“ வாசலுக்கு வந்த நிலவு” – II
(பூவனூர் சுந்தர ஜானகிராமன்.)
வீட்டிற்குள் நுழைந்ததும் நான் கண்ட காட்சி ஹேமா சோபாவில் அமர்ந்திருந்ததுதான், எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. என்னைக் கண்டவுடன் எழுந்திருந்தாள். . உங்களுக்காக வெகு நேரம் காத்துக் கொண்டிருக்கிறேன் என்றாள்.
“உட்கார் ஹேமா, இப்பொழுது நான் மேனேஜரும் இல்லை, நீ என்கீழ் பணிபுரியும் ஊழியரும் இல்லை. நீ எங்கள் விருந்தாளி. என்ன சாப்பிடுகிறாய் ? காப்பி அல்லது டீ ? என்று கேட்டுவிட்டு சமையலறையை நோக்கி “அம்மா” என்று குரல் கொடுத்தேன்.
“இரண்டுமே குடிக்க மாட்டாளாமே. அவள் கேட்டவாறு வெந்நீரில் சுக்கும், கொஞ்சம் வெல்லமும் போட்டுக் கொடுத்தேன், சாப்பிட்டாள் என்று சமையற்கட்டிலிருந்து வந்தார் என் அம்மா.
“நான் எப்படி, எதற்காக உங்கள் வீட்டுக்கு வந்தேன் என்று யோசிக்கிறீர்கள் இல்லையா” என்று பேச ஆரம்பித்தாள் ஹேமா.
“ஆமாம், நீ என் வீட்டுக்கு வந்தது சந்தோஷம்தான். ஆனால் வீட்டை எப்படிக் கண்டு பிடித்தாய்” ?
“ரொம்ப சிம்பிள், காலையில்தானே கம்பெனியில் நம் விலாசங்களைப் நாம் பகிர்ந்து கொண்டோமே. இன்று மாலை கம்பெனியிலிருந்து உங்கள் வண்டியில் வீட்டுக்கு வர என்னை அழைத்தீர்கள் அல்லவா ? நான் வரவில்லை. அது உங்கள் மனதைப் புண் படுத்தி இருக்கலாம். எனக்கு நல்ல வேலை கிடைத்ததால் நான் மயிலாப்பூர் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு உங்கள் அம்மாவிடமும் ஆசி பெறவேண்டி உங்கள் வீட்டுக்கு வந்தேன்”
ரொம்ப சந்தோஷம், வா, ரொம்ப இருட்டிவிட்டது, நான் உன்னை வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறேன்” என்று கூறி அவள் குடி இருக்கும் வீட்டிற்கு எதிரில் விட்டுவிட்டு திரும்பிவிட்டேன். உடனே திரும்பியதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று எனக்கு நல்ல பசி, இரண்டாவதாக அவசரத்தில் அவர்கள் வீட்டுக்கு வெறுங்கையோடு போய் சாப்பிட்டும் வருவது சரியாகப் படவில்லை.
அன்றிலிருந்து என் அழைப்பின் பேரில் கம்பெனிக்கு இருவரும் என் வண்டியிலேயே போவதும் திரும்புவதும் வாடிக்கையாகிப் போனது. அப்படி ஒருநாள் என் வண்டியில் வீடு திரும்பும்போது திடீரென்று SRP காலனியில் ஆரம்பித்த மழை வலுத்து இருவர் உடைகளும் தொப்பலாக நனைந்துவிட்டன.
வீடு அருகில் இருந்ததால் எங்கேயும் மழைக்காக ஒதுங்காமல் நேராக வீடு வந்து சேர்ந்து விட்டோம்.
எங்களைப் பார்த்த என் அம்மா பதறிப்போய் இரண்டு துண்டுகளைக் கொடுத்து தலையைத் துவட்டச் சொன்னார்கள். எனக்குப் பிடித்த ஸ்கை ப்ளூ காட்டன் 6 கஜம் புடவை ஒன்றை என் அம்மா அவளிடம் கொடுத்தார்கள். இருவரும் உலர்ந்த உடைகளை அணிந்துகொன்டுவர வெவ்வேறு அறைக்குச் சென்று திரும்பினோம்.
ஹேமா அந்த நீலநிறப் புடவையில் தேவதைபோல இருந்தாள் . நான் எப்போதாவது விடுமுறை நாட்களில் வீட்டிலிருக்கும்போது அணியும் நீலநிற ஜீன்ஸும், சாம்பல் மற்றும் வெளிர் பச்சை கலந்த டீ ஷர்ட்டும் அணிந்தேன்.
“நீங்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் எல்லாம் போடுவீர்களா ? என வியப்பு மேலிடக் கேட்டாள் அவள்.
“ஏன் போடக்கூடாதா?
“இல்லையில்லை. இதுவும் உங்களுக்கு நன்றாகத்தான் இருக்கிறது.
என் மீது நீங்களும் உங்கள் அம்மாவும் நான் எதிர்பார்த்ததற்கும் மேலான அன்பைப் பொழிகிறீர்கள். இதற்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும் ?
நட்போடு மட்டும் அல்லாமல் உறவினர்களாகவும் ஆகிவிட்டால் ?
(ஹேமா இடைமறித்து) “நாம் எப்படி உறவினர்களாக ஆக முடியும் ?
“நான் உன்னை என் உடன்பிறந்த தங்கையாகப் பாவிக்கிறேன்” என்றேன்.
“அக்கா” என்று என் காலில் விழுந்தாள்.
அவளை அப்படியே தூக்கி என்னோடு அணைத்துக்கொண்டேன்.
முற்றும்.
No comments:
Post a Comment