Wednesday, February 5, 2020

பெரியவா திருவடியே சரணம்.

பெரியவா திருவடியே  சரணம். 

குருவிடம் கள்ளமிலா பக்தி செய்பவர் வீடுதேடி தெய்வமே வரும் என்று துக்காராம் போன்ற மகான்கள் சொல்கிறார்கள். இது சத்தியம் என்பதை நிரூபிக்கும் நிகழ்ச்சி.

கர்நூலில் வசிக்கும் கீதா என்ற பெண்மணிக்கு நடமாடும் தெய்வம் காஞ்சி ஸ்ரீமஹா பெரியவரிடம் அளவிலா பக்தி. அவரது பக்திப் பெருக்கு, பாமர உலகிற்கு பைத்தியக்காரத்தனமாகக் கூடப் பட்டதுண்டு. அத்தகைய பக்தைக்கு உதவ தெய்வமே வந்த சம்பவம்.

கீதா, தன் உறவினர்களுடன் காஞ்சி பெரியவாளை தரிசிக்க வந்தார். வந்த இடத்தில் இன்னும் சிறிது நாட்கள் அங்கேயே தங்கி இருந்து தினமும் பெரியவாளை தரிசிக்க விருப்பம் கொண்டார். உடன் வந்தவர்கள் “உன்னை விட்டுவிட்டு போகச் சொல்கிறாயா மொழி தெரியாத இடத்தில் எப்படி தனியாக இருப்பாய், எங்கு தங்குவாய்?” என கடிந்து கொள்ள அருகில் தரிசனம் செய்து கொண்டிருந்த செல்லம்மா என்ற மாதரசி அந்த உறவினரிடம் “நீங்கள் கவலைப்படாமல் ஊர் செல்லலாம். நான் இந்தப் பெண்ணை பார்த்துக் கொள்கிறேன்’’ என்று சொன்னார். மகிழ்ச்சி கொண்ட கீதாவும் “தான் செல்லம்மாவுடனே இருப்பதாகவும் மற்றவர்கள் ஊர் செல்லலாம்” என்று சொல்ல உறவினர்கள்
சென்று விட்டார்கள். பார்த்துக் கொள்வதாக வாக்களித்த செல்லம்மா கீதாவிடம் கடிந்து கொண்டார். “உனக்குப் பைத்தியமா? என்னை உனக்கு முன்பின் தெரியாது. அப்படியிருக்க வயசு வந்த இளம் மங்கையான நீ எப்படி என் வீட்டில் இருக்க சம்மதிக்கலாம். எவரையும் இப்படித்தான் குருட்டுத்தனமாக நம்புவதா?” என்று கேட்டார். கீதா சிறிதும் சலனமின்றி “ பெரியவா பொறுப்பு. நான் ஏன் யோசிக்க வேண்டும்’’ என்று பதில் கூறினார். பெரியவாளின் பேரில் அவ்வளவு திடமான நம்பிக்கை.

ஆச்சரியமடைந்த செல்லம்மா “நானே மிகத் தைரியசாலி. என்னைவிட நீ தைரியமாக இருக்கிறாய்’’ என்று கீதாவிடம் கூறி 10 நாட்கள் முன்பு நடந்ததை கூற அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. 10 நாட்கள் முன் பெரியவாள் செல்லம்மாவிடம் “நான் ஒருத்தரை உன் வீட்டுக்கு அனுப்பறேன். நீ பத்திரமா பாத்துக்கறயா?” என்று கூற பெரியவர் ஆணைப்படி நடக்க காத்திருப்பதாகச் சொன்னார். பெரியவா குறும்பாக “ நான் ஒருத்தரை அனுப்பறேன்னு சொன்னேன். நீ யார் என்ன என்று விசாரிக்காமல் ஒத்துக் கொண்டால் எப்படி?’’ என்று வினவ செல்லம்மா “பெரியவா சொல்வதைக் கேட்பதுதான் என் பழக்கம் அதில் ஆராய்ச்சி, எதுவும் தேவையில்லை’’ என்றதும், தன்னிடம் அவ்வளவு உறுதியான நம்பிக்கையா? என்று மகிழ்ந்தார் பெரியவா. “நான்தான் என் வீட்டுக்கு வரப்போவது யார் என்று யோசிக்காமல் பெரியவா சொன்னார் என்று அப்படியே நம்பினால் நீயும் அதே போல் இருக்கிறாய்’’ என்றார் மனநிறைவோடு.

செல்லம்மா வீடு வந்து தங்கிய கீதா ஒருநாள் நடுஇரவு ஒரு மணிக்கு விழித்துக் கொண்டாள். நேரம் ஆகிவிட்டதாக நினைத்து குளித்து பெரியவாளை விஸ்வரூப தரிசனம் செய்ய ஆவலாய் ஸ்ரீமடம் செல்வதற்காகப் புறப்பட்டார். வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது, ஊரே நிசப்தமாய் இருப்பதைக் கவனித்த அவர் மனதில் ஏதோ சற்று சந்தேகம் வந்தது. எனினும் வீதியில் நடக்கத் தொடங்கியதும் முன்னால் ஒரு மாது நடந்து செல்ல, தனக்கு முன் யாரோ பெரியவாளை தரிசனம் செய்யச் செல்வதாக எண்ணிய கீதா தனக்கு துணை கிடைத்ததாக மகிழ்ந்து அவரை நெருங்கினார். ஆனால் முன்னால் சென்ற மாதின் விழியும் உருவமும் ஏதோ அமானுஷ்யமாக இருப்பதை உணர்ந்து தயங்கி சற்று பின்வாங்கி மெதுவாக நடந்தார். ஸ்ரீமடம் அருகில் அந்த மாது மறைந்து விட்டாள். இதைக் கண்ட கீதாவிற்கு இப்பொழுதுதான் ஆச்சரியம் மேலிட்டது! உடன் வந்த மாதுவைப் பற்றி கேள்வி எழுந்தது! எனினும் அதிசயமாய் அந்த நடுநிசியில் ஸ்ரீமடம் கதவு திறந்திருக்க உள்ளே சென்றால் அதைவிட அதிசயமாய் பெரியவர் கண் உறங்காமலே உட்கார்ந்து கொண்டிருக்க, அவரை தரிசனம் செய்தார். பிறகு மஹான் உத்தரவு தந்தபின் வௌியே வந்தாள். இப்பொழுது தான் கீதாவிற்கு தனியாக வீடு செல்ல பயமாக இருந்தது.

அந்த சமயத்தில் ஸ்ரீமடத்திலிருந்து காவலர் வந்து “என்னம்மா வயசுப் பொண்ணு இப்படி நடுராத்திரியில் தனியாவா வருவ. வா நான் உன் வீடுவரை கொண்டு விடறேன்’’ என்று வலிய வந்து உதவினார். வீட்டுக்கு வந்ததும் கீதாவிற்கு உடன் வந்த மாதைப் பற்றிய எண்ணம் வந்தது. வந்தது யார்? மனம் சமாதானமாக வில்லை. வந்தது யாராய் இருக்கும் என்ற ஆவலில் ஸ்ரீமஹா பெரியவாளிடமே சென்று
கேட்டுவிடலாம் என்று எண்ணினார். பொழுது விடிந்ததும் ஸ்ரீமடம் சென்று மஹான் சன்னதியில் நின்ற கீதா கேட்காமலேயே நடமாடும் தெய்வம் வாய்மலர்ந்து ‘‘காமாக்ஷி தரிசனம் ‘‘காமாக்ஷி தரிசனம்’’ என்று கூறிவிட்டு ‘‘காமாக்ஷி அம்மன் மீது ச்யாமா சாஸ்திரிகள் பாடிய பாடலையும் பாடிக்காட்டினார். ஆச்சரியமடைந்தார் கீதா. 

‘சர்வ சாதாரணமான தனக்கு துணையாக வழிகாட்ட ஸர்வேஸ்வரியா வந்தது! அன்னையா தரிசனம் தந்தது!’ என்று அதிசயித்து பரவசப்பட்டார்.பக்தர்கள் வீடுதேடி தெய்வம் வருவது மட்டுமல்ல. அவர்களுக்கு உதவி புரியவும் தயங்குவதில்லை என்பது தெரிகிறது.

No comments:

Post a Comment