Sunday, May 15, 2022

ரகோபதேஸம்_13

 #ரகோபதேஸம்

எழுதியது பாஸ்கர் சத்யா 

#ரகோபதேஸம்_13

இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் மடத்தில் நாங்கள் இருவரும்.

'மாமா பிஸியா?'

'அதெல்லாம் ஒண்ணுமில்ல‌டா.  மாத்யான்னிகம் பண்றதுக்கு முன்னாடி மடத்த க்ளீன் பண்ணிண்டிருந்தேன்.  ஆச்சு முடிஞ்சிடுத்து''

'நான் வேணா பூவெல்லாம் பறிச்சிண்டு வரட்டுமா மாமா?'

'பூவெல்லாம் பறிச்சாச்சு.  இன்னைக்கு என்னமோ கொள்ள பூ நிறைய பூத்திருந்துது.'

பேசிக்கொண்டே கை கால்களை அலம்பிக்கொண்டு தன்னை சற்று ரிலாக்ஸ் பண்ணி கொள்வதற்காக அங்குள்ள நாற்காலியில் உட்காருகிறார்.

'ரெண்டு நாள் முன்னாடி என்ன சொல்லிக் கொடுத்தேன் நோக்கு?  ஞாபகம் வெச்சிருக்கியோ?'

'என்ன மாமா இப்படி கேட்டுட்டேள்?  பக்தியோட இம்பார்ட்டன்ஸ பிரமாதமா சொல்லிக் கொடுத்தேளே.'

'இதெல்லாம் வாத்யார்களோட டெக்னிக்.  நேத்திக்கு எதுவரைக்கும் சொல்லிக் கொடுத்தோம்னு சிஷ்யன் கிட்ட இப்படி ஒரு கேள்வி கேட்டு தன்னோட ஞாபகத்துக்கு கொண்டுவர ஒரு டெக்னிக்.'

அவர் இப்படி சொன்னவுடன் இருவருமே சிரிக்கிறோம்.

'இன்னிக்கு என்ன பாடம் நடத்தலாம்?'

'உங்க இஷ்டம் மாமா.'

'இன்னிக்கு சிக்ஷைய பத்தி தெரிஞ்சுப்போம்.  மனுஷாளுக்கு அறிவு கற்கும் கல்வியாலேயும் அனுபவங்களாலேயும் கிடைக்கிறது.  அனுபவ அறிவு அப்படிங்கறத வேறொரு வகுப்புல நோக்கு சொல்லித் தரேன்.'

'கல்வி கற்பதுங்கறதுல அடிப்படையாக மூணு  நிலைகள் இருக்கு.  கேட்டல், கேட்டதை மனதில் வாங்கி ஆராய்தல், அறிந்ததை தியானத்தின் மூலமாக நிலைத்திருக்கச் செய்தல்.  கற்க கசடற கற்றபின் ஸநிற்க அதற்கு தக அப்படின்னு கூட திருக்குறள் நோக்கு ஸ்கூல்ல சொல்லி கொடுத்துருப்பாளே.'

'இந்த மூன்று நிலைகள வேதங்கள்ல சிரவணம், மனனம் மற்றும் நிதித்யாஸனம்  அப்படின்னு சொல்லியிருக்கா.  ஆதி சங்கரர் விவேக சூடாமணியில் உண்மையான சீடனின் கடமைகளையும், ஆசிரியரின் பங்கையும் விரிவா ரொம்ப பிராமதமா சொல்லியிருக்கார். அதுல குருவாகப்பட்டவர் தனது சிஷ்யனுக்கு ஞானத்தை ஊட்டுவது என்பது, இயற்கையா வரணும்னு சொல்லியிருப்பார். வசந்தகாலம் எப்படி நம்மிடமிருந்து எந்த எதிர்பார்ப்பும் இல்லாது நமக்கு இனிமை அளிக்கிறதோ அதுபோன்றது என்று  உவமானம் சொல்லி குருவாகப்பட்டவர் தன்னலமில்லாம இருக்கணும் அப்படின்னு சொல்லிருக்கார்.'

'தைத்ரீயோபநிஷதத்தின் முதல் பகுதி சீக்ஷாவல்லி. இதில் குருகுலத்தில் பயில வேண்டிய முறை, உபாசனை, தியானம், கல்வி கற்றபின் லோகத்துல எப்படி வாழறது போன்றவற்றையெல்லாம் அதி அத்புதமா சொல்லப்பட்டிருக்கு. குருகுல வாசத்தின் முடிவில், குருகுலத்தை விட்டுச் செல்லும் மாணவனுக்கு ஆசார்யனால் பல அறிவுரைகள் சொல்லப்பட்டிருக்கு.  இந்த அறிவுரைகள் ஒருவனது வாழ்நாள் முழுவதும் பின்பற்றத்தக்கதாக இருப்பது சிறப்பு. அவைகள்ல முக்கியமான சிலதை மாத்ரம் பார்ப்போம்.'

'ஸத்யான்ன ப்ரமதி தவ்யம் - சத்யத்திலிருந்து எப்போதும் தவறக்கூடாது.

தர்மான்ன ப்ரமதி தவ்யம் - தர்ம நெறியில் எப்போதும் இருக்க வேண்டும்.

ஸ்வாயாய ப்ரவசநாப்யாம் ந ப்ரமதி தவ்யம் - கற்றைதை பயிற்சி செய்யவும், பிறருக்குக் கற்றுத் தரவும் வேண்டும்.


மாத்ரு தேவோ பவ, பித்ரு தேவோ பவ - பெற்ற தாயும், தந்தையும் கடவுளாக வணங்கப்படத்தக்கவர்

ஆசார்ய தேவோ பவ, அதிதி தேவோ பவ - கல்விக் கண் திறந்த ஆசார்யனும், விருந்தினரும் கடவுளுக்கு ஒப்பாகக் கொள்ள வேண்டும்.

தேவ பித்ரு கார்யாப்யான்ன ப்ரமதி தவ்யம் - தேவ, பித்ரு கர்மாக்களைத் தவறாது செய்ய வேண்டும்.

நான் இப்போ சொன்னதையெல்லாம் மனசுல வெச்சிண்டு, நாம் செய்யும் எல்லாவற்றிலும் தர்மத்தையும், சத்யத்தையும் கடைபிடிச்சிண்டு வந்தாக்க அதுவே தர்ம வாழ்க்கை.'

'எங்க நான் இப்ப சொன்னத சுருக்கமா சொல்லு பாப்போம்?'

அவர் சொல்லிக் கொடுத்தவைகளை மனதில் அசைபோட்டு நினைவில் கொண்டு வருகிறேன்.  ஓரிரு நிமிடங்கள் அதற்கு ஆகிறது.

'சத்தியத்தோட இருக்கணும் ..  தர்ம நெறிகளை கடைப்பிடிக்கணும் ...  அம்மா அப்பாவை தெய்வங்களா நினைக்கணும் ...  ஆசான்களையும் தெய்வங்களா பார்க்கணும் ..  தேவ பித்ரு காரியங்கள விடக்கூடாது.'

'பரவாயில்லையே.  நன்னாத்தான் திருப்பி சொல்லியிருக்கே.  ஒண்ணே ஒண்ணு தான் நீ சொன்னதுல விட்டுப்போச்சு.  அதிதி தேவோ பவ ...  அதாவது விருந்தினர்களையும் கடவுளா பார்க்கணும்.  புரிஞ்சுதா?'

'மாமா நேக்கு ஒரு சந்தேகம் ரொம்ப நாளா?  நான் அதைக் கேட்டா சிரிக்க கூடாது.  கேட்கட்டுமா?'

'புதிர் போட்டு ஆரம்பிக்கறையே.  பயமா இருக்கே எனக்கு! ‌ பகவானே! பாஸுவுக்கு முன்னாடி என்னை திருதிருன்னு முழிக்க வெச்சுடாதே.  கேளு பாஸு.  எனக்கு இன்னைக்கு நேரம் சரியில்லன்னு தோண்றது.'

'மாமாஆஆஆஆஆ... கேட்கறதக்கு முன்னாடியே கிண்டல் பண்ணாதீங்கோ மாமா.'

என்னுடைய பொய்க்கோபம் அவரால் சமாதானப் படுத்த படுகிறது.

'நம்ம தெருவுல இருக்கற நடேச தாத்தாவுக்கு நீங்கதானே வைதீகம் பண்ணி வைக்கிறேள்.'

'ஆமாம் அதுக்கு என்ன இப்ப?'

'அவரோ வயசுல உங்களைவிட மூத்தவர்.  வைதீகம் நீங்க பண்ணி வெச்சா உங்களுக்கு எப்படி அவர் நமஸ்காரம் பண்ணுவார்.  வயசுல பெரியவா சின்னவா காலுல விழுந்து நமஸ்காரம் பண்ண கூடாது அப்படின்னு நீங்க தானே எனக்கு சொன்னேள் ஒரு தடவை.'

'நல்ல கேள்வி டா இது.  கண்டிப்பா நோக்கு புரியும் படியா சொல்றேன்.'

'ஒருத்தர பெரியவரா ஏத்துக்கறதுல அஞ்சு விதம் இருக்கு.  தனத்தையும் செல்வத்தையும் வெச்சு பெரியவராக சிலரை மதிக்கிறோம்.  பெரிய ப்ரபு என்றால் உடனே ஒரு மரியாதை தோன்றதோன்னோ? இது ஒண்ணு.'

'வயஸில் சின்னவாளா இருந்தாலும் மதனி, மாமா முறை, சித்தப்பா முறை ஆகிறவர்களென்று பந்துத்வத்தில் உள்ள ஸ்தானத்தினால் சிலரைப் பெரியவர்களா மதிப்பது இரண்டு.'

'ரொம்ப வயஸானவரென்றால் யாராயிருந்தாலும் பெரியவர் என்று மரியாதை பண்ணுவது மூணு.'

'நாலாவதாக, மஹா யஜ்ஞங்களைச் செய்தவர், பெரிய அநுஷ்டாதா என்றால் வயஸைப் பார்க்காமலே பெருமைப் படுத்துவது.'

'அஞ்சாவதா வித்யையிலே சிறந்த மஹா வித்வான் என்பதால் மரியாதை செய்வது.'

'இதை நம்ம தர்ம சாஸ்த்ரத்தில் சொல்லி லிஸ்டு போட்டு இப்படி ஒண்ணு, ரண்டு, மூணு நாலு அஞ்சு அப்படின்னு போட்டதுல முதல்ல வர்றதைவிட கடைசியா வர்றதுதான் ஒசத்தின்னும் சொல்லியிருக்கு.  அதாவது அஞ்சாவதாக, வித்யையை வைத்து ஒருத்தரைப் பெரியவராகக் கருதி கௌரவிப்பதுதான் எல்லாவற்றிலும் உத்தமம்னு என்று சொல்லியிருக்கிறது.'

'சரியா புரியலையே மாமா?'

'ஒன்னோட கேள்வி என்ன?  நடேச தாத்தாவுக்கு வைதீகம் நான் அவருக்கு செய்விக்கறச்சே எனக்கு அவர் நமஸ்காரம் பண்றது சரியா?  இதுதானே ஒன்னோட சந்தேகம்?'

'அதே சந்தேகம்தான் மாமா.'

'அந்த சமயத்துல அவர் எனக்கு செய்யறது கௌரவத்துக்காக.  வைதீக விஷயங்கள் எனக்கு அவரை விட சற்று கூடுதலா தெரிஞ்சதால எனக்கு அவர் கொடுக்கற மரியாதையாத்தான் அத பார்க்கணும்.  அதே மாதிரி ஸ்தானம் என்கிறத பொருத்தே அந்த மரியாதை கௌரவம்.  வயச உத்தேசித்து நமஸ்காரம் அப்படிங்கறது பொதுவான ரூல்.  அது மாத்திரம் கௌரவத்தையோ மரியாதையையோ தந்துடாது.'

'வைதீகம் செஞ்சு வைக்கற அந்த சமயங்கள விட்டுட்டு மத்த சமயங்கள்ல அவர் என்ன எப்படி கூப்பிடறார்... பார்த்திருக்கியோன்னோ?  ரகு இங்க சித்த வந்துட்டு போயேம்பார்.... என்ன ரகு ஆளையே பார்க்க முடியறதுல்ல அப்படிம்பார்.... ஏன் ஒரு தடவ உன் கிட்ட சொல்றதுக்கு அந்த சுவத்துகிட்ட சொல்லலாம் அப்டின்னு கோச்சுப்பார்.'

இப்படி அவர் சொன்னவுடன் எனக்கு அடக்க முடியாத சிரிப்பு.  

'என்ன மாமா?  தாத்தா இப்படியா சொன்னார் உங்கள?'

'ஆமாண்டா... போனாப் போறது அவர் என்ன விட பெரியவர் தான?  இதுலேந்து நோக்கு என்ன தெரியறது?  வைதிக சமயங்கள்ல எனக்கு அவர் கொடுக்கிறது நான் கத்துண்டிருக்கற வேதங்களின் அடிப்படைல.  நான் அவருக்கு கொடுக்கிற மரியாதை அவருடைய வயதின் அடிப்படைல.  இப்போ நோக்கு புரிஞ்சிருக்குமே?'

'அம்மாடியோ... இவ்வளவு விஷயம் இருக்கா மாமா இதுல?'

'நடேச தாத்தா கிட்ட சண்டைக்கு போயிடாத மாமாவை இப்படி கேட்டதுக்கு?  நீ செஞ்சாலும் செய்வ.  அதனாலதான் முக்கியமா சொல்றேன்.'

சிரிக்கிறோம் இருவரும்.

'சரிடா நீ கிளம்பு.  எனக்கு மாத்யான்னிகம், பாண்டுரங்க பூஜை, கணக்கு வழக்கு எல்லாம் இருக்கு.  நமஸ்காரத்தை பண்ணிட்டு கிளம்பு.  நாளைக்கு வா.  நோக்கு நல்ல டாபிக் செலக்ட் பண்ணி வைக்கிறேன் சொல்லி கொடுக்கறதுக்கு.'

என் நமஸ்காரம்.  என் வந்தனம்.  அவர் ஆசீர்வாதம்.  முடிந்தவுடன் கிளம்புகிறேன்.

தொடரும்...

No comments:

Post a Comment