கூகிள் உருவான கதை!பாகம் - 02
முதலில், கூகுள் என்றால் என்ன? சில ஆண்டுகளுக்கு முன்னால், ஆங்கில அகராதியில் தேடிப் பார்த்தால், கூகுள் என்ற வார்த்தை கிடைக்காது. வேறு எந்த மொழியிலும்கூட, அப்படி ஒரு வார்த்தை இல்லை.
இப்படி ஒரு விநோதமான பெயரை, யார், எதற்காகத் தேர்ந்தெடுத்தார்கள்? அது ஒரு சுவாரஸ்யமான கதை.
எட்வர்ட் காஸ்னர் என்ற ஒரு பேராசிரியர், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இந்தக் கணித மேதைக்கு, மிகப் பெரிய எண்களின்மீது ஆர்வம்.
மிகப் பெரிய எண்கள் என்றால், பத்து, நூறு, லட்சம், கோடி இல்லை, அதைத் தாண்டி இன்னும் பெரிய, பிரம்மாண்டமான எண்கள்.
உதாரணமாக, ஒன்று போட்டு, அதன் பக்கத்தில் நூறு பூஜ்ஜியங்கள். இதை எப்படி, என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள்?
ஒரே வார்த்தை. அதைச் சொல்லும் விதத்திலேயே, அந்த எண்ணின் பிரம்மாண்டம் தெரியவேண்டும். அதேசமயம், அது எல்லோராலும் உச்சரிக்க முடியும்படி எளிமையாக இருக்கவேண்டும் என்று விரும்பினார் பேராசிரியர் காஸ்னர்.
எந்நேரமும் இந்தக் குழப்பத்துடனேயே சுற்றிக்கொண்டிருந்த எட்வர்ட் காஸ்னர், கணித அடிப்படையில் அந்த எண்ணுக்கு என்னென்னவோ புதுப்புது பெயர்களைத் தேடிப் பிடித்துச் சூட்டிப்பார்த்தார். ஆனால், எந்தப் பெயரும் அதற்குச் சரியாகப் பொருந்தவில்லை.
அப்போது ஒருநாள், தன்னுடைய மருமகன்களான மில்டன், எட்வின் என்ற இரண்டு பொடியன்களுடன் உலாவச் சென்றிருந்தார் காஸ்னர். பையன்களோடு உற்சாகமாகப் பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தவர், விளையாட்டாக அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டார், ‘ஒன்று போட்டு, பக்கத்தில் நூறு பூஜ்ஜியங்கள், இந்த மகா நம்பருக்கு ஒரு பொருத்தமான பெயர் சூட்டுங்கள், பார்க்கலாம்!’
கொஞ்சமும் யோசிக்காமல், சட்டென்று சொன்னான் மில்டன், ‘கூகுள்’
அந்தப் பெயரைக் கேட்டதும், காஸ்னருக்குச் சந்தோஷம் கலந்த ஆச்சரியம். மில்டன் குறிப்பிட்டது அர்த்தமில்லாத மழலை போன்ற ஒரு வார்த்தைதான். என்றாலும், இத்தனை நாளாக அவர் யோசித்த எல்லாப் பெயர்களையும்விட, இந்தப் பெயர்தான் அந்த மிகப் பெரிய எண்ணுக்கு கச்சிதமான பொருத்தம் என்று அவருக்குத் தோன்றியது.
ஆகவே, ஒன்பது வயதுப் பையனான மில்டனின் சிந்தனையில் தோன்றிய அந்த ‘ஜாலி’ வார்த்தையையே, தன்னுடைய எண்ணுக்குச் சூட்டுவதாக முடிவுசெய்தார் பேராசிரியர் எட்வர்ட் காஸ்னர். அவர் எழுதிய ஒரு கணித ஆராய்ச்சிக் கட்டுரையில், ‘கூகுள்’ என்ற சொல் முதன்முறையாக இடம்பெற்றது.
அதன்பிறகு, கணித வல்லுனர்கள், மாணவர்களிடையே ‘கூகுள்’என்ற வார்த்தை சகஜமாகப் புழங்க ஆரம்பித்தது. எந்தப் பெரிய எண்ணைச் சொல்வதென்றாலும், அவர்கள் ‘கூகுள்’ என்று குறிப்பிடத் தொடங்கினார்கள்.
அதுசரி, கணக்குப் பேராசிரியரின் இந்த கூகுளுக்கும், இணையத்தில் விஷயம் தேடுகிற அந்த கூகுளுக்கும் என்ன சம்பந்தம்?
‘பேஜ்’ அல்லது ‘லாரி’ அல்லது ‘லாரி பேஜ்’.
இதில் உங்களுக்கு எந்தப் பெயர் பிடிக்கிறதோ, அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எல்லாம் ஒரே மனிதரைதான் குறிப்பிடுகிறது.
கூகுள் இணையத் தேடல் நிறுவனத்தைத் தோற்றுவித்த இரண்டு நண்பர்களில் ஒருவர், ‘லாரன்ஸ் ஈ. பேஜ்’. இன்னும் விசேஷமாகச் சொல்வதென்றால், கூகுளின் தொழில்நுட்ப முதுகெலும்பு!
இன்றைக்கு, நாம் இணையத்தில் கூகுளின் பக்கத்தைத் திறந்து, ஏதேனும் ஒரு வார்த்தையைத் தட்டித் தேடுகிறோம். அப்போது, நாம் தட்டச்சு செய்த வார்த்தையின் அடிப்படையில் நமக்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தருகிறதே கூகுள், அதற்காகப் பின்னணியில் இயங்கும் அந்த ரகசிய சூத்திரத்தை எழுதியவர் லாரி பேஜ்தான்.
பல வருடங்களுக்குமுன் எழுதப்பட்ட வெற்றி சூத்திரம் அது. ஒருசில மாற்றங்களுடன் இன்றுவரை வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
1973ம் ஆண்டு மார்ச் 26ம் தேதி மிச்சிகன் ஆன் ஆர்பர் பகுதியில் பிறந்தவர் லாரி பேஜ். அவருடைய தந்தை கார்ல் விக்டர் பேஜ், மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் கணினிப் பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்தார். தாய் க்ளோரியாவும், அதே பல்கலைக்கழகத்தில் கணினி ஆசிரியை.
அப்பா, அம்மா இருவருமே கம்ப்யூட்டர்க்காரர்களாக இருந்ததால், லாரி பேஜுக்கு மிகச் சிறிய வயதிலிருந்தே கணினிகளின்மீது தீராத ஆசை. அரை டிரவுசர் பருவத்தில், அவர் கம்ப்யூட்டரைத் தொட்டுவிட்டால் போதும், சாப்பாடு, தண்ணீர் எதுவும் தேவையில்லை!
முதலில் கம்ப்யூட்டரில் வெறுமனே A, B, C, D தட்டி விளையாடிக்கொண்டிருந்த லாரி, சீக்கிரத்திலேயே தன்னுடைய பள்ளிக்கூடப் பாடங்களையெல்லாம் கணினி உதவியுடன் கற்றுக்கொள்ளப் பழகிவிட்டார். அதன்பிறகு, தினந்தோறும் பள்ளியில் ஆசிரியர்கள் கொடுக்கிற வீட்டு வேலைகளையெல்லாம்கூட, கையில் எழுதாமல், வீட்டுக் கணினியில் தட்டி, அச்சடித்துக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.
[17:45, 26/11/2019] +91 98653 12653: இதனால் லாரியின் ஆசிரியர்களெல்லாம் குழம்பிப்போய் விட்டார்கள். அப்போது அமெரிக்காவில் கணினிகள் அவ்வளவாகப் புழக்கத்தில் வந்திருக்காத நேரம். ஆகவே, இப்படி ஒரு தொடக்கப்பள்ளி மாணவன் கம்ப்யூட்டர் கற்றுக்கொண்டு, அதிலேயே ஹோம் வொர்க் செய்கிறானே என்று சந்தோஷப்படுவதா, அல்லது, கையில் எழுதவேண்டிய வீட்டுப்பாடத்தையெல்லாம் சுலபமாகக் கம்ப்யூட்டரில் தட்டி அச்சிட்டுத் தருகிறான் என்று அவனைத் திட்டுவதா?
லாரியின் ஆர்வங்கள் வீட்டுக் கணினியோடுமட்டும் நின்றுவிடவில்லை. தன்முன்னே இருக்கும் எல்லா விஷயங்களும் எப்படி இயங்குகின்றன என்கிற உள்விஷயங்களைத் தெரிந்துகொள்ள விரும்பினார் அவர்.
உதாரணமாக, புல் வெட்டும் கருவி ஒன்றைப் பார்த்தால், கையில் கிடைத்த ஸ்பேனர், ஸ்க்ரூ டிரைவர் போன்ற கருவிகளின் உதவியுடன் அதை அக்கக்காகப் பிரித்துப்போட்டுவிடுவார் லாரி. பிறகு, அதையெல்லாம் மீண்டும் பழையபடி ஒன்றாகப் பூட்ட முயன்றுகொண்டிருப்பார். யாராவது இதைப் பார்த்துப் பதறிப்போனால், ‘இந்தக் கருவி எப்படிப் புல் வெட்டுகிறது என்பதைக் கற்றுக்கொள்கிறேன்’, என்று சீரியஸாக பதில் வரும்.
இந்தப் பழக்கத்தால், லாரிக்கு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் மீதும் அவற்றைக் கண்டுபிடிக்கும் வல்லுனர்களின்மீதும் இயல்பான மரியாதையும் ஆர்வமும் வந்தது. உலகத்தில் இதுவரை எங்கேயும் இல்லாத ஒரு புதிய விஷயத்தைத் தங்களின் கற்பனையில் உருவாக்கி, அதை நிஜமாகவும் செய்து காட்டுகிற அறிவியலாளர்களுடைய மேதைமையை வியந்தார் அவர்.
குறிப்பாக, நிகோலா டெஸ்லா என்னும் அறிவியல் வல்லுனரின் வாழ்க்கை சிறுவன் லாரியை மிகவும் கவர்ந்தது. செர்பியாவைச் சேர்ந்த இந்தக் கண்டுபிடிப்பாளர், இயல்பியல், இயந்திரவியல், மின்சாரவியல் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கியவர். புதுமையான சிந்தனைகள், கண்டுபிடிப்புகளுக்காகப் புகழ்பெற்றவர், மானுட சரித்திரத்தின் மிகச் சிறந்த தொழில்நுட்ப மேதைகளில் ஒருவராக மதிக்கப்படுபவர்.
ஆனால், ஓர் அற்புதமான அறிவியலாளராக வெற்றிபெற்ற நிகோலா டெஸ்லா, வேறொரு அவசியமான விஷயத்தில் படுதோல்வி கண்டவர். அவரால் தன்னுடைய கண்டுபிடிப்புகளில் எதையும் வணிகரீதியில் வெற்றியடையச் செய்ய முடியவில்லை.
அதாவது, அவருடைய மூளையில் தோன்றிய கண்டுபிடிப்புகள் எல்லாமே, அவரது ஆராய்ச்சி சாலையோடு நின்றுவிட்டன, மக்களுக்குச் சென்று சேரவில்லை, பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை. கடைசியில், வறுமையில் வாழ்ந்து இறந்தார் அந்த மேதை.
லாரிக்குப் பன்னிரண்டு வயதானபோது, நிகோலா டெஸ்லாவின் வாழ்க்கை வரலாறைப் படித்துத் தெரிந்துகொண்டார். அவருடைய வாழ்க்கையிலிருந்து, ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார் அவர்.
புதுமையாகச் சிந்திப்பதும் கண்டுபிடிப்பதும் அவசியம்தான். ஆனால், அந்தக் கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்பட வேண்டும், அதன்மூலம் அவற்றைக் கண்டுபிடித்தவருக்கும் பலன் கிடைக்க வேண்டும். அப்போதுதான், அந்தப் படைப்பு முழுமையடைகிறது!
அதாவது, ஒரு கண்டுபிடிப்பாளரின் உழைப்பு எப்போதும் வீணாகக்கூடாது. ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவு அதனை வணிகரீதியில் வெற்றியடையச் செய்வதும் முக்கியம்.
டெஸ்லாவைப் போலவே, லாரிக்கும் புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கிற ஆர்வம் நிறைய இருந்தது. ஆனால் அதேசமயம், அந்தக் கண்டுபிடிப்புகளின் மூலம் உலகத்தை மாற்றவேண்டும் என்றும் விரும்பினார் அவர்.
அதாவது, மக்களுக்குப் பயன்படக்கூடிய புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். பின்னர், அதை நாமே பூட்டி வைத்துக்கொள்ளாமல், எல்லோருக்கும் கொண்டு சேர்க்கவேண்டும் என்று விரும்பிய லாரியின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அவருடைய கல்லூரி வாழ்க்கை அமைந்தது.
1991ம் ஆண்டு, பள்ளிப் படிப்பை முடித்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரியில் சேர்ந்த லாரி பேஜ், அங்கே கணினியியலைத் தன்னுடைய விருப்பப் பாடமாக ஏற்றுக்கொண்டார். கூடவே, பல்வேறு பிஸினஸ் பாடங்கள், தனது தலைமைப் பண்புகளையும் வளர்த்துக்கொள்வதற்கான நல்ல வாய்ப்புகளும் அவருக்குக் கிடைத்தது.
இதேபோல், மிச்சிகனில் லாரிக்குக் கிடைத்த ஆசிரியர்களும் மிக அருமையானவர்கள். இயல்பாகவே படிப்பில் நல்ல ஆர்வமுள்ள மாணவனான லாரிக்கு, இவர்கள் சிறந்த வழிகாட்டிகளாக அமைந்தார்கள்.
பலவிதங்களில் தன்னுடைய கல்லூரி அளவில் சூப்பர் ஸ்டாராகவே விளங்கிக்கொண்டிருந்த லாரி பேஜ், 1995ம் ஆண்டு ‘ஹானர்ஸ்’ கௌரவத்துடன் பொறியியல் பட்டம் பெற்றார். அதன்பிறகு. PhD மேற்படிப்பிற்காக கலிஃபோர்னியா அருகில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில், லாரிக்கு ஒரு வித்தியாசமான அனுபவம் காத்திருந்தது.
...தொடரும்
நன்றி - என்.சொக்கன்
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! (https://t.me/LetUsThinkPositiveeBooks)
No comments:
Post a Comment