூட  உயர்த்தி காட்டுவதில்லை 😢

தாஜ்மஹாலை போய் பார்க்க நம்மை படிப்பித்த சமூகம்.. நம் பாரதத்தின் வேத வாஸ்துவிதக்தர் தந்த அற்புதங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் வடிவமைப்பை காண படிப்பிக்கவில்லை. 

இனியாவது சிறிது நம் நாட்டின் கலாசாரசமூகத்தை திரும்பி பார்ப்போம்..

ஆலம்பழம்

இயற்கை மருத்துவம்

*அற்புதமான மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஆலம்பழம்.*

ஆல மரத்துப் பால், இலைகள், பட்டை, கனிகள், விதைகள், மொட்டுகள், வேர், விழுதுகள் யாவும் மருத்துவப் பொருட்களாகப் பயன் படுகின்றன.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் உடல் நலனைப் பொறுத்து தினசரி ஒரு தேக்கரண்டி பாலில் கலந்து அருந்தலாம்.

ஆலம்பழத்தை பொடி செய்து சர்க்கரை கலந்து சாப்பிட்டு வர மூலநோய் குணமாகும். சரும பளபளப்பிற்கு ஆலம்பழம் ஏற்றது. குளியல் சோப்பு தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

ஆலம் பழம் தசை வலிகளை நீக்கும். இது பெண்களின் மாதவிலக்குப் பிரச்சினைகளை நீக்கவல்லது. பல்வலி ஏற்படும் நேரத்தில் ஆலம் மொட்டினை வாயில் அடக்கிக் கொண்டொருந்தால் பல்வலி போக்கும்.

பூக்காம்புகளை, அத்தி மரப்பட்டையில் கலந்து பவுடராக்கிக் கொண்டு, இதனுடன் சம எடையளவு சர்க்கரைசேர்த்து பாலுடன் கலந்து பயன்படுத்தலாம். இதனால் இந்திரியத்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும்.

ஆலமரத்துப் பட்டையை உலர்த்தி, அரைத்து, சமஅளவு வெண்ணெய் கலந்து காலை, மாலைவேளைகளில் 4 கிராம் அளவு வரையில் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப் பாடு நோய் நலம் பெறும். கர்ப்பப்பை வீக்கத்தைக் குணப்படுத்த இதனை 6 கிராம் அளவு வரையில் பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

ஆலமரத்தின் பழங்களை உலர வைத்து அரைத்து 12 கிராம் அளவு எடுத்துப் பாலுடன் கலந்து குடித்தால் இந்திரியம் திடப்படும். ஞாபக மறதி நீங்கும். உடல் கட்டுக்கோப்பாக இருக்கும். ஆலமரக் குச்சிகளில் பற்களைத் தேய்த்து வந்தால்பற்களும் ஈறுகளும் வலிமை பெறும்.

 ராமானுஜ தயா பாத்ரம்

ஆவணி ஹஸ்தம் நன்னாளில் ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்

ஒரு சமயம் ஸ்வாமி தேசிகன், தன் குமாரர் வரதாசார்யர், ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ரர் மற்றும் சிஷ்யர்கள் சூழ, திருநாராயணபுரம் /மேல்கோட்டை எழுந்தருளினார். 

அங்கு, ஸ்வாமியின் திருக்குமாரர் பகவத் விஷய” காலக்ஷேபம் சொல்லத் தொடங்கினார். 

ப்ரஹ்ம தந்த்ர ஸ்வதந்த்ரர், தேசிகனின் அனுமதியைப் பெற்று, காலக்ஷேப கோஷ்டியில் அமர்ந்து ஸ்வாமியின் திருக்குமாரர் பற்றிய கீழ்கண்ட தனியனை அனுஸந்தித்தார்.

ஸ்ரீ மந் லக்ஷ்மண யோகீந்த்ர ஸித்தாந்த விஜயத்வஜம் |
விச்வா மித்ர குலோத் பூதம் வரதார்யமஹம் பஜே ||

பிறகு, தர்சனப்ரவர்த்தகர் ஸ்ரீ உடையவரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும், தாய் மாமாவானஸ்ரீ அப்புள்ளாரின் பரிபூர்ண கடாக்ஷத்துக்கும் பாத்ரரான ஸ்வாமி தேசிகன் விஷயமாக,

ராமானுஜ தயா பாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷணம் |
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம் ||

என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு குரு பரம்பரையைச் சொல்லி, பகவத் விஷய காலக்ஷேபத்தைக் கேட்கத் தொடங்கினார்.

இதனை அறிந்த ஸ்வாமி தேசிகன், “ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய” என்கிற தனியன், தன்னுடைய பெருமையைச் சொல்கிறது.

 ”ராமானுஜ தயாபாத்ரம்….” என்கிற தனியன், தனக்கு ஏற்பட்டுள்ள சதாசார்ய கடாக்ஷப் பெருமையைச் சொல்கிறதுஎன்று சந்தோஷப்பட்டார்.

 பின்னர் ”ஸ்ரீமாந் வேங்கட நாதார்ய:” என்கிற தனியன் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபத்தின் போது அநுஸந்திக்கும் படியும் 

”ராமானுஜ தயா பாத்ரம்” என்கிற தனியன் “பகவத் விஷய” காலக்ஷேபத்தின்போது அநுஸந்திக்கும்படியும் நியமித்தார்.

 இவ்வாறு பஹுதான்ய வருடம், ஆவணி ஹஸ்தம் நன்னாளில் ராமானுஜ தயா பாத்ரம் தனியன் அவதாரம்.

பின்னர் ஸ்ரீரங்கநாதனின் நியமனத்தின் படி தமிழ் பிரபந்தங்களை ஸேவிக்கும் முன் இந்த தனியனை அநுஸந்திக்கும் முறை பின்பற்றப்படுகிறது.

புடலங்காய்

 புடலங்காயை ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப்பகுதியை மட்டும் பயன் படுத்த வேண்டும். புடலங்காயை பச்சை பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்து விடும்.

எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

அதிக உடல் சூட்டால் மஞ்சள்காமாலை நோய் ஏற்பட்டால் அவர்கள் புடலங் கொடியின் இலைகளை கைப்பிடி அளவு எடுத்து அதனுடன் அதே அளவு கொத்த மல்லி சேர்த்து 300மிலி தண்ணீரில் கொதிக்கவைத்து அந்த தண்ணீரை வடிகட்டி மூன்று வேளை குடித்து வந்தால் மஞ்சள்காமாலை கட்டுப்படும்.

இதய கோளாறு உள்ளவர்கள் புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும் 2 தேக்கரண்டிவீதம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.

புடலையின் வேரை கைப்பிடி எடுத்து மைய அரைத்து சில துளிஅளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால் மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.

புடலங்காயை பொறியல் செய்து சாப்பிட நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள் புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர அனைத்து வகையான சத்துக்களும் அவர்களுக்கு கிடைக்கும்.

கடும் காய்ச்சல் உள்ளவர்கள் வெட்டிய புடலங்காய் 250கிராம் எடுத்து 300மிலி தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி 200மிலி குடித்தால் ஒரே நாளில் காய்ச்சல் இயற்கையாக நீங்கும்....

சாளக்ராமம்

 சாளக்ராமம் ! !

 சாளக்ராமம் ' ஸ்வயம்வ்யக்தம் ' எனப் படுகிறது . பல நூல்களில் பலவிதங்களில் சாளக்ராம மகிமை புகழப் படுகிறது . புனித நூல்கள் சாளக்ராம பூஜை பற்றி சில விதிகளையும் கூறுகின்றன.

 பேருந்திலோ, ரயிலில் பல மணி நேரங்கள் பயணிக்கத் கூடிய தூரத்தை மிக குறைந்த நேரத்தில் விமானங்கள் கடந்து விடுகின்ற அதில் பயணிக்கின்றவர்களுக்கு அந்த குறைந்த நேரம் என்பது மட்டுமே நெஞ்சில் நிலைக்கிறது . அப்படிப் பட்டவர்களுக்கு விமானம் புறப்படும் முன், விமானப் பணிப் பெண்கள் செய்கைகளோடு விளக்கும் ' பாதுகாப்பு விதிகளை ' கவனிக்க மாட்டார்கள் .ஆனால் ஆபத்து காலத்தில் அலறுவார்கள் .

 நல்ல தெரிந்த பெரியோர்கள் துணையோடும் வழிகாட்டுதலோடும் பூஜை செய்தால் வைகுண்டமே கிட்டும் . ஆனால் அப்படி வாய்ப்பு அமையப் பெறாதவர்களையும் பரமாத்மா கை விடுவதில்லை.

 அதற்கு பக்தர்கள்,திருமால் ஆலயங்களிலோ, பெரியவர்கள் இல்லத்தில் கிடைக்கும் சாளக்ராம அபிஷேக தீர்த்தத்தை பருகுவதால் மட்டுமே பூஜை செய்த முழுதான பலனை அடைந்து விடலாம்.

 'அன்யேஷாம் தீர்த்த பானேன தத்பலம் சித்தி ஸ்வயம் ' என்று  ' திவ்ய தேச வைபவம் ' என்ற க்ரந்தம் இக்கருத்தை தெளிவாக கூறுகிறது .

உடலில் ரத்தம் ஊற_

 *_உடலில் ரத்தம் ஊற_* 

 மூன்று நாட்கள் தேனில் ஊறவைத்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுங்க!

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.

அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது எப்படி?

ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

* நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும்.

* பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும்.

* தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

* பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.

* செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

* முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.

* இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப் படுகிறது.

* தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.

* இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.

* விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

Sunday, August 28, 2022

ஹனுமந்தராயசுவாமி திருக்கோயில், பேரூர்

 *அருள்மிகு ஹனுமந்தராயசுவாமி திருக்கோயில், பேரூர், கோயம்புத்தூர்*

*திருவிழா* மார்கழி மாதம் மூலநட்சத்திரத்தன்று அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.  

*தல சிறப்பு* அஷ்ட அம்சம் கொண்ட ஆஞ்சநேயர் அருள்பாலிப்பதால் சிறப்பு மிக்கதாகும்.  

அருள்மிகு ஹனுமந்தராயசுவாமி திருக்கோயில், காஞ்சிமாநதிக்கரை, படிக்கரை, பேரூர், கோயம்புத்தூர்-641010.  

*பொது தகவல்* கிழக்கு முகம் பார்த்து கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அனுமன் உபபரிவாரங்கள், அம்மன் தெய்வங்கள் கிழக்கு முகம் பார்த்தே உள்ளன.  

*பிரார்த்தனை* வீரம் பெற, நோய் போக, படிப்புகளில் சிறப்பாக உள்ள, கல்யாணம் பெற, குழந்தைகள் நலம் பெற வேண்டிக்கொள்கின்றனர். வேலை சிறப்பு பெறவும் பிரார்த்திக்கின்றனர்.  

*நேர்த்திக்கடன்* வெற்றிலை மாலை, வடைமாலை, எலுமிச்சம்பழம் மாலை, துளசிமாலை மற்றும் பொங்கல், பால்சோறு வழங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.  

*தலபெருமை*

இக்கோயிலில் உள்ள அனுமந்தராய சுவாமி (அஷ்டாம்ஸம்) 8 விதமான சிறப்பு அம்சத்துடன் அருள்பாலிக்கிறார்.

வரம் தரும் வலது கரம், எதிரிகளை அழிக்க இடது கடத்தில் தாமரை, சகல வியாதிகள் நீங்க கிழக்கு நோக்கிய முகம், யம பயம் நீங்க வடக்கு நோக்கிய பாதம், நவக்கிரக தோஷம் நீங்க வடக்கு நோக்கிய வால், ருத்ராம்மான அமைப்பு, ஜீவ நேத்ரம் (உயிரோட்டமான பெரிய ஒளிவீசும் கண்கள், லட்சுமி கடாட்சமான அனுக்கிரகம்.  

*தல வரலாறு*

தென்னகத்தில் அனுமனுக்கு பரவலாக தனிக்கோயில்கள் பல இருந்தாலும் கோவை மாவட்டம் பேரூர் பட்டீசுவரர் கோயிலின் வடபுறம் நெய்யல் ஆற்றங்கரையோரம் மிக கம்பீரமான அனுமந்தராயர் எனும் நாமத்தோடு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இக்கோயில் சுமார் (1000)ஆயிரம் ஆண்டிற்கு முன் முசுகுந்தன் என்னும் அரசனால் கட்டப்பட்டது. இவ்வரசனுடைய திருவுருவம் மற்றும் வரலாறு பேரூர் கோயில் கல்தூண் ஒன்றில் இன்னும் காணலாம். 

சோழர் காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டு பல முனிவர்கள், ரிஷிகள் போன்றோர் வழிபட்டு பேர் பெற்றுள்ளது. மிகவும் சிறப்பு வாய்ந்தது இக்கோயில்.

நல்லிணக்கேஸ்வரர் கோவில்

ஆன்மீக சபா
25-08-2022
Prema in facebook post

முதலில் எனக்கு கோவில் பற்றி சொல்ல வாய்ப்பு அளித்த மத்யமருக்கு மிக்க நன்றி.

you tube link இல் முதலில்  இசைக் குடும்பம் ஆகிய Nikila Shyam Sunder  வின் பேரன் sri Raghav என்ற 7 வயதுப் பையன் "கடவுள் வாழ்த்து" அருமையாகப் பாடினான்.

அதன் பின் ஶ்ரீ தீபக் என்ற college student மிகக் கோர்வையாக தமிழ், கொஞ்சம் ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் தங்கு தடையின்றி "பிள்ளையார் பெருமை" பற்றி குட்டிக் கதைகள், படங்களோடு மிக அழகாக உரைத்தார்.

மூன்றாவதாக நான் சென்னை அருகில் எழுச்சூர் என்ற இடத்தில் உள்ள பழைய சிவன் கோவில் பற்றிப் பேசினேன்.

இந்தக் கோவில் குறித்து திரு ராமசாமி என்ற நண்பர் கூறி இருந்தார். இது முக்கியமாக கணவன் மனைவி,  மாமியார் மருமகள், அண்ணன் தம்பி இப்படி உறவுகளுக்குள் நடக்கும் பிரச்சினைகள், மற்றும் சொத்து பிரச்சனைகள் இணக்கமாக தீர்த்து வைப்பதால் இந்த சிவன் நல்லிணக்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள அம்பாள் தெய்வநாயகியின் அருளால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகும். மற்றும் சங்கீதத்தில் சாதிக்க நினைப்பவர்களும் அம்பாளின் அருளை பெறலாம். வரங்கள் தந்து வேண்டுதல்களும் நிறைவேறும்  பிரார்த்தனை தலமாகும்.

நல்லிணக்கேஸ்வரர்_சிவன்_கோவில்
தெய்வநாயகி_ ezhichur 

இன்று நாம் பார்க்கப் போகும் கோவில், சென்னையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தெய்வ நாயகி சமேத நல்லிணக்கேஸ்வரர் என்ற சிவன் கோவிலாகும்.

சென்னையிலிருந்து வாலாஜாபாத் செல்லும் வழியில் படப்பை வழியாக ஒரகடம் தாண்டி சென்றால் எழுச்சூர் கூட்டுரோடு என்ற ஜங்ஷன் வரும். அங்கே இடதுபுறம் திரும்பி உள்ளே செல்ல வேண்டும். மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

விஜயநகரப் பேரரசர் வீர நரசிம்மர் காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி வியாசாசல மகா தேவேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தானமாக கொடுத்தார் என்று தாமிரப் பட்டய தகவல் சொல்கிறது.   

1200 வருடம் முன்பு முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டில் இந்த ஆலயத்தை கற்றளியாக மாற்ற பொன் தானமாக வழங்கப்பட்ட தகவல் உள்ளது.

இதன் சிறப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னால் ஒரு விஷயம் கேள்விப்பட்டோம். 

ஒரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் புதர் மண்டிய இந்த இடத்தைக் கண்டு பிடித்தாராம். காஞ்சி காமகோடி பீடத்தின் உத்தரவின்படி,  பக்தர்கள் உதவியோடு முழுமையாக புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் 2012 இல் நடத்தப்பட்டது.

இங்கே உள்ள தெய்வங்களோடு காஞ்சி காமகோடி பீடம் 54வது பீடாதிபதி வியாசாசல மஹாதேவேந்திர சரஸ்வதி
சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது.

இங்கு தல விருட்சமாக சில மரங்கள் உள்ளன. அதில் ஏரழிஞ்சில் என்ற மரத்தின் பழங்கள் மீண்டும் மரத்தின் இடமே சென்று ஒட்டிக் கொள்ளுமாம்.
இங்கே மற்ற தெய்வங்களோடு காலபைரவர், நவகிரக சன்னதியும் உள்ளன. 

இப்போது இந்த கோவிலின் சிறப்பை பற்றி திரு ராமமூர்த்தி அவர்கள் வீடியோவில் தெரிவிப்பார்.

இத்துடன் சில புகைப்படங்கள் உள்ளன அதில் அவர் கூறும் விவரங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

கீழே படங்களும் வீடியோவும் தந்து உள்ளேன். 

என்னுடன் என் கணவரும் Anandhi Vaithiyanathan உம் வந்தனர்.

தவிர எனக்கு ஒரு ஆசை. Madhyamar யாராவது செய்யுங்கள்.

சென்னையைச் சுற்றியும் கும்பகோணம் போலவே நவகிரக ஸ்தலங்கள் உள்ளன.  பலருக்கும் தெரிந்த கோவில்கள் சில மட்டுமே.

மற்றவை அவ்வளவாகத் தெரியாதவை. 

நாங்கள் வேறு வேறு நாட்களில் பொதுப் போக்குவரத்து/ ஆட்டோவில் சென்றோம். 

விவரம் குறித்துக் கொள்ளவில்லை. இப்போது  யாராவது சென்று கோவில் நேரம், map, எவ்வாறு செல்வது போன்ற விவரங்கள், ஃபோட்டோ, விடியோ எடுத்து வந்தால் நன்றாக இருக்கும். 

சோமங்கலம், கொளப் பாக்கம்,
கெருகம்பாக்கம், கோவூர் போன்றவை கொஞ்சம் interior.

நிச்சயம் காண வேண்டிய திருத்தலங்கள்.(அவற்றின் map, பெயர்கள் ஃபோட்டோ தந்து இருக்கிறேன்)

நான்காவதாக Sudha selvakumar
கம்ப்யூட்டர் சாம்பிராணி செய்வது எப்படி என்று சொல்லித்தந்தார்.

சபா team சேர்ந்த Geethmala Raghavan மற்றும் sujatha krishnamoorthiஅவர்களும் மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கினர், சபா team உதவியுடன்.

நன்றி, Madhyamar Admin 

சங்கர் ராஜரத்தினம்.

நேற்றைய youtube link: Full prog.
https://youtu.be/vcBWNCCLDns

வனபத்ரகாளி அம்மன்

 *வனபத்ரகாளி அம்மன்* 

வடக்கு பார்த்த பத்ரகாளியம்மன் மற்றும் சுயம்பு மூர்த்தி, கிழக்கு பார்த்த கன்னிமார், நாகர் அமைந்துள்ளன. குழந்தை பாக்கியம், குடும்ப கஷ்டங்கள் உள்ளிட்ட சங்கடங்கள் நீங்க 11 நாட்கள் அல்லது 21 நாள் தொடர் வழிபாடு செய்கின்றனர். கெடா வெட்டு, அம்மனுக்கு நகை சாட்டுதல் செய்து பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்துகின்றனர்.  

150 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சுயும்பு மூர்த்தியும், அரச மரமும் இந்த கோயிலின் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது.  

கோவை பொம்மண்ணம்பாளையம் சின்னமலை அடிவாரத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பாட்டி சித்தரால் அமைக்கப்பட்டதே இந்த வனபத்ர காளியம்மன் கோயிலின் சுயம்பு லிங்க மூர்த்தி. 

மருதமலையில் வீற்றிருக்கும் பாம்பாட்டி சித்தர் அங்கிருந்து முன்னர் காலத்தில் குகைகள் வழியாக அடிக்கடி இந்த சுயம்பு லிங்க மூர்த்திக்கு வந்து பூஜை செய்தது முன்னோர்களால் கூறப்பட்டது.

சுயம்புலிங்க மூர்த்தி இருக்கும் நேரத்திலேயே இங்கு அம்மன் சிலையும் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்தே இதற்கு வனபத்ரகாளியம்மன் என்ற பெயரும் வந்தது.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு முன்பெல்லாம் பக்தர்கள் அடிக்கடி செல்ல மாட்டார்கள். ஆனால் நினைத்த காரியங்கள் நிறைவேறி வருவதையடுத்து 1995 ஆம் ஆண்டு முதல் பத்ரகாளியம்மன் கோவில் சீரமைக்கப்பட துவங்கியது. 

கடந்த வருடம் 2016 ல் விநாயகர் சிலை ஒன்றும் புதிதாக நிறுவி கும்பாபிஷேகம் நடந்தது. பொதுவாக இந்த கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு எந்த கஷ்டங்கள் இருந்தாலும் இங்கு வந்து சென்றால் ஒரு மாற்றம் நிகழும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்

 *ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்* 

நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இதில் 4ம் பிரகாரம் மிகவும் அதிசயத்தக்க அளவில் உள்ளது.

இத்தலத்து ராஜகோபுரம் இந்தியாவின் மிகப்பெரிய ராஜகோபுரம் என்பது குறிப்பிடத்தக்கது. தை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது. 

சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில். பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை. இத்தலத்து விமானம் பிரணாவாக்ருதி எனப்படுகிறது. 

வட இந்தியாவிலிருந்து பெருமளவில் பக்தர்கள் வருகை தரும் சிறப்பு வாய்ந்த வைணவ தலம். இந்தியாவில் உள்ள சில பிரம்மாண்டமான கோயில்களில் இதுவும் ஒன்று.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 1 வது திவ்ய தேசம்.     

மோட்சம் தரும் தலம் இது என்பதால் இத்தலத்து பெருமாளை வணங்குவது பிறவிப் பயனாகும். திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வி, ஞானம், வியாபார விருத்தி, குடும்ப ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இத்தலத்து பெருமாளிடம் பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர்.  

சுவாமிக்கு வெண்ணெய் பூசுதல், குங்குமப்பொடி சாத்துதல், சுவாமிக்கு மார்பிலும் பாதங்களிலும் சந்தன குழம்பு அணிவிக்கலாம். சுவாமிக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுபத்தி, வெண்ணெய், சிறுவிளக்குகள், துளசி தளங்கள், பூக்கள், பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து இறைவனுக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.  

ரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம். கோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது. 

திருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது. 

*மோட்ச ராமானுஜர்* : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது. 

*பெருமாளுக்கு 365 போர்வை* : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர். 

*காவிரி நீர் அபிஷேகம்!* : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக் கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம். 

தானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். 

அன்னத்திற்கு அதிபதியான அன்னப் பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு. 

*நோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்* : மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. 

தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது. 

*ஒரே சன்னதியில் மூன்று தாயார்* : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயகப்படுகின்றன.

இத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். 

ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. 

அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்மவர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளி கொண்டருள்வதாக உறுதியளித்தார். 

பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.