Wednesday, February 5, 2020

சாஸ்திரம் சம்பிரதாயம் நடப்பும்

"இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?"

(சாஸ்திரம் சம்பிரதாயம் நடப்பும்)

சொன்னவர்; (சில அனுபவங்கள்-தலைப்பில்)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா

தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

(மறு பதிவு)

சேங்காலிபுரத்தைச் சேர்ந்த தீட்சிதர் ஒருவர் தரிசனத்துக்கு வந்தார். அவர் பெண்ணுக்குப் பதினைந்து வயதாகி விட்டதாம். சரியான வரன் குதிரவில்லையாம். அதனால் அந்தணர்களில் வேறு உட்பிரிவைச் சேர்ந்த பையன் கிடைத்தால் விவாகம் செய்து கொடுக்கலாமா என்று கேட்டார்.

"கூடாது" என்று நிர்த்தாட்சண்யமாகப் பதில் கூறிவிட்டார்கள் பெரியவா.

அதே சமயம் ஒரு கல்யாணப் பத்திரிகையுடன் ஒரு தம்பதி வந்தனர்.

"பெண்ணுக்குக் கல்யாணம்..."

"பையனுக்கு சொந்த ஊர் எது.?"

சொன்னார்.

"அங்கே எல்லோரும் பிருஹசரணம் ஆச்சே.?நீ வடமன்..."

தகப்பனார் நெளிந்தார். இந்த மாதிரி கேள்வியை எதிர்பார்க்காததால் சங்கடப்பட்டார்.

"பெண்ணுக்கு இருபத்தொன்பது வயசாயிடுத்து, வடமப் பையன், தகுந்த வரன் கிடைக்கல்லே..."

பெரியவாளின் ஜாடையைப் புரிந்து கொண்டு புடவை, திருமாங்கல்யம், பூர்ணபலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் கொண்டு வைத்தார் சிஷ்யர் .

பெரியவா தொட்டு, ஆசிர்வதித்துத் தம்பதியிடம் கொடுக்கச் சொன்னார்கள்.

மிகவும் மகிழ்ச்சியுடன் அவர்கள் வந்தனம் செய்து விட்டுப் போனார்கள்.

தீட்சிதரைப் பார்த்தார்கள் பெரியவா.

"என்னடா இது.!...இந்தச் சாமியார் நமக்கு ஒரு நியாயம், இன்னொருவருக்கு இன்னொரு நியாயம் சொல்கிறாரே என்று பார்க்கிறாயோ.?"

தீட்சிதர் பதில் சொல்லவில்லை.

"த்விஜர்களுக்குக் கன்னிகா விவாகம் தான் சொல்லப்பட்டிருக்கு. சாரதா சட்டத்துக்குப் பயந்து அந்தப் பழக்கம் போயே போச்சு.!

"பெண்கள் விவாகம் ஆகாமல் இருக்கக் கூடாது.

சாஸ்திரத்தில் உட்பிரிவுகளுக்குள் கொடுக்கல்-வாங்கல் கூடாது என்று சொல்லப்படல்லே, ஆனா, ரொம்பக் காலமாக ஒரு சம்பிரதாயத்தை நாம் அனுஷ்டித்துக் கொண்டிருக்கோம். முடிந்தவரை அதை மாற்றாமல் இருப்பது தான் சரி.

"இந்தப் பொண்ணுக்கு என்ன வயசுன்னு சொன்னாரே, கேட்டியோ.? இப்போ கல்யாணம் தப்பிப் போனால், மறுபடி எப்போ வருமோ.? அதனால், இவர்கள் விஷயத்தில் சம்பிரதாயத்தை விட விவாகம் நடைபெற வேண்டியதுதான் முக்கியம்.

"அதோடு அவர்கள் லௌகிகர்கள் சாஸ்திரத்திலிருந்து  எத்தனையோ விலகிப் போய் விட்டார்கள்.உன் சமாசாரம் அப்படியில்லை.அக்னி ஹோத்ரிகள் குடும்பம். அதனாலே நீ சம்பிரதாயத்தை மீறக்கூடாது ..கவலைப்படாதே.."

தீட்சிதர் அடுத்த மாதமே பெண்ணின் கல்யாணப் பத்திரிகையுடன் வந்தார்.

"சம்பிரதாய விரோதமில்லாமல் நடக்கிறது"

அவருக்கு தாராளமாகவே அருள்புரிந்தார்கள், பெரியவாள்.

No comments:

Post a Comment