Wednesday, February 5, 2020

அகிலாண்டேஸ்வரி

அகிலாண்டேஸ்வரி

ஒரு வீட்டில், கணவருக்கோ.. மடாதிபதி என்றால் மரியாதை குடுத்தால் போறும். 'தெய்வம்' என்ற லெவலில் வைத்துக் கும்பிடத் தேவையில்லை என்ற எண்ணம். மனைவிக்கோ கடவுளிடமும், மஹான்களிடமும் அபாரமான பக்தி. மஹா பெரியவாளைப் பற்றி அதிகம் தெரியாது.இவர்களுக்கு இரண்டு பெண்கள், ஒரு பையன். பையன் பிறந்ததும் ஜாதகம் கணிக்க ஜோஸ்யரிடம் போனபோது அவர் சின்னதாக ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்!

"நா....சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்கோ! பையனுக்கு பதினாறு வயஸு வரைக்கும் அவனோட யோகம் செரியில்லே...அதுனால, அதுக்கப்புறம் ஜாதகம் கணிக்கலாம்....."

பாவம். பெற்றவளுக்கு வயிறு கலங்கியது. ஒரே பிள்ளையாச்சே! தெரிந்த, படித்த அத்தனை வ்ரதங்களையும் அனுஷ்டித்தாள். யார் என்ன பரிஹாரம் சொன்னாலும் செய்தாள்; எந்தக் கோவிலானாலும் ஓடினாள்.

ஒரு வியாழக்கிழமை. அன்றும் விரதம். அன்று மாலை, அவளுடைய பெண் தன் ஸ்கூல் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்தவள், திடீரென்று அம்மாவிடம்,

"ஏம்மா......காஞ்சிபுரத்ல இருக்கற மஹா பெரியவாளைப் பத்தி நெறைய சொல்றாளே? நீ ஏன் அவர்ட்ட நம்ம பாலாஜிக்காக வேண்டிக்கக் கூடாது?...." என்று கேட்டதும், அம்பாளே சொல்வதாக அவளுக்குப் பட்டது! அவ்வளவுதான் ! பெரியவா, பெரியவா என்று ஒரே வெறியாக இறங்கி விட்டாள்.

ஒரு நாள் விடியக்காலை அவளுக்கு ஒரு ஸ்வப்னம்.....

மஹா பெரியவா ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். நடுவில் சலசலவென ஆறு போல் ஜலம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கு அந்தப்பக்கம் இந்த அம்மா மஹா பெரியவாளை நோக்கி கை கூப்பிக் கொண்டிருக்கிறாள். பிள்ளைக்காக மனமுருகி வேண்டி அழுது கொண்டிருக்கிறாள், பெரியவாளிடம்.
அமைதியாக அவள் பக்கம் திரும்பிய மஹா பெரியவா......."நீ....Bankல நெறைய ஸேமிச்சு வெச்சிருக்கே....எவ்ளோ எடுத்தாலும் கொறையவே கொறையாது...கவலைப்படாத!" என்று அபயம் குடுக்கிறார்.

கனவு கலைந்தது. அதோடு பிள்ளையைப் பற்றிய அவளுடைய பயமும் ஸூர்யனைக் கண்ட பனி போல் கலைந்தது. [கனவான வாழ்வின் பயத்தை, கனவிலேயே தீர்த்து விட்டார்] அதிலிருந்து ஒவ்வொரு பௌர்ணமிக்கும் பெரியவாளைப் போய் தர்ஶனம் பண்ணிவிட்டு வருவாள். கணவருக்குத்தான் "கெத்து" ஜாஸ்தியே! அவர் போகமாட்டார்.

ஒருநாள் ஒரு ஸ்நேகிதர் ஒரு அழகான தேவியின் விக்ரஹம் ஒன்றை இவர்களுக்கு பரிஸாக அளித்தார்.

ஆரம்பித்தது சர்ச்சை!

"விக்ரஹம், இத்தனை அடிக்கு மேல இருந்தா, ஆத்துல வெச்சு பூஜை பண்ணக்கூடாது!...அதோட, இது எந்த அம்மன்-னு வேற தெரியல...ஏற்கனவே ஆத்துல நிம்மதி இல்ல....எங்கியாவுது கோவில்ல கொண்டு போய் வெச்சுட்டு வா!.."

'தையத்தக்கா' என்று குதித்தார். ஒரே குழப்பம்! மனைவிக்கு தெரிந்த ஒரே தெய்வம் மஹா பெரியவா!

"பெரியவாகிட்ட கேட்டுடுவோமே! எதுக்கு சண்டை? நீங்களே நேர்ல வந்து பாருங்கோ. அவர் சொல்றதைக் கேளுங்கோ"

"செரி வரேன்...பெரியவா மட்டும் இது என்ன அம்மன் சிலை..ன்னு கரெக்டா சொல்லிட்டார்ன்னா, நா...அவரை நிச்சயம் தெய்வமா ஏத்துக்கறேன் "

[நீர் ஏத்துக்கறீரா? போனாப்போறதுன்னு கருணைனால, அவர் உம்மை ஏத்துண்டதுனாலதான், அந்த மடத்துக்குள்ள போகவே முடியும்.. ஓய்!]

"போய்த்தான் பார்ப்போமே" என்று ஏதோ உள்ளுணர்வு உந்தித் தள்ள, மனைவியோடு நீண்ட கியூவில் நின்று கொண்டிருந்தார். இதோ! கோடானுகோடிப் பேர், பார்க்கப் பார்க்க, போதாது போதாது என்று மேலும் மேலும் பார்க்க வேண்டும் என்று ஏங்கும் திவ்ய மங்களன் தன்னுடைய திருக்கரத்தை அசைத்து அந்த அம்மாவை அழைக்கிறார். அவளுக்கோ கண்களில் கண்ணீர்! மஹா பெரியவாளிடம் ஓடினாள்! ஆஹா! இது என்ன? 'கீ' குடுத்த பொம்மை மாதிரி, கணவரும் பின்னாலேயே ஓடினார்!

"என்ன? ஆத்துக்கு அகிலாண்டேஸ்வரி வந்திருக்காளா?" சிரித்துக் கொண்டே கேட்டுவிட்டு, பக்கத்தில் நின்று கொண்டிருந்த அவளுடைய கணவரை, தலையிலிருந்து கால் வரை ஒரு பார்வை பார்த்தார் மஹா பெரியவா!

'மடேல்' என்று யாரோ சம்மட்டியால் மண்டையில் ஓங்கிப் போட்டது போல் இருந்தது கணவருக்கு! தன்னிச்சையின்றி கூப்பிய கரங்கள், மடத்தை விட்டு வெளியே வரும் வரை பிரியவில்லை. அதன் பிறகு மஹா பெரியவாளின் திருவடியிலிருந்து அவருடைய உள்ளம் பிரியவில்லை.

जेय जय शङ्कर हर हर शङ्करा
ஜயஜயசங்கர!!ஹரஹரசங்கர!!
உம்மாச்சி தாத்தா சரணம்

No comments:

Post a Comment