Sunday, April 11, 2021

பொருத்தம் பார்த்த பெரியவா

 "பொருத்தம் பார்த்த பெரியவா"

தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெண்ணுக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. நாலு வருஷமாய் பார்க்காத வரன் ஜாதகங்கள் இல்லை. "பிள்ளை ஜாதகம், ஒரு வீசை என்னிடம் இருக்கு!' என்று வேதனை கலந்த நகைச்சுவை.

ஒரு பையனின் ஜாதகமும், பெண் ஜாதகத்துடன் ஒத்துக் கொள்ளவில்லை. ஜோஸியரிடம் பையன், பெண் ஜாதகங்களைக் கொடுத்தவுடனேயே உதட்டைப் பிதுக்குகிறார். "பையன் ஜாதகம் - ஏ கிளாஸ்

ஆனா, நம்ம கமலாவுக்கு ஒத்து வரல்லே...."

நவக்ரஹங்களின் அருட்பார்வை கிடைக்காததால், பெற்றோர் காஞ்சிபுரம் குருப்பார்வைக்கு வந்தார்கள்.

"இப்போ, ஏதாவது வரன் ஜாதகம் இருக்கோ...."-பெரியவா

"இருக்கு, நல்ல குலம் - கோத்திரம் - அழகான பையன். எல்லாருக்கும் புடிச்சிருக்கு. இன்னும் பொருத்தம் பார்க்கல்லே. ஜோஸியரிடம் போகவே பயமாயிருக்கு !....."

"பெண் ஜாதகம் இருக்கோ.." - பெரியவா

"இருக்கு..."

"இரண்டையும் கொடு..."

அப்படியே சமர்ப்பிக்கப்பட்டன. பெரியவா ஜாதகங்களைக் கையில் எடுத்து, ஒரு விநாடி நேரம் பார்த்தார்கள்.

"சரியா இருக்கு....கல்யாணம் பண்ணிடு...." - பெரியவா.

ஜாம் ஜாமென்று கல்யாணம் நடந்தது.

மூன்று மாதங்கள் கழித்து, அந்தப் பையனின் அலுவலகத்தில், பதவி உயர்வுத் தேர்வு. "இவனுடைய அதிருஷ்டம் எப்படி?' என்று தெரிந்து கொள்வதற்காக ஜோஸியரிடம் ஜாதகத்தைக் காட்டினார்கள்.

"ஒண்ணும் நம்பிக்கையா சொல்கிற மாதிரி இல்லையே?...இவரோட சம்சாரம் ஜாதகம் இருக்கோ?"

பெண்ணின் ஜாதகத்தைத் துருவித் துருவிப் பார்த்தார் ஜோஸியர்.

"சார் ! அற்புதமான பொருத்தம் !. இந்த மாதிரி ஜோடி அமையறது, அபூர்வம்... இந்தப் பொண்ணுக்கு பரம சௌக்யம் காத்திண்டிருக்கு !. அதனாலே, உங்க பையனுக்குப் பிரமோஷன் கிடைக்கும்னு அடிச்சுச் சொல்லலாம்...."

கிடைத்தது, பதவி உயர்வு !.

மட்டையால் அடிக்கப்பட்ட பந்து போல், காஞ்சிபுரம் வந்தார்கள்.

"பெரியவா அனுக்ரஹம், கல்யாணமாச்சு...புரமோஷன் கிடைச்சுது !.."

"நான் என்ன பண்ணினேன்?...ஜாதகத்தில் குரு நல்ல ஸ்தானத்திலே இருக்கு !..."

ஆமாம், அந்தத் தம்பதிக்குப் பெரியவா, நல்ல குருஸ்தானத்தில் இருக்கிறார்கள் தானே !.

No comments:

Post a Comment