Sunday, October 14, 2018

வைஷ்ணவ தேவி ஆன்மீக யாத்திரை பகுதி 4

வைஷ்ணவ தேவி கலவர காஷ்மீர் மாநிலத்தில் ஒரு அமைதியான ஆன்மீக யாத்திரை பகுதி 4

(கதை ,விவரம் தந்த இணைய நண்பர்களுக்கு நன்றி)

காஷ்மீர் பெயரைக்கேட்டால் இதயவீணை எம்ஜி ஆரின் பாடலுடன் சொர்க்கபூமி நினைவு வந்து தற்போதைய செய்தித்தாள்கள் தரும் பீதியூட்டும் செய்திகளால் பயமும் வரும். ஜம்முவில் கூட தமதுஜியோ ஏர்டெல் பி எஸ் என் எல் prepaid வேலை செய்யாது(cell phone jam ஆவதால்தான் அது jammu வோ)post paid அல்லது local sim வாங்க வேண்டும் 

பயணத்திற்கு வருவோம் 

சென்ற பகுதியில் நடக்க முடியாதவர்கள் என்ன செய்வது என்ற கேள்விக்கு பதிலைப் பார்த்தோம்.  இப்பகுதியில் நாம் பார்க்கப் போவது நடைப்பயணத்தின் போது நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் பற்றியது.  நடைப்பயணம் என்றால் பயணக் களைப்பும் அலுப்பும் தெரியாமல் இருக்க வேண்டும் அல்லவா? அதனால் நடக்கும்போதே “ஜெய் மாதா[dh]தி!” கோஷங்களை எழுப்பியபடியே நடப்பது வழக்கம். வரிசையாக பல கோஷங்கள் உண்டு –


”சாரே போலோ

ஜெய் மாதா [dh]தி!,

ஜோர் சே போலோ

ஜெய் மாதா [dh]தி!

ஆகே போலோ

ஜெய் மாதா [dh]தி!

பீச்சே போலோ

ஜெய் மாதா [dh]தி!,

ஆவாஸ் நஹி ஆயா

ஜெய் மாதா [dh]தி!
             

போன்ற பல ஜெய கோஷங்களை எழுப்பியபடியே செல்வார்கள். நடக்கும் அனைவரையும் கூடவே சொல்ல வைக்கும் இந்த கோஷங்கள்.

பாதையில் நிறைய இடங்களில் மேளம் கொட்டுபவர்கள் [டோல் வாலா] இருப்பார்கள். நடப்பவர்களைப் பார்த்தவுடன் தங்களது மேளங்களை முழங்க, பாதசாரிகள் டோல் வாலாவின் தாளத்திற்கு ஏற்ப நடனமாடத் துவங்கி விடுவார்கள். பத்து பதினைந்து நிமிட நடனத்திற்குப் பிறகு அந்த குழுவில் இருக்கும் பெரியவர், ஆடியவர்களின் தலையை ரூபாய் நோட்டுகளால் சுற்றி, டோல் வாலாவிற்கு கொடுத்து விடுவார். அதாவது திருஷ்டி கழிப்பது போன்ற ஒருசெயல்!


நானும் நண்பரும் நடந்து சென்றிருந்த போது மூன்று பேர் கொண்ட குடும்பம், அம்மா, அப்பா மற்றும் அவரது மகன், எங்களுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தனர். டோல்வாலாவினைப் பார்த்தவுடன் மகனுக்கு ஆடத் தோன்றிவிட, ஒரே ஆட்டம் தான்! அவர் ஆட ஆட, அவரது அப்பா-அம்மா இருவருக்கும் ஆட ஆசை! அவர்களும் ஆட்டம்!  என்னுடன் வந்த நண்பருக்கு இந்த ஆட்டங்கள் புதியது என்பதால் அவர் ஒரு ஆச்சரியத்தோடு அந்த ஆட்டத்தினை புகைப்படம் எடுத்துக் கொண்டார்! ஆட்டம் மட்டுமல்ல, ஒரு சில பக்தர்கள் அன்னையின் அருளைச் சொல்லும் பாடல்களை பாடியபடியே வருவார்கள் – அவர்கள் கையிலும் டோலக் [மிருதங்கம் போன்ற ஒரு மேளம்] நிச்சயம் இருக்கும் – ராகம், தாளம் பல்லவி என்றெல்லாம் எதிர்பார்க்காது, ஒரே மெட்டில் இருக்கும் பாடல்களைப் பாடியபடியே இவர்கள் பயணிக்க, அந்த பயணமே மிகவும் ஆனந்தமயமாக இருக்கும்.


இப்படி சிலர் ஆனந்தமான பயணமாக மாற்றிக்கொள்ள, ஒரு சிலர் தங்களை மிகவும் வருத்திக் கொள்வதையும் பார்க்க முடியும். மாதா வைஷ்ணவி தேவியிடம் தங்களது விருப்பங்களைச் சொல்லி, அது நிறைவேறினால் மொத்த பாதையையும் நமஸ்கரித்த படியே கடக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அதாவது பாதை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு நமஸ்காரம்...  தலை வைத்த இடத்தில் ஒரு கோடு போட்டு, அந்த இடத்தில் நின்று ஒரு நமஸ்காரம், மீண்டும் ஒரு கோடு. இப்படி நமஸ்கரித்து, எழுந்து நின்று, மீண்டும் நமஸ்கரித்து என மொத்த தூரத்தினையும் கடப்பார்கள். இதற்கு பல மணி நேரங்கள் ஆவதுண்டு.


ஒரு சிலர் தங்களது பாதங்கள் அன்னை குடியிருக்கும் புனிதமான அந்த மலை மீது படாமல், முழங்கால்களால் பயணிப்பதும் பார்த்திருக்கிறேன். இப்படி பயணித்தபடியே நடந்தால் நிச்சயம் தண்ணீர் தாகம், பசி என இருக்காமல் இருக்குமா? இதற்கான வசதிகள் என்ன, வெறென்ன வசதிகள் இருக்கிறது என்பதை எல்லாம் சொல்லத் தான் போகிறேன் – அதற்கு முன்னால் வைஷ்ணவ தேவியின் கதைக்கு வருவோம்...


ராமபிரான் சொன்னது போலவே வைஷ்ணவ தேவியின் புகழும் திறமையும் எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது. பல இடங்களிலிருந்தும் மக்கள் அவரது அருளைப் பெற வைஷ்ணவ தேவியின் ஆஸ்ரமத்திற்கு வந்தபடியே இருந்தார்கள். காலம் உருண்டபடி இருக்க, [G]கோரக் நாத்எனும் தாந்த்ரீகர் ராமபிரானுக்கும் வைஷ்ணவிக்கும் நடந்த சம்பாஷனைகளை அறிந்திருந்தார்.  ராமபிரான் சொன்னபடியே வைஷ்ணவி சக்தி மிகுந்தவராக ஆகிவிட்டாரா என்று தெரிந்து கொள்ளும் பொருட்டு, தனது பிரதம சீடரான [B]பைரோன் நாத் என்பவரை அனுப்பி வைத்தார்.  திரிகூட மலைப் பகுதியில் வைஷ்ணவ தேவியை கண்டுகொண்ட பைரோன் நாத் வைஷ்ணவி தேவியை ரகசியமாக தொடர்ந்து அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தார்.


சாத்வி கோலத்தில் இருந்தாலும், வைஷ்ணவ தேவி எப்போதும் வில்-அம்பு வைத்திருந்ததையும், பல லங்கூர் வகை குரங்குகளும், கொடூரமான சிங்கம் ஒன்றும் அவருடன் எப்போதும் இருந்ததையும் பார்த்தார்.  அது மட்டுமல்லாது வைஷ்ணவி மிக மிக அழகாக இருந்ததையும் பார்த்த பைரோன் நாத் அவர் மீது தீராத காதல் கொண்டு அவரை அடையவும் துடித்தார். தன்னுடைய நல்ல பண்புகளை விட்டொழித்து வைஷ்ணவ தேவியை திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தார். வைஷ்ணவ தேவியை தொந்தரவும் செய்ய ஆரம்பித்தார்!


அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! :)