திருமோகூர்
திருமோகூர் எனனும் இத்திருத்தலம், மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடை என்ற இடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் நகரப் பேருந்துகளில் சென்றால் கோவில் அருகாமையிலேயே இறங்கலாம்.
வரலாறு.
பிரம்மாண்ட புராணத்திலும் மாத்ஸய புராணத்திலும் இத்தலம் பற்றி பேசப்படுகிறது. இத்திவ்ய தேசத்தை “மோகனசேத்திரம்” என்றும் குறிப்பிடப்படுகின்றது. இத்தலம் அமைந்துள்ள இடம் பற்றி, பாண்டிய தேசத்தில் விருஷபகிரிக்கு (திருமாலிருஞ் சோலைக்கு) தென்திசையில் சுமார் ஒரு யோசனை தூரத்தில் அஸ்திகிரி என்றழைக்கப்படும் யானை மலை உள்ளது, அதற்குச் சற்றே தென் கிழக்கில் ப்ரஹம்ம தீர்த்தம் என்ற தடாகமுள்ளது. இதனையும் இதனைச் சூழ்ந்துள்ள இடத்தையும் உத்துங்கவனம் என்பர். அந்த பிரம்ம தீர்த்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியே மோஹன சேத்திரம் அமைந்துள்ளது.
தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவர்களுக்கு அமிர்தம் வழங்க பாற்கடலை கடைந்தார் திருமால். கடையப்பட்ட பாற்கடலிலிருந்து முதன்முதலில் ஆலகால விஷம் உண்டானது. அதனைச் சிவபெருமான் ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் சந்திரன், உச்சைச்சிரவசு என்னும் குதிரை, கற்பக விருட்சம், ஐராவதம் என்னும் யானை, அகல்யை போன்றோர் தோன்றினர். இதன் பிறகு மஹாலட்சுமியும் கௌஸ்துப மணியும் தோன்றின. இறுதியில் தேவர்கள் வெகுகாலமாக வேண்டிப்பட்ட அமிர்தம் உண்டாயிற்று.
அசுரகள் தமக்க அமிர்தம் மறுக்கப்படடதை அறிந்து தேவர்களுடன் போர் புரிந்தனர். எனவே தேவர்களைக் காக்க திருமால் ஒரு அழகான மோகினி வேடங்கொண்டு அமிர்தத்தைக் கையிலெடுத்துக் கொண்டு தேவர்களை நெருங்க மோகினியின் வடிவழகைக் கண்ட அசுரர்கள் அமுதத்தை மறந்தார்கள்
எனவே இத்தலம் “மோஹன சேத்திரம்” என்றாயிற்று, தூய தமிழில் மோஹினியூராகி, மோகியூராகி, இறுதியில் திருமோகூராயிற்று.
மூலவர் - காளமேகப் பெருமாள் (நீருண்ட கருமேகம் போன்ற திருமேனியுடன் கருணைமழைபொழிவதால் காளமேகப் பெருமாள் என்ற திருநாமம் வரலாயிற்று) கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம்.
உற்சவர் - திருமோகூர் ஆப்தன் (பஞ்சாயயுதங்களுடன் கூடின திருக்கோலம்) குடமாடு கூத்தன் என்றும் தயரதன் பெற்ற மரகதமணித்தடம் என்றும் சுடர்கொள் ஜோதியென்றும் உற்சவ மூர்த்திக்கு பல திருநாமங்கள் உண்டு.
தாயார் - மோஹனவல்லி, திருமோகூர் வல்லி, மோகவல்லி என்ற திருநாமங்கள்.
விமானம் - கேதச விமானம்
தீர்த்தம் - சீராப்தி புஷ்கரணி, ப்ரஹம்ம தீர்த்தம் இதற்கு தெற்கே பாபநாச தீர்த்தமும், வடக்கே ஸ்வர்க்கத்வாரா தீர்த்தமும், மேற்கே நரகாசுர தீர்த்தமும், கிழக்கே பரமன் தீர்த்தமும் உண்டு.
சிறப்புக்கள்
1. நாராயணன் தமது உந்திக்கமலத்திலிருந்து பிரம்மனைப் படைத்த அதே நேரத்தில் அவரது காதுகள் வழியாக, மது, கைடபன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். இவ்விருவரும் பிரம்மனருகே இருந்த வேதப் புத்தகங்களைத் திருடிக் கொண்டுபோய் பாதாள லோகத்தில் மறைத்து வைத்துவிட்டனர். மஹா விஷ்ணு மத்ஸயவதாரம் எடுத்து பாதாளம் சென்று அவ்வேதப் புத்தகங்களை மீட்டு எடுத்து (ஹயக்ரீவ அவதாரம்) பிரம்மனிடம் சேர்ப்பித்தார்.
தனக்கு மீண்டும் வேத நூல்களை அளித்து அரக்கர்களை அழித்தமைக்கு நன்றி கூறும் முகத்தான் பிரம்மன் இவ்விடத்திற்கு வந்து ஒரு தடாகம் (பிரம்ம தீர்த்தம்) உண்டாக்கி பெருமானுக்கு திருவாராதனக் கைங்கர்யத்தை தினந்தோறும் செய்து வர இறுதியில் எம்பெருமான் பிரத்தியட்சமானார்.
2. மோகினி அவதாரத்துடன் இங்கு நின்று கொண்டிருந்த மஹாவிஷ்ணுவை, மோகினி என்றே நினைத்த சிவன், அவ்வழகில் மயங்கி, உன்னழகால் கவரப்பட்ட நான் உன்னை ஆலிங்கனம் செய்து கொள்ள எத்தனிக்கிறேன் என்று சொல்ல, மோகினியாய் நின்ற விஷ்ணு, அப்படியேயாகட்டும் என்று சொல்லி தன்னைப் போன்று இன்னொரு மோகினியை அங்கே ச்ருஷ்டி செய்துவிட்டு மறைய, இது விஷ்ணுவின் மாயை என்று தெளிந்த சிவபிரான் “விஷ்ணுவின் மாயையால் யார்தான் மயங்கார்” என்று தன்னை நொந்துகொண்டு ப்ரமத்தை அடைந்தார். அம்மாயையும் அப்போதே மறைந்தது.
3. நம்மாழ்வார் 11 பாசுரங்களாலும், திருமங்கையாழ்வார் ஒரு பாசுரத்தாலும் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
4. மணவாள மாமுனிகளாலும், பிள்ளைப் பெருமாள் ஐயங்காராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.
5. இங்குள்ள ஆதிசேடனுக்குத் தங்க கவசங்கள் சாத்தப்பட்டுள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும்.
6. மிகவும் அழகான, அமைதியான கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் செந்நெல் வயல்களூடே காணப்படும் இத்தலம் உண்மையிலேயே யாரையும் மோகிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
7. நம்மாழ்வாரால் பாடப்பட்ட தாளதாமரை ஏரியின் நீர்வளத்தால் (வயல்கள் செரிந்து) ஊருக்கு அழகு செய்கிறது.
8. நந்தர்கள் மீது வெற்றி கொண்ட மௌரியர்கள் படையெடுப்பாளர்களாக விளங்கி பெரியதோர் பேரரசை நிறுவினர். அவர்கள் தக்காணத்திலும் தமிழகத்திலும் படையெடுத்து முன்னேறினர். மோகூரை முறியடித்தனர். பொதியமலைவரை சென்றனர்.
இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இத்தலத்தை அனைவரும் தரிசித்து காளமேகப் பெருமானின் அருளினைப் பெறுவோமாக.
No comments:
Post a Comment