Thursday, April 1, 2021

அரிச்சந்திரன் அம்சம்

 நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவா சரணம் நினைத்தாலே கிடைக்கும் ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய பொய் சொல்லாத ஒருவர் தன் வீட்டிலேயே இருப்பதை (பூஜை அறையில்) அப்போதுதான் தெரிந்து கொண்ட வங்கி அதிகாரி

காஞ்சி மஹான் தரிசனம் - புத்தகத் திலிருந்து

பெரியவாளின் சரித்ரம்" - Part 519. 

நேபாளம் சென்று பசுபதிநாதரைத் தரிசனம் செய்துவிட்டு, ஒரு ருத்ராட்சமாலை வாங்கிக் கொண்டு வந்தார் ஓர் அன்பர். பெரியவா அனுக்ரகத்துடன் அதைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

தரிசனத்துக்கு வந்தபோது பெரியவா எதிரில் ருத்ராட்ச மாலையை வைத்தார். (பெரியவா அதைக் கையால் தொட்டுக் கொடுக்கட்டுமே!)

"இதை என்ன செய்யப் போறே!" என்று கேட்டார்கள் பெரியவா.

"பெரியவா அனுக்ரகித்துக் கொடுத்தால் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம் என்று உத்தேசம்...."

சில விநாடிகள் பெரியவாள் மௌனமாக இருந்தார்கள்.

"நீ இனிமேல் பொய் சொல்லாமல் இருப்பியா?"

பக்தர் திடுக்கிட்டுப் போனார்.

"ஏன் இப்படி ஒரு கேள்வி?" என்று புரியவில்லை. ஆனால், சத்தியத்தைக் கூற வேண்டுமே?

"என்னால் பொய் சொல்லாமல் இருக்க முடியாது.."

"ஏன்?"

"நான் ஒரு வங்கியில் ஆபீஸர்.அந்தப் பதவியில் பொய் சொல்லாமல் ரெக்கார்டுகளைத் தயாரிக்க முடியாது.

இப்படி எழுது என்று மேலிடத்திலிருந்து உத்தரவு போடுவார்கள். என்னால் மறுக்க முடியாது..."

பெரியவா அந்த மாலையை எடுத்துக் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்கள் பின், "பொய் பேசாதவா யாருக்காவது இந்த மாலையைக் கொடுத்துடு..."

வங்கி அதிகாரிக்குப் பரம சந்தோஷம்.

"என் மனைவி சொன்னபடியே ஆச்சு!" என்றார் அருகிலிருந்த தொண்டர்களிடம்.

"அகத்தில் பூஜை அறையில் இருக்கும் பெரியவா படத்துக்குப் போட்டுடுங்கோ" என்றாராம், அவர் மனைவி.

"பெரியவா உத்தரவுப்படி செய்கிறேன்.." என்றுசொல்லிவிட்டுப் பிரசாதமும் மாலையும் பெற்றுச் சென்றார்.

வீட்டுக்குத் திரும்பியதும் பெரியவாள் படத்துக்கே அந்த மாலையைப் போட்டு விட்டார்.

வங்கி அதிகாரி, பொய் சொல்லாத ஒருவர் தன் வீட்டிலேயே இருப்பதை அப்போதுதான் தெரிந்து கொண்டார்.(பூஜை அறை)

வங்கி அதிகாரியினுடைய தர்மபத்தினியின் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றி விட்டார்கள், பெரியவா. அவர் விருப்பம், பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?

இதைத்தான் 'டெலிபதி' என்கிறார்களோ"

ஆனால், இது டெலிபதி இல்லை; குரு பக்தி!

பின்னால் ஒரு சமயத்தில் அந்த வங்கி அதிகாரியின் உறவினர் தரிசனத்துக்கு வந்தபோது, "அவனிடம் அரிச்சந்திரன் அம்சம் இருக்கு!" என்று பாராட்டினார்கள் பெரியவா.

No comments:

Post a Comment