Tuesday, February 4, 2020

பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகள்

பெரிய ஜீயர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் 650 ஆவது திருநட்சித்திர உற்சவம்-பதிவு-5

மாமுனிகள் வாழித் திருநாமப் பாசுரங்கள்:

5 எறும்பியப்பா அருளிச்செய்த வாழித் திருநாமம்:

"மல்லிகைகள்,வகுளமலர் மணமுடியில் நாறும்,
வண்பவள வாய்அலரில் மொழிகள் நாறும்,
நல்லிசைசேர் பதின்மர் அருள் நற்கலைகள் எல்லாம்,
நலமுடைய கருணைவிழி நாடோறும் மணக்கும்.
சொல்லரிய பாதம் அபிடேக மணம் நாறும்,
தொல்லை எதிராசன் என இவ்வுலகில் வந்தோன்,
செல்வமணவாள மாமுனி லோககுரு எங்கோன்,
திருவடிகள் அல்லதொரு தெய்வம் அறியேனே"

இதில்'செல்வ' மணவாள மாமுனி என்று ஏன் போற்றப்படுகிறார்? மாமுனிகள் முற்றும் துறந்த சந்யாசி; அவரிடம் ஏது செல்வம்? அழகிய மணவாளரான நம்பெருமாள் தம் செல்வம் அனைத்தையும் தம் ஆசார்யர் ' யதீந்தர ப்ரவணர் ரம்ய ஜாமாத்ர முநி' க்கு உடமை ஆக்கினார்.சீடரின் செல்வம் முற்றும் ஆசார்யரின் உடமை என்பதே சிஷ்ய லட்சணம்.அந்த வகையில் இந்தக் கோட்பாட்டை உறுதி செய்யும் வண்ணம்,தம் உடமைகளை உடையவரான/நிர்வாகியானஆதிசேஷனையே -சேஷபீடமாக மாமுனிகளுக்குத்தந்தருளினார்.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் நம்பெருமாள் செல்வத்தை விவரிக்க/அளவிட முடியுமா? அந்த செல்வம் முற்றும் நிறையப் பெற்றதால்"செல்வ மணவாள மாமுனி"

மேலும் மாமுனிகளே ஆர்த்திப் பிரபந்தத்தில்,

"தந்தை,நற்றாய்,தாரம்,தனயர்,பெருஞ்செல்வம் என்தனக்கு நீயே எதிராசா !"என்று அறுதியிடுகிறார்.எதிராசர் என்னும் பெருஞ் செல்வத்தை யே உடையவர் என்பதாலும் 'செல்வ' மாமுனிகள்!!

இந்த எறும்பியப்பா ஸ்வாமி தான் நாம் நாளும் சேவிக்கும்,

"மன்னுயிர்காள்! இங்கே மணவாள மாமுனிவன்,
பொன்னடியாம் செங்கமலப் போதுகளை-உன்னிச்
சிரத்தாலே தீண்டில், அமானவனும் நம்மைக் கரத்தாலே தீண்டல் கடன்"

பாசுரத்தையும் பாடினார்.

(வைணவத்) தமிழ் வளர்த்த மாமுனிகள்:

மாமுனிகள் இயற்றிய 7 கிரந்தங்களுள் 4 தமிழிலும் 3 வட மொழியிலும்.இவைய 
ல்லாமல் 11 வியாக்யான நூல் களையும் இயற்றியுள்ளார்.
அவைபெரும்பாலும் தமிழும், ஓரளவு வடமொழியும் கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன.அவருடைய தமிழ் கிரந்தங்கள்:
1.உபதேச ரத்தினமாலை.
2.திருவாய்மொழி நூற்றந்தாதி
3.ஆர்த்திப் பிரபந்தம்.
4.திருவாராதன கிரமம்.
முதல் மூன்று கிரந்தங்களின் பாசுரங்கள் தெவிட்டாத தேன்தமிழில் எழுதப்பட்டு ள்ளன.

அவர் இயற்றிய கடைசிக் கிரந்தமான "ஆர்த்திப் பிரபந்தம்" கீழ்க்கண்ட ரத்தினங்கள் ஒளிரும் ஒரு அரிய பொக்கிஷம்.
-எம்பெருமான் திருவடிகளை அடையும் ஆர்த்தி! 
--ஏரார் எதிராசர் மேலுள்ள அபிமானம்!!
--நெஞ்சையள்ளும் தமிழ்!!!
--பல்வேறு செய்யுள் வடிவங்கள்!!!
60 பாசுரங்கள் கொண்ட பிரபந்தத்தில் பல பரிமாணங்கள் கொண்ட பாசுரக் கோர்வை ஆச்சர்ய கரமானது. அதுவும் 60 பாசுரங்களில் இதை அற்புதமாகக் கையாண்டுள்ளார்

நேரிசை வெண்பா: 1-20 ; 36-46; 52 & 56-60=37
கட்டளைக் கலித்துறை:21-22 & 47-51=7
எண்சீராசிரயவிருத்தம்:23-28 ; 30-31 & 53=9
பதினான்கு சீராசிரியவிருத்தம்:29=1
பன்னிரு சீர்க்கடி நெடிலாசிரிய விருத்தம்:32=1
எண்சீர்க்கலி நெடிலாசிரிய விருத்தம்:33-35&55 =4
கட்டளைக்கலிப்பா:54 = 1
மொத்தம்: =60

ஆர்த்திக்கு ஒரு பாசுரம்:
"அதிகாரமுண்டேல் அரங்கர் இரங்காரோ!
அதிகாரம் இல்லாதவர்க் கன்றோ-எதிராசா!
நீயிரங்க வேண்டுவது,நீயும்
அதிகாரிகளுக்கே இரங்கில்,
என் செய்வோம் யாம்?"

மாமுனிகள் கண்ணிநுண் சிறுத்தாம்பு:
👌👌👌👌👌👌👌👌
ஐந்தாம் பாசுரம்-படத்தில்.
(நன்றி SKAPS).
படங்கள்
1.கண்ணிநுண் சிறுத்தாம்பு-5
2.,3:திருவஹிந்தபுரம் -மாமுனிகள்,ஆலிழைக் கண்ணனாக சந்திரப் பிரபையில்!

No comments:

Post a Comment