Monday, April 5, 2021

108 திவ்யதேசங்கள் - பதிவு 83 அரவிந்தலோசனன் திருக்கோவில்

 🌹🌹🌹 108 திவ்யதேசங்கள் - பதிவு 83 🌹🌹🌹

நவதிருப்பதிகளில் இரட்டை திருப்பதி தலத்தில் இங்குள்ள முதல் தலம் ராகுவிற்குரிய தலமாகவும், இரண்டாம் தலம் கேதுவிற்குரிய தலமாகவும் வழிபடும் சிறப்பு வாய்ந்த திருத்தலம்.

அருள்மிகு அரவிந்தலோசனன் திருக்கோவில் :-
திருத்தலைவில்லி மங்கலம் (இரட்டை திருப்பதி)

திருத்தலைவில்லி மங்கலம் திருக்கோவில் இரண்டு  திருத்தலங்களைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் அருகருகில் நடந்து செல்லும் தொலைவில் தான் உள்ளது. இந்த இரண்டு திருத்தலங்களும் சேர்ந்து ஒரே திவ்யதேசமாகும்.

இதை இரட்டை திருப்பதி என்பர். இரண்டாவது திருத்தலமாகக் கொள்ளப்படும் அருள்மிகு அரவிந்தலோசனன் திருத்தலத்தையே நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

இருப்பினும், பாசுர வரிகளில் பாடப்பட்டுள்ள சில குறிப்புகள் இத்தலத்தையும் குறிக்கின்றன. இருப்பினும் இரண்டாம் திருப்பதியில் அருள்புரியும் மூர்த்தி, தாயார், தலம் மூன்றையும் குறிப்பிட்டு பாடியுள்ள சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.

🌺🌺 முதல் திருப்பதி :-

மூலவர்: தேவப்பிரான், ஸ்ரீநிவாசன்
உற்சவர்: ஸ்ரீநிவாசன்
கோலம்: நின்ற திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: குமுத விமானம்
தீர்த்தம்: வருண தீர்த்தம், தாமிரபரணி ஆறு
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ அலர்மேல் மங்கை ஸமேத ஸ்ரீநிவாசன் ஸ்வாமிநே நமஹ
ஊர்: இரட்டை திருப்பதி

🌺🌺 தலவரலாறு :-

அக்காலத்தில் இத்தலம் அமைவிடம் மலர்கள் நிறைந்த சோலைகளாக காட்சி தந்தது. அச்சமயத்தில் வித்யாதரன் என்ற தேவனும் அவனது மனையாளும் குபேரனின் சாபத்திற்கு ஆளாகினர். இதன் காரணமாக வித்யாதரன் வில்லாகவும், அவனது மனைவி துலாமாகவும் (தராசு), மாறும்படி சாபம் பெற்று இவ்விடத்தில் பூமியில் புதையுண்டனர்.

பிற்காலத்தில் இங்கு வந்த சுப்ரபர் என்ற முனிவர் இறைவன் நாராயணனின் திருவருளைப் பெற வேண்டி, இங்கு ஒரு மகா யாகம் நிகழ்த்த திட்டமிட்டார்.

அதற்கான ஏற்பாடுகளை செய்ய நிலத்தை சமன்படுத்துகையில் அவரது கரம் பட்டு இருவரும், சாபவிமோசனம் பெற்று தேவலோகம் சென்றனர்.

துலாம், வில் ஆகிய இரு வடிவங்களும் சாபவிமோசனம் பெற்று மங்களம் அடைந்ததால் இத்தலத்திற்கு "துலாவில் மங்களம்" எனப் பெயர் பெற்றதாகவும், பிற்காலத்தில் அதுவே மருவி "திருத்தலைவில்லி மங்கலம்" என்றானதாகத் தலவரலாறு கூறுகிறது.

பிறகு தேவனுக்கே விமோசனம் அளித்த அம்முனிவர்களுக்காக காட்சி தந்து அருளினார். இதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு தேவப்பிரான் என்பது திருநாமம்.

இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூமிதேவி என்னும் உபய நாச்சியார்கள் மட்டுமே உள்ளனர். தாயாருக்கென்று தனியாக சன்னதி இல்லை

🌹🌹🌹 இரண்டாம் திருப்பதி :-

நவக்கிரகங்களுக்குரிய தலங்களில் இத்தலம் கேதுவிற்குரிய தலமாக வழிபடப்படுகிறது.

மூலவர்: அரவிந்தலோசனன்
தாயார்: கருந்தடங்கண்ணி நாச்சியார்
உற்சவர்: செந்தாமரைக் கண்ணன்
கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்
திசை: கிழக்கு
விமானம்: குமுத விமானம்
தீர்த்தம்: அசுவினி தீர்த்தம்
மங்களாசாசனம்: நம்மாழ்வார்
நாமாவளி: ஸ்ரீ கருந்தடங்கண்ணி ஸமேத ஸ்ரீஅரவிந்தலோசநாயச நமஹ
ஊர்: இரட்டை திருப்பதி

🌺🌺 தலவரலாறு :-

தேவபிரானுக்குச் சூடி அழகு பார்க்க சுப்ரப முனிவர் தினந்தோறும் ஆற்றில் நீராடி வருண தீர்த்தக் குளத்தில் உள்ள தாமரை மலர்களை பறித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

தாமரை என்பதற்கு அரவிந்தம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அரவிந்தத்தின் அழகிலும், அதன் மனத்திலும் மகிழ்ந்த இறைவன் இத்தீர்த்தக் கரையில் குடிகொண்டார். இதன் காரணமாக இத்தல இறைவன் அரவிந்தலோசனன் என்ற திருநாமம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

🌺🌺 மூர்த்தி, தாயார், தலம்:-

நம்மாழ்வார் இத்தலத்தில் பாடியுள்ள பாசுர வரிகளில் மூலவ மூர்த்தி, தாயார், தலம் ஆகிய மூவரையும் குறிப்பிட்டு பாடியுள்ள சிறப்பு வாய்ந்த திருத்தலம் இதுவாகும்.

"திருந்து வேதமும் வேள்வியும்
திருமாமகளிரும் தாம் மலிந்
திருந்து வாழ்பொருதல் வடகரைவண்
தொலைவில்லிமங்கலம் கருந்தடங்
கண்ணி கைதொழுத
அந்நாள் தொடங்கி இந்நாள் தொறும்
இருந்திருந்து தரவிந்தலோசன!
என்றென்றே நைந்திரங்குமே!!!"

- நம்மாழ்வார்.

நம்மாழ்வார் இத்தலத்தில் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடியருளியுள்ளார்.

🌺🌺 வழித்தடம் :-

திருநெல்வேலியிலிருந்து 39 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

அருள்மிகு தேவப்பிரான் சுவாமி திருவடிகளே சரணம்.
அருள்மிகு அரவிந்தலோசனன் திருவடிகளே சரணம்.
அருள்மிகு கருந்தடாங்கண்ணி திருவடிகளே சரணம்.

🌺🌺 நாளைய பதிவில் :-

அருள்மிகு சோரநாதன் திருக்கோவில் - திருக்குளந்தை திவ்யதேசத்தைத் தரிசிக்கலாம்.

ஓம் நமோ நாராயணாய நம:!!!

No comments:

Post a Comment