வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.....
“தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று என் தாத்தாவிடம் ஒரு நாள் கேள்வியைப் போட்டேன்…
தாத்தாவுக்கு நல்ல மந்த்ர ஸித்தி உண்டு..
தேள்கடி, பாம்புகடி, இன்னதென்று தெரியாத விஷக்கடி, சுளுக்கு, மஞ்சட்காமாலை, ஜ்வரம், பயந்த கோளாறு என்று யாராவது நாலு பேர் தினமும் காலையிலிருந்தே அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டிருப்பார்கள்..
அப்படி வருபவர்களுக்கு உடனடியாகப் பலன் கிடைக்கும்…
தாத்தா யாரிடமும் மந்திரிப்பதற்குக் காசு பணம் வாங்க மாட்டார்.. மஞ்சட்காமாலைக்கு மந்திரித்துக் கொள்பவர்கள் மட்டும் திருவாரூர் காகிதக்காரத் தெரு மகமாயி கோவில் திருப்பணிக்காக இருக்கும் உண்டியலில் ஒரு ரூபாய் காசு போட்டுவிட்டுப் போகச் சொல்லுவார்..
கடுமையான வைதீக அனுஷ்டானம்.. ஆசாரம்.. பூஜைகள்... ஜபம்.. என்றெல்லாம் அதிகம் வைத்துக் கொள்ளாதவர்.. மிகவும் எளிமையாக இருப்பார்… எண்பது வருஷங்களுக்கு முன்பே தஞ்சாவூர் ஜில்லாவில் முதல் ஆடிட்டராகத் தொழில் செய்ய ஆரம்பித்தவர்..
தாத்தாவுக்கு என்னை ரொம்பப் பிடிக்கும்.. சிறு வயதில் என்னை தனியாக உட்கார வைத்து க்ரந்தாக்ஷரம் மற்றும் அனேக மந்த்ரங்களைக் கற்று கொடுப்பார்..
எப்போது பேசினாலும் ஸ்ரீபெரீவாளின் மஹிமை பற்றியும் ஸ்ரீமடத்து ஸம்ப்ரதாயங்கள் பற்றியும் சொல்லாமல் இருக்க மாட்டார்..
தாத்தா ஸ்ரீபெரீவாளின் மீளா அடிமை.. ஸ்ரீமடத்தின் உப முத்ராதிகாரி.. சாதாரண குடும்பத்தில் பிறந்து மிகவும் ச்ரமப்பட்டு முன்னுக்கு வந்தவர்..
மிகச் சாதாரணமாகத் தோற்றமளிக்கும் இந்த மனுஷர் எப்படி மந்திரிக்கவெல்லாம் செய்கிறார் என்று எனக்கு ரொம்ப நாளாக சந்தேகம்..
ஒருநாள், மெதுவாக அவரிடம் “தாத்தா நீ யாரிடம் மந்திரிக்கக் கத்துண்டே?” என்று கேள்வியைப் போட்டேன்…
தாத்தா சொல்ல ஆரம்பித்தார்..
“ 1941 ம் வருஷம்.. ஸ்ரீபெரீவா நாகப்பட்டணத்ல சாதுர்மாஸ்யம் பண்ணினா.. வ்யாஸபூஜை.. ஸ்ரீநீலாயதாக்ஷி அம்பாளின் ஆடிப்பூர மஹோத்ஸவம்னு அந்த ஊரே கோலாஹலமா இருந்தது..
அந்த சமயத்தில் ஸ்ரீபெரீவாளை தரிசனம் பண்ணப் போயிருந்தேன்..
பூஜை முடிஞ்சு தீர்த்தப் ப்ரஸாதம் கொடுத்த பிறகு, ஸ்ரீபெரீவாளை நமஸ்காரம் பண்ணி ஓரமா நின்னேன்..
என்னைப் பார்த்த ஸ்ரீபெரீவா ‘என்ன வேணும்’னு கேட்டா..
நான் தயக்கத்துடன் ‘ஸ்ரீபெரீவா எனக்கு ஏதாவது மந்த்ரோபதேசம் பண்ணணும்’னு கேட்டேன்..
உடனே ஸ்ரீபெரீவா என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு..
‘டேய்.. வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா.! ’ என்று அழுத்தமாகச் சொல்லி விபூதி ப்ரஸாதம் கொடுத்தா....
ஸ்ரீபெரீவாளிடம் விபூதி ப்ரஸாதம் வாங்கிண்டு உடனே அங்கிருந்து கிளம்பி திருவாரூர் ஆத்துக்கு வந்துட்டேன்..
அதே சமயத்தில் சொந்த ஊரான நெம்மேலி க்ராமத்திலிருந்து வண்டி கட்டிக்கொண்டு என் சித்தப்பா ஸுப்பையரும் திருவாரூர் ஆத்துக்கு வந்து சேர்ந்தார்...
எங்க சித்தப்பா ஸுப்பையர் நன்னா மந்திரிப்பார்..
‘என்ன சித்தப்பா திடீர்னு இங்கே வந்திருக்கேள்’ னு அவரைக் கேட்டேன்..
‘எனக்குத் தெரிந்த மந்த்ரமெல்லாம் நம்ப ஆத்ல பல தலமுறையா யாராவது ஒருத்தர் வழியா வந்திண்டு இருக்கு..
எனக்கப்பறம் இதயெல்லாம் யாருக்காவது சொல்லி வைக்கணும்னு எனக்கு இத்தனை நாளும் தோணலே...
ஆனா இன்னிக்கு எனக்கு மனசில் உனக்கு இதயெல்லாம் உபதேசம் பண்ண்ணும்னு ஸ்ரீபெரிவா உத்தரவானதாகத் தோணித்து.. அதனால் உடனே வந்துட்டேன்..
..நாளெல்லாம் பார்க்க வேண்டாம்.. ஸ்ரீபெரிவா உத்தரவான நாளே ஸுதினம்’னு சொல்லி எனக்கு உடனே மந்த்ரோபதேசம் பண்ணி வெச்சார்..
அதுக்கப்பறம் நான் பெரீசா மந்த்ர ஜபம் உரு அதிகமாப் பண்ணலை.. எப்பவாவது கொஞ்சமாகப் பண்ணுவேன்..
..ஆனா எப்போதும் யார் கஷ்டத்துடன் வந்தாலும் ஸ்ரீபெரீவாளை மனஸில் நினச்சிண்டு தெரிஞ்சதைச் சொல்லுவேன்.. விபூதி கொடுப்பேன்..
அன்னிக்கு ஸ்ரீபெரீவா ‘வெங்கட்ராமா.. நீயே பெரிய மந்த்ரவாதிடா..’ன்னு சொல்லிக் கொடுத்த விபூதி ப்ரஸாதம்தான் இன்னிக்கும் அத்தனை பேர் கஷ்டத்தையும் தீர்க்கறதுப்பா..!” என்று சொல்லி முடித்தார் தாத்தா.
“ மந்திரமாவது ஸ்ரீபெரீவா திருநீறு “
மஹா பெரியவா..சந்யாசம் ஏற்ற நாளில்... |
No comments:
Post a Comment