Thursday, October 18, 2018

வைஷ்ணவ தேவி பகுதி 7

வைஷ்ணவ தேவி பகுதி 7 
( நன்றி இணைய நண்பர்கள் )

இந்த வார பதிவிற்குள் செல்வதற்கு முன் சென்ற வாரத்தில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்!

அத்குவாரி குகைக்குள் ஒன்பது மாத காலம் இருந்த பிறகு வெளியே பைரோன் நாத் வந்ததைத் தெரிந்து கொண்ட வைஷ்ணவ தேவி தன்னுடைய சூலாயுதம் கொண்டு ஒரு துளை செய்து அங்கிருந்தும் புறப்பட்டாள். அங்கிருந்து அவள் சென்று சேர்ந்த இடம் அத்குவாரியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இன்னுமொரு குகை. பைரோன் நாத் தொடர்வதையும் விடவில்லை.  மேலும் தொடர்ந்து அன்னைக்கு தொந்தரவு செய்து கொண்டிருந்தான். 

அவனது தொல்லைகளைத் தாங்க முடியாத வைஷ்ணவ தேவியும் தனது உண்மையான ஸ்வரூபத்தினை, தானும் தேவியின் ஒரு அம்சம் என்பதனை நிரூபிக்க வேண்டிய அவசியமும் காலமும் வந்து விட்டதை உணர்ந்து கொண்டாள்.  தன்னுடைய ஆயுதங்களைக் கொண்டு பைரோன் நாத்தினை தாக்கி அவனை அழித்தாள். அன்னையின் ஆற்றலினால் பைரோன் நாத்தின் தலை துண்டிக்கப்பட்டு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலைப்பகுதியில் விழுந்தது.
தான் மோகம் கொண்டது இறைவியின் மேல் என்று தனது தவறினை உணர்ந்து கொண்டான் பைரோன் நாத். மன்னிப்பு கேட்ட அவனுக்கும் அருள் புரிந்தாள் அன்னை வைஷ்ணவ தேவி – அது என்ன அருள் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்
அத்குவாரியில் தரிசனம் செய்யாது எங்கள் நடையைத் தொடர்ந்த நாங்கள் சில மணிநேரத்தில் [b]பவன் என்று அழைக்கப்படும் கோவில் இருக்கும் இடத்தினை அடைந்து விட்டோம். கோவிலுக்குள் கேமரா, மொபைல், தோல் பொருட்கள் [பெல்ட்] போன்றவை அனுமதி இல்லாததால் அவற்றை நாங்கள் கொண்டு பையில் போட்டு “பொருட்கள் பாதுகாப்பு அறையில்”வைத்து விட்டு நுழைவாயில் அருகே சென்றோம்.  இந்த பொருட்கள் பாதுகாப்பு அறையில் உங்கள் உடைமைகளை வைக்க எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை. 


பொதுவாகவே இந்த கோவில்களின் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளையும் CRPF தான் கவனித்துக் கொள்கிறது. ஒவ்வொரு இடங்களிலும் சில சோதனைகளும் முடித்தபிறகு குகையில் குடிகொண்டிருக்கும் அன்னையினை தரிசிக்க செல்கிறோம்.  இங்கே எனக்குப் பிடித்த ஒரு விஷயத்தினைச் சொல்லியே ஆக வேண்டும். தமிழகக் கோவில்களில் இருக்கும் சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம், ஆயிரம் ரூபாய்க்கு ஒரு தரிசனம் போன்ற வேலைகளெல்லாம் கிடையாது இங்கே – அன்னையின் முன் அனைவரும் சமம் தான். எல்லோருக்கும் ஒரே வழி தான். 


இதில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் உண்டு – சிபாரிசு! CRPFஅதிகாரிகளுக்கு அரசு அதிகாரிகள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்கள் – அவற்றைக் கொண்டு வரும் பக்தர்கள் – கோவிலின் அருகே இருக்கும் நுழைவாயில் வழியாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதையும் தவிர்த்தால் நல்லது.  நாங்கள் இம்முறை சென்றபோது அத்தனை பக்தர்கள் இல்லை. அதனால் மிகச் சுலபமாக அன்னையின் குகை வரை செல்ல முடிந்தது. அதிகமாய் மக்கள் கூட்டம் இருக்கும் போது மிகவும் குறைவான நேரம் மட்டுமே அங்கே இருக்க முடியும். 



 படம்: இணையத்திலிருந்து....


இங்கே ஒரு விஷயத்தினை தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது.  மற்ற கோவில்கள் போலே இங்கே அன்னையின் சிலை கிடையாது. குகையில் இருக்கும் மூன்று “பிண்டி” தான் அன்னையின் உருவம்.  திரிகூட மலைக்கு ஒரு சிறப்பு உண்டு.  அடிப்பாகம் ஒன்றாக இருந்தாலும் மூன்று மலைகளாக காட்சி அளிக்கும் – அதனால் தான் இம்மலைக்கும் திரிகூட மலை என்று பெயர். 

 படம்: இணையத்திலிருந்து....


போலவே, அன்னை இந்த குகையில் தரிசனம் தருவதும் மூன்று கற்களாகத் தான். அடிப்பாகம் ஒன்றாக இருந்தாலும், மூன்று தனித்தனி கற்கள் போலவே காட்சி தரும் இவற்றுக்கு மூன்றுமே மூன்று வேறு வேறு வண்ணங்களில் இருக்கும். ஆனால் நாம் பார்க்கும்போது இவற்றின் மேலிருக்கும் தங்கத்தால் ஆன தகடுகள் மறைத்திருப்பதால், வண்ணங்களைக் காண இயலாது. மூன்று பிண்டிகளை பக்தர்கள் – அதுவும் புதிதாய் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவற விட்டுவிடக்கூடாது என்பதால் வழியிலேயே இதற்கான அறிவிப்புக்ளை வைத்திருப்பார்கள்.  கோவிலில் உள்ளே இருக்கும் அர்ச்சகர்களும் இறைவி இந்த “பிண்டி” வடிவத்தில் இருப்பதைச் சொல்லியபடியே இருப்பார்கள். 

படம்:

இவை மூன்றுமேஅன்னையின் மூன்று வடிவங்களான மஹா காளி, மஹா லக்ஷ்மி, மஹா சரஸ்வதி ஆகியோரைக் குறிக்கும் – மூன்று பேருமே தேவியின் அம்சம் தான் என்பதை நமக்கு உணர்த்தும் விதமாக அமைத்திருப்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.


முன்பெல்லாம் குகைக்குள் சென்று திரும்பி வருவது கொஞ்சம் கடினம்.  குகைக்குள் ஏழெட்டு பேருக்கு மேல் நிற்க முடியாது. வெளியே வருவதும் கொஞ்சம் சிரமப்பட்டு, அங்கே இருக்கும் காவலாளிகளின் உதவியோடு தான் வெளியே வர முடியும். ஏனெனில் குகையின் வெளியே வரும் வழி அத்தனை சிறியது. கொஞ்சம் ஊர்ந்து தான் வர வேண்டியிருக்கும். இப்போதெல்லாம் அந்த மாதிரி கடினமெல்லாம் கிடையாது. போவதற்கும் வருவதற்கும் தனித்தனி பாதைகளை அமைத்து வசதி செய்து விட்டார்கள். அதனால் கொஞ்சம் நிதானமாக தரிசனம் செய்து வெளியே வர முடியும்.


பழைய குகைவழிகளை நீங்கள் இப்போதும் பார்க்க முடியும். உள்ளே தேங்காய் உடைப்பது, நீங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை படைப்பது போன்ற எதற்கும் அனுமதி கிடையாது.  நீங்கள் உள்ளே நுழையும்போதே உங்களிடமிருந்து “Baint” என அழைக்கப்படும் பிரசாதங்களை வாங்கிக் கொண்டு ஒரு சீட்டு தருவார்கள்.  அவை பெற்றுக் கொள்ளப்பட்டு, முன்னரே இறைவிக்குப் படைக்கப்பட்ட வேறொரு பிரசாதம் உங்களுக்கு அன்னையை தரிசித்து வெளியே வரும் வழியில் கொடுக்கப்படும்.


இம்முறை நாங்கள் சென்ற போது அத்தனை பக்தர்கள் இல்லாததால் மிகவும் நின்று நிதானித்து இறைவியை தரிசிக்க முடிந்தது. என்னுடன் வந்திருந்த நண்பருக்கு இது முதலாம் முறை என்பதால் நின்று நிதானமாக தரிசித்து மகிழ்ச்சி அடைந்தார்.  திரும்பி வெளியே வரும்போது மக்களே இல்லாமையால், இன்னுமொரு முறை தரிசனம் செய்ய வேண்டுமானால் செய்யலாம் என்று சொல்ல, இல்லை மனதுக்கு திருப்தியாக தரிசனம் கிடைத்தது என்று சொல்ல நாங்கள் மனதில் ஒரு அமைதியுடன் வெளியே வந்தோம். 


முன்பெல்லாம், இப்படி வரும் பக்தர்களுக்கு கோவில் சார்பாக, அன்னையின் அருளாக, ஒரு 25 பைசா நாணயம் வழங்குவார்கள். சில வருடங்களாக ஒரு அன்னையின் உருவம் பொறித்த ஒரு சிறிய வெள்ளி நாணயத்தினை வழங்குகிறார்கள். நாங்களும் ஆளுக்கொன்று என வாங்கிக் கொண்டு நடந்தோம். அடுத்ததாய் என்ன என்று கேட்பவர்களுக்கு.....  அடுத்த வாரம் வரை காத்திருங்கள் என்பது தான் பதில்!


அடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்...