Wednesday, February 5, 2020

காயகல்ப சாஸ்திரம்

காயகல்ப சாஸ்திரம்
--------------------------------------

ரமணாச்ரமத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடக்கும். அப்படித்தான் அன்றும் ‘காயகல்பம்’ என்பது குறித்து ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது.

காயகல்பம் என்பது சிலவகைப் பயிற்சிகளைக் கையாண்டு, சிவகை உணவு முறைகளை மேற்கொண்டு நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கான ஒரு வழிமுறை. கல்ப காலத்திற்கு (நீண்ட காலம்) காயத்தை (உடலை) அழியாமல் இளமையோடு வைத்திருப்பதற்கு இந்த முறை உதவும் என்பதான ஒரு நம்பிக்கை அக்காலத்தில் இருந்தது. இது குறித்துச் சித்தர் நூல்கள் பலவும் பேசுகின்றன.

காயகல்பம் என்பது உண்மையா அல்லது பொய்யா என்று அன்று விவாதம் நடந்தது. ஒரு சிலர் ‘காயகல்பம்’ உண்மை என்றும், அதற்கு சித்தர் நூல்களே ஆதாரம் என்றும் கூறினர். மற்ற சிலரோ அதெல்லாம் சும்மா; ஏமாற்று வேலை; மோசடி என்றனர். இப்படி நீண்ட நேரத்திற்கு விவாதம் நடந்தது.

பகவான் ரமணரோ இதில் கலந்து கொள்ளாமல் மௌனமாய் அமர்ந்திருந்தார்.

வாதாடிக் களைத்த பக்தர்கள் பகவானிடம், “பகவானே, இதுபற்றி உங்கள் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறோம்; காயகல்பம் என்பெதல்லாம் உண்மைதானா?” என்றனர்.

சிறிதுநேரம் மௌனமாக இருந்த பகவான், பின் அவர்களிடம், “காயகல்ப சாஸ்திரம் எழுதினவா யாரும் இப்போது உயிரோடு இருக்கிறதாத் தெரியலை” என்று சொல்லிவிட்டு மௌனமானார்.

பகவான் சொன்னதன் உண்மையையும் அதில் ஒளிந்திருந்த நகைச்சுவையையும் ரசித்த பக்தர்கள் உண்மை எது எனத் தெளிந்து, புரிந்து மௌனமாகினர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீரமணாய!

No comments:

Post a Comment