(பெரியவா கரத்தாலேயே தொடுக்கப்பட்ட ஆரத்தை அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம்)
(தன்னை தரிசனம் பண்ண ஒரு தம்பதி வருவா. அவாளுக்குத் தன் கரத்தாலேயே மாலைகட்டித் தந்து ஆசிர்வாதம் செய்யணும்கறதை எல்லாம் எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சு,புஷ்பக் கூடையை அங்கேயே வைக்கச் சொன்னார் பரமாசார்யாங்கறது, பரமேஸ்வரனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்)
கட்டுரையாள"ர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
(பெரிய கட்டுரை -ஒரு பகுதி)
ஒரு நாள் வழக்கம்போல நித்ய அனுஷ்டானங்களை எல்லாம் முடிச்சுட்டு பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார் மகாபெரியவா .அந்த சமயத்துல ஒருத்தர் பெரிய கூடை நிறைய புஷ்பத்தை எடுத்துண்டு வந்து ஆசார்யா முன்னால சமர்ப்பிச்சு நமஸ்காரம் செஞ்சார். அவரை ஆசிர்வதிச்ச பெரியவா,குங்கும பிரசாதம் குடுத்தார். அவர் வாங்கிண்டு புறப்பட்டதும், பரமாசார்யாளோட அணுக்கத் தொண்டர் ஒருத்தர் பூக்கூடையை நகர்த்தி வைக்கறதுக்காக எடுத்தார்.
கையைச் சொடுக்கி அவரைத் தடுத்த பெரியவா, "அதை நகர்த்த வேண்டாம்.அங்கேயே இருக்கட்டும்!னு ஆணையிட்டார்.
வழக்கமா பெரியவாளை தரிசனம் பண்ண வர்றவாளால கனிவர்க்கம்,புஷ்பம்னு தரப்படற பொருட்களை ஆசார்யாளுக்கு அணுக்கத்துல நிற்கிற தொண்டர் உடனுக்குடனே நகர்த்தி வைச்சுடுவார். ஏன்னா மத்தவா கொண்டுவர்றதை பெரியவா முன்னால வைச்சு சமர்ப்பிக்கறதுக்கு இடஞ்சலா இருக்ககூடாது -ங்கறதுக்காகத்தான். ஆனா,இன்னிக்கு புஷ்பத்தை ஏன் நகர்த்த வேண்டாம்னு ஆசார்யா சொல்றார்ங்கறது அந்தத் தொண்டர் உள்பட யாருக்கும் புரியலை.
பக்தர்கள் வரிசையாக வந்து பெரியவாளை தரிசனம் செஞ்சுட்டு பிரசாதம் வாங்கிண்டு நகர்ந்துண்டிருந்தா. நேரமும் நகர்ந்துண்டே இருந்தது . அந்த சமயத்துல வேகவேகமா அங்கே வந்தா வயசான ஒரு தம்பதி.
புதுப் பட்டு வேஷ்டியும் புதுப் பட்டுப் புடவையும் கட்டிண்டு இருந்த அவாளைப் பார்த்ததுமே ஏதோ விசேஷத்துல கலந்துண்டுட்டு வந்திருக்காங்கறது சொல்லாமலே தெரிஞ்சுது. பெரியவாளை நமஸ்காரம் பண்ணின சமயத்துல அந்தத் தம்பதிகளோட கண்ணுலேர்ந்து ஜலம் பெருகி வழிஞ்சுது. அவ்வளவுதான் அவா எதுவும் சொல்லலை. பரமாசார்யாளும் ஒண்ணும் கேட்கலை. நமஸ்காரம் செஞ்சுட்டு பிரசாதத்துக்காக கையை நீட்டினவாளைப் பார்த்து, "அதோ அங்கே உட்காருங்கோ!" அப்படிங்கற மாதிரி ஜாடை காட்டினார், மகா பெரியவா.
தன் முன்னால ஒருத்தர் வைச்ச பூக்கூடையை நகர்த்த வேண்டாம்னு சொல்லார் இல்லையா? அதுல இருந்த பூக்களை ஒரு நார்ல கட்டி மாலைமாதிரி தொடுக்க ஆரம்பிச்சார் ஆசார்யா.எல்லோருக்கும் ஆச்சரியம்.
பத்துப் பதினைஞ்சு நிமிஷத்துல ரெண்டு மாலையை கடகடன்னு கட்டி முடிச்ச மகாபெரியவா, கொஞ்சம் முன்னால வந்து நமஸ்காரம் பண்ணிட்டு தள்ளி உட்கார்ந்துண்டிருந்தாளே அந்தத் தம்பதியை கூப்பிடச் சொன்னார். அதோட மடத்துலேர்ந்து வேத விற்பன்னர்களையும் வரச்சொன்னார்-பெரியவா.
அந்தத் தம்பதிக்கு நடக்கறது கனவா,நிஜமான்னு தெரியாத சந்தோஷம்.ஆனந்தத்துல அவா கைகாலெல்லாம் நடுங்க கண்ணுல ஜலம் வழிய மாலையை எடுத்து ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி சூட்டிண்டா.அந்த நேரத்துல வேத விற்பன்னர்கள் மந்திரத்தைச் சொல்லி ஆசிர்வாதம் பண்ணினா.
எல்லாம் முடிஞ்சதும், "என்ன சந்தோஷமா? பொறப்படுங்கோ...ஒரு குறையும் வராது!" அப்படின்னு சொல்லி நிறைய குங்கும பிரசாதத்தைக் குடுத்து அனுப்பினார், பரமாசார்யா.
.......................
வெளியே மடத்து சீடர் ஒருவரிடம் அவர்கள் சொல்லிய சாராம்சத்தின் சுருக்கம்.
இன்னிக்கு இவரோட எழுவதாவது பிறந்த நாள் எங்கள் பூர்வீகம் பெங்களூர், வருடம் ரெண்டு தரமாவது பெரியாவாளை தரிசனம் பண்ண வருவோம்.
"எங்க பிள்ளை மெட்ராஸ்லதான் இருக்கான். தன்னோட க்ருஹத்துலயே அப்பாவுக்கு பீமரத சாந்தி பண்ணி வைக்கறேன்னுட்டான் . இந்த சாக்குலயாவது ஆசார்யாளை தரிசனம் பண்ணறதுக்கு சந்தர்ப்பம் அமையுமேன்னுட்டு சரின்னுட்டோம்.
இன்னிக்கு கார்த்தால இவருக்கு பீமரத சாந்தி நடந்தது. நல்லபடியா முடிஞ்சதும் பெரியவாளை தரிசனம் பண்ண ஆசை வந்துடுத்து.
தரிசனம் பண்ணக் கூட்டிண்டு போறேன் என்று சொன்ன பிள்ளைக்கு, பெங்களுர்ல முக்கியமான மீட்டிங்-உடனே வரச் சொல்லி ஃபோன் கால்.
என்ன பண்றது நாங்க குடுத்து வைச்சது அவ்வளவுதான்னு நெனைச்சுண்டு, ரெண்டு கார் ஏற்பாடு பண்ணி பெங்களூர் புறப்பட்டோம்.
வழியில காவேரிப்பாக்கத்துக்கிடே பைபாஸ் ரோடுல போயிண்டு இருக்கறச்சே ஒரு கார் ரிப்பேர் ஆயிடுத்து. பக்கத்துலேர்ந்து மெக்கானிக்கை கூட்டிண்டு வந்து பார்த்தா,அதுல ஏதோ முக்கியமான பாகம் உடைஞ்சுடுத்து வாங்கிண்டு வந்து போட்டு சரிபண்ண ரெண்டு மணி நேரத்துக்குக் குறையாம ஆகும்னு மெக்கானிக் சொல்லிட்டார்.
டக்குன்னு எனக்கு ஒரு யோஜனை தோணித்து "காஞ்சிபுரம் பக்கத்துலதான் இருக்கு. ரெண்டு மணி நேரம் இங்கே சும்மா நின்னுண்டு இருக்காம அப்பாவும் நானும் காஞ்சிபுரத்துக்குப் போய் பரமாசார்யா இருந்தா தரிசனம் பண்ணிட்டு வந்துட்டுமா?ன்னு" புள்ளை கிட்ட கேட்டேன்.
அவனும் சரின்னுட்டான்.அதான் ஆசார்யாளைப் பார்கறதுக்காக அவசர அவசரமா வந்தோம். இங்கே அவரோட கரத்தாலேயே தொடுக்கப்பட்ட ஆரத்தை அவர் முன்னாலேயே மாத்திக்கற மகா பாக்யம் கிடைச்சுடுத்து. இனிமே இந்த லோகத்துல எங்களுக்கு எதுவும் வேணாம். எங்கே இருந்தாலும் பெரியவா நினைவோட நிம்மதியா இருப்போம்" சொல்லிட்டுப் புறப்பட்டா அந்தத் தம்பதி.
தன்னை தரிசனம் பண்ண ஒரு தம்பதி வருவா. அவாளுக்குத் தன் கரத்தாலேயே மாலைகட்டித் தந்து ஆசிர்வாதம் செய்யணும்கறதை எல்லாம் எப்படி முன்கூட்டியே தீர்மானிச்சு,புஷ்பக் கூடையை அங்கேயே வைக்கச் சொன்னார் பரமாசார்யாங்கறது, பரமேஸ்வரனுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியம்
No comments:
Post a Comment