Tuesday, October 23, 2018

இதயத்தின் மடியில் பகுதி 6

 இமயத்தின் மடியில் இல்லாளுடன்...கேதார்..பத்ரி..😂😂 பகுதி 6 

மந்தாகினியும் த்ரிவிக்ரமா (வாஸுகி கங்கா)வும் சங்கமமாகிய ஸோனப்ரயாகை (ஸோன்த்வாரா) மிகப் புண்ணியமானது. நான் அங்கு தங்கியிருக்க வேண்டும் அல்லது அதைத் தாண்டி கௌரி குண்ட்டில் இடம் பார்த்திருக்க வேண்டும்.அப்போதுதான் சரியான சமயத்தில் கேதார் போயிருப்போம்.ஆனால் ? 

ராம்பூர் செல்ல வண்டி கிடைக்க காத்திருந்தோம். ஏதோ சிவனடியார் குழு இலவச  உணவு விநியோகித்துக் கொண்டிருக்க பசி அங்கு போகத்தூண்டினாலும் இரவின் நெருக்கம் தங்குமிடம் முக்கியம் என அறிவுறுத்தியது.ஏதோ ஒரு வேன் எஜமானர்களை இறக்கி விட்டு ராம்பூர் திரும்ப கெஞ்சி ஏறிக்கொண்டோம்.ட்ராபிக்கில் நீந்தி ராம்பூர் அடைந்தோம்.

சிறிய மலைக் கிராமத்து பழைய வீடுகளை விடுதியாக்கியிருந்தார்கள். அங்கும் டூரிஸ்ட் காரர்கள் இடம் பிடித்துப் போட்டிருக்க ஒரு உணவகத்தின் பிற்புறம் 2பெட் 600/ க்கு கிடைத்தது. ஆனால் மனைவி வந்து பார்த்து விட்டு தன் ஐம்புலன்கலாளும் மோப்பம் பிடித்து ரஜாய் அழுக்கு,பாத்ரூம் ஸ்மெல்,பூச்சியின் ரீங்காரம்,குப் பென்ற  உணர்வு என அவள் அடுக்க அடுத்து அதே ஓட்டலில்தான் இரவு உணவு என அவள் நாக்குக்கும் டெஸ்ட் வைத்தேன்.நான் ஒரு இரவு அட்ஜெஸ்ட் செய்ய சொல்ல அவள் எப்போதான் நல்ல ரூம்  போட்டீர்கள் என இடிக்க வெடித்தது போர். பின் அவளே அருகாமை கடைக்கு சென்று ரூம் ஃப்ரெஷ்னர் வாங்கி மாட்டி, ரூம்பாயை விட்டு ரஜாயை எடுத்துப் போகச் சொல்லி, ஒப்பேற்றினாள். பின் சப்பாத்தியும் தாலும்  உண்டு காலை நான்கரைக்கு அலாரம் வைத்து விழித்தோம்.விடிய ஆரம்பிக்க ஐந்தரைக்கு தயாரானோம்

[சோன்பரயாக் என்ற போர்டுடன் மினிபஸ் ஒன்று வரும் என்ற கனவுடன் காத்திருக்க டூரிஸ்ட் வேன்களும் பஸ்களும் நின்று கொண்டிருந்தன.ஒரு கார்  வந்து நிற்க ஓனரிடம்  லிப்ட் கேட்டதில் மனமுவந்து தர  பின் சீட்டில் ஏறிஅமர்ந்து மகிழ்ந்தோம். கார் அரை இஞ்சும் நகரவில்லை.எதிரில் வந்த வேன் காரன் இரவு 12 மணி முதல் ட்ராபிக் ஜாம் நடந்து தான் போக வேண்டுமென்றான் கார் ஓனர் ட்ரைவரிடம் ஏதோ சொல்லிவிட்டு நடக்க ஆரம்பிக்க நாங்களும் பின் தொடர்ந்தோம்.மனைவியை முன்னே விட்டு பஸ்களுக்கும் கார்களுக்கும் இடையில் மலைப்பாதையில் பின் தொடர்ந்தேன். 18 கிமீ உடன் இது வேறு 4 கிமீ ஆ என சிந்தனைக்கு நடுவிலும் கோதுமை வளப்பத்து வடக்கத்தி பெண்களை வியந்தபடி நடக்க திடீரென மனைவி.  மிஸ்ஸிங். முன் புறம் போவதா பின் புறம் போவதா எனத்தெரியாமல் மேரா பத்னி என புலம்பி அவள் பெயரை உரக்க கூவினேன்.ஒரு வேனின் பின்னிருந்து கடுமையான முகத்துடன்****என்ற கமெண்டுடன் வெளிப்பட்டாள்.காலை 9க்கு சோன் ப்ரயாக் அடைந்தோம். சிவனடியார் குழு தந்த டீ பிஸ்கட் பருகியபின் குதிரை கவுண்டரில் குதிரை ஸ்டாக் இல்லை என அறிந்தேன்.

பயோ மெட்ரிக் க்யூவில் நின்று தரிசன நேரம் அன்று பகல்  12 மணி (?) என அறிந்தேன்.இப்போது கௌரி குண்ட்  செல்ல அத்தனை கும்பலும் ஜீப்பில் ஏற நீஈஈஈண்ட க்யூவில் இடம் பிடித்தோம்.அந்த க்யூ ஆதியும் அந்தமுமில்லா ஜோதியாக எனக்கு தெரிந்தது. சாரி சரியாக மக்கள் முன்னே நடக்க அவர்கள் ஜீப்புக்கு நிற்காமல் 5 கிமீ நடக்கிறார்களா? அல்லது முன்னால் சென்று க்யூ ஜோதியில் ஐக்கியமாகிறார்களா தெரியவில்லை.கவலையில் கம்பீரமான🌿🗻மலைகளும் ஆழத்தில் பாயும் நதியும் புதிய தாவரங்களும் பறவைகளும் ரசிக்கும்படியில்லை.12 மணிக்கு ஜீப் தரிசனம் கிட்டி கௌரி குண்ட் அடைந்தோம்.🚙.
கௌரி குண்ட் ..கௌரிகுண்டம் 5 கி.மீ தூரத்தில்  சுமார் 1982 மீ உயரத்தில் அமைந்துள்ளது.  இங்குதான் மலை அன்னை மலைமகள், வரைமகள், மலையரசன் பொற்பாவை, வரைமகள், பர்வதவர்த்தினி,   உமையம்மை, வரையரசன் பொன் மணி, சைலபுத்ரி, சைலசுதா என்றெல்லாம்அழைக்கப்படும்   அன்னை பார்வதிஇமவான் புத்ரியாக பிறந்து , இந்த இமயமலையில் இளமென்பிடியாகவளர்ந்து, சிவபெருமானையே மணாளனாக அடைய வேண்டும் என்று தவம் புரிந்த இடம் ஆகும். அதற்கு பிரமாணம் தருவது போல் அருகில் தலைவெட்டப்பட்ட கணபதி கோவில் உள்ளது.   அம்மை பார்வதி தான் நீராடும் போது யாரையும் உள்ளே அனுமதிக்கவேண்டாம் என்று விநாயகரை கேட்டுக்கொண்டதால் சிவ பெருமான் வந்தபோதும் அவர் தடுக்க அவர் திரிசூலத்தில் தலையை கொய்த கதை நமக்கு ஞாபகம் வருகின்றது.


 ஆணவம், கன்மம் , மாயை என்னும் மும்மலமாம், தாராகாசுரன், சிங்கமுகன்,சூரபத்மன் என்னும் சூரர்களைசம்ஹாரம் செய்ய குமரன் தோன்றகாரணமாக அமைந்த இடமும் இதுதான். கௌரி குண்டம் சுக்ல பக்ஷத்தில் (வளர்பிறையில்) மஞ்சள் நிறமாகவும், கிருஷ்ண பக்ஷத்தில் ( தேய் பிறையில்) பச்சை நிறமாகவும் காட்சி தருகின்றது. அருகிலேயே சுடு நீர்  ஊற்றுகள்உள்ளன. ஆனால் 2013  அழிவில் பெரும்பாலும் அழிந்து அனைத்தும் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

அங்குள்ள கடையில் நான் ஆலு்பராத்தாவும் மனைவி வெறும் பராத்தாவும் உண்டு ( அடுத்த வேளை எங்கோ) 1982 மீட்டர் உயரத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தை 18 கிமீ பாதையில் கடக்க ,நடக்க ஆரம்பித்தோம்.அன்றைய இரவை எங்கு கழிக்கப் போகிறோம் என அறியமலே...  நேரம் 1 மணி.  மணிக்கு 3 கிமீ ஏறினால் இரவுக்குள் கேதார்நாத் என நினைக்க விதி மீண்டும் சிரித்தது....😂😂 நட்ட நடு இமயத்தில் உறை குளிரில் இரவைக்கழிக்கச்சொல்லி.....