Tuesday, May 3, 2022

பரிசு

 🙏🏽🙏🏽மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்🙏🏽🙏🏽

பரிசு

 சதாசிவம், கைகளைக் கூப்பி, கண்ணை மூடித் தலையை சிறிது பின் நோக்கி வளைத்து  “ஈஸ்வரா” என்று சொல்லிவிட்டு இறைவனை மனதிற்குள் கொண்டு வர முயற்சித்தார். இந்த வயதிலும் சிறிது நடமாட முடிகிறதே என்ற திருப்தி அவருக்கு. நிறைய உழைத்தாகிவிட்டது. கைநிறையக் காசும் பார்த்தாச்சு. தனியார் நிறுவனமொன்றில்   பணிபுரிந்து, ஓய்வு பெற்றதால் பென்ஷன் கிடையாது.  ஆனால்  ஓய்வு பெற்ற பொழுது. கிடைத்த பெரிய தொகையையம்   வங்கி வைப்பு நிதியம் போதுமான அளவை இருந்தது.

“எங்களுக்காக எதுவும் சேர்த்துவைக்க வேண்டாம்.   நீங்களிருவரும் சௌகரியமாக இருங்கள் " என்று சொல்லுவாள் மகள். ஆனால் வயோதிகத்தின் தொல்லைகள் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டன. வயோதிகத்தில் மனைவி இல்லாமல் இருக்க முடியவில்லையே என வியந்தார் அவர். 

தாயாக, நண்பனாக, மருத்துவராக எல்லாவுமாக இருக்கும் அவளை நினைத்து பெருமை அடைவார் மனத்தினுள்ளே. ஏனோ அதை வெளிப்படையாக சொல்ல மட்டும் மனம் வராது.

  “குளிச்சு எத்தனை நாழி ஆச்சு. தலையைத் தோட்டவில்லையா” என்று கேட்டபடியே அவர் அருகில் வந்தாள் காமாட்சி. இந்த வயதிலும் அப்பொழுதுதான் தேய்த்து வைத்த பித்தளை குத்து  விளக்கு போல் இருந்தது அவள் முகம். தினமும் அவள் சொல்லும் லஷ்மி ஸ்தோத்திரத்தின்  பலனாக அவள் முகத்தில் அப்படி ஒரு களை. 

  துண்டை எடுத்து மீண்டும்  அவரின் தலையை துவட்டி விட்டு சென்றாள். சற்று மூச்சு வாங்கியது அவருக்கு. நேற்று தான் மருத்துவரிடம்  அவரைக் கூட்டிச் சென்று வந்தாள் காமாட்சி.

" ஹார்ட் வால்வுல ஒரு மைனர் பிராப்ளம். மாத்திரை தரேன், சாப்பிடுங்கோ. கவலை இல்லை" என்று சொல்லி இருந்தார் டாக்டர்.

"டிபன் சாப்பிட்டப்பரம் மாத்திரை தரேன்" என்றபடியே ஒரு தட்டோடு உள்ளே வந்தாள் காமாட்சி. மல்லிகை பூ போன்ற மீடியம் சைசில் மூன்று இட்லி. தொட்டுக்கொள்ள உளுத்தம்பருப்பு, கடுகால் அலங்கரிக்கப்பட்ட தேங்காய் சட்னி. வறுக்கப்பட்ட வரமிளகாயும் கறிவேப்பிலையும் மேலே பரவியிருந்தன.

நல்லெண்ணெயுடன் மிளகாய் பொடி வேண்டும் என்று தோன்றியது அவருக்கு. காமாட்சி கொடுக்க மாட்டாள். "வயிற்றில் அசிடிடி இருக்கு, இப்பொழுது வேண்டாம்" என்பாள் அவள். 

   "மாதவன் போன் பண்ணினான். குழந்தைகள் பரிட்சையில் நல்ல மார்க் வாங்கி இருக்கிறார்களாம்” என்றாள் அவள். மாதவன் அவர்களின் பிள்ளை. அவன் ஒவ்வொரு முறையும் அமெரிக்காவிலிருந்து போன் செய்யும் பொழுது, அவனை அப்பொழுதுதான்  பெற்றெடுத்தது போல் மகிழ்வாள் அவள். 

இந்தியாவில் இருக்கும் பெண்ணும் போன் செய்வாள். ஆனால் அது என்னவோ பிள்ளையின் மேல் அப்படி ஒரு பாசம் தாய்களுக்கு என்று நினைத்து மனதிற்குள் சிரித்தார் சதாசிவம்..

 இப்பொழுதெல்லாம் அதிகம் நடக்க முடிவதில்லை. சற்று முயற்சி செய்து எழுந்தால் பிறகு நடக்க முடிகிறது. எப்பொழுதும் மனதில் எழும் கேள்வி அப்பொழுதும் எழுந்தது.

' இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போகிறேன்?" 

  காலிங் பெல்லின் சத்தம் கேட்டது. காமாட்சி கதவைத் திறக்கும் சப்தமும் கூடவே இன்னொரு பெண்ணின் குரலும் கேட்டது. 

" மாமி, இன்று மாவிளக்கு போட்டேன். உங்களுக்கு மஞ்சள் வெற்றிலை பாக்கு கொடுத்து சேவித்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்றாள் வந்த பெண்.

  " என்கூட வா. மாமாவோடு சேர்ந்து நிற்கிறேன். எங்களைச் சேவிச்சிக்கோ" என்றாள் காமாட்சி. எதையும் தனக்காக மட்டும் வாங்கிக் கொள்ள மாட்டாள் அவள். அவருக்கு மனதில் வலித்தது. 

" ஈஸ்வரா, மறுபிறவி உண்டென்றால், நான் ஆணாகவே பிறந்துவிட்டால் இவளே எனக்கு மனைவியாக வரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டார்.

 பக்கத்து வீடுகளில் இருக்கும் அனைவருக்கும் தானாகவே முன்வந்து உதவி செய்வாள் காமாட்சி. வேலைக்காரிக்கு இவள் தெய்வம்.

” முத்துலட்சுமி நன்னா படிக்கிறாளா?" என்று கேட்டு பண உதவி செய்வாள்

 வந்த பெண் எங்கள் இருவரையும் நமஸ்கரித்தாள். என்னைப் பார்த்து,  "மாமா, நீங்க ரொம்ப லக்கி மேன். மாமி உங்களை கவனிக்கிறது போல யாரும் பண்ண மாட்டா. நீங்கள் மாமிக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று கேட்டுச் சிரித்தாள் அந்தப் பெண். 

" அதை அவளையே கேளேன்" என்று சொல்லி மழுப்பினார் அவர்.

 அவளுக்கு நகை நட்டு  எதிலும் ஆர்வமில்லை. அவரே சில சமயம் புடவைகளை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்தால்

 " என்ன, நான் கட்டிக்கொள்ளும் புடவைகள் பழையதாகி விட்டது என்று தோன்றுகிறதா?" என்று கேட்டபடியே சந்தோஷமாக எடுத்துக் கொள்வாள்.

"அவள் என் மேல் காட்டும் பாசத்திற்கு என்னால் என்ன பரிசு அளிக்க முடியும்" என்றது அவர் மனம்.

  காலை  பதினோரு மணிக்கு பூஜை அறையில் அமர்ந்து சகஸ்ரநாமம் சொல்வது அவரின் வழக்கம். அதுவும் அவள் சொல்லிக் கொடுத்தது தான்.

சிறிது நாட்களாக காமாட்சி ஒன்றை கவனித்தாள். சகஸ்ரநாமம் சொல்லி முடித்த பின் காமாட்சி அங்கு இல்லை என்று உறுதி செய்து கொண்டு கதவை லேசாக மூடிவிட்டு ஈஸ்வரனை ஏதோ  அவர் பிரார்த்திக்கிறார்.

 என்ன பிரார்த்திக்கிறார் அவர் என்று கேட்க ஆவல் ஏற்பட்டது அவளுக்கு. "பாம்புச் செவிடீ உனக்கு" என்ன சொல்லி சிரிப்பதுண்டு அவர்.

  அவர் சொல்லும் வார்த்தைகளை கூர்ந்து கவனித்தாள் காமாட்சி.

" ஈஸ்வரா, தினமும் கேட்பதைத்தான் இன்றும் கேட்கிறேன். என்னை சீக்கிரம் அழைத்துக்கொண்டு போய்விடாதே. காமாட்சி தாங்கமாட்டாள். விழுந்து விடுவாள். எத்தனை பேருக்கு அவளால் நன்மை. என்னை இன்னும் சற்று வருடங்கள் வைத்திரு. ஒரு நாள் வயது அதிகமாகி அவளுக்கு விரக்தி வரும்பொழுது என்னை எடுத்துப்போ" என்றார் அவர்.

   காமாட்சியின் கண்களிலிருந்து அருவியாக கண்ணீர் வழிந்தது

அவளுக்கு பக்கத்து வீட்டுப் பெண் கேட்ட கேள்வி நினைவிற்கு வந்தது. "மாமிக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டியே, இதற்கு மேல் என்ன வேண்டும் எனக்கு?” என்று  முணுமுணுத்தாள் அவள்.

  ஸாம்ஜி

No comments:

Post a Comment