Sunday, April 19, 2020

திருக்குறுங்குடி

திருக்குறுங்குடி

     திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலம் நான்குநேரி எனப்படும் வானமாமலை திவ்ய ஷேத்திரத்திலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது. நாகர்கோவில் செல்லும் பாதையில் உள்ள வள்ளியூரில் இறங்கியும் இத்தலத்திற்குச் செல்லலாம். 

வரலாறு.

இவ்வூருக்கு மேற்கே மகேந்திரகிரி என்ற மலையடிவாரத்தில் வசித்து வந்த ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த நம்பாடுவான் என்னும் பாணன் இத்திருக்குறுங்குடி எம்பெருமான் மீது பெரும் பக்தி கொண்டவனாய் கைசிகம் என்ற பண்ணை இசைத்துக்கொண்டு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசியன்று விரதம் மேற்கொண்டு எம்பெருமானை பாடி வந்து தொழுது செல்வதையே தொழிலாகக் கொண்டிருந்தான்.     அவ்விதம் ஒரு நாள் வரும் போது அவ்வழியிடைப்பட்ட காட்டில் இருந்த பிரம்ம ராட்சசன் ஒருவன் நம்பாடுபவனைப் பிடித்துக்கொண்டு தனக்கு உணவாக வேண்டுமென்று கேட்டான். அதற்கு நம்பாடுவான் நான் தற்போது விரதம் பூண்டுள்ளேன். விரதம் முடித்துப் பெருமாளை வணங்கிவிட்டு மீண்டும் வரும்போது உனக்கு உணவாகிறேன் என்று சொல்ல ராட்சசன் இதை நம்ப முடியாதென்று சொல்ல, நான் திருமாலின் தூய பக்தன் பொய் சொல்லேன்  என்று சத்தியம் பண்ணிக்கொடுக்க அவனும் சம்மதித்து அனுப்பினான்.
     நம்பாடுவான் இதுவே நமக்கு கடைசி யாத்திரையாயிருக்குமோ என்று எண்ணி தான் கீழ்ச்சாதி என்பதால் கோவிலுக்குள் அனுமதிக்காததை எண்ணி வழக்கம் போல் கோவிலுக்கு வெளியே துவஜஸ்தம்பத்திற்கு எதிரே நின்று பாடிக்கொண்டும் ஆடிக் கொண்டும் இருக்கும் நிலையில் இதுவே தமக்கு கடைசி யாத்திரையாக இருந்தால் இக்கோவிலின் உள்ளே எழுந்தருளியுள்ள எம்பெருமானைப் பார்க்க இயலாதே என்று மனத்தில் எண்ணிய மாத்திரத்தில் துவஜஸ்தம்பம் சற்றே விலக உள்ளேயிருந்த பெருமாளைக் கண்டு களி கூர்ந்து மிகவும் சந்தோஷித்து தன் விரதம் முடித்து திரும்பினான். நம்பாடுவானுக்காக துவஜஸ்தம்பம் விலகியதால்தான் மற்ற ஸ்தலங்களில் இருப்பதைப் போலன்றி இத்தலத்தில் துவஜஸ்தம்பம் சற்றே விலகிய நிலையில் உள்ளது. 
     நம்பாடுவான் திரும்பிவரும் பொழுது இடைப்பட்ட காட்டுப்பகுதியில் குறுங்குடியில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் ஒரு கிழப்பிராம்மணன் வேடத்தில் நம்பாடுவானுக்கு எதிரில் வந்து இவ்வழியே செல்லவேண்டாம். இக்காட்டில் ஒரு பிரம்ம ராட்சசன் இருக்கிறான். அவன் பிடித்து தின்று விடுவான் என்று சொல்ல, சிரித்துக்கொண்டே நம்பாடுவான் அவனுக்கு உணவாவதற்காகவே நான் செல்கிறேன். இது நான் அவனுக்கு கொடுத்த வாக்குறுதி என்றான். இதைக்கேட்ட பிராம்மணன் ஆபத்து நேரிடும் காலங்களிலும், பெண்களுக்கு விவாகம் செய்ய வேண்டிய சந்தர்ப்பத்திலும் பெண்களிடம் ஏகாந்தத்தில் இருக்கும் போதும் பொய் சொன்னாலும் சத்தியம் செய்து கொடுத்தாலும் அது பாவமாகாது என்று சொல்ல அதற்கு சுவாமி உயிர்போனாலும் நான் செய்து கொடுத்த சத்தியத்திலிருந்து பிறழப்போவதில்லை என்று கூறினான். எம்பெருமான் நம்பாடுவானுக்கு தன் சுயரூபத்தைக் காட்டி மறைந்தார். 
     பிறகு பிரம்ம ராட்சசனைச் சந்தித்த நம்பாடுவான் என்னைப் புசி என்று சொல்ல அவன் எனக்குப் பசியே இல்லையே இனிமேல் எப்போதும் பசியே எடுக்காதுபோல் தோன்றுகிறது. உன்னை நான் உணவாகக் கேட்டதற்கு என்னை மன்னித்துவிடு என்று கூறி, நீ விரதத்தால் பெற்ற பலனை எனக்கு கொடு என்று கேட்க நம்பாடுவான் முடியாதென்று மறுக்க எனக்கு இந்த பிரம்ம ராட்சச உருவம் நீங்க வேண்டுமென்றால் நீ பெற்ற பலத்தில் கால்பங்காவது கொடுத்துவிடு என்று பாதத்தில் வீழ்ந்து சரணடைந்தான். அவனை அன்போடு எடுத்து அரவணைத்த நம்பாடுவான் உனக்கு ஏன் பிரம்ம ராட்சச உருவம் வந்தது என்று கேட்க அதற்கவன் முற்பிறவியில்தான் யோகசர்மா என்ற பிராமணனாக இருந்ததாகவும் யாகம் செய்யும் போது அதனை இழிவாகக் கருதியதாலும் உண்மையான பற்றில்லாமல் செய்தபடியாலும் இவ்விதம் நேர்ந்தென்றும், உன்னைப்போன்ற பக்தர்களின் தரிசனத்தாலும், ஸ்பரிசத்தாலும் எனக்கு சாபவிமோசனம் ஆகும் என்று வரமிருப்பதால் உனது பரவை நோக்கி எதிர்பார்த்துக் காத்திருந்தேன் என்று கூற அவனும் உகந்து நான் திருக்குறுங்குடி நம்பியை கைசிகம் என்ற பண்ணினால் பாடி உகப்பித்தேன். அதனால் பெற்ற பலத்தில் பாதியை உனக்குத் தருகிறேன் என்று சொல்ல அவ்வளவில் அவனது சாபம் நீங்கியது.

மூலவர் -  நின்ற நம்பி, குறுங்குடி நம்பி, வடுக நம்பி, வைஷ்ணவ நம்பி என்ற பல பெயர்கள் உண்டு. கிழக்கு நோக்கி நின்ற கோலம்
தாயார் -  குறுங்குடி வல்லி நாச்சியார்
தீர்த்தம் -  திருப்பாற்கடல்
விமானம்- பஞ்சகேதக விமானம்

சிறப்புக்கள்   

1. நம்மாழ்வாரின் தந்தையாகிய காரியாரும் தாயாராகிய உடைய நங்கையாரும் தமக்கு நெடுங்காலம் புத்திரப்பேறில்லாது போக இந்த திருக்குறுங்குடி நம்பியை வந்து வேண்டிக்கொள்ள, நாமே வந்து உங்களுக்குப் பிள்ளையாகப் போகிறோம் என்று இப்பெருமான் கூறி அவ்விதமே நம்மாழ்வாராக அவதரித்தார். வேதம் தமிழ் செய்த மாறனாகப் பிறந்தது இந்நம்பியே. அதனால் இத்தலத்தில் நம்மாழ்வாருக்கு விக்ரகம் இல்லை.
      2. திருமங்கையாழ்வார் இத்தலத்தில்தான், பரமபதம் பெற்றார். அரங்கனுக்கு (ஸ்ரீரங்கம்) பல பணிவிடைகள் செய்த திருமங்கை ஆழ்வார் தனக்கு மோட்சம் வேண்டுமென அரங்கனிடம் வேண்டினார். அவ்வாறாயின் நீ நம் தெற்கு வீட்டுக்குப் போ என்று அரங்கன் கூற அவ்விதமே தெற்கு வீடான திருக்குறுங்குடி வந்து சேர்ந்து இங்கும் எம்பெருமானுக்கு பல நற்பணிகள் புரிந்து இறுதியில் திருக்குறுங்குடி நம்பியிடம் மோட்சம் வேண்ட அவரும் இவருக்கு வீடு தந்து ஏற்றுக்கொண்டார்.      திருமங்கையாழ்வாருக்கு திருநறையூர் எம்பெருமான் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். ஆனால் இங்கு இறைவனுக்கு எம்பெருமானாரே (எம்பெருமானார்] திருமந்திர உபதேசம் செய்து ஆசிரிய ஸ்தானம் பெற்றது இத்தலத்தில்தான்.
     3. திருவனந்தபுரத்தில் இராமானுஜர் ஸ்ரீவைஷ்ணவத்தை போதிக்கச் செல்கையில் அதை விரும்பாத நம்பூதிரிகள் எங்கே இவரால் தம் தொழிலுக்கு இடையூறு வருமோ என்றஞ்சி அனந்தபுர பத்மநாபனை வேண்டிக்கொள்ள அவரும் தம் எதிரே இருந்த கருடாழ்ழ்ழ்வாரை நோக்கி இவரைக்கொண்டு திருக்குறுங்குடியிலே விட்டுவாருமென்றார். கருடாழ்வார் அவ்வாறே செய்தார். எனவே தான் இத்தலத்தில் கருடாழ்வார் இல்லை. தூங்கச் சென்ற இராமானுஜர் விடிந்தெழுந்து பார்த்தபோது தாம் திருக்குறுங்குடியிலே இருப்பதை யுணர்ந்து இதுவும் அவன் மாயையே என்று கருதிக் கொண்டு, திருமண் தரிப்பதன் பொருட்டு எப்போதும் தன் சீடனை அழைப்பது போல் வடுகநம்பி என்றழைக்க, திருக்குறுங்குடி எம் பெருமானே வடுகநம்பி வேடங்கொண்டு இவர் பின்னே வந்து தமது திருக்கரத்தால் இராமானுஜருக்கு திருமண் காப்பிட்டு விட்டு திருமன் பெட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டு இராமானுஜரின் பின்னேவர, எம்பெருமானை சேவித்தற் பொருட்டு திருக்குறுங்குடி திவ்ய தேசத்தில் உள்ளே நுழைய துவஜஸ்தம்பத்தில் திருமண் பெட்டியை வைத்துவிட்டு இராமானுஜரை கடந்து சென்ற வடுகநம்பி கோவிலுக்குள் சென்றதும் மறைந்துவிட்டார். வடுகநம்பி வராதபடியால் எம்பெருமானே இவ்விதம் செய்தாரோ என்றெண்ணி இப்பெருமானுக்கு வடுகநம்பி என்ற பெயரிட்டு அழைத்தார் இராமானுஜர். இதன்பின் திருவனந்தபுரம் செல்லும் வழியில் இராமானுஜரைத் தேடியலைந்து வருந்திய வடுகநம்பியின் கனவில் தோன்றிய எம்பிரான் இராமானுஜர் திருக்குறுங்குடியில் உள்ளார் என்று உரைக்க சிலநாள் கழித்து வடுகநம்பி திருக்குறுங்குடி வந்தடைந்தார்.
4. இந்தக் கைசிக புராணத்தை ஸ்ரீ பராசரபட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் தெளிவாக வாசிக்க கேட்ட அரங்கன் பட்டரே உமக்கு மேலைவீடு தந்தோம் என்று கூறி பட்டரை ஏற்றுக்கொண்டார். இன்றும் இக் கைசிக புராணம், குறுங்குடி, அரங்கம், ஆழ்வார் திருகரி, திருவாலி திருநகரி, போன்ற திவ்ய தேசங்களில் வாசிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி எல்லா ஸ்தலங்களிலும் கொண்டாடுதல் போல் கைசிக ஏகாதசியும் எல்லாத் தலத்திலும் கொண்டாடப்படுகிறது. இம்மகத்துவம் பிற  திவ்ய தேசங்களுக்குண்டான திருவிழாக்களுக்கு இல்லை.    
  5. டி.வி.எஸ் நுறுவனத்தார் இன்றும் நம்பாடுவான் வேடம் பிரம்ம ராட்சசன் வேடம் கிழப்பிராம்மணன் வேடம் போட்டு கைசிக புராணத்தை நாடகமாக நடத்திடும் பழக்கம் இத்தலத்தில் இன்றும் நடைபெற்று வரும் நிகழ்வாகும்.    
  6. இங்குதான் நாத முனிகளின் வம்ஸத்தவர்கள் சுமார் 50 குடும்பங்களுக்குமேல் வசித்துவந்தார்கள். அவர்கள் தமது வீட்டின் பின்னால் உள்ள அவரைக் கொடி பந்தலின் கீழ் தனது குமாரர்கட்குத் தாளத்துடன் பாசுரங்களைக் கற்று கொடுக்கும் சமயம் இந் நம்பியே ஒரு வைணவன் வேடத்தில் வந்து அதைக் கேட்டு ரசித்தாராம். 
      7. இராமானுஜர் திவ்ய தேச யாத்திரை மேற்கொண்டு செல்லுமிடத்து மைசூரில் உள்ள திருநாராயணபுரம் செல்ல அங்கு கைங்கர்யத்திற்கு ஸ்ரீவைஷ்ணவர் வேண்டுமென்று இராமானுஜரிடம் விண்ணப்பம் செய்ய, இராமானுஜர் திருக்குறுங்குடி ஜீயருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார். அரையர் வம்சத்தில் வந்த ஒருவரையும் அங்கு அனுப்பி வைத்தார். இன்றும் அங்கு அவர்கள் திருக்குறுங்குடி தாசர் என்ற பெயரில் கைங்கர்யம் செய்து வருகின்றனர். 
     8. இப்பெருமாளை சேவிக்க ஒரு சமயம் இராஜாக்கள், கூட்டம் கூட்டமாய் வந்தபோது வானமாமலை மூர்த்திகளான ஸ்ரீதெய்வநாயகன் ஸ்ரீவரமங்கைத் தாயார் முதலானோர்கள் பூமியில் அமிழ்ந்து இருப்பதாகவும், அவ்விடம் சென்றால் எந்த இடத்தைச் சுற்றிக் கருடன் பறக்கிறானோ அந்த இடத்தில் தோண்டினால் அவர்கள் வெளிப்படுவார்கள் என்று (அசரீரீயாய்) சொல்ல அவ்விதமாய் செய்துதான் வானமாமலை திவ்யதேசத்தை ஸ்தாபித்தனர் என்பர்.    
      9. இங்கிருந்து சுமார் 3 பர்லாங் தூரத்தில் திருப்பாற்கடல் என்ற ஓடையருகே திருப்பாற்கடல் நம்பி சன்னதியும் உள்ளது. இதே போன்று இங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் மலைமேல் உள்ள ஒரு குன்றில் மலைமேல் நம்பி சந்நிதியும் உள்ளது. ஒரு ராட்சசன் ஒரு பிராம்மணனைக் கொல்லவர, கொல்வது பாவமென்று பிராமணர் சொல்ல, அதுதான் எனது தொழில் என்று ராட்சசன் சொல்ல இருவருக்கும் விவாதம் முற்ற வேடன் வடிவங்கொண்டு வந்த பெருமான் அவ்விருவருக்கும் உபதேசம் செய்து திருப்பாற்கடலில் ஸ்நானம் செய்ய இருவரும் மோட்சம் பெற்றனர் என்பது திருப்பாற்கடல் ஸ்தல வரலாறு.
   இத்தகைய பெரும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தலத்தினை அனைவரும் தரிசித்து அழகிய நம்பியின் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment