Tuesday, February 4, 2020

கூகிள் உருவான கதை! 1.

கூகிள் உருவான கதை!

1. தேடல்

‘காலை எழுந்தவுடன் படிப்பு’, என்று பாரதியார் பாப்பாவுக்குச் சொல்லிப் பல வருடங்களாகிவிட்டது. இப்போதெல்லாம் கதையே வேறு! 
பாப்பாக்களில் தொடங்கி, தாத்தாக்கள்வரை ஓரளவு கம்ப்யூட்டர் ஞானம் பெற்ற எல்லோருக்குமே, ‘காலை எழுந்தவுடன் கூகுள்’தான். அதன்பிறகு நாள்முழுதும் கூகுளாண்டவர்தான் அவர்களை அள்ளிக்கொண்டு அருள் புரிகிறார். 

உதாரணமாக, நேற்று காலை திடீரென்று ஒரு பெரிய சந்தேகம், உடம்பு இளைக்கவேண்டுமானால், தேனைப் பாலில் குழைத்துச் சாப்பிடவேண்டுமா, அல்லது தண்ணீரில் குழைத்தால் போதுமா? பச்சைத் தண்ணீரிலா, வெந்நீரிலா? சாப்பாட்டுக்கு முன்பா, பிறகா? ராத்திரியிலா, பகலிலா? 

இப்படி அடுக்கடுக்காகக் கேள்விகள் உருவாகிக் குழப்பியதால், கம்ப்யூட்டரை எழுப்பி, http://www.google.com என்று தட்டுகிறோம். ஒரு தக்கினியூண்டு மந்திரப் பெட்டி வந்து நிற்கிறது. 

அந்தப் பெட்டிதான், கூகுள். இணையத்தின் ராஜாவான இந்தத் தேடும் இயந்திரத்துக்குள், உலகக் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில்கள் ஒளிந்திருக்கின்றன. 
உதாரணமாக, ‘உடம்பு இளைப்பது எப்படி?’, என்று கூகுளில் தட்டிக் கேட்டால் போதும். ஆயிரக்கணக்கில் யோசனைகள் வந்து குவிகின்றன. 

அதையெல்லாம் படித்துப் பார்த்துவிட்டு, இது சரிப்படாது என்று முடிவு செய்கிறோம். இத்தனை வழிமுறைகளையும் பின்பற்றுவதைவிட, குண்டாகவே இருந்துவிட்டுப் போகலாம். 

ஆனால், குண்டாக இருப்பவர்களுக்கு பிளட் பிரஷர், மாரடைப்பு, கேன்ஸர் இப்படி என்னென்னவோ வரும் என்கிறார்களே. மெய்யாலுமா? 

மறுபடி கூகிளாண்டவரைக் கேட்கிறோம். அவராக எந்தக் கருத்தையும் சொல்லாமல், மீண்டும் குவியலாகப் பக்கங்களை அள்ளிப்போடுகிறார். 

இன்னும் இப்படிச் சமையல் குறிப்பு, அறிவியல் சந்தேகங்கள், சினிமா, திரைப்படம், இசை, மற்ற பொழுதுபோக்குகள், விளையாட்டு, பள்ளிப் பாடங்கள், மருத்துவத் தகவல்கள், இலக்கியம், கார்ட்டூன், பொது அறிவுப் புள்ளிவிவரங்கள், செய்திகள்... நம்முடைய தேவை எதுவானாலும் சரி, கூகுளில் அதற்கு ஒரு பதில் நிச்சயமாக இருக்கும். 

இப்போதெல்லாம், இணையத்தில் உலவுகிற யாரும், ‘இந்தத் தகவலைத் தேடிப் பாருங்க’என்று சொல்வதே கிடையாது, ‘கூகுள் பண்ணுங்க’என்று ஒரே வாக்கியத்தில் முடித்துவிடுகிறார்கள். அதிலேயே எல்லாம் அடக்கம்! 

கூகுளுக்கு நாம் தேடுகிற விஷயம் எதுவுமே புதிது இல்லை, எதுவுமே கஷ்டம் இல்லை. எதைக் கேட்டாலும் விரல் சொடுக்கும் நேரத்தில் எல்லா விவரங்களும் வந்து விழுகிறது. 

வேகம்மட்டுமல்ல, கூகுளுக்குப் புத்திசாலித்தனமும் அதிகம். நம் மனத்துக்குள் புகுந்து படித்துவிட்டதுபோல், நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதைக் கொண்டுவந்து காண்பிக்கும் கூகுளின் திறமை, தீராத ஆச்சர்யம். 

இத்தனை பிரமாதமான கூகுள், எல்லோரும் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமையாகவும் இருப்பதுதான் விசேஷம். கம்ப்யூட்டரை முதன்முறையாகத் தொடுகிறவர்கள்கூட, கூகுள்மூலம் தங்களுக்கு வேண்டிய விவரங்களைச் சுலபத்தில் பெற்றுக்கொண்டுவிடலாம். 

இணையத்தில் கூகுளின் தேடல் திறமையைப் பார்க்கும்போது, நமக்கு ஓர் ஏக்கம். நம் வீட்டில், பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் பல பொருள்களை ஆங்காங்கே மறந்து வைத்துவிட்டுத் தேடுகிறோமே, அதையெல்லாம் சுலபமாகக் கண்டுபிடிப்பதற்கு, கூகுள்போல ஒரு தேடும் இயந்திரம் இருக்கக்கூடாதா! 

இப்போது இந்த ஏக்கம் வெற்றுக் கற்பனையாகத் தோன்றினாலும். அநேகமாக, அடுத்த சில ஆண்டுகளுக்குள் அதுவும் சாத்தியமாகிவிடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூகுள் என்ற நிறுவனம் வளர்ந்திருக்கும் வேகம் அப்படி! 

இன்றைய தேதிக்குப் பல கணினிப் பிரியர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல்கூட வாழ்ந்துவிடுவார்கள். ஆனால், கூகுள் இல்லாத ஒரு வாழ்க்கையை யாராலும் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. அப்படி நம்முடைய தினசரி வாழ்க்கைக்குத் தேவையான எல்லா விவரங்களையும் அள்ளித் தரும் காமதேனுவாகப் பிணைந்துவிட்டது கூகுள். 

யார் இந்த கூகுள்? இத்தனை சீக்கிரத்தில் நம்மை மொத்தக் குத்தகைக்கு எடுத்து அடிமைகளாக்கிவிட்ட இந்த தேவதைத் தொழில்நுட்பம், எங்கே, எப்படிப் பிறந்தது, எப்படி வளர்ந்தது? வருங்காலத்தில் இது எங்கே செல்லப்போகிறது? 

...தொடரும்

நன்றி - என்.சொக்கன்

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!

No comments:

Post a Comment