Thursday, April 1, 2021

ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்

 ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்

பூமியிலிருந்து விழித்தெழுந்த விண்ணகர் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள்.

இறைவன் வாசம் செய்யும் நல்லூர் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள இளவரசனார்கோட்டையில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத பூமியிலிருந்து விழித்தெழுந்த விண்ணகர் ஸ்ரீ ராஜநாராயண பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருமகள் கேள்வனான ஸ்ரீமந் நாராயணன் இவ்வுலகைப் படைத்து இவ்வுலகோர்களை வாழ்விக்க எண்ணங்கொண்டு நவகோடி நாராயண ஷேத்ரங்களில் கோயில் கொண்டு அருள் பாவிக்கிறார். அவற்றுள் ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்ற சிறப்புடைய 108 திவ்ய தேசங்களாகும்.

அத்திவ்ய தேசங்களில் நடுநாட்டுத் திருப்பதிகள் சீரிய சிறப்புடையவை. அவற்றிலும் முதலாழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தம் முதலில் அவதரித்த திருக்கோவிலுமே அத்திருக்கோயிலூரின் தெற்குப் பாகத்தில் அமைந்ததுள்ள இராஜநாராயண விண்ணகரமேயாகும்.

பழங்காலத்தில் இத்திருத்தலம் சோழ கேரள சதுர்வேதி மங்கலம். சோழ கேரள நல்லூர் பிடாகம், இறைவாச நல்லூர் என்னும் பெயர்களால் வழங்கப்பெற்றது. இன்று இத்தலம் எலவானசூர்கோட்டை என்ற பெயரால் வழங்கப்படுகிறது.

ஸ்ரீ ராஜ நாராயண விண்ணகராகிய இத்தலம் முதலாம் குலோத்துங்கசோழனின் சிறப்புப் பெயரான ராஜநாராயணன் என்ற பெயரில் ஸ்ரீராஜ நாராயண விண்ணகராக காட்சியளிக்கிறார்.

இத்திருமால் கோவிலிலும் அவர் பெயரால் கி.பி. 957 முதல் கி.பி. 970 வரை நிர்மானிக்கப்பட்டது. முற்காலத்தில் சீரும் சிறப்புமாக விளங்கிய இக்கோவிலில் “சீரார் திருவேங்கடமே திருக்கோவிலூரே” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளது திருவேங்கடமுடையாளே இங்கு ஸ்ரீமந் நாராயணன் கோவில் கொண்டுள்ளார்.

இராஜநாராயண விண்ணகரத்தாழ்வாருக்கும் பிற்காலத்தில் வேங்கடபதி ராயரால் நிலர் கொடைகள் வழங்கப்பட்டு பரிபாலிக்கப் பட்டுள்ளது.

சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வந்த இக்கோயில் காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் பழுதடைந்து தரைமட்டமாகிவிட்டது. கடந்த 04.12.2008 அன்று பெருமாள் கோவில் கட்ட பூமி தேவி பூஜை செய்தபோது பூமிக்கு அடியில் ராஜகோபுரத்தின் அடிபீடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் இருந்த எழுத்துக்களை ஆராய்ந்தபோது ஸ்ரீராஜ நாராயண விண்ணகர் என்ற பெயர் காணப்பட்டது. அதன்படியாக இக்கோவில் நிர்மானத்தை திருக்கோயிலூர் ஸ்ரீமந் எம்பெருமானார் ஜியர் மடாதிபதி சஸானரனூர் மஹாத்மா ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமி ஆதயேளி 09.01.2009 அன்று துவக்கி வைத்து அருளாசி வழங்கினார்கள்.

அதன்படியாக திருப்பணிகள் கருவறை விமானம், மஹாமண்டபம், ஊஞ்சல் மண்டபம் ஆகியவை முதல் கட்டமாக நிறைவு செய்யப்பட்டது. 19.06.2013 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்தலத்திற்கு வந்து வழிபடும் பக்தர்கள், செல்வ வளம், திருமணம், புத்திர பாக்கியம், உயர்பதவி, பாவ விமோச்சனம் நீங்கி செல்கின்றனர்.

மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவி ராஜநாராயண பெருமாளுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்து பக்தர்கள் பலன் பெறுகிறார்கள்.

அமைவிடம் விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இருந்து 10வது கி.மீ. தூரத்தில் கோவில் அமைந்துள்ளது.



No comments:

Post a Comment