Friday, October 12, 2018

தீர்க்கதரிசி மஹாபெரியவா - தரிசன அனுபவங்கள்


""இன்று நீ ஏழு மணிக்குத் திரும்ப கச்சேரி பண்ணு"".  -- மஹாபெரியவா மீரஜ்ஜில் முகாமிட்டிருந்தபோது நடந்தது. 

பெரியவா ஜயந்திக்கு எங்கள் குழுவுடன் சென்னையிலிருந்து கச்சேரி செய்யச் சென்றோம். 

மறு நாள் பௌர்ணமி பூஜையில் பெரியவா பரிவட்டம் தரித்துக்கொண்டு நிஷ்டையில் இருந்த சமயம் ”வெங்கடேசனை தீக்ஷிதர் க்ருதிகளைத் தனியாக வாசிக்கச் சொல்லு” என்று உத்தரவாயிற்று. ஒரு மணி நேரம் ராகங்கள், கீர்த்தனைகள் வாசித்த பிறகு, நிஷ்டை கலைந்து,தலையிலுள்ள பரிவட்டத்தை எனக்கு போர்த்தக் கூறினார். அதை இன்னும் பத்திரமாகப் பூஜையில் வைத்திருக்கிறேன்.

மறு நாள் காலையில் எட்டு மணி முதல்பன்னிரண்டு மணி வரை கச்சேரி செய்து விட்டு , மாலை ஏழு மணிக்கு மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்  ரயிலில் சென்னை திரும்ப உத்தரவு கேட்டோம். பெரியவா ஏழு பத்துக்கு மறுபடியும் வாசிக்கக் கூறினார்.ரிடர்ன் டிக்கெட் ரிசர்வ் செய்த டிக்கெட்ஐ எப்படி கேன்சல் செய்வது என சங்கடப் பட்டுக்கொண்டிருந்த போது, பெரியவா தரிசனத்துக்காக சகாக்களுடனும் குடும்பத்தாருடனும் அவ்வூர் தலைமை டிக்கெட் பரிசோதகர் வந்தார்.  அவரிடம் ஸ்ரீமான் ஸ்ரீகண்டன், ராமமூர்த்தி இவர்கள் விஷயத்தை விவரிக்க, "நான் வேண்டியதைச் செய்கிறேன்; நாளை காளை எக்ஸ்பிரஸ் டியூட்டியில் என்னுடன் மூவரையும் எல்லா வசதிகளையும் செய்து மயிலையில் சென்று விட்டு வருகிறேன்" என்று சொன்னார்.

மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை கச்சேரி. கண்ணுக்கு எட்டிய தூரம் ஜனங்கள் ரசித்துக் கொண்டிருக்கும் சமயம், சாங்களி மஹாராஜா குடும்பத்துடன் பெரியவாளை தரிசிக்க புஷ்பம் பழத்தட்டுகளுடன் சிவப்பு, வெள்ளை, நீலம் காஷ்மீர் சால்வைகளை சமர்ப்பித்தார். ஸ்ரீ பெரியவா வலது புறத்தில் நீலமும், இடது புறத்தில் வெள்ளையும், சிரஸில் சிகப்பு அணிந்து ஜகஜ்ஜோதியாகக் காட்சி அளித்தார்.

அரை மணி நேரம் கழித்து மஹாராஜாவையே புஷ்ப, பழத் தட்டில் சிவப்பு சால்வையை வைத்து என் தகப்பனாருக்கும், நீல சால்வையை எனக்கும், வெள்ளை சால்வையை மிருதங்கம் .ரமேஷுக்கும் போர்த்தச் சொன்னார். இதைப் பெரும் பாக்யமாகவும் ரக்ஷையாகவும் நாங்கள் கருதுகிறோம்.

மறு நாள் காலை ஏழு மணிக்கு எங்களை அழைத்துச் செல்ல, தலைமை டிக்கெட் பரிசோதகர் வர, பெரியவா எங்களுக்கு எல்லாம் விபூதி, குங்கும ப்ரஸாதம் கொடுத்து ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.

"ப்ரயாணத்தில் பேப்பரைப் பார்த்தபோது, நாங்கள் ப்ரயாணம் செய்ய இருந்த மஹாலக்ஷ்மி எக்ஸ்ப்ரெஸ் பெல்காம் அருகில் ஆறு பெட்டி தடம் புரண்டு விழுந்ததைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். நடமாடும் தெய்வம் மஹாபெரியவா அனுக்ரஹத்தால்தானே ரயில்
ப்ரயாணத்தை ரத்து செய்து அங்கு தங்கினோம். எப்படிப்பட்ட தீர்க்கதரிசி மஹாபெரியவா!!"

"இதனை தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதியில் புல்லங்குழல் வித்வான் G.வெங்கடேசன் பகிர்ந்து கொள்கிறார். அவர் தந்தை, ப்ரம்மஸ்ரீ சித்தூர் கோபால க்ருஷ்ணைய்யர்".

ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்🙏🙏