சித்திரை மாதத்தில் சரம் சரமாகப் பூத்துக்குலுங்குவதால் சரக்கொன்றையைச் சித்திரைப்பூ, திருக்கொன்றை, சுவர்ண புஷ்பம் என்றும் அழைக்கிறார்கள். கோடையின் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சரக்கொன்றை மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும். ஓரடி நீளத்துக்கும் அதிகமாக வளரக்கூடியது. பூச்சரங்கள் பொன்னிறமாக ஜொலிக்கும். புத்தாண்டில் சரக்கொன்றை மலரைப் பார்ப்பதால், வாழ்வில் வளம் கூடும் என்பது நம்பிக்கை. கேரளாவிலும் விஷுக்கனி தரிசனத்தில் கொன்றை மலர் இடம்பெறுகிறது. சரக்கொன்றையின் பூ, இலை, மரப்பட்டை என அனைத்துக்கும் மருத்துவக்குணங்கள் உள்ளன.
சரக்கொன்றைப்பூவை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி இரண்டு சொட்டுகள் காதில் விட்டுவர காது நோய்கள் குணமாகும்.
கொன்றைப்பூவை ஆவியில் வேக வைத்து அதன் சாறைப்பிழிந்து அதில் நாட்டுச் சர்க்கரைச் சேர்த்து கால் லிட்டர் அளவு குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறிவிடும்.
தேமல், சொறி, சிரங்கு உள்ளவர்கள் கார்போக அரிசியுடன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) கொன்றைப்பூவைச் சேர்த்து அரைத்துப் பூசி வந்தால் குணம் கிடைக்கும். இலைவிழுதையும் சரும நோய்களுக்குப் பூசி வருவதன்மூலம் பலன் கிடைக்கும்.
இலையை மையாக அரைத்து சாறு எடுத்து அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து படர்தாமரை உள்ள இடங்களில் பூசி வந்தால் குணம் கிடைக்கும்.
கொன்றைப்பூவை மையாக அரைத்து காய்ச்சியப் பசும்பாலுடன் சேர்த்துக் குடித்து வந்தால் உள்ளுறுப்புகள் பலம்பெறுவதோடு, உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
கொன்றைப்பூவை மையாக அரைத்து 10 கிராம் அளவு எடுத்துப் பசுவெண்ணெயில் சேர்த்துக் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல், வெட்டை நோய்கள் உள்ளிட்ட மேக நோய்கள் நீங்கும்.
பூக்களைக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சர்க்கரை நோய் மற்றும் வயிற்றுக்கோளாறுகள் சரியாகும். வேர்ப்பட்டை கஷாயம் இதய நோய், காய்ச்சல் போன்றவற்றைக் குணமாக்கும். கொன்றைப்பட்டை, தூதுவளைவேரை சம அளவு எடுத்து தூளாக்கி தேனில் குழைத்து பாலுடன் சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சளி, கபக்கட்டு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்னைகள் சரியாகும்.
இலை மற்றும் பூவை அரைத்து கண்களின்மேல் வைத்துக் கட்டி வந்தால் கண் நோய்கள் வராது.
இலைச்சாறுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் குடித்து வந்தால் மூலக்கோளாறுகள், மலக்கட்டு, ஆசனப்பகுதியில் எரிச்சல் மற்றும் வலி, ஆசனக்கடுப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும்.
சரக்கொன்றை மரத்தில் முருங்கைக்காய் போலவே 2 அடி நீளத்துக்குக் காய் காய்க்கும். அதன் உள்ளே இருக்கும் பசையுள்ள சதைப்பற்று புளியைப்போலவே காணப்படும். அதைச் சரக்கொன்றை புளி என்பார்கள். இதைச் சாதாரணப் புளியுடன் சேர்த்து சாப்பிட்டு வர பித்தக்கோளாறுகள் சரியாகும். கர்ப்பிணிகள், குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்தால் மலச்சிக்கல் சரியாகும். ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது நல்லதொரு மருந்தாகிறது.
சரக்கொன்றை புளியை நெல்லிக்காய் அளவு எடுத்து அதனுடன் அரை ஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வயிறு சுத்தமாகும். அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் மோரில் உப்பு சேர்த்துக் குடித்தால் நிலைமை கட்டுக்குள் வரும். வயிறு சுத்தமாவதன்மூலம் மலச்சிக்கல் பிரச்னைக்குத் தீர்வு கிடைப்பதோடு, புற்றுநோய் வராமல் தடுக்கும் பணியைச் செய்கிறது.
No comments:
Post a Comment