Saturday, October 20, 2018

சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா

அவள் ஓடிக்கொண்டிருந்தாள்..ஜாகிங் இல்லை, ஒரு கூட்டமே துரத்திக்கொண்டிருந்தது..

ஏன் என்று தெரியவேண்டுமானால் கொஞ்சம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவள் கருப்பு சட்டை அணிந்திருந்தாள், கழுத்தில் துளசி மாலை, நெற்றியில் விபூதி சந்தன கீற்று..

க்ரீச்..அவளை உரசியபடி ஒரு கார் வந்து நின்றது..

"கெட் இன் பாஸ்ட் ".. பின் கதவை திறந்து கூப்பிட்டார், அவருக்கு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும் ..

யோசிக்காமல் ஏறினாள், விர்ரென்று வேகமெடுத்து பறந்தது.. துரத்திய கூட்டம் திகைத்தது, தயங்கியது, திட்டியது, திரும்பியது..

"இந்தாம்மா, முதல்ல இந்த தண்ணிய குடி.." பாட்டிலை நீட்டினார்.. வாங்கி மடக் மடக் என்று குடித்த பிறகு சற்றே ஆசுவாசமானாள்..

"தேங்க்ஸ் சார், இந்த உதவியை நான் உயிருள்ளவரை மறக்க மாட்டேன்...."

வண்டி போய்க்கொண்டிருந்தது..

"பரவால்லைம்மா இதெல்லாம் மனிதாபிமானதுல செய்யற உதவி தானே. அதிருக்கட்டும் எதுக்கும்மா உன்னை துரத்திக்கிட்டு வந்தாங்க?"

"சபரி மலைக்கு போவேன்னு நான் மாலை போட்டுக்கிட்டது அவங்களுக்கு பிடிக்கலை..பெண்கள் போகலாம்னு நீதிமன்றமே சொன்னாவிட்டும் இந்த மத அடிப்படைவாதிங்களுக்கு பொறுக்கலை ..வன்முறையை காட்டி பயமுறுத்தறாங்க.."

அவர் சற்று நேரம் எதுவும் பேசவில்லை..மெல்ல கேட்டார்..

"உனக்கு யார் மாலை போட்டுவிட்டது"..

"நானே தான் போட்டுகிட்டேன்..யாராவது போட்டு விடணுமா என்ன?.."

சிரித்தார்..

"இதென்ன நீங்க போடற பேன்சி செயின் போல நினைக்கிறீங்களா?.. குருசாமி கிட்டே நியம நிஷ்டையோட பூஜை செஞ்சு போடணும்.."

பதிலில்லை..வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள்..

"சரிம்மா உன் பேர் என்ன.."

"பிரசில்லா".. சட்டென்று நாக்கை கடித்து கொண்டு.. "பிரசன்னா.."

காரின் ரெவியூ மிரரில் பார்த்து சிரித்துக்கொண்டார்..

"உன்னை பார்த்தா கடவுள் நம்பிக்கை இருக்கிற பொண்ணு மாதிரி இல்லையேம்மா, கிறிஸ்தவ பேர் போல சொன்னே. ஏன் சபரிமலைக்கு போகணும்னு துடியா இருக்கே..."

"பெண்கள் அடிமை கிடையாது..ஆண்களுக்கு கிடைக்கிற எல்லா உரிமையும் அவங்களுக்கும் கிடைக்கணும், இதான் எங்க இயக்கத்தோட கொள்கை.. மத நம்பிக்கைக்கு பயந்த பெண்கள் போராடறதுக்கு முன்வரலை, அதான் நானே முன்னுதாரணமா இருக்கணும்னு கிளம்பினேன்.."

"இதே கேரளத்துல சில பகவதி அம்மன் கோவில்கள் இருக்கு.. அங்க ஆண்களுக்கு அனுமதி இல்லை. உனக்கு தெரியுமா?"

"இருக்கலாம்..ஆனால் அதெல்லாம் சபரிமலை மாதிரி பிரபலம் இல்லை. அடுத்தது அதுக்கு ஆண்கள் தானே போராடணும், நாங்க என்ன பண்ண முடியும்.."

"நீ ஒரு பெண்ணியவாதின்னு நல்லாவே தெரியுது. அதான் இப்படி பேசறே..ஆண்கள் அந்த கோவில்களுக்கு போக போராடாம இருக்காங்கன்னா அதுக்கு காரணம் என்ன தெரியுமா, மரியாதை. பெண்கள் மேலே, பகவதி மேலே, மரபுகள் மேலே அவங்களுக்கு இருக்கிற மரியாதை. அதனால தான் இதுக்கு போராட்டம் நடத்தணும்னு தோணலை. "

மவுனம்

"சரி, ஒண்ணு கேக்கறேன். ஒரு தாய் தன் கைக்குழந்தையை விட்டு எப்பவானும் பிரிஞ்சு இருப்பாளா? "

"அதெப்படி முடியும். அவ தாய் இல்லையா, எப்பவும் அவகிட்டே தான் குழந்தை இருக்கணும்.."

"சரிம்மா, அந்த தாய்க்கு கடுமையான சுரம்..கொதிக்குது. அப்போ குழந்தையோட நன்மைக்காக பக்கத்துலேயே விடமாட்டா, இல்லையா?"

"ஆமா.."

"அதே போல தான் பொதுவா எல்லா கோவில்களிலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து போகிறதுதான் வழக்கம், இது குழந்தை எப்பவும் தாய்கிட்டே இருக்கிற மாதிரி. சபரிமலை, பகவதி அம்மன் கோவில்களிலே ஏதோ சில மரபு காரணங்களுக்காக பெண்களையோ ஆண்களையோ அனுமதிக்காதது தாய்க்கு உடல்நலம் இல்லாத போது குழந்தையை ஒதுக்கி வைக்கிறது போல. நீயே சொல்லு, இதனால அம்மாவுக்கு குழந்தை மேலே அன்பு இல்லேன்னு ஆகிடுமா அதே போல கோவில்களில் பெண்களுக்கோ ஆண்களுக்கோ அநியாயம் பண்றாங்கன்னு சொல்ல முடியுமா?"

யோசிக்க ஆரம்பித்தாள்..

"உனக்கு கூட பிறந்தவங்க யாராவது இருக்காங்களாம்மா?"

"ஒரு தங்கச்சி இருக்கா சார், பன்னெண்டாவது படிக்கிறா .."

"அப்போ கிட்டதட்ட பதினேழு வயசு, அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணிடுவீங்களா? "

"அதெப்படி சார் முடியும், அவ காலேஜ் படிச்சு ஒரு வேலைக்கு போய் சுயமா அவ கால்ல நின்ன பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம்.."

"அப்படின்னா எப்படியும் ஒரு 22 இல்ல 23 வயசாயிடும் இல்லையா?"

"ஆமா சார், இப்போ வேலை கிடைக்கிறதே கஷ்டம் அதனால் சமயத்துல 24-25 கூட ஆயிடும்.."

"இப்போ பாரும்மா அரசாங்கம் பெண்ணுக்கு 18 வயசுல திருமண செய்யலாம்னு சட்டம் போட்டிருக்கு. சட்டம் போட்டதால் நாம் கல்யாணம் செஞ்சு வெச்சுடறோமா? சில நடைமுறை காரணங்களால சட்டம் இருந்தாலும் நாம காத்திருக்க வேண்டியிருக்கு. சரிதானே?"

"ஆமாம் "

"சபரிமலைக்கு இதை பொருத்தி பாரு. மரபுகளில் தலையிட நீதி மன்றத்துக்கு முதலில் உரிமை இல்லை. பெண் சமத்துவம் அப்படிங்கிற ஒரே நோக்கிலே தீர்ப்பு சொல்லிட்டாலும் மரபை காப்பாத்தணும் அப்படின்னு நினைக்கிற பெண்கள் ஐம்பது வயசுக்கு அப்புறம் அய்யப்பனை தரிசிக்க காத்திருக்கோம் அப்படின்னு சொல்றாங்க.. இது மட்டும் எப்படி தப்பா தெரியுது?"

சிந்திக்க தொடங்கினாள்..

"திருமணத்துக்கு சட்டம் இருந்தாலும் காத்திருக்கிற மாதிரி அய்யன் தரிசனத்துக்கு சட்டம் இருந்தாலும் மரபுகளுக்காக காத்திருந்தா என்ன தப்பு?..சரிம்மா உன்னை எங்கே இறக்கி விடட்டும். இனிமே ஆபத்தில்லை.."

"சார், அதோ அந்த பிள்ளையார் கோவில் வாசல்ல இறக்கி விட்டுடுங்க.."

"கோவிலுக்கு போறியா.."

"ஆமா சார், மாலையை கழட்டிடறேன்.."

அவர் முகத்தில் ஒரு குறுநகை..

"அந்த கும்பல் கிட்டே இருந்து முன்னே காப்பாத்தினீங்க.. இப்போ தப்பான காரியத்தை செய்ய இருந்ததிலிருந்தும் காப்பாத்திட்டீங்க, ரொம்ப நன்றி சார்..."

"இருக்கட்டும்மா.. உனக்கோ.. படிச்சு முடிச்சுட்டு உன் தங்கச்சிக்கோ வேலை விஷயமா ஏதாவது உதவி வேணும்னா என்னை வந்து பார்.. இந்தா என் கார்ட் ,வெச்சுக்கோ.."

இறங்கினாள்.. வண்டி புறப்பட்டு சென்றது..கார்டை படித்தாள்..

'மணிகண்டன், சாஸ்தா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் '

எழுத்து
V. வெங்கடேஷ் 
சிங்கப்பூர்