உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன?
மெடிக்கல் செக் அப்- 7
ரத்த அழுத்தம் இரண்டு எண்களால் குறிப்பிடப்படுகிறது. மேலே உள்ள எண் சிஸ்டாலிக் (Systolic) 120 mmHgக்குக் கூடுதலாகவும் மற்றும் கீழே உள்ள எண் டயாஸ்டாலிக் (Diastolic) 80 mmHgக்கு அதிகமாகவும் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம்.
ரத்த அழுத்தத்தில் எத்தனை நிலைகள் உள்ளன?
இயல்பான ரத்த அழுத்தம் - < 120 / <80 mmHg
உயர் ரத்த அழுத்தத்தின் முன் நிலை - 120 - 139 / 80-89 mmHg
உயர் ரத்த அழுத்தம் முதல் நிலை - 140 - 159 / 90-99 mmHg
உயர் ரத்த அழுத்தம் இரண்டாம் நிலை - >160 / >100 mmHg.
உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறி என்ன?
உயர் ரத்த அழுத்தத்துக்கு அறிகுறிகள் கிடையாது. இந்தியர்களில் நான்கில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் இருக்க வாய்ப்பு உள்ளது. அதனால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறதா என்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது?
நமது பெற்றோர்களிடமிருந்து மரபணுக்களால் வழியாக நமக்கு வரலாம். சர்க்கரை நோய், கூடுதல் உடல் பருமன், இதய நோயாளிகள், சிறுநீரகத் தொந்தரவு உள்ளவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
பக்கவாதம், மாரடைப்பு, சிறுநீரகச் செயல் இழப்பு, இதயம் செயலாற்றும் திறன் குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன நடைமுறை மாற்றங்கள் செய்ய வேண்டும்?
தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும், உடல் எடையைக் குறைக்க வேண்டும், புகையிலை மற்றும் மது பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும் மற்றும் உப்பு உபயோகத்தைக் குறைக்க வேண்டும்.
யார் யாரெல்லாம் ரத்த அழுத்தம் உள்ளதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்?
18 வயதுக்கு மேல் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், உடல் பருமன் உள்ளவர்கள், குறட்டைப் பிரச்சினை உள்ளவர்கள், மகப்பேறு காலத்தில் இருப்பவர்கள் சோதனை செய்து கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் வழக்கமாகச் செய்ய வேண்டியது என்ன?
மாதாமாதம் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைச் சீர்செய்வதற்காக மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தினமும் ஒரே நேரத்தில் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். வீட்டிலேயே தானியங்கி ரத்த அழுத்தப் பரிசோதனை கருவி உபயோகித்து ரத்த அழுத்தம் எந்த நிலையில் உள்ளது என்று சோதித்துக் கொள்ள வேண்டும்.
ரத்த அழுத்தத்தைச் சீராக வைத்துக்கொண்டால் ஏற்படும் நன்மைகள் என்ன?
பக்கவாதம், மாரடைப்பு , இதயத் தொந்தரவு ஏற்படும் வாய்ப்பை 30இல் இருந்து 50 சதவிகிதம் வரை குறைக்கலாம்.
குறைந்த சோடியம் உப்பு என்றால் என்ன?
குறைந்த சோடியம் உப்பு என்றால் அதில் Sodium Chloride (சோடியம் குளோரைடு)க்குப் பதிலாக Potassium Chloride (பொட்டாசியம் குளோரைடு) உள்ளது. இதனால் ரத்தத்தில் பொட்டாசியம் கூடும். சிறுநீரக நோயாளிகள் இந்த உப்பை உண்ணவே கூடாது. சில ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள் பொட்டாசியத்தைக் கூட்டும் அதனால் மருத்துவரை ஆலோசித்தப் பின்னரே இந்த உப்பை உணவில் சேர்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு:
மருத்துவர் ரம்யா அய்யாதுரை
எம்.டி., டி.என்.பி., எம்.ஆர்.சி.பி (பொது மருத்துவம்)
மருத்துவப் பேராசிரியர்
கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலூர்.
சர்வதேச மருத்துவ ஆய்விதழ்களில் மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வருபவர்.
No comments:
Post a Comment