Wednesday, April 14, 2021

பாட்டியின் சிக்ஸ்த் சென்ஸ் - சுஜாதா

 பாட்டியின் சிக்ஸ்த் சென்ஸ் - சுஜாதா 

(கற்றதும் பெற்றதும்) 

நான் அவ்வப்போது இந்தப் பகுதியில் எழுதிய குறிப்புகளை ரசித்ததாக எழுதிய அன்பர்களுக்கு நன்றி.  இவை ஏன் அடிக்கடி வருவதில்லை என்று பலர் கேட்கிறார்கள்.

இளவயதில் பரபரப்பான சம்பவங்கள் எதுவும் இல்லை காதல் பிஸினஸ், இடிபஸ் காம்ப்ளக்ஸ், எலெக்ட்ரா காம்ப்ளக்ஸ்,  ஷிட்ஸோ என்று ஒரு புண்ணாக்கும் கிடையாது.

சுதந்திரப் போராட்டத்துக்கு என்னை யாரும் கூப்பிடவில்லை கொடியேற்றும் போது சாக்லெட் வாங்கியதோடு சரி. வெள்ளையனை  எதிர்க்கலாம் என்று யோசிப்பதற்குள் வெள்ளையன் வெளியேறி விட்டான். 

இந்தியை எதிர்த்து எதையாவது எரிக்கலாம் என்றால் என் பள்ளியில் நான் படித்தபோது இந்தியே இல்லை. ஆங்கிலம் உட்பட எல்லாம் தமிழில்தான் சொல்லித் தந்தார்கள்.

எவளையாவது கடத்திக்கொண்டு மலைக்கோட்டைக்குப் போய் 'அடியே கல்யாணம் செய்து கொள்வோமடி... இல்லையென்றால் குதித்து விடுவேன்" என்றெல்லாம் அழிச்சாட்டியம் பண்ணவில்லை.

அதற்கு அருகதையான பெண்களும் கீழ்ச்சித்திரை வீதியில் இல்லை வத்தலான புரோட்டீன் குறைந்த பெண்கள். 'வாழ்க்கை' வைஜயந்திமாலா மாதிரி மாவட்டத்திலேயே யாரும் இல்லை.

தெற்கு வாசலில் மாலதி என்று ஒரு பெண்ணைப் பற்றி ரங்கன் கடையில் பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், அவளை யாராவது 'அசகோதர' எண்ணங்களுடன் பார்த்தால், பேசினால். பள்ளி கிரிக்கெட காப்டன் ஜகதீசன் சுளுக்கு எடுத்து மஞ்க்கென்று கையை உடைத்துவிடுவான் என்றும் தெரிந்தது.

ஸ்ரீரங்கத்தில் வாசல் திண்ணையில் படித்துக் கொண்டிருக்கும் போது இளம் பெண்கள் எங்கள் வீட்டுப் புறக்கடையில் இருந்த நல்ல தண்ணீர் முனிசிபல் குழாயில் ஜலம் பிடிக்க ஜடை பில்லையுடன் பௌடர், தாழம்பூ வாசனையுடன் வரும்போது வாரிச் சுருட்டிக் கொண்டு மாடிக்குப் போய்விடுவேன். 

சுலபமாக பின்னால் தள்ளி கதவைச் சாத்தி, 'சப்பக்'  என்று முத்தம் கொடுத்திருக்கலாம் அந்தப் பெண்களில் சிலரும் அதை எதிர்பார்த்தார்களோ என்று இப்போது (65 வயதில்) தோன்றுகிறது. 

நான் படித்தது ஸ்ரீரங்கம் பாய்ஸ் ஹைஸ்கூல், கேர்ள்ஸ் ஹைஸ்கூல் என்பது பாகிஸ்தான் போல தனியே காம்பௌண்ட் பிரிக்கப்பட்டு, தனிவாசல் அமைத்து அந்தப் பெண்கள் எங்கிருக்கிறார்கள் என்றே  புலப்படாத வகையில், தூரத்தில் புள்ளியாகத் தெரிவார்கள். 

அதனால் அவர்களில் யாரும் வந்து பாடத்தில் சந்தேகம் கேட்கவோ, நோட்ஸ் கேட்கவோ வாய்ப்புகள் ஏற்படவில்லை. நானே சந்தேகக் கேஸ். ஒரு முறை என் கண்ணில் தூசி விழுந்து, வேலைக்காரப் பெண்ணைப்  பாட்டி ஊதச் சொன்னபோது, அவள் என் கண்ணுக் ஊதிய போது, என் மனமும் கைகளும் சும்மா இருந்தன.  இது பற்றி நான் வெட்கமோ, வருத்தமோ படவில்லை. 

பெரும்பாலான யுவ, யுவதிகள் அப்போது அப்படித்தான் வளர்ந்தார்கள். படிப்பும் விளையாட்டுதான் முக்கியம். பெண்களை ஆண்களும், ஆண்களைப் பெண்களும் வேற்று கிரகவாசிகள், ஆரோக்கியக்கேடு என்றுதான் எண்ணி வந்தோம். 

பிராமணப் பெண்களை அடைய வளைஞ்சான் ரவுடிகள் சைட் அடிக்க மேலும் கீழும் சைக்கிள் ஓட்டும்போது, "ஏண்டா இப்படி அலையறாங்க..." என்று புரியாமல் வியந்தோம்.  செக்ஸ் உணர்ச்சிகளை அதனதன் காலம் வரும்போது மலர விட்டோமே  தவிர, வலுக்கட்டாயமாக அவற்றை அழைக்கவில்லை. 

அந்தச் சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவன். தந்தைவழிப் பாட்டிதான் என்னை வளர்த்தாள். 

அவளுக்கு ஒரு 'சிக்ஸ்த் சென்ஸ்' இருந்தது. சமையல் அறையில் (தளிப்பண்ற உள்) இருந்துகொண்டே நான் கூடத்தில் படிப்பது பாடப்  புத்தகமா, கதைப் புத்தகமா என்று கண்டுபிடித்து விடுவாள்.

அதுகூட கொக்கோகம்' படிக்கவில்லை.. லா.ச.ரா, தி.ஜானகி ராமன்தான்.  அதுவும் 'அலை ஓசை' படித்ததற்கே  'நாளைக்கே உனக்கு வாங்கி டிக்கெட் வாங்கி  உங்கப்பாகிட்டே அனுப்பிடறேன். உன்னை வெச்சு மாளாது. நீயாச்சு,  உங்கப்பனாச்சு.. ஓடிப்போ' என்று பயமுறுத்துவாள்.  ஒரு தடவை கூட நான் 'அனுப்பிடு பாட்டி' என்று சொன்னதில்லை. 

சென்னைக்கு வந்து படித்திருந்தால் கொஞ்சம் கெட்டுப்போய், கொஞ்சம் ஒருவேளை சுவாரஸ்யமான சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். தமிழ் இலக்கியம் ஒரு sleazy நாவலிலிருந்து தப்பியது. 

திருச்சி சென் ஜோசப் கல்லூரியில் படித்தேன். அங்கே குப்பை பெருக்குகிறவர்கள் ஆண்கள்தான் மாதம் ஒருமுறை லாலி ஹாலில் படம்  போட்டுக் காட்டுவார்கள்.  உதாரணம் -  தாமஸ் ஆல்வா எடிசனின் குழந்தைப் பருவம்.

பிள்ளைப் பிராயத்தில் என் மனத்தை பாதித்த ஒரே பெண் விஜி. மாநிறம், கரிய கண்கள். 'நான் கறுப்பு, ரங்கராஜனும் கறுப்பு"  என்பாள்.  காதில் அவல் சைஸுக்கு லோலாக்கு அசைய, வாய் ஓயாமல் பேசுவாள். இரண்டு பேரும் வாக் போவோம். அவளைப் பார்க்கவில்லை என்றால் எனக்கு இருப்புக் கொள்ளாது. நான் வரும் வரை காத்திருப்பாள். : பவுடர் போட்டு நல்ல வாசனையாக இருப்பாள், பாடுவாள், அழுவாள் 

ஒரு நாள் என்னை அந்தப் பாட்டி (அம்மாவின் அம்மா) அவசரமாக அழைத்தாள். போய்ப் பார்த்தால் விஜியை ஒரு வாழை இலையில் கிடத்தியிருந்தார்கள். 'ராத்திரி என்னவோ ஆச்சு.. ரெண்டு தடவை  வாந்தியெடுத்தா. கார்த்தாலை பிராணன் போய்ட்டது' என்று பாட்டி அழுதாள். எனக்கு அப்போது பதினோரு வயசு.

என் தங்கை மூன்று வயது. குழந்தை என்பதால் கையிலேயே தூக்கிப் படித்துறைக்குக்  கொண்டு சென்று கொள்ளிடக்கரையில் புதைத்தது ஞாபகம் இருக்கிறது.

முதன்முறையாக ஆற்றாமை, சோகம் க்ரீஃப் பாதித்தது. எப்படி?

அதுவரை யார் கூப்பிட்டாலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அற்ப தூரமாக இருந்தாலும் ஒரே ஓட்டமாகத்தான் ஓடுவேன். விஜி இறந்தபின் அவ்வாறு ஓடுவதை நிறுத்திவிட்டேன்.

No comments:

Post a Comment