லாக் டவுனும் அப்புசாமியும்…
😀 😊
“ என்னங்க…ஃபிரிட்ஜ்ல காய்ங்க ஒண்ணுமே இல்ல..இன்னிக்கு சமையலுக்கு நீங்க போய் வாங்கின்டு வந்தாதான் சாப்பாடே..”
TV ல கார்ட்டூன் சேனல் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த அப்புசாமியின் முகம் சீதாப் பாட்டியின் உத்தரவை கேட்டதும் சடாரென கோப எமோஜிக்கு மாறியது.
“ இப்ப எப்டிடீ நா வெளில போவ முடியும் ? வெளில போறவங்கள போலீஸூ லட்டியால முட்டிய பேத்துடறாங்களாமே..என்னால இந்த வயசுல அடிலாம் வாங்க முடியாது..நீயே போய் வாங்கின்டு வா..நீ போனியானா நீ பேசற இங்கிலிபிஷூ புர்யாம அவன் பயந்துகினு மெர்சலாகி உன்னைய விட்ருவான்..”
“ வாட் ரப்பிஷ் யூ ஆர் டாக்கிங்..? நான்லாம் போக முடியாது..எனக்கு பிரெட் அரை பாக்கெட் இருக்கு..ஜாம் தொட்டுன்டு ஜம்முனு நான் சாப்ட்டு சமாளிச்சுப்பேன்..ஆனா , பாவம் நீங்க எப்டீ சமாளிப்பேள் ? “
“ அடி ராட்சஷியே…நேத்து தானடி எனக்கு மத்யான சாப்பாட்டுக்கு பிரெட் உப்மானு ஒரு கண்றாவிய செஞ்சு குடுத்த..இன்னிக்காச்சும் நன்னா வாய்க்கு ருசியா சமைச்சுப் போடேன்..? “
“ அப்டின்னா ஒழுங்கு மர்யாதையா இப்பவே கடைக்கு போய் கறிகாய்ங்கள வாங்கின்டு வாங்க…”
“ எனக்கு போய் வாங்கின்டு வர்றதுல ஒண்ணும் ப்ரச்சன இல்லேடி..”
“ தென் ..? “
“ பன்னா ? அது வேற வாங்கின்டு வரனுமா ? “
“ அட ராமா..பன்னும் இல்ல..கின்னும் இல்ல..தென் – அப்டின்னா அப்புறம்னு அர்த்தம்..மேல சொல்ங்க…? “
“ அடி ராட்சஷி..அத மொதல்லயே எனக்கு புர்யறாப்ல தமில்லயே கேட்ருக்கலாம்ல..? “
“ சரி..விஷயத்துக்கு வாங்க..இப்ப கடைக்கு போறதுல என்ன கஷ்ட்டம் உங்களுக்கு ? “
“ இல்ல கிழவி..இப்ப நானு வெளில போவனும்னா நீ வாங்கி வெச்சிருக்கற அந்த முகமூடிய போட்டுக்கனும்ல ? “
“ அது முகமூடி இல்ல..மாஸ்க்..”
“ சரிடி கிழவி..மாஸ்குதான்…அத போட்டுகிட்டா எனக்கு மூத்த அடைக்கறது..அதுவும் இல்லாம ரெண்டு காதுலயும் அந் த எலாஸ்டிக்கால வலிக்கறதுடீ..அத மாட்டிக்காத போன போலீஸூம் விட மாட்டாங்க..மாஸ்க் இல்லாம வெளில சுத்தினத்துக்கு நேத்து நம்ம ரசகுண்ட …பாவம் , 40 தோப்புக்கரணம் போட வெச்சாங்களாம்..மொபைல்ல இப்பதான் சொல்லி அழுதான் பாவம்..! “
“ அட்ரோஷியஸ்..அந்த சாக்கு போக்குலாம் சொல்லக் கூடாது..கவர்ன்மெண்ட் சொல்றது நாம கட்டாயம் ஃபாலோ பண்ணனும்..அதை அலட்சியம் செய்யக் கூடாது..ம்..சீக்கிரம் கிளம்புங்க..”
என்று சீதாப்பாட்டி அதட்டியபடியே துணிப் பையை அப்புசாமியின் கையிலும் ; மணி பர்ஸை அவரோட ஜிப்பாவிலும் ; மாஸ்கை அவரது வாயிலும் அடைத்து – ஸாரி , அந்த எலாஸ்டிக்க காதுல மாட்டி விட ..அப்புசாமியும் வேறு வழியின்றி கிளம்பினார்.
மெய்ன் ரோடுக்கு வந்ததும் அங்கிருந்த ஒரு போலீஸ்கார்ர் இவரை சைகையால் அழைத்தும் இவர் வேணும்னே கண்டுக்காதபடிக்கு நகர முற்பட அந்த போலீஸ் டென்ஷனாகி. ..
" யோவ்..ஜிப்பா போட்ட பெர்சு..” என்று மரியாதையாக கூப்பிட்டதும் இவரும் வேற வழியில்லாம அவரிடம் போக…
“ என்ன பெர்சு..இந்ந்த கொரானா மேல்லாம் உனக்கு பயமில்லியா..அசால்ட்டா இப்டி வெளில சுத்தற..? “
“ ம்க்கும்..நானு கொரானவ விட அதி பயங்கர ராட்சஷி சீதா கிழவிக்கே பயப்பட மாட்டேனே…! “.
“ யாருய்யா அது சீதா கெய்வி ? “
“ என்னை தொட்டு தாலி கட்டின புருஷன்…”
“ என்னய்யா உளர்றே..? “
“ அது வந்து..ஸாரிங்க..அதாவது நான் தொட்டு தாலி கட்ன பொண்டாட்டிங்க சீதா கிழவி…! “
“ அட கஷ்ட்டமே..ஒரு கெய்வி கழுத்லயா தாலி கட்னே..? “
“ நல்ல ஜோக்குதாங்க நீங்க சொன்னது..ஆனா , நானு இப்ப சிரிக்கற மூடுல இல்லீங்க..சீக்ரமா நானு காய்ங்கள வாங்கின்டு போனாத்தான் எனக்கு இன்னிக்கு மத்யானம் சாப்பாடு..ப்ளீஸ்..என்ன போக விடுங்களேன்..”
“ சரி…அளுவாத…பராக்கு பார்க்காம சீக்ரமா காய்ங்கள வாங்கின்டு வீடு போய் சேரு..”
தப்பிச்சா போறும்னு அப்புசாமியும் அருகில் இருந்த காய்கறி கடை வாசலில் போட்டிருந்த கோலத்தினுள் போய் நின்றார்.
“ என்னது இது..டிசைனே இல்லாம வெறும்னே வட்ட வட்டமா கோலத்த போட்ருக்காங்க..? – வரிசையில் இவருக்கு முன்னால் ஒரு வட்டத்துள் இருந்தவரிடம் கேட்க…
“ அது கோலம் இல்லீங்க..சோஷியல் டிஸ்டெர்ன்ஸ் மார்கிங்…”
“ கஷ்ட்டம்…வூட்லதான் அந்த சீதாக் கிழவி புர்யாத இங்கிலிபிஷில பேசி படுத்தறான்ன இங்க இவரும்…” னு மைண்ட் வாய்ஸ்ல புலம்ப…
ஒரு வழியா முக்கால் மணி நேரம் வரிசைல நின்னு காய்ங்கள வாங்கிட்டு வீட்டுக்கு வர…
வீட்டு வாசல் கிரில் கதவு உள் பக்கம் பூட்டி இருக்கறது பார்த்துட்டு காலிங் பெல்ல அழுத்தினார்.
காலிங் பெல் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த சீதா பாட்டி கதவ திறக்காம படியேறி மாடிக்கு போறத பார்த்த அப்புசாமி டென்ஷனாகி ..
“ அடியே கிராதகி..வேகாத வெய்யில்ல முக்கால் மணி நேரம் க்யூவுல நின்னு மனுஷன் காய்ங்கள வாங்கின்டு வந்து விட்டு வாசல்ல நின்னா அத பார்த்துட்டு கதவ திறக்காம எதுக்குடீ மாடிக்கு போறே…? “ னு இவர் சொல்லிட்டிருக்கும் போதே மாடிலேர்ந்து சீதா பாட்டி ஒரு பக்கெட் தண்ணிய கீழ வீட்டு வாசல்ல நின்னுட்டிருந்த அப்புசாமி மேல கொட்ட…
ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியாம ஷாக் ஆன அப்புசாமி..தொப்பலா நனைஞ்சு மேல பார்க்க… அங்க சீதா பாட்டி ..
“ ஸாரி…தப்பா நினைச்சுக்காதீங்க..இது கொரானா பீரியட்..நீங்க வெளில போய்ட்டு வர்றீங்க..நாலு மனுஷாளோட பக்கத்ல நின்னுருப்பீங்க…அதான் உங்கள அப்டியே தண்ணி தெளிச்சு…”
“ அடியேய்..தண்ணி தெளிச்சு இல்ல..தண்ணிய கொட்டி…அது சரி...இந்த தண்ணில என்னத்தடீ கலந்த…ஒர்ரே நாத்தம் அடிக்கறது..போதாக் கொறைக்கு என் வெள்ள வெளேர் வேட்டி ஜிப்பாவும் இப்டி மஞ்சளாய்டுச்சே…? அதுவும் இல்லாம என் செல்லம் பொடி டப்பாவ வேற நனைச்சுட்டியேடீ..? “
“ அது வேற ஒண்ணும்ல..டெட்டாய்லும் மஞ்சப் பொடியும் தண்ணில கலந்தேன்…போனாப் போறது….தோச்சுட்டா மஞ்சப் கறை போய்டும்..”
“ ராட்சஷி..கறை போய்டும்..கூடவே என் உசிரும்…நீ எங்கடி தோய்க்கறே ? என்னைய இல்ல தோய்க்க சொல்ற..? சரி..அத விடு…இப்ப கீழ வந்து கதவ தொறந்து விடு..ரொம்ப நேரமா நனைஞ்ச கோழியாட்டமா ஈரத் துணியோட கைல 5 கிலோ காய்கறிங்க வெய்ட்டோட நிக்கறது உன் கண்ணுக்கு தெர்லயா..? “
“ ஓ..ஸாரி…ஐ வில் கம் & ஓபனிட் த டோர்..”
“ ஹூம்க்கும்..இதுக்கொண்ணும் கொறைச்சல் இல்ல…” னு சொல்லிட்டு அப்புசாமி வெய்ட் பண்ண ஆரம்பிச்சார் – மாடியில் இருந்து சீதா பாட்டி கீழே வரும் வரையில் !.
No comments:
Post a Comment