Sunday, April 11, 2021

சரம ஸ்லோகம்

 சரம ஸ்லோகம். ஸ்ரீ வைஷ்ணவாளா இருக்கற எல்லாரும் அனுதினமும் பெருமாளுக்கு பண்றப்போ சொல்ல வேண்டிய சுலோகம். ஜீவாத்மாக்களை கரை சேர்க்கற ஒசத்தியான விஷயம். 

"சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாமேகம் சரணம் விரஜ
அகம்த்வா சர்வ பாபேப்யோ
மோஷயிஷ்யாமி மாசுச"

இந்த நாலு வரிகள்ல இருக்க ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒசத்தியான அர்த்தம் இருக்கு. 

1. "சர்வதர்மான் பரித்யஜ்ய" - இந்தப் பதத்திற்கு மட்டும் ஆசார்யன் வேதாந்த தேசிகன் ஆறு அர்த்தங்களைக் கர்ப்பிக்கறார். 

(அ) 'பக்தியோகம் முதல் வேறெந்த யோகத்தையும் முழுமையாக கடைபிடிக்க முடியாத நம்முடைய யோக்கியதை இல்லாமையை உணர்ந்து, இங்கிருக்கும் வெறுமையினை உணர்ந்து, எல்லா வழிகளையும் விட்டுவிட்டு' என்பது முதல் அர்த்தம் 

(ஆ) நம் கையில் ஒன்றுமில்லை. நாம் அசக்தர்கள். எந்த விதமான சக்தியும் இல்லாதவர்கள் என்ற "ஆகிஞ்சந்யத்தை" - நமது சிறுமையை உணர்வது இரண்டாவது அர்த்தம் 

(இ) ப்ரபத்திக்கென சொல்லப்பட்ட விஷயங்களைத் தவிர வேறு அங்கங்கள் இல்லையென்று உணர்வது, ப்ரபத்தியொன்று தான் இறுதியானதென்று அறிவது தான் உத்தமம் என்பது மூன்றாவது அர்த்தம் 

(ஈ) உயர்ந்த பக்தியோகாதிகளை நம்மால் பண்ண முடியாது என்பதை உணர்ந்து செயல்படுதல் என்பது நான்காவது அர்த்தம் 

(உ) அப்படி நம்மால் எளிதாகப் பண்ண முடியாத பக்தி யோகாதிகளை பண்ணியே தீருவேன் என்று பிடிவாதம் கொள்ளுதல் அற்ப ஆசை தானேயன்றி வேறொன்றுமில்லை என்று உணர்தல் என்பது ஐந்தாவது அர்த்தம் 

(ஊ) ஒரு க்ஷணார்த்தத்தில் பண்ணக் கூடிய பிரபத்தி என்பதினை பண்ணாமல், மற்ற மார்க்கங்களை நாடிச் செல்வது தீமையினை விளைவிக்கக் கூடியது என்பதை உணர்வது ஆறாவது அர்த்தம் 

2. "மாம்" - இங்கு பார்த்தனுக்கு சாரதியாய் நின்ற அந்த கீதாசார்யனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அர்ஜுனனுக்கு ஹிதத்தினை எடுத்துச் சொல்லும் வேளையில் க்ருஷ்ணனானவன், "மாம்" என்று உரைக்கும் சமயம், தன்னுடைய திருமேனியினை தொட்டுக் காட்டுகின்றான். இப்படி செய்ததன் மூலம் தன்னுடைய சௌசீல்ய குணத்தினையும் ஸ்வாமித்வத்தினையும் அவன் நமக்கு தெள்ளத் தெளிவாக ஐயமற அறுதியிட்டு சாதிக்கிறான். 

3. "ஏகம்" - ஏகம் என்ற இந்தப் பதமும் பல பொருள் படுகின்றது. 

(அ) இந்த சம்சார சாகரத்திலிருந்து நாமெல்லாரும் விடுபட்டு முக்தி பெற அவன் ஒருவனே "ஏகம்" உபாயம். அதாவது அந்த ஸர்வேச்வரன் மட்டும் தான் உபாயம். அவனையடைய நாம் பண்ணும் பிரபத்தி உபாயமாகாது. நம்மை பிரபத்தி பண்ண வைப்பதும் அவன் தான். அதனால் பிரபத்தி அவனுக்கு இணையான உபாயமாகாது. 

(ஆ) அப்படி ஒரே உபாயமாய் விளங்கும் அவனை அடைய அவன் ஒருவனே "ஏகம்" உபேயமுமாவான். 

(இ) அவனது க்ருபையினால் நமக்கு பிரபத்தி பிராப்தம் ஆன பின்னால் நம்மைத் தன்னுடைய பொறுப்பாக ஏற்று தனித்து நின்று சரண்யனாக நம்மை ரக்ஷிப்பது அவன் ஒருவனே "ஏகம்"

(ஈ) அப்படி அந்த நாராயணின் திருக்கமல பாதங்களை அடைய தேவையான சக்தியும் ஞானமும் இருந்தும், மிகவும் பரிஷ்ரமப்படும் ஜீவாத்மாக்களை, அவையாவும் சேர்ந்து அளிக்கக்கூடிய பலன்கள் அனைத்தையும் உன் ப்ரபத்தியை ஏற்றுக் கொண்டு நான் ஒருவனே அனுக்கிரஹம் பண்ணுகிறேன் என்று சாதிப்பதானால் "ஏகம்"

(உ) ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் பெருமாள் என்று சொன்னால் அந்தப் பதத்தில் தாயாரும் சேர்த்தி. அதனால் அந்த திவ்ய தம்பதிகள் ரெண்டு பேரும் எப்போதும் சேர்ந்தே அனுக்கிரஹம் பண்ணுவதனால் "ஏகம்"


4. "சரணம்" - ரொம்ப ஒசத்தியான அர்த்தம் இந்தப் பதத்திற்கு. கர்மாக்களினால் கட்டுண்டு மறுபடி மறுபடி பலவிதமான பிறப்புகள் கொண்டு இந்த பூமியில அல்லாடற ஜீவாத்மாக்களுக்கு ஒரே ஒரு தடவை "சரணம்" அப்படின்னு அவன் திருவடிகள்ல பிரபத்தி பண்ணின்ட்டா, எப்போவும் நான் உன்னைக் காப்பாத்தறேன்னு சத்யசந்தனா நின்னு, சேதனர்கள் அனுபவிக்கறதுக்கு தேவையான வஸ்த்துக்களையும் அவனே அனுக்கிரஹம் பண்றான். பரிபூர்ண சரணாகதி அனுபவத்தை அனுக்கிரஹம் பண்றான் 

5. "வ்ரஜ" - நம்மளுடைய ஆத்மாவை அவன் திருவடிகளில் சமர்ப்பித்தல் என்று அர்த்தமாறது. நான் என்னுடையது என்ற அகங்காரத்தினை விடுத்து, அவன் ஒருவனே சக்திமான். நாமெல்லாம் அசக்த்தர்கள் என்பதை பரிபூர்ணமா உணர்ந்து, பூரணமான விருப்பத்தோட, அவன் காப்பாத்துவான் அப்படிங்கற தைரியத்தோடு அவன் திருவடிகள்ல ஆத்ம சமர்ப்பணம் பண்ணுவதை குறிக்கறது 

க்ருஷ்ணாவதாரத்துல பெருமாள் அர்ஜுனனுக்கு உபதேசம் பண்ணினப்போ தான் நம்மளுக்கு இந்த சரம ஸ்லோகம் ஆப்ட்டுது. க்ருஷ்ணாவதாரத்துக்கு முன்னாலே உண்டான ந்ருஸிம்ஹாவதாரத்தை எடுத்துண்டோம்னா, ப்ரஹ்லாதனானவன்  "சர்வதர்மான் பரித்யஜ்ய" - இதற்க்கு அர்த்தமா சொல்லப்பட்ட ஆறு விஷயங்களும் அவனுக்கு பொருந்தித்து. அவன் பண்ணினதெல்லாம் ஒண்ணே ஒண்ணு தான் - சரணாகதி. "மாம்"  "ஏகம்" - அப்படின்னு அந்தப் பரமன் சொன்னதையும் அவன் கடைபிடிச்சிருக்கான். அவன் தான் எல்லாமே. அவன் ஒருவன் மட்டும் தான் சக்திமான் அப்டிங்கறதை உணர்ந்து அதன் படி இருந்திருக்கான்.ஸ்ரீமன் நாராயணன் ஒருவனையே அவன் சரணடைஞ்சிருக்கான். வேறொரு தேவதாந்திரத்தை தேடிப் போகலை. என்ன ஒரு மஹாவிஷ்வாசம். "சரணம் வ்ரஜ" - இதையும் பிரஹலாதன் பண்ணிருக்கான். ஸ்ரீமன் நாராயணனுண்ட பரிபூரணமான ஆத்ம சமர்ப்பணம் பண்ணிருக்கான். இந்த நிஷ்ச்சலனமான பக்தி தானே, சரணாகதி தானே, ஆத்ம சமர்ப்பணம் தானே,  ஜீவாத்மாக்களை கட்டுண்ணப் பண்ற பெரு மாயனான (ஆழ்வார் திருவாக்கு) அவனையே கட்டுண்ணப் பண்ணித்து. எவ்ளோ ஒசத்தியான சத்யமான உறவு இது. ஆண்டாள் சாதிச்சு அருளினார் போலே 'உன்தன்னோடுறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது". ந்ருஸிம்ஹா... ந்ருஸிம்ஹா... உன் தாள் கண்டு கொண்டு என் சிரம் மேல் சூடிக் கொண்டேன். சரணாகதோஸ்மி. காப்பாத்து 

அடுத்த ரெண்டு அடிகளுக்கான அர்த்தத்தை அடுத்த பதிவுல பாப்போம்.

நன்றி : கண்ணன் தொடூர் மாடபூசி அவர்களுக்கு

No comments:

Post a Comment